என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 40

5
(13)

அத்தியாயம் : 40

வினிதா அங்கிருந்த மூவரிடமும் ராஜேஸ்வரி பாட்டியும் சாரதா பாட்டியும் நெருங்கிய தோழிகள் என்ற விஷயத்தை போட்டு உடைத்தாள். இதை கேட்டதும் ரேணுகா ராகவி வைதேகி மூவரும் ராஜேஸ்வரி பாட்டியை பார்த்தனர். ராஜேஸ்வரி பாட்டி, மனதுக்குள் ‘அடிப்பாவி பயபுள்ள எப்படி கோர்த்து விட்டு வேடிக்கை பாக்குறா பாரு….’ என்று நினைத்துவிட்டு வெளிய அவர்களைப் பார்த்து சிரித்து வைத்தார். 

“அத்தை நெஜமாவே நீங்களும் அம்மாவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்சா…?” என்று கேட்டார் ரேணுகா. 

“சொல்லுங்க அம்மா நீங்களும் எங்க அத்தையும் பிரண்ட்ஸ்….?” என்று கேட்டார் வைதேகி. 

“ஆமா நானும் சாரதாவும் சின்ன வயசுல இருந்தே நெருங்கிய தோழிகள்….”

“அப்புறம் எதுக்கு அத்தை எங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லாம மறைச்சீங்க…. நீங்க ரெண்டு பேரும் ஏன் பேசாம இருந்துட்டீங்க….?”

“ரேணுகா என்ன பண்றது பையனோட பையன் வீட்ல இருக்கிறன்ல்ல அப்போ அவன் மனசு கஷ்டப்படாம நாமதானே நடந்துக்க வேணும்…. ஒருவேளை நான் சாரதா கூட பேசி அவங்க வீட்ல பிரச்சனை வந்துட்டா என்ன பண்றது…. அதனாலதான் நாங்க ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம சந்திச்சுக்குவம்….”என்றார். 

“ஏய் வினி உனக்கு எப்பிடிடி இந்த விஷயம் தெரியும்….?” என்றார் ரேணுகா வினிதாவிடம். அதற்கு வினிதா, “அதை ஏன்மா கேக்குற… நேத்து நானும் அண்ணனும் பாட்டியும் வரும்போது எங்க போயிட்டு வரிங்கன்னு கேட்டல்ல…. நம்ம பாட்டியும் சாரதா பார்ட்டியும் அய்யனார் கோயிலுக்கு பின்பக்கம் உள்ள குளத்துக்கு கிட்ட லவ்வர்ஸ் மாதிரி முகத்தை மூடிக்கிட்டு பேசிகிட்டு இருந்தாங்க…. அப்பதான் நானும் தமிழும் வெற்றி மாமாவும் கண்டுபிடிச்சோம்…” என்றாள் வினிதா. 

“அடிப்பாவி மகளே வயசு பொண்ணு அந்தி சாயுற நேரத்துல அய்யனார் கோயில் குளத்து கிட்டயா போவ…” என்று அவள் தலையில் குட்டு வைத்தார் ரேணுகா. 

“அம்மா எதுக்குமா இப்படி கொட்ற…. நீ கொட்டி கொட்டி தான் நான் இப்படி வளராமலே போயிட்டேன்….”என்றாள் வினிதா. 

“ஏன் ரேணுகா வினியை கொட்டுற அவ பாவம்ல..”

“அட நீங்க வேற அண்ணி…. இவ இப்படியான வேலைதான் பார்த்துக்கிட்டு திரிவா….”

“அம்மா நான் இப்படி வேலை பார்க்க போனதாலதான் நமக்கு உண்மை தெரிஞ்சது….”

“அதுதானே ரேணு அவளுக்கு அடிக்காத பாவம் புள்ள விடு…” என்றார் வைதேகி. 

பின்னர், “அம்மா நீங்களும் அத்தையும் பயப்படாம பேசலாம்….”

“என்ன சொல்ற ராகவி….?”

“ஆமாம்மா எதுக்காக நம்ம பயப்படனும் நம்ம எல்லாம் ஒண்ணா சேர்ந்து நிப்போம்…. ரெண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்கலாம்…”

“ஆமா… இத்தனை நாள் வராத யோசனை இப்ப எப்படி வந்துச்சு….” என்று கேட்டார் ராஜேஸ்வரி. 

“வேற எப்படி எல்லாம் என் மாமாவோட பிளான் தான்…. “

“என்னது வெற்றியோட பிளானா…?”

“ஆமா ஆமா அன்னைக்கு நாங்க மூணு பேரும் கோவில்ல பேசிக்கிட்டோம்…. அப்பதான் வெற்றி வந்து இத்தனை நாள் நாங்க என்ன முயற்சி இந்த குடும்பத்தை சேர்க்க செய்யல அப்படின்னு சொல்லிட்டு இருந்தான்…. அதுக்கு அப்புறம் தான் எங்களுக்கு ஒண்ணு புரிஞ்சுது… நாம ஏதோ ஒரு வகையில முயற்சி செஞ்சிருந்தா இந்த ரெண்டு குடும்பமும் இத்தனை நாள் பிரிஞ்சி இருக்காதோணு தோணுச்சு…. அதுதான் இப்ப நாங்களும் முயற்சி பண்ணுவோம்னு இருக்கோம்….”

“வெற்றி வயசுல சின்னவனா இருந்தாலும் எப்படி யோசிக்கிறான் பாத்தியா ரேணுகா….? நேத்து என்கிட்டயும் சாரதா கிட்டேயும் இதத்தான் சொன்னான்…. நீங்க ஏன் பாட்டி ரெண்டு பேரும் இந்த குடும்பத்தை சேர்க்க முயற்சி பண்ணலைன்னு…. சரி இனிமே நம்ம அஞ்சு பேரு சேர்ந்து நம்ம குடும்பத்தை ஒன்று சேர்க்கும் வழியை பார்க்கலாம்…”

“நிச்சயமாக நம்மளால முடிஞ்சதை நம்ம கண்டிப்பா செய்வோம்….” என்றனர். 

அப்போது வினிதா வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல். “ஆமா அம்மா சாரதா பாட்டி நம்ம வீட்டுக்கு உன்ன பாக்க வரேன்னு சொன்னாங்க அம்மா….” என்றாள். 

“ஏய் என்னடி குண்டு குண்டா தூக்கி போடுற… அம்மா எப்போடி சொன்னாங்க….?”

“நேத்துதான் சொன்னாங்க அம்மா… நான் வேற சொன்னேன் பாட்டி நீங்க வரும்போது உளுந்து வடை சுட்டு எடுத்துட்டு வாங்கன்னு சொன்னேன்….”

“உனக்கு எங்க எது பேசணும்னு தெரியவே தெரியாது இல்ல… நான் வேற அம்மா வந்தா இவங்க என்ன சொல்லுவாங்களோ தெரியாதுன்னு பயந்துட்டு இருக்கேன் நீ வேற வடை வேணும்னு சொல்லி வச்சிருக்க…”

“அதெல்லாம் விடு அம்மா நாம பாத்துக்கலாம்…. வடை முக்கியம் இல்ல நமக்கு….”

“அடப் போடி கூறுகெட்டவளே…” என்று திட்டினார் ரேணுகா. 

“விடு ரேணு பாத்துக்கலாம்… நான் இருப்பேன் தானே… பெத்தவ பொண்ண பாக்க வர்றா… இதை தடுக்க யாருக்கு உரிமை கிடையாது…. அதனாலதான் நான் சாரதா வரேன்னு சொல்லவும் நான் சரினு சொல்லிட்டேன்…”

“அத்தை எனக்கு பயமா இருக்கு அத்தை….” 

“விடும்மா பாத்துக்கலாம்….”

“ரேணு அப்ப அத்தை கூட நாங்க ரெண்டு பேரும் வரவா…?”

“கண்டிப்பா தாராளமா வரலாம்… அதையும் கேட்டுகிட்டே இருப்பீங்களா…?” என்றார் ராஜேஸ்வரி. 

“அண்ணி நீங்க வர்றதுல எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல… ஆனா வினியோட அப்பா ஏதாச்சும் கோவத்துல பேசிட்டா மனசுல வச்சுக்காதீங்க அண்ணி….”

“ஐயோ ரேணு அதெல்லாம் ஒன்னும் இல்ல மாப்ள தானே…. வீட்டுக்கு வந்தவர்களை அவமதிச்சு பேச மாட்டார் நம்ம மாப்பிளன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்…. என்ன முன்னாடியே வந்து இருக்கலாம்… சரி பரவால்ல நாங்க நாளைக்கு வர்றோம்….” என்றார்கள்.  

பின்னர் அவரவர்கள் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கி விட்டுச் செல்ல வினிதா. தோழிகளுடன் சேர்ந்து கொண்டாள். தோழிகளுடன் சந்தையை சுற்றி வந்த வினிதாவிற்கு ஒரு கடையில் இருந்த கண்ணாடி வளையல்களை பார்த்ததும் அதை வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது.  

அவள் தோழிகளிடம், “ஏன்டி கண்ணாடி வளையல் வாங்கிக்கலாமா…?” என்று கேட்டாள். அதற்கு அவர்களோ, “இல்ல வேணாம் வினி என்கிட்ட ஐஸ் குடிக்கிறதுக்கு மட்டும் தான் காசு இருக்கு….”

“ஆமாடி எங்ககிட்டயும் ஐஸ் குடிக்க தான் காசு இருக்கு…. கண்ணாடி வளையல் வாங்குறதுக்கு எல்லாம் காசு இல்லடி… நீ வேணும்னா வாங்கிக்கோ….”

“அடியே என்கிட்டயேயும் ஐஸ் குடிக்க மட்டும் தான்டி காசு இருக்கு.. ழகொண்டு வந்த காசை எல்லாம் நல்லா சாப்பிட்டு இப்ப கண்ணாடி வளையலைப் பார்த்ததும் கண்ணாடி வளையல் வாங்கணும்னு ஆசையா இருக்குடி…” என்றாள்.  

“சரி விடு வினி அடுத்த முறை சந்தையில் பாத்துக்கலாம்…” என்றனர் அவளின் தோழிகள். 

“ஐயோ இல்லடி இது எத்தனை நாள் வாங்கணும்னு ஆசைப்பட்ட நிறம் தெரியுமா….? எனக்கு ரொம்ப புடிச்ச வாடாமல்லி நிறம்…. எனக்கு இந்த வளையல் வாங்கியே ஆகணும் இன்னைக்கு….”

“அப்போ வீட்டுக்கு போய் காசு எடுத்துட்டு வா….”

“வீட்டுக்குப் போனா ரேணு திரும்பி வாரத்துக்கு விடாது… அதனால இங்கேயே இப்பவே நான் வளையல் வாங்கணும்….” என்றவள், வெற்றி எங்கேயும் தென்படுகின்றானா என்று சுத்திச் சுத்திப் பார்த்தாள். 

ஆனால் அவள் கண்களில் தென்பட்டது வெற்றி அல்ல வெற்றியின் தந்தை சுந்தரம். 

“ஐஐஐஐ பெரிய மாமா சந்தைக்கு வந்திருக்காங்க…. அட இங்கே இருங்கடி நான் போய் மாமா கிட்ட காசு வாங்கிட்டு வரேன்…”

“வெற்றி அண்ணனா வெற்றி அண்ணா எங்கடி இங்க இருக்காங்க…?”

“ஏய் நான் சொன்னது வெற்றி மாமாவை இல்லடி… வெற்றி மாமாவோட அப்பாவ எங்க பெரிய மாமா…”

“எது சுந்தரம் ஐயாவா…?”

“அடியே நீ என்ன எல்லாம் பண்ண நினைச்சிட்டு இருக்க டி… நீ போய் கேட்டா இந்தா மருமகளேனு காசை எடுத்து கொடுப்பாரா… இத உங்க அப்பா பாக்கணும் பிரச்சனை பெருசாக போகுது…”

“அட சும்மா இருங்கடி… பிரச்சனை வரும்போது பாத்துக்கலாம்…. இப்ப ஆசைப்பட்ட கண்ணாடி வளையல் நான் வாங்கணும்…. நீங்க எங்கேயும் போயிட வேணாம்…. இங்கேயே இருங்க நான் போய் மாமா கிட்ட காசு வாங்கிட்டு வரேன்…” என்றவள் சுந்தரத்தின் அருகே சென்றாள். 

அங்கே சுந்தரமும் குசேலனும் தங்கள் கணக்குப்பிள்ளையுடன் மாடு வாங்குவதற்காக வந்திருந்தார்கள். இருவரும் மாடு விற்பவரிடம் விலை பேசி விட்டு மாட்டை வாங்குவதற்கு பணத்தை எடுத்துக் கொடுத்தார் சுந்தரம். 

பின்னர் அங்கிருந்து ஒருவரை அழைத்து மாட்டை வீட்டிற்கு கொண்டு செல்லும்படி சொல்லிவிட்டு இருவரும் திரும்ப அவர்கள் முன் வந்து நின்றாள் வினிதா. அவளைப் பார்த்ததும் சுந்தரத்திற்கும் குசேலனுக்கும் கண்கள் கலங்கியது. தாய்மாமன் உறவு என்பது தாய்க்கு நிகரானது அல்லவா அதனால் தான் அவர்கள் இருவரின் கண்களும் கலங்கினர். வினிதா அவர்கள் முன் வந்து நின்று புன்னகை பூத்தாள். 

“பெரிய மாமா…. சின்ன மாமா ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்களா….” என்று கேட்டாள். இவ இங்கே பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் தோழிகள். “என்னடி வினி அவங்க மாமாக் கிட்ட பேசுறா….?” 

“இருடி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்….”

“அம்மாடி வினிமா… நல்லா இருக்கியா கண்ணு…?” என்ற சுந்தரம் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்தார். 

“நான் நல்லா இருக்கேன் மாமா…”

“வீட்ல உங்க அம்மா நல்லா இருக்காங்களா….? மாப்பிள்ளை நல்லா இருக்காரா…” என்று எல்லாரையும் விசாரித்தார் சுந்தரம். 

“எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா…” என்றாள். 

பின்னர் குசேலனிடம் திரும்பி, “சின்ன மாமா.. . குமுதா அண்ணி எப்படி இருக்கா….?”

“அவளுக்கு என்னம்மா நல்லாத்தான் இருக்கா…” என்றார். 

“சரி மாமா நான் உங்ககிட்ட ஒரு உதவி கேட்கலாம்னு வந்தேன்…”

“உதவியா எங்க கிட்டயா… வினி உன் அப்பா இதை பார்த்தா அப்புறம் உனக்கு தான் பிரச்சனை…” என்றார் சுந்தரம். 

“அது பரவால்ல மாமா…. நான் அப்பாவ சமாளிச்சுக்குவேன்…. எனக்கு அவசரமா ஒரு உதவி வேணும்…. அதான் இது யாரு கிட்ட கேட்கிறேன் தெரியாம உங்ககிட்ட வந்தேன்….”

“இதில என்னம்மா இருக்கு…. நீ எங்க வீட்டு மகாராணி டா…. உனக்கு என்ன வேணும்னு சொல்லு…. அத விட்டுட்டு எதுக்கு உதவி என்று பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க….?”

“என்னோட மாமான்னா மாமா தான்…” என்று சுந்தரத்தின் இரு கன்னங்களையும் பிடித்து இழுத்தாள் வினிதா. 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வினிதாவின் தோழிகளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. 

சிரித்த சுந்தரம், “ஆமா வினிமா நீ எப்பவும் எங்களுக்கு குட்டி வினிதாதான்….. இப்போ உனக்கு என்ன வேணும்…?”

“அது ஒன்னு இல்ல சின்ன மாமா… நான் இந்த பக்கமா ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட வந்தனா… அதோ அந்த கடையில கண்ணாடி வளையல் இருக்கு…. நான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கிற வாடாமல்லி கலரில் இருக்கு…. எனக்கு அது வாங்க காசு இல்ல மாமா…. அம்மா கொடுத்த காசுக்கு எல்லாம் நல்லா தின்பண்டம் வாங்கி சாப்டேன்…. அதுதான் எனக்கு அந்த கண்ணாடி வளையல் வாங்க காசு கொடுக்குறீங்களா…? நான் மறு முறை பார்க்கும் போது உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுறேன்….” என்றாள் வினிதா. 

அவளது காது இரண்டையும் சுந்தரமும் குசேலரும் திருகினார்கள். “ஐயோ மாமா விடுங்க… மாமா விடுங்க ரெண்டு பேரும்…. மாமா காது வலிக்குது மாமா…”

“ஏன்டா மாமா அது வாங்கி கொடுங்கன்னு உரிமையா கேள… அதை விட்டு எனக்கு காசு தாங்க நான் திருப்பி தரேன்னு சொல்ற பழக்கம்….? உனக்கு என்ன வேணும் அந்த வளையல் தானே வேணும் வா…..” என்று இருவரும் அவளை அழைத்துக்கொண்டு கடையின் அருகே வந்தார்கள். 

வினிதா தன் தோழிகள் அதிர்ச்சியில் நிற்பதை பார்த்து, தோழி ஒருத்தி காலிலே ஓங்கி மிதித்தாள். அவ்வளவு தான் அவள் வலியில், “அம்மா…” என்று சத்தமாக கத்த, “என்னம்மா…?” என்று கேட்டார் சுந்தரம். 

அதற்கு அவள் தோழியோ, “ஒன்றும் இல்லை ஐயா கட்டெறும்பு கடிச்சிருச்சு….” என்றாள்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!