மேனகாவிற்கு ரிஷிவர்மனின் நினைவு வந்ததும் முகமெல்லாம் பதட்டத்தை தத்து எடுத்துக் கொண்டது.
அடுத்து நடந்த எதுவும் அவளது மூளையை எட்டவில்லை. எப்படி அவளது குவாட்டர்ஸுக்கு வந்தாள் என்பதே நினைவில்லை.
அவளது நினைவில் இருந்ததெல்லாம் ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்…
‘ மேகி… மேகி… ” என்று அவளை உலுக்க.
” அத்தான்… இன்னைக்கு ஊருக்கு போகணும்னு லீவு போட சொன்னீங்க. போட்டுட்டேன். சரி தான் இன்னைக்காவது கொஞ்சம் நேரம் தூங்கலாம்னா விட மாட்டேங்குறீங்களே… பத்து மணிக்கு தானே கிளம்பனும். இன்னும் ஆறு மணிக் கூட ஆகலை. ” என்று கண்ணைத் திறவாமலே கூறினாள் மேனகா.
” மேகி… பழங்குடி மக்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டியேனு கூட்டிட்டு போகலாம்னு பார்த்தேன். வேண்டாமா?” என்று புன்னகையுடன் வினவ.
படக்கென்று எழுந்தாள் மேனகா.
” ரியல்லி…”
” யா… உனக்கு ட்வெண்டி மினிட்ஸ் தான் டைம் மேகி… அதுக்குள்ள கிளம்பணும். இல்லைன்னா நான் மட்டும் கிளம்பி போயிட்டே இருப்பேன். யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.” என்றவன் அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.
” அப்படியெல்லாம் விட்டுட்டு போக மாட்டீங்கன்னு தெரியும் அத்தான். இருந்தாலும் நான் சீக்கிரம் கிளம்பி வர்றேன்.” என்றவள், சிட்டாக கிளம்பி வந்தாள்.
அடர் பச்சை நிற சுடிதாரில் வந்திருந்த மேனகாவை பார்த்து, ” உன்னைப் பார்த்து வன மோகினி தான் வந்திருக்குன்னு பயந்துடப் போறாங்க.” என்றான் ரிஷிவர்மன்.
” அத்தான்…” என்று முறைக்க முயன்று முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.
ரிஷிவர்மன் முகத்திலோ காதல் வழிந்தது.
அவனது பார்வையை புரிந்துக் கொண்டவளோ முகம் சிவக்க கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அவள் பின்னேயே வந்த ரிஷிவர்மனுக்கோ பேச்சே வரவில்லை. மெல்ல சமாளித்து, ” மேகி… டிஃபன் எதுவும் செய்ய வேண்டாம். அங்கே போனா ஏதாவது சாப்பிட தருவாங்க. சாப்பிடாமல் நம்மளை விடமாட்டாங்கன்னு டிரைவர் சொல்லியிருக்கிறார்.” என்றான்
” ஓ… அப்போ கிளம்பலாமா அத்தான்.” என்று எங்கோ பார்வையை பதித்துக் கொண்டு மேனகா வினவினாள்.
” ம்…” என்றவனோ தலையை கோதிக் கொண்டு முன்னே நடக்க…
அவன் பின்னே வந்தாள்.
மேனகாவின் தயக்கமெல்லாம் கொஞ்சம் நேரமே பிறகு வழக்கம் போல் அவளது வாய் பூட்டு கழன்றது.
” அத்தான்… இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்?”
” கொஞ்ச தூரம் தான் வா… அதுக்குள்ள அசந்துட்டா எப்படி?”
” அசரலாம் இல்ல. அவங்களை பாக்கணும்னு ஒரு எக்சைட்மென்ட் அத்தான்.”
” தெரியும் மேகி… அதுக்காகத்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன். இல்லன்னா நான் மட்டுமே வந்து அவங்களை பார்த்திருப்பேன்.” என்றான் ரிஷிவர்மன்.
” தேங்க்ஸ் அத்தான்.”
” உதை வாங்க போற…”
” ஓ… தேங்க்ஸ் வாபஸ் அத்தான். அங்கே பாருங்க அந்த மரம் எவ்வளவு அழகா இருக்கு… இங்கே கேக்குற பறவைகளோட சத்தம் எவ்வளவு இனிமையா இருக்கு…” என்று ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டே வந்தாள் மேனகா.
” எவ்வளவு அழகிருக்கோ, அவ்வளவுக்கு ஆபத்தும் இருக்கு. இந்த மலை கிராமத்துல இருக்குற மக்கள், டெய்லி மலையிலிருந்து கீழே இறங்கி வருவாங்க, மறுபடியும் மலைக்கு போவாங்க. நிறைய காட்டு விலங்குகள் கிட்ட மாட்டி உயிர் இழந்துருக்காங்க.” என்று ரிஷிவர்மன் கூறிக் கொண்டிருக்க. மேனகா பயந்து அவனது கைகளைப் பற்றினாள்.
” ஹேய் மேகி… என்ன பயமா? இல்லை இதெல்லாம் தெரியாமல் தான் ஃபாரஸ்டரி படிச்சிட்டு இங்கே வேலைக்கு வந்தியா?”
தெரியும்… ஆனாலும் கொஞ்சம் பயமா இருக்கு அத்தான்.” இன்னும் அவனை ஓண்டிக் கொண்டு கூற.
அவஸ்தையாக நெளிந்த ரிஷிவர்மன், ” ஹேய் லூசு… பயப்படாமல் கீழ பார்த்து வா. இங்கே அவ்வளவா வராது. இன்னும் இன்டீரியரா காட்டுக்குள்ள போனாலும், இரவு நேரத்திலும் தான் வரும்.” என்று சற்று அதட்ட…
மேனகா விலகி நின்றாள்.
” ஐயோ! ஐயோ! உன்னை வச்சுக்கிட்டு என்னால முடியல மேகி… ஒண்ணு ஒரேயடியா ஒட்டிக்கிறது… இல்லை பத்தடி தள்ளிப் போய் நிக்க வேண்டியது. மரியாதையா என் கையை பிடிச்சுக்கிட்டு வா.” என்றவன், அவளின் கையைப் பற்றி அழைத்துச் சென்றான்.
சற்று நேரத்தில் இவர்கள் பழங்குடியினர் இருக்கும் கிராமத்திற்குச் செல்ல…
அங்கிருந்த மூத்த பெண்மணி, ” யார் நீங்க?” என்று விசாரித்தார்.
” நாங்க வனத்துறை அதிகாரிங்க.” என்று ரிஷிவர்மன் அறிமுகப்படுத்திக் கொண்டான்.
ஒரு கணம் முகம் மாறி பின்னர் இயல்புக்கு திரும்பியவரோ, ” வாங்க ஐயா… வாங்க தாயி…” என்று அன்புடன் வரவேற்றார்.
” மலை ஏறி வந்தது களைப்பா இருக்கும். டீத்தண்ணி குடிக்கிறீங்களா?” என்றவர், அவர்களது பதிலை எதிர்பார்க்காமல் பால் கலக்காத தேநீரை போட்டுக் கொண்டு வந்தார்.
ரிஷிவர்மன் எந்த வித பந்தாவும் இல்லாமல் அதை அருந்த… மேனகாவோ தயக்கத்தோடு அருந்தினாள்.
அமிர்தமாக இருந்தது.
” என்ன விஷயம் ஐயா…” என்று மீண்டும் விசாரித்தார்.
” உங்களுக்கு இங்கே சிரமமா இல்லையா? கீழ உங்களுக்கு கவர்மெண்ட் இலவசமா வீடு கட்டி தரேன்னு சொல்றாங்க. அங்கே எல்லா வசதிகளும் இருக்கும்.”
” எங்களுக்கு இங்கே தான் வசதி. ” என்றார் அந்த பாட்டி.
” தினமும் கீழே இறங்கி ஏறுறது கஷ்டமா இல்லையா? கரண்ட் வசதியும் இல்லை. பிள்ளைங்க எல்லாம் படிக்க வேண்டாம்மா? ” என்று அக்கறையாக கூறினான் ரிஷிவர்மன்.
” எங்களுக்கு அதெல்லாம் பழகிடுச்சு. இங்க இருக்கிறது தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு. எங்க பிள்ளைகளுக்கு காடு தான் பிடிக்கும். நீங்களே வேணும்னா கேட்டு பாருங்க.” என்றவர், இவர்களைப் பார்த்ததும் மறைந்து நின்று கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து, ” டேய் பசங்களா இங்கே வாங்க.” என்று அழைத்தார்.
தயங்கி தயங்கி வெட்கப்பட்டுக் கொண்டே வந்த பசங்களிடம் மேனகா தான் பேச்சே ஆரம்பித்தாள். ” ஏன் தம்பிங்களா… அங்கே போய் மறஞ்சு நிக்கிறீங்க?” என்று வினவ.
அவங்களோ பதில் சொல்லாமல் பயந்து கொண்டு அந்த பாட்டியை பார்த்தனர்.
அவங்களுக்கு புதுசா வர்றவங்களைப் பாத்தா பயமா இருக்கும். முன்னாடியே தெரிஞ்சா இங்கிருந்து ஓடி போயிருப்பாங்க.”
” ஓ… ஏன்? என்ன பயம்?” என்று அந்த சிறுவர்களைப் பார்த்து மேனகா வினவ
” எங்களை பிடிச்சுட்டு போயிட்டா என்ன பண்றது.அதான் பயமாருக்கு.” என்று ஒரு குழந்தை கண்ணை உருட்டி, உருட்டி பேச.
“அப்படி எல்லாம் செய்ய மாட்டோம். உங்களுக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வருது கஷ்டமா இல்லையா? அங்கேயே தங்கிக்கிறீங்களா?” என்று ரிஷிவர்மன் கேட்க.
” எங்களுக்கு அங்க பிடிக்காது. தூசியா இருக்கும். அப்புறம் வண்டிங்களோட சத்தம் வேற கேட்கும். எங்களுக்கு இங்க தான் புடிக்கும்.” என்றான் இன்னொரு சிறுவன்.
” இங்கே பறவைகள் சத்தம், விலங்குகள் சத்தம் கேட்டுகிட்டு இருக்கே. இது தொந்தரவா இல்லையா?” என்று இடையிட்டாள் மேனகா.
” இது நல்லா இருக்கும்…” என்ற குழந்தைகள் அங்கிருந்து ஓட பார்க்க.
” டேய் பசங்களா இருங்க. உங்களை போட்டோ எடுக்குறேன்.” என்ற மேனகா, அவள் எடுத்து வந்திருந்த கேமராவில் அவர்களை படம் எடுத்தாள்.
அந்த இடத்தையும், அவர்களது வீட்டையும் போட்டோ எடுத்துக் கொண்டாள்.
” ஆமாங்க பாட்டி… உங்களைப் பத்தி சொல்லுங்களேன்.” என்று கூறு அவர்களுடைய பழக்க வழக்கத்தை எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தாள் மேனகா.
” என்ன வேலை பார்ப்பீங்க…” என்று கேட்க.
” மரத்திலிருந்து பாசி எடுப்போம். விவசாயம் பண்ணுவோம். முன்னெல்லாம் வீட்டு வேலைக்கு கூப்பிடுவாங்க போவோம். காலையிலே சமைச்சு வச்சுட்டு வேலைக்கு கிளம்பிடுவோம்.” என்றார் பாட்டி.
” எப்படி மரத்திலிருந்து பாசி எடுப்பீங்க. மேல ஏறுவீங்களா?” என்று ஆர்வமாக மேனகா வினவ.
” லட்சுமி…” என்று தனது மருமகளை அழைத்தவர், ” இவங்க பாசி எடுக்குறதை பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க. கூட்டிட்டு போய் காட்டு.” என்றார்.
மேனகா, ரிஷிவர்மனைப் பார்க்க… ” நீ போ…” என்றவன் அந்த பாட்டியிடம் பேச்சை ஆரம்பித்தான்.
” பாட்டி… இந்த காட்டுல இருக்குறது ஆபத்து. ” என்று முடிப்பதற்குள், கடகடவென நகைத்தார் அந்த மூதாட்டி.
” இந்த காட்டுல நாங்க நாப்பது குடும்பம் இருக்கிறோம். எங்க வீட்டுக்குக்காரர் தான் இங்கே எல்லாருடைய நல்லது கெட்டதுக்கு முன்னாடி நிப்பாரு. அவரு ஏதோ சோலியா கீழ ஊருக்கு போயிருக்கார். அவர் இருந்தாலும் இதைத் தான் சொல்லுவார். இந்த காட்டுல இருக்கறது தான் எங்களுக்கு பாதுகாப்பு. இந்த காட்டுக்கு நாங்க பாதுகாப்பு. எங்களைத் தவிர யாராலும் இந்த காட்டை பாத்துக்க முடியாது. ” என்றார்.
” சரிங்க பாட்டி.” என்ற ரிஷிவர்மனின் முகத்திலோ ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.
ஆனால் அதற்கு மாறாக மேனகாவின் முகமோ மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது.
அவர்கள் சொல்லிக் கொடுத்தது போல் அந்த மரத்தில் ஏறி நின்று, பாசி எடுத்தாள்.
கூட வந்த சிறுவனையும், லட்சுமியையும் விதவிதமாக ஃபோட்டோ எடுத்தாள்.
லட்சுமியை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. வெள்ளந்தியான பேச்சும், வெட்கத்துடன் சிரிப்பதுமாக கொள்ளை அழகுடன் இருந்தாள்.
” லட்சு அக்கா… உங்களை என் லைஃப்ல மறக்கவே மாட்டேன். நீங்க ரொம்ப ஸ்வீட் கா.” என்று கொஞ்சினாள் மேனகா.
” போங்க மா…” என்று வெட்கப்பட்டாள் லட்சுமி.’
” கர்… கர்…” என்று புலி உருமும் சத்தம் கேட்க…
” லட்சுக்கா…” என்று கத்திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் மேனகா.
முகம் எல்லாம் முத்து முத்தாக வியர்த்திருந்தது.
வேலை முடிந்து குவாட்டர்ஸ்க்கு வந்தவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்க… அப்படியே தூங்கியும் இருந்தாள்.
எப்பொழுதும் போல் அந்த கனவு வந்திருந்தது. முகத்தில் இருள் கவிழ்ந்திருக்க… கண்களில் கண்ணீர் துளி. மறுபடியும் கர்… கர்… என்று சத்தம் கேட்க. அப்பொழுதுதான் கையில் வைத்திருந்த ஃபோனின் அதிர்வை கண்டாள்.
சைலன்டில் இருந்த ஃபோன் வைப்ரேஷன் ஆவது புரிந்தது.
“ஃபோனா… ” என்று பெருமூச்சு விட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டு யார் அழைக்கிறார்கள் என்று பார்த்தாள்.
ஆதிரன் அழைத்து இருக்க… ‘ இந்த நேரத்தில் எதுக்கு ஃபோன் பண்றார். ஒரு வேளை எதுவும் எமர்ஜென்சியோ.’ என்று எண்ணியவள் பதற்றமானாள்.
” ஹலோ சார்… என்ன ஆச்சு?” என்று படபடப்புடன் வினவ.
“கூல் மேனகா… சும்மா தான் ஃபோன் பண்ணேன். “
“ஓ…” என்றவளது த்வனியோ இப்போது
எச்சரிக்கையாக ஒலித்தது.
அதைக் கண்டுக் கொண்ட ஆதிரன் லேசான புன்னகையை சிந்தினான்.
” இன்னைக்கு ஈவினிங் உங்க முகம் என்னவோ போல இருந்துச்சு. என்ன கேள்வி கேட்டாலும் ஒழுங்காக பதில் சொல்லலை. ரெஸ்ட்லஸ்ஸா இருந்தீங்க. அதான் எப்படி இருக்கீங்கன்னு கேட்க தான் ஃபோன் பண்ணேன்.” என்றான் ஆதிரன்.
” அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க சார். நான் நல்லாத்தான் இருக்கேன். ஏதாவது அஃபிஸியலா இருந்தா மட்டும் கால் பண்ணுங்க. இல்லைன்னா பண்ணாதீங்க சார். ஏதோ எமர்ஜென்சின்னு நினைத்து பயந்துட்டேன்.”
” ப்ளீஸ் டோண்ட் என்டர்பியர் இன் மை பர்ஸ்னல்.” என்று சற்று கடுமையாக கூற.
” இட்ஸ் ஓகே. நீங்க ஈவினிங் அவ்வளவு நேரம் சிரிச்சிட்டு இருந்தீங்க. அப்புறம் உங்க முகமே வாடி போயிடுச்சு. அந்த அக்கறையில் தான் கேட்டேன்.” என்று விடாமல் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் ஆதிரன்.
” உங்களுக்கு கோபமே வராதா சார்.” என்று மாலையில் நடந்ததை நினைத்து மேனகா வினவ
“அழகான பொண்ணுக் கிட்ட யாராவது கோபப்படுவாங்களா?”
” ப்ச்… நான் ஈவினிங் நடந்ததைப் பத்திக் கேட்குறேன். என்ன தான் மிஸ்டர் ஜீவாத்மன் நம்மளோட மேல் அதிகாரியா இருந்தாலும், உங்களை ரொம்ப டீஸ் பண்ணுற மாதிரி பேசுறாரு. நீங்களும ரொம்ப பொறுமையா இருக்கீங்க. அன்னைக்கு என்னன்னா மீட்டிங்ல யார் வேணும்னாலும் அவர் கிட்ட காண்டாக்ட் பண்ணலாம்னு சொல்றாங்க. பொதுவா உங்க மூலமா தானே அவரை காண்டாக்ட் பண்ணனும். நீங்களும் அதை ஈசியா எடுத்துக் கிட்டு கூலா இருந்தீங்க. இன்றைக்கும் உங்களை நக்கல் பண்ணாரு, அப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க. நீங்க இவ்ளோ நல்லவங்களா இருக்கத் தேவையில்லை சார்.”
” ஐயோ! என்னையும் நல்லவன்னு சொல்ல ஒரு ஆளு இருக்கு. நீங்க என்னை பாராட்டுவீங்கன்னு தெரிஞ்சா முன்னாடியே ரெகார்ட் பண்ணி வீட்ல எல்லார் கிட்டேயும் காட்டிருப்பேன். இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை. இன்னொரு முறை பாராட்டுங்க மேனகா.” என்று உற்சாகமாக கத்தினான் ஆதிரன்.
“ஐயோ சார்… நீங்க எந்த விஷயத்தையும் சீரியஸாவே எடுத்துக்க மாட்டிங்களா?”
” எதுக்கு சீரியஸா எடுத்துக்கிட்டு, டென்ஷனோடு சுத்தணும். சந்தோஷமா நம்மளும் இருப்போம். அடுத்தவங்களையும் சந்தோஷமா வச்சுப்போம். நீங்களும் எதையும் யோசிக்காதீங்க. உங்க மனசுல எதுவும் ஃப்ராப்ளம் இருந்தா மனசு விட்டு பேசுங்க. பேசினாலே கொஞ்சம் குறையும். ஏதோ ஒரு விஷயம் உங்களைப் போட்டு படுத்துற மாதிரி தெரியுது. மீண்டும் உங்க பர்ஸனல்ல நுழையுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அஸ் ஏ ஃப்ரெண்டா சொல்றேன். நோ டென்ஷன்… பீ ஹேப்பி…” என்று விட்டு ஃபோனை வைத்தான் ஆதிரன்.
ஆதிரன் அவளது பர்ஸனலில் நுழைவதற்கு மன்னிப்பு கேட்க. ஜீவாத்மனோ, அதிரடியாக அவளது பர்ஸனலில் நுழைந்தான். அதுவும் அவளது அனுமதியே இல்லாமலே…