15. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.9
(46)

சொர்க்கம் – 15

கௌதமனுக்கோ முகம் முழுவதும் மகிழ்ச்சி விரவி இருந்தது.

தன்னுடைய ஸ்கூட்டியை செந்தூரியின் வீட்டிற்கு முன்பு நிறுத்தியவன் அவளுடைய வீட்டைப் பார்த்ததும் சிரிப்புடன் தன் தலையில் தட்டிக் கொண்டான்.

பின்னே அவளுடைய வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு மூன்று நாட்களாக அலைந்தல்லவா திரிந்தான்.

நான்கு நாட்களுக்கு முன்பு அன்று அவளைப் பார்க்கில் சந்தித்து விட்டுச் சென்றதும் அவனுடைய அலைபேசிக்கோ மீண்டும் துணை இயக்குநரிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.

என்னவோ ஏதோ எனப் பதறிப் போய் அழைப்பை ஏற்றவனுக்கு தன் காதுகளில் விழுந்த செய்தியை நம்பத்தான் முடியவில்லை.

அதிலும் கதாநாயகனுக்கு நண்பனாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு அவனைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் அவனை அழைத்திருக்க அவனுக்கோ தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.

அவன் ஆடிஷனில் கூட கலந்து கொள்ளவில்லையே.

எப்படி இதெல்லாம் சாத்தியம் எனத் திகைத்துப் போய் நிற்க, அவனுடைய யூடியூப் வீடியோவைப் பார்த்து பிடித்து விட்டதாகக் கூறியவர்கள் அன்று மாலையே அவனை நேரில் வந்து சந்திக்கும்படி கூறினர்.

அதன் பின்னர் சொல்லவா வேண்டும்..?

அன்று மாலையே அவர்கள் கூறிய இடத்திற்குச் சென்றவன் தன்னுடைய நடிப்புத் திறமையை நேரில் நடித்தே காண்பிக்க அவர்களுக்கோ திருப்தியாகிப் போயிற்று.

இன்னும் ஒரு மாதத்தில் படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பித்து விடும் என அவர்கள் கூறியதும் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்தவனுக்கு சட்டென செந்தூரியின் நினைவு தான் வந்தது.

தனக்காக அவள்தானே பிரார்த்தித்தாள்.

அவள் பிரார்த்தித்த அன்றைய நாளே அவனுக்கு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து விட்டதே.

இதை எப்படியாவது அவளிடம் கூற வேண்டும் என பரபரத்தவனுக்கு அப்போதுதான் அவளுடைய பெயரோ முகவரியோ தொலைபேசி எண்ணோ தனக்குத் தெரியாது என்ற நினைவே வந்தது.

வேகமாக மீண்டும் பார்க்கிற்குச் சென்று அந்தப் பார்க்கை சுற்றி இருந்த ஏரியா முழுவதும் தன்னுடைய ஸ்கூட்டியில் வலம் வந்து அவளைத் தேடித் திரிந்தவன் அவளைக் காணாது சோர்ந்துதான் போனான்.

எப்படி அவளைப் பற்றி விசாரிப்பது..?

அவளுடைய பெயர் தெரிந்தாலாவது விசாரித்துப் பார்க்கலாம்.

பெயரும் தெரியாது.. அப்படி இருக்கும்போது என்னவென்று சொல்லி அவளைத் தேடிக் கண்டுபிடிப்பது..?

ஒரு நாள் முழுவதும் பார்க் இருந்த ஊர் முழுவதாகக் சுற்றியவன் அவளைக் கண்டுபிடிக்க முடியாது போக, அப்போதுதான் அவள் விநாயக்கை அடித்த வீடியோ வலைதளங்களில் பரவி இருந்ததை நினைவு கூர்ந்தான்.

அந்த வீடியோவில் அவளுடைய முகம் தெரிவது போல ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை எடுத்து வைத்தவன் அந்த போட்டோவை வைத்து அவளை விசாரிக்கத் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின்பே அவளுடைய வீட்டை அவனால் கண்டுபிடிக்க முடிந்தது.

தயக்கத்தோடு அவளுடைய வீட்டுக் கதவை அவன் தட்ட வெகு நேரத்தின் பின்னரே கண்ணீரோடு வந்து கதவைத் திறந்தார் மேகலா.

அழுது முகம் வீங்கிச் சிவந்திருந்தவரைக் கண்டதும் அவனுக்கோ முகத்தில் இருந்த சிரிப்பு வடிந்தது.

“யாருப்பா நீ..? எதுக்கு இங்க வந்திருக்க..?” என புடவைத் தலைப்பால் தன்னுடைய முகத்தைத் துடைத்தவாறு கேட்டார் மேகலா.

அக்கம் பக்கத்தில் அவளுடைய போட்டோவைக் காட்டி விசாரித்ததில் “செந்தூரியோட வீடு இதுதான்…” என அவர்கள் காட்டியதால் அவளுடைய பெயர் செந்தூரி என்பதை அறிந்து கொண்டவன்,

“செந்தூரி இல்லையா ஆன்ட்டி..?” எனக் கேட்டான்.

மகளைப் பற்றிக் கேட்டதும் அவருக்கோ மீண்டும் கண்ணீர் சுரந்தது.

எங்கே இருந்தாவது மகளைக் காப்பாற்றிட ஏதாவது ஒரு ஆதாயம் கிடைத்து விடாதா என ஏங்கியவர் நடந்த அனைத்தையும் சொல்லிக் கதறி விட திகைத்துப் போனான் கௌதமன்.

“ஐயோ என்ன ஆன்ட்டி சொல்றீங்க..? அவங்க எப்படி இப்படி இழுத்துட்டுப் போகலாம்..? இப்படியெல்லாம் பண்ணவே கூடாது.. முதல்ல வட்டிக்கு பணம் கொடுக்குறதே தப்பு..” என்றவனுக்கு மோகன் மீது கொள்ளை கோபம் பிறந்தது.

“அதெல்லாம் அவங்ககிட்ட பேச முடியாது தம்பி.. ரொம்ப பண பலம் படைச்சவங்க… போலீஸே அவங்க கைலதான் இருக்கு.. இப்போ 10,000 கொடுக்கலைன்னா என்னோட மகளை விடவே மாட்டேன்னு சொல்லிட்டான்..” என அவர் அழுகையோடு கூற,

தன்னுடைய பாக்கெட்டில் கைவிட்டுத் தடவிப் பார்த்தவனுக்கு தன்னிடம் 2000 ரூபாய்தான் இருக்கிறது என்பது புரிந்தது.

படம் நடிப்பதற்கு வந்து வாய்ப்புத் தேடி அலைந்த நேரத்தில் ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றிருந்தால் கூட அவன் கொஞ்சமாவது பணத்தை சேமித்து வைத்திருக்கக் கூடும்.

ஆனால் ஊரில் இருந்து வந்ததற்கு அவன் கொண்டு வந்த பணம் கரியாகிப் போனது அல்லவா மிச்சம்.

இதில் மீதிப் பணத்தை எப்படிப் புரட்டுவது எனச் சிந்தித்தவன் சட்டென தன்னுடைய ஸ்கூட்டரைப் பார்த்தான்.

இங்கே அவசரத்திற்கு ஓடிச் சென்று வாங்குவதற்கு நண்பர்கள் கூட இல்லையே.

ஊரு விட்டு ஊரு வந்தவனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் இங்கு யாரும் இல்லை.

அதற்காக கேட்டவுடன் அள்ளி வழங்குவதற்கு அவனுடைய ஊரிலும் அவனுக்கு பெரிதாக யாரும் இல்லைதான்.

பெருமூச்சோடு மேகலாவைப் பார்த்தவன்,

“ஆன்ட்டி கவலைப்படாதீங்க.. நான் கொஞ்ச நேரத்துல பணத்தோட வர்றேன்..” என்றவாறு தன்னுடைய ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அருகே இருந்த மெக்கானிக் ஷாப்பை நோக்கி வேகமாகச் சென்றான்.

அவன் அங்கே சென்றதும் “என்ன ப்ரோ பைக்குக்கு என்ன ஆச்சு..? நல்ல கண்டிஷன்ல தானே இருக்கு..?” எனக் கேட்டவாறு பார்வையால் கௌதமின் பைக்கை அளவெடுத்தான் அந்தக் கடைக்காரன்.

“சஹோ.. பைக்ல எந்தப் பிரச்சனையும் இல்ல.. இந்த பைக்கை வச்சிட்டு ஒரு எட்டாயிரம் ரூபா கொடுக்க முடியுமா..?” எனக் கௌதமன் கேட்டதும் கடைக்காரனின் பார்வையோ அவன் மீது சந்தேகமாகப் படிந்தது.

“ப்ளீஸ் சஹோ கொஞ்சம் அவசரமா பணம் வேணும்.. நாளைக்குப் பணத்தைக் கொடுத்துட்டு பைக்கை வாங்கிக்கிறேன் ப்ளீஸ்..” என அவன் மன்றாடிக் கேட்க,

“ப்ரோ இது உங்க பைக்தானே ஏதாவது திருட்டு பைக்க கொண்டுவந்து என்ன மாட்டி விட்டுட்டு போக ட்ரை பண்ணலையே..?” என சந்தேகமாகக் கேட்டக் கடைக்காரனைப் பார்த்து வேகமாக மறுப்பாகத் தலையசைத்தவன் தன் ஃபோனை எடுத்து பைக் வாங்கியது முதல் இருந்த அத்தனை போட்டோவையும் வேகமாக அவனுக்குக் காட்ட,

அதன் பின்னர் மறுக்கத் தோன்றாது அவனுடைய பைக்கை வாங்கி தன்னுடைய கடைக்குள் ஸ்டான்ட் போட்டு வைத்தவன்,

“இதோ பாரு ப்ரோ நீ நாளைக்கு பணம் கொண்டு வந்து தரும் வரைக்கும் உன்னோட ஸ்கூட்டியை நான் வாடகைக்கு கொடுத்துப்பேன். பரவாயில்லையா..?” எனக் கேட்டான்.

“அதெல்லாம் பரவால்ல.. நாளைக்கு எப்படியாவது பணத்தோட வந்து என் ஸ்கூட்டியை எடுத்துக்கிறேன்..” என்றதும் பணத்தை எண்ணி அவனிடம் கொடுத்தான் அவன்.

“ரொம்ப தேங்க்ஸ் சஹோ.. ஹாங் உங்க பேரு என்ன..?”

“தாஸ்..” என்றான் அவன்.

“ஓஹோ நீங்க தான் அந்த லாடு லபக்கு தாஸா..?” என சட்டென வந்துவிட்ட கேள்வியை அடக்க முடியாது கேட்டு விட்டவன்,

“யோவ்…” என தாஸ் கத்தியதும் வேகமாக அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக சென்று விட்டான்.

முதலில் இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு எப்படியாவது செந்தூரியை மீட்டு வர வேண்டும் என எண்ணியவன் மேகலாவின் வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினான்.

ஏதாவது பிரச்சினை என்றால் என்னிடம் உதவி கேள் எனக் கூறித்தானே அவனுடைய அலைபேசி எண்ணை அவளிடம் பகிர்ந்தான்.

நண்பர்கள் என்றால் உதவி கேட்பதற்கு என்ன தயக்கம் இருக்க வேண்டும்..?

ஒரு அழைப்பு கூட அவருளுடைய எண்ணில் இருந்து வரவே இல்லையே என வருத்தத்துடன் எண்ணியவாறே வேகமாக நடக்கலானான் கௌதமன்.

*****

காரில் தன்னுடைய தலையை தாழ்த்தி கண்ணீரை மிகச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்த செந்தூரியை மொய்த்தது அவனுடைய பார்வை.

மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தவன் “என்ன முடிவு பண்ணி இருக்க..?” எனக் கேட்டான்.

இவன் கேட்டதும் பதில் சொல்லி விட வேண்டுமா என்ன..?

இறுக்கத்துடன் பதில் பேசாது அமர்ந்திருந்தாள் செந்தூரி.

அவள் பதில் சொல்லவில்லை என்றதும் அவனுடைய காரோ மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து முன்னே செல்பவர்களை எல்லாம் இடித்து விடுவது போன்ற வேகத்தில் செல்ல தன்னில் உள்ள கோபத்தில்தான் இப்படி எல்லாம் செய்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் சட்டென “என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியல..” என்ற பதிலை அவனுக்கு வழங்கி இருந்தாள்.

அவள் பதில் கூறியதும் மீண்டும் கார் மிதமான வேகத்திற்குத் திரும்பியது.

‘படுபாவி..’ அவனைத் திட்டியது அவளுடைய மனம்.

“சோ எப்போ வீட்டுக்கு வரப் போற..?” கொஞ்சம் கூட கூச்சமே இன்றிக் கேட்டவனைப் பார்த்தவளுக்கு வெறுப்பு அவன் மீது மேலும் அதிகரித்தது.

என்னவென்று பதில் சொல்வாள்.?

அன்று போல நீ நினைப்பது கனவில் கூட நடக்காது என்றா சொல்ல முடியும்..?

இங்கே நடப்பதெல்லாம் அவன் எழுதி வைத்ததைப் போல் அல்லவா நடந்து கொண்டிருக்கிறது.

இந்த உலகத்தில் கடவுள் இருக்கிறாரா இல்லை பணம் படைத்தவர்கள்தான் கடவுளா..?

அவனிடம் எதிர்த்து பேசக்கூட அச்சமாக இருந்தது அவளுக்கு.

சுற்றிச் சுற்றி பணத்தால் அவளை சுழற்றி அடித்துவிட்டான் அல்லவா.?

அவளை மரணம் வரைக்கும் அழைத்து வந்து விட்டானே.

சில நொடிகள் அவன் தாமதித்து இருந்தால் கூட எதிரே வந்திருந்த லாரியில் சிதைந்து போய் இருப்பாள் அவள்.

தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக் கூட யோசிக்காது மன அழுத்தம் தாங்க முடியாது அந்த முடிவுக்கு அவள் வந்ததற்கு முழு காரணமும் அவன் தானே.

மீண்டும் விழிகள் கலங்கின.

போராடுவதற்கு உடலில் தெம்பும் கையில் பணமும் இல்லை என்பதை புரிந்து கொண்டவளுக்கு தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கலங்கிய விழிகளில் இருந்து கண்ணீர் மீண்டும் ஆறாகக் கொட்டத் தொடங்கியது.

காரை விதியின் ஓரமாக நிறுத்தியவன் ஒரு பெட்டியை அவளிடம் கொடுக்க அவன் தன்னுடைய கண்ணீரைப் பார்க்கக் கூடாது என வேகமாக விழிகளைத் துடைத்தவள் அவன் தன் மடி மீது வைத்த பெட்டியை வெறித்துப் பார்த்தாள்.

“இந்தப் பெட்டில சக்கரவர்த்தி உன்கிட்ட கேட்ட 60 லட்சமும் உங்க அம்மா வட்டிக்கு வாங்கிய 10 லட்சம் பிளஸ் வட்டியும் இருக்கு..” என அவன் கூறியதும் அவள் அதிரவெல்லாம் இல்லை.

“பணத்தைக் கொடுத்து என்னை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறீங்களா..?” எவ்வளவோ முயன்றும் அடக்க முடியாமல் சீற்றத்துடன் கேட்டாள் அவள்.

“இந்தப் பணம் இல்லாமதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ சாகத் துணிஞ்ச.. இதே பணம் இல்லாமதான் அவங்க உன்ன இழுத்துட்டுப் போனானுங்க.. இனியும் இதே பணம் உன்கிட்ட இல்லைன்னா நாளைக்கு சக்கரவர்த்தி போலீஸோட உன் வீட்டு வாசல்ல வந்து நிப்பாரு.. ஒவ்வொரு வாரமும் வட்டிக்காக மோகன் உன் வீட்டுக் கதவத் தட்டுவான்.. இதுக்கு மேலயும் விளக்கமா உன்கிட்ட நான் சொல்லனும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்.. இதோட இம்போர்ட்டண்ட் என்னன்னு என்ன விட பிரச்சனைக்குள்ள தவிச்சுக்கிட்டு இருக்க உனக்குத்தான் தெளிவா புரியும்..” என்றான்.

பபிள்கம்மை மென்று கொண்டு அவன் கூறிய வார்த்தைகளில் அவளுக்கோ உடல் இறுகியது.

தன்னுடைய எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்து அதற்கு ஏற்ப காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறான்.

ம்ஹூம் செக் வைத்து விட்டான்.

இதை வாங்கவில்லை என்றால் நாளை சக்கரவர்த்தி காவல்துறையுடன் வருவார் எனக் கூறியது அவனுடைய மறைமுக மிரட்டலோ..?

அவளுக்கோ பைத்தியம் பிடித்து விடும் போலானது.

“இப்போ சொல்லு.. எப்போ என்னோட வீட்டுக்கு வர்ற..?” எனச் சிரித்தவாறு அவன் கேள்வி கேட்க,

தன் மடியில் இருந்த பெட்டியை வெறுப்போடு பற்றிக் கொண்டவள் உதடுகள் நடுங்க “நாளைக்கு வர்றேன்…” என்றாள்.

💜🔥💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 46

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “15. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!