“உண்மையிலேயே நல்ல ஐடியா தான்!”என்று நேத்திரனை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் தியாழினி.
“டேய் அண்ணா என்ன சொல்ற? கொலைப் பண்ண சொல்றியா? என்று விழிகளை விரித்தாள்.
“கொலை பண்ற அளவுக்கு எல்லாம் போக சொல்லல.”
“அப்போ திருட சொல்றியா?” என்று தியாழினி வினவ.
“உன்னை திருடவும் சொல்லலை. ஜஸ்ட் அந்த கொட்டேஷன்ல எவ்வளவு அமௌன்ட் போட்டு இருக்காங்கன்னு மட்டும் எப்படியாவது தெரிஞ்சுகிட்டு வந்து சொல்லு.”
“ஐயோ! நான் மாட்டேன்பா! ஆளை விடு. உன் கூட பொறந்த பாவத்துக்கு என்னை ஜெயில்ல களி தின்ன வைக்குற பார்த்தியா?”
“உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசம் இல்லையா?” என்று நேத்ரன் சென்டிமெண்டலாக தாக்க.
“ நீ என்ன தான் சொன்னாலும் அது திருட்டு வேலை தான். அவங்க ஆஃபிஸ்ல செக்யூரிட்டிஸ் இருக்க மாட்டாங்களா? நான் முதல்ல எப்படி அந்த ஆஃபிஸ்குள்ள நுழையுறது?”
“ஹே! குட்டி! நீ நினைக்குறது போல சுவர் ஏறி போய் குதிச்சு திருடறதுக் கிடையாது. அப்படி யாரும் அவ்வளவு ஈசியாக அங்க நுழைய முடியாது. ட்வெண்டி ஃபோர் ஹவர்ஸ் செக்யூரிட்டிஸ் உண்டு. நான் சொல்றது அங்க நீ போய் ஏதாவது வேலையில் ஜாயின் பண்ணனும். அப்புறம் அவங்க பி.ஏவோட பேசி, அந்த கொட்டேஷன்ல எவ்வளவு அமௌன்ட் ஃபில் பண்றாங்கன்னு தெரிஞ்சுட்டு வரணும். அவ்வளவு தான் சிம்பிள்.” என்றான் நேத்ரன்.
“என்னாது வேலைக்கு போகணுமா? ஏதோ ஒரு நாள் போய் திருடிட்டு வந்துடலாம்னு பார்த்தா, நான் அங்க வேலை செஞ்சு திருடிட்டு வரணுமா? என்னால எல்லாம் முடியாது.” என்று பட்டென்று மறுத்தாள் தியாழினி.
“ஹே! தியா! ஒரு நாள்னா மட்டும் திருட முடியும். வேலைக்குன்னா போக முடியாதா? இது கூட உங்க அண்ணனுக்காக உன்னால செய்ய முடியாதா?” என்று கேலியாக வினவினாள் வர்ஷிதா.
“ஹே! எருமை! நான் கொஞ்ச நாள் ஜாலியா வீட்ல இருக்கணும்னு முன்னாடியே உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல. அப்புறமா என்ன வேலைக்கு போக சொல்றியே!”
“ப்ளீஸ் டா குட்டி! மூணு மாசம் தான். அதுக்குள்ள கொட்டேஷனுக்கான நாள் வந்துடும். அதை தெரிஞ்சுகிட்டீனா, அடுத்த நாளே வேலையிலிருந்து நின்னுடலாம்.”
“மூணு மாசம்னா இவளை போக சொல்லு.”என்று வர்ஷிதா பக்கம் கையை நீட்ட.
“எங்க வீட்ல விட மாட்டாங்கடி. எங்க டாடி படிப்பு முடிக்கவும் எங்க கம்பெனிக்கு வரணும்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க.” என்றாள் வர்ஷிதா.
“இல்லைனா மட்டும் போயிடுவப் பாரு. இந்த தியானாலே இளிச்சவாய் தானே.” என்று தியாழினி.
“சரி விடு குட்டி! நடக்கறது நடக்கட்டும். நம்ம கம்பெனியை மூடிட்டா கூட, நான் கூட எங்கேயாவது வேலைக்கு போகலாம். ஆனால் என்னை நம்பி இருக்கிற வொர்க்கர்ஸை பார்க்கணும். அப்புறம் இவளையும் பார்க்கணும்.” என்று அங்கிருந்த வர்ஷிதாவை கண்ணால் பார்த்துக் கொண்டே கூற.
“வர்ஷுக்கு என்ன?” என்று தியாழினி வினவ.
“அவங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம போய் பொண்ணு கேட்கணும்னா, கொஞ்சமாவது பைனான்ஸியலா ஸ்டேபிளா இருக்கணும். ஒரு கம்பெனியோட ஓனர்னு சொன்னாலாவது பொண்ணு தருவாங்க. இல்லைன்னா ஒத்துக்க மாட்டாங்க.”என்றான் நேத்ரன்.
“ஒத்துக்கமாட்டாங்கன்னா வீட்டை விட்டு வெளியே வந்துவிடு வர்ஷூ.”
“ எங்க அம்மா, அப்பாவுக்கு நான் செல்லப் பொண்ணுடி. எப்படி அவங்களை வேணாம்னு சொல்லிட்டு வர்றது?”
“நீதான் அவங்க செல்ல பொண்ணாச்சே. அப்புறம் எப்படி ஒத்துக்காம இருப்பாங்க.” என்றாள் தியாழினி.
“அவங்க ஏதாவது நேத்ராவை சொல்லிட்டாங்கன்னா என்னால தாங்க முடியாது. அவங்க மறுக்க முடியாத நிலையில் நேத்ரா இருக்கணும்னு ஆசைப்படுறேன். ப்ளீஸ் எனக்காக டீ.” என்று தோழியின் கன்னத்தைப் பற்றி கெஞ்சினாள் வர்ஷிதா.
“சரி! போய்த் தொலைக்கிறேன்.” என்று தியாழினி கூற.
“தேங்க்ஸ் டி செல்லம்.” என்று கன்னத்தில் முத்தமிட்டாள் வர்ஷிதா.
“ச்சே! லூசு! ஆளை விடு.” என்று தள்ளி விட்டாள் தியாழினி.
“அப்போ நான் வீட்டுக்கு கிளம்புறேன். நேத்ராவை பத்ரமா பார்த்துக்கோ.” என்றாள் வர்ஷிதா.
“அவ்வளவு அக்கறையா இருந்தா, நீயே இங்கே இருந்து பார்த்துக்க வேண்டியது தானே.”
“கொஞ்ச நாள் பார்த்துக்கோ. எங்க கல்யாணம் முடியட்டும். உங்க ரெண்டு பேரையும் நான் பார்த்துக்குறேன்.” என்றவள், நேத்ரனிடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்ப.
துள்ளலாக செல்லும் வர்ஷிதாவை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் நேத்ரன்.
“டேய் அண்ணா! அவ போய் அரைமணி நேரம் ஆகுது. நானே வேலைக் கிடைக்குமா என்னென்னு தெரியாமல் இருக்கேன். நீ என்னடான்னா சைட் அடிச்சிட்டு இருக்க.”
“அதெல்லாம் வேகன்சி இருக்கும். பெரிய கம்பெனியாச்சே. அவங்க பண்ற ப்ராஜெக்ட்டுக்கு ஆள் சேர்த்துக்கிட்டே தான் இருப்பாங்க. நீ அவங்க அஃபிஸியல் வெப்சைட்ல பாரு.”என்று நேத்ரன் கூற.
அவன் சொன்ன வெப்சைட்டை ஓப்பன் செய்து பார்த்தவள், ஓ! மை காட்.”என்றாள்.
“என்னாச்சுடா? ஏன் வேலை இல்லையா?”என்று நேத்ரன் வினவ.
“பி.ஏ வேலையே இருக்காம்.”என்று சொன்னவளால், தன் கண்ணையே நம்ப முடியவில்லை. மீண்டும், மீண்டும் ரெஃப்ரெஷ் செய்து தான் காண்பது சரியா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கடவுளே நம்ம பக்கம் தான் போல.” என்றுக் கூறி புன்னகைத்தான் நேத்ரன்.
*****************************
வேகமாக வந்த நின்ற அந்த ஆடி காரிலிருந்து இறங்கிய ரித்திஷ்ப்ரணவ், விறுவிறுவென நடந்துச் சென்றான்.
அவனது வேகத்திலேயே கோபமாக இருக்கிறான் என்பது அங்குப் பணி புரிந்தவர்களுக்கு புரிந்தது.
உள்ளே அவனுக்காக காத்திருந்த, அன்னையையும், தந்தையையும் பார்த்தவன், புருவம் சுருக்கி யோசனையானான்.
“இன்னும் தூங்கப் போகலையா?“ என்று தன் கையிலிருந்த வாட்சில் மணியைப் பார்த்து விட்டு வினவினான் ரித்திஷ்பிரணவ்.
“அது வந்து உன் கிட்ட பேசணும்பா.”என்றார் தீபா.
“கல்யாணம் விஷயம்னா பேச எதுவும் இல்லை. இன்னும் ஒரு வருஷம் போகணும்னு ஏற்கனவே சொல்லிட்டேன்.”
“அதில்லைப்பா. அது வந்து…” என்று தீபா இழுக்க.
“ அப்புறம் வேற என்னமா விஷயம்? ரொம்ப அவசரமோ? காலையில் பேசக் கூடாதா?”
“ ஆமாம்பா. நீ ரெஃபரெஷாகிட்டு வா. வெயிட் பண்றோம்.” என்றார் தீபா.
“ஆல்ரெடி நீங்க தூங்குற நேரம் தாண்டிடுச்சு. இப்பவே சொல்லுங்க.” என்று ஷோபாவில் அமர்ந்த ரித்திஷ்பிரணவ், சட்டைக்காலர் பட்டனை அவிழ்த்து விட்டுக் கொண்டான்.
“ சொல்லுங்க!” என்று தீபா, கணவரிடம் ஜாடை காட்ட. “நீ சொல்லு!” என்று அவர் மறுமொழிக் கூறிக் கொண்டிருந்தார்.
இருவரையும் ஒரு முறை பார்த்தவன், “யாராவது ஒருவர் சொல்றீங்களா? இல்லையா?”என்று வினவ.
“வேலை போனது அதுக்குள்ள உங்களுக்கு தகவல் வந்துடுச்சா? முதல்ல அந்த மேனேஜரை தூக்கணும்.”
“ டேய்! அவசரப்பட்டு எதுவும் செஞ்சுடாதே. உன்னை காணுமேன்னு உங்க அம்மா தான் மேனேஜருக்கு ஃபோன் போட்டார். எதார்த்தமா தான் கோபி சொன்னான்.” என்ற கேசவ் மனைவியை முறைத்தார்.
“ஆஃபீஸ் விஷயத்துல தலையிடாதீங்கமா! அப்புறம் நான் வர தாமதமான எனக்கு தான் ஃபோன் பண்ணனும். மேனஜேருக்கு, ட்ரைவருக்கு, பி.ஏக்கு ஃபோன் பண்ணக் கூடாதுமா.” என்று கண்டிப்புடன் கூற.
“சரிப்பா!”என்ற தீபா, மனதிற்குள்,’சரியான ரூல்ஸ் ரங்கராஜன்! அவங்க தாத்தா மாதிரியே.’ என்று இறந்த மாமனாரையும் சேர்த்து திட்டினார்.
“ரித்து! கல்பனா பர்பெக்டாச்சே. எதுவும் தப்பு பண்ணிட்டாளா? அப்படி ஏதாவது தப்பு பண்ணி இருந்தாலும் வார்னிங் பண்ணி இருக்கலாமே! ஷீ ஈஸ் வெரி டேலண்டாச்சே.”
“டேலண்ட் இருந்தா போதுமா டாட். ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்குறாங்க. பொது இடத்தில நம்ம கம்பெனி விஷயத்தைப் பற்றி பேசிட்டு இருக்காங்க.. அதுவும் இப்போ அவங்களோட முதலாளி நான் தான். அதுக்குள்ள ரெஸ்பெக்ட் தராமல் பையன், அது இதுன்னு பேசுறாங்க.”
“ டாட்! எனக்கு என்னோட பொசிஷனுககு உண்டான மரியாதை தரணும். அதுவுமில்லாமல் நம்ம ஆபீஸ் விஷயத்தை இன்னைக்கு கேண்டின்ல பேசுனவங்க, நாளைக்கு இன்னொரு இடத்தில பேசுமாட்டாங்கன்னு என்ன நிச்சயம் டாட். இப்படியே விட்டா நம்ம ஆபோஸிட் பார்ட்டிக் கிட்ட கூட சொல்ல வாய்ப்பு இருக்கு. அதுவுமில்லாமல் அவங்களை ரிலீவ் பண்ணிட்டேன். ஸோ ஸ்டாப் திஸ் டாஃபிக். ஓகே.” என்றவனிடம் வேறு எதுவும் பேச இயலாமல் தலை அசைத்தார் கேசவ்.
“ஓகே! நீங்க போய் தூங்குங்க. நான் ரெஃப்ரஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுறேன்.” என்றவன், தன் வேக நடையுடன் படியேறினான்.
படியேறி செல்லும் மகனையே வெறித்துப் பார்த்தார் கேசவ்.
“என்னங்க! அவன் சொல்றதுக்கெல்லாம் எதுக்கு இப்படி தலையாட்டிட்டு இருக்கீங்க? நீங்களும் தானே அந்த கம்பெனில ஒன் ஆஃப் த ஓனர்”
“வேற என்ன பண்றது? நீதான் பாரின்ல இருந்து அவன் வந்ததுல இருந்து, பொறுப்பை அவன் கிட்ட ஒப்படைச்சிட்டு ரிலாக்ஸா இருங்கன்னு சொன்ன. நானும் அவன் கிட்ட எல்லா பொறுப்பையும் ஒப்படைச்சிட்டேன். இப்போ என் பேச்சைக் கேட்க மாட்டேங்குறான்.”
“அவன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சாலும் அடிக்கடி ஆஃபிஸ் போய் மேற்பார்வையிட்டிருந்தால் தானே உங்க பேச்சையும் கேட்டிருப்பான். பையன் கிட்ட பொறுப்பை குடுங்கன்னு சொன்னா, முழுசா இப்படி ஒதுங்கி நிப்பாங்களா?.”என்று தீபா சிடுசிடுக்க.
‘அப்படியே கேட்டுட்டாலும்… முதல்ல எல்லாம் அப்பப்போ போயிட்டு தானே இருந்தேன். அவன் பண்ண அலம்பலால் தான் வந்துட்டேன்.’ என்று மனதிற்குள் எண்ணியவரோ, “சரி விடு தீபு! அவன இஷ்டப்படியே நடக்கட்டும்” என்று கேசவ் கூற.
“இப்படி அவன் இஷ்டத்துக்கு விட்டு தான் உங்க அப்பா மாதிரியே இருக்கான்.”
“இப்ப எதுக்கு செத்துப்போன எங்க அப்பாவை இழுக்குற?”
“பின்னே! அவர மாதிரி தானே ஸ்டேட்டஸ், மரியாதைன்னு சொல்லித் திரிஞ்சுகிட்டு இருக்கான். இந்த காலத்தில யாராவது இப்படி இருப்பாங்களா? எங்க குடும்பத்துல எல்லாம் ஜோவியலா தான் பழகுவாங்க. உங்க குடும்பத்துல தான் வீணாப், போன வெட்டிக் கவுரவத்தோட சுத்துவீங்க.” என்று தீபா பொரும.
“விடு தீபு! நான் என்ன அப்படியா இருக்கேன். என்னையும் சேர்த்து சொல்றியே!” என்று மனைவியிடம் பரிதாபமாக கேசவ் வினவ.
“ப்ச்! நீங்க அப்படி இல்லை தான். இவன் ஏன் நம்மளைப் போல இல்லை. பாவம் அந்தப் பொண்ணு. நாப்பது வயசுக்கு மேல எந்த கம்பெனில வேலைக் கிடைக்குமோ.” என்று தீபா புலம்ப.
“அப்படி எல்லாம் சும்மா அனுப்பிருக்க மாட்டான். அந்த பொண்ணை நினைச்சு கவலைப்படாதே.” என்று மனைவியை சமாதானம் செய்தார்.
“மரியாதை! ஸ்டேட்டஸ்னு திரிஞ்சிட்டு இருக்குற உங்க பையனுக்கு, மரியாதைன்னா என்னனு கேக்குற மாதிரியான பொண்ணு தான் அமையும். எழுதி வச்சுக்கோங்க!” என்று பொருமி விட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.