செந்தூரியோ “அப்பா கவலைப்படாதீங்கப்பா.. என்ன சு.. சுத்தி இருந்த எல்லா பிரச்சினையும் முடிச்சிட்டேன்.. ஒரே ஒரு பிரச்சனை மட்டும்தான் பாக்கி இருக்கு… அதையும் சீக்கிரமா முடிச்சுட்டு திரும்பி வந்துடுவேன்.. நீங்க தயவு செஞ்சு பயப்படாதீங்க.. இப்படி எல்லாம் எழுந்திருக்காதீங்க..” என அவரை ஆறுதல் படுத்த,
யாரோ போல வாசலில் கண்ணீரோடு அவர்களை நெருங்க முடியாது தவித்துப் போய் நின்றிருந்தார் மேகலா.
அவருக்கோ தன்னை நினைத்தே கேவலமாக இருந்தது.
தன்னுடைய பேராசை எங்கே சென்று முடிந்திருக்கிறது என்பது ஆணியில் அறைந்தாற் போல புரிந்தது.
செந்தூரியோடு சேர்ந்து தன்னுடைய கணவரைத் தூக்கிப் படுக்கையில் கிடத்திவிட்டு வெளியே வந்து அமர்ந்து கொண்டார் மேகலா.
தந்தையை சமாதானம் செய்து விட்டு வெளியே வந்தவளின் கரத்தைப் பற்றிக் கொண்ட மேகலாவோ,
“70 லட்சம் பணம் இருந்தா நீ அவன்கிட்ட போகத் தேவலைதானே என்னோட ஒரு கிட்னியை வித்துடுவோமா..?” எனக் கேட்க தூக்கி வாரிப் போட்டது செந்தூரிக்கு.
கிட்னியை விற்று கிடைக்கும் பணத்தில் கடனை எல்லாம் அடைத்து விட்டு நிம்மதியாக இருக்க முடியும் என்றால் அவள் தன்னுடைய கிட்னியை முதலில் விற்று இருப்பாளே.
இங்கே பிரச்சனை கடன் கிடையாது.
பிரச்சனையின் பிரதானம் விநாயக்.
என்ன செய்தாலும் எப்படி பணம் புரட்டினாலும் அவனிடம் தன்னை வர வைப்பதற்காக அவன் அடுத்தடுத்து கஷ்டங்களை கொடுத்துக் கொண்டே இருப்பான் என்பதை தெளிவாக ஊகித்து வைத்திருந்தவள் தன்னுடைய அன்னையிடம் வேண்டாம் என மறுத்துக் கூறினாள்.
“அவசரப்பட்டு அவனை அடிச்சு தொலைச்சுட்டேன்.. அந்த அவமானத்தை என்ன பழி வாங்கி தீர்க்கும் வரைக்கும் அவன் ஓய மாட்டான்மா.. இத நான் பாத்துக்குறேன்.. அவன சக்கரவர்த்தி சாரோட படத்துல நடிக்க சொல்லிருக்கேன்.. என்னையும் அந்த படத்துல ஹீரோயினா நடிக்க வைக்க சொல்லிருக்கேன்..” என்றவளை அதிர்ந்து பார்த்தார் மேகலா.
“என்னமா அப்படி பாக்குற..? நீதானே என்ன நடிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்ட..?” என கசப்போடு கூற அவருக்கோ முகத்தில் அடி விழுந்தது போல இருந்தது.
“இ.. இல்ல.. இல்ல நீ நடிக்கவே வேணாம்..” என அவர் புலம்ப,
“பணம் இல்லைன்னுதானே இத்தனை பேரு நம்மள ஆட்டிப் படைக்கிறாங்க.. பணம் இல்லாம தானே இவ்வளவு அசிங்கப்பட்டு இருக்கோம்.. சம்பாதிக்கணும்மா.. அதே பணத்தை நல்ல வழியில் சம்பாதிக்கணும்.. இந்த நாய் கூட இருக்கிறதால மத்த நாய்கள் என்கிட்ட வாலாட்ட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.. அந்த தைரியத்துலதான் நானும் நடிக்கிறேன்னு சொல்லிட்டேன்.. எப்படியோ போகப் போற வாழ்க்கைல ஒரு முயற்சி பண்ணி பார்த்திடுவோம்னு இருக்கேன்.. பாத்துக்கலாம்..” என விரக்தியாக சொன்ன மகளை இயலாமையுடன் பார்த்தார் அவர்.
“இந்த அம்மாவ மன்னிச்சுடும்மா… நான் பாவி ஆகிட்டேன்..”
“ப்ச் விடுங்கம்மா.. பேராசை பெருநட்டம், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு இந்த ரெண்டு பழமொழியும் ரொம்ப ரொம்ப உண்மைல..? பேராசைல நீ அவசரப்பட்ட.. ஆத்திரத்துல நான் அவசரப்பட்டு அடிச்சுட்டேன்..” என விரத்தியோடு சிரித்த மகளைப் பார்த்து பயந்து போனார் மேகலா.
அவள் இப்படி எல்லாம் புலம்புவது கிடையாதே.
மகள் மிகவும் மனதளவில் உடைந்து போய்விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
பத்தாயிரம் ரூபாய் கூட அவரால் புரட்டிக் கொடுக்க முடியவில்லை என்ற வேதனை அதீதமாய் அவரை அழுத்தியது.
“சரிம்மா இனி இதப் பத்தி வீட்ல பேச வேணாம்.. நான் சினிமால நடிக்கப் போறதாதான் அப்பாகிட்ட சொல்லி இருக்கேன்.. வேற எதுவுமே நீங்க சொல்லாதீங்க.. அப்படி ஏதாவது கேட்டா பாத்துக்கலாம்… எப்படியாவது சொல்லி சமாளிங்க.. நான் இல்லாத நேரம் தயவு செஞ்சு அவரைத் திட்டாதீங்க.. எனக்காக அப்பாவை நல்லா பார்த்துக்கோங்கம்மா..” என அவள் கூற சரி என தலையசைத்தார் அவர்.
“நாளைக்கு காலைல எட்டு மணிக்கு நான் அவன் வீட்ல இருக்கணுமாம்.. நான் இப்ப கொஞ்ச நேரம் தூங்குறேன்.. ரொம்ப டயர்டா இருக்குமா.. உடம்பு எல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கு..” என்றவள் எழுந்து சென்று தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டாள்.
அழுகை பீறிட்டது.
வாய் விட்டுக் கதற வேண்டும் போல இருந்தது.
ஆனால் அப்படி எல்லாம் செய்து விட முடியாதே.
தன்னுடைய கதறல் வெளியே கேட்டுவிடக் கூடாது என விழிகளை மூடிப் படுத்துக் கொண்டவளுக்கு மௌனக் கண்ணீர் மழையாகப் பொழிந்தது.
அக்கணம் சேகரின் எண்ணம் அவளுக்குள் எழுந்தது.
விநாயக்கிடம் செல்லப் போவதைப் பற்றி அவனிடம் சொல்லத்தானே வேண்டும்.
இந்தக் கல்யாணம் இனி நடக்காது என்பதையும் அவனிடம் தெரிவிக்க வேண்டும் என எண்ணியவள் சற்று நேரம் அமைதியாக படுத்திருந்தாள்.
ஒரு மணி நேரம் கடந்ததும் பெருமூச்சோடு தன்னுடைய அலைபேசியை எடுத்து சேகருக்கு அழைத்தவள் ஹலோ எனக் கூறுவதற்கு முன்னரே,
“சாரி ஆன்ட்டி எனக்கு பணமே கிடைக்கலை..” என மேகலா பேசுவதாக நினைத்து பட்டென கூறி இருந்தான் சேகர்.
“நான் உங்ககிட்ட பணம் கேட்டு கால் பண்ணல..” என்றாள் அவள்.
செந்தூரியின் குரலைக் கேட்டதும் சற்று நேரம் அமைதியாக இருந்தவன் பின்பு “நீ ஓகே தானே..? வீட்டுக்கு வந்துட்டியா..?” என மூன்றாவது நபரை நலம் விசாரிப்பது போலக் கேட்டான்.
“எனக்கென்ன நான் திவ்யமா இருக்கேன்..” என பதில் கொடுத்தாள் அவள்.
அவளுடைய பதிலில் அவனுக்கோ எரிச்சலாகிப் போனது.
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் செந்தூரி.”
“சொல்லுங்க..”
“நம்ம கல்யாணத்த எங்க அம்மா இப்போ வேணாம்னு சொல்றாங்க.. நான் எவ்வளவோ பேசி பாத்துட்டேன்… அவங்க சம்மதிப்பாங்கன்னு எனக்குத் தோணலை.. வேணாம்னு சொல்லிட்டே இருக்காங்க..” என்றதும் நினைத்தேன் என்பதைப் போல அவளுடைய விழிகள் தானாக மூடிக்கொண்டன.
ரொம்ப நல்லது என எண்ணிக்கொண்டாள் அவள்.
அவளாக திருமணத்தை நிறுத்துவதை விட அவனாகவே நிறுத்தி விட்டான்.
எப்படியும் இவனைப் போன்ற ஒரு சுயநலவாதியை அவளால் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள முடியாது.
“ரொம்ப சந்தோஷம் சேகர்.. உங்க அம்மா சொல்ற பொண்ணையே பார்த்துக் கட்டிக்கோங்க..” என அவள் கூறியதும் அவனுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
தன்னிடம் கெஞ்சுவாள், கதறுவாள் வாழ்க்கைப் பிச்சை கேட்பாள் என்றெல்லாம் எதிர்பார்த்து இருந்தவன் அவள் அதற்கு எதிர்மறையாக பதில் கூறியதும் அதிர்ந்து போனான்.
“பட் நீ..”
“சாரி நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்.. அப்புறமாவும் உங்க கூட பேச முடியாது.. நீங்களும் எனக்கு கால் பண்ணாதீங்க..” என அழுத்தமாகக் கூறியவள் அழைப்பைத் துண்டித்து விட்டு அவனுடைய எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டாள்.
இதை முன்னரே செய்திருக்க வேண்டும் என திட்டியது அவளுடைய மனசாட்சி.
*******
அடுத்த நாள் காலையில் தந்தையிடம் பேசிவிட்டு வெளியே வந்தவள் அன்னையை அணைத்து விடுவித்தாள்.
அவரோ வேதனையில் மருகிக் கொண்டிருக்க,
“விட்டுத் தள்ளுங்கம்மா.. நடக்கிறதுதான் நடக்கும்.. பாத்துக்கலாம்..” என அவருக்கு சமாதானம் கூறிவிட்டு இனி சேகரை பற்றி தன்னிடம் எதுவுமே பேச வேண்டாம் இந்த கல்யாணம் நடக்காது என்பதையும் தெளிவாகக் கூறியவள் கண்ணீரோடு வீட்டை விட்டு வெளியேற மேகலாவுக்கோ நெஞ்சமெல்லாம் வலித்தது.
அந்தப் பாவி பழிவாங்குகிறேன் என்ற பெயரில் தன் பெண்ணிற்கு என்ன அநியாயம் எல்லாம் செய்யப் போகின்றானோ என எண்ணி அவருடைய உள்ளம் பதை பதைத்தது.
அவருக்கு ஆடம்பர வாழ்க்கையில் ஆசை அதிகம் தான்.
அழகிய பெண்ணை நடிக்க வைத்து ராஜபோக வாழ்க்கை வாழலாம் என ஆசைப்பட்டார்தான்.
ஆனால் அவளைத் தவறான வழியில் அனுப்பி சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லையே
மகளின் முடிவு அந்தத் தாயின் ஆடம்பர ஆசையை அடியோடு அழித்திருந்தது.
வெளியே வந்தவள் கௌதமிடம் கூறிவிட்டுச் செல்லலாமா என எண்ணினாள்.
பின் எதற்கு அவனும் தனக்கு உதவுகிறான் எனத் தெரிந்தால் விநாயக்கிடம் இருந்து அவனுக்கும் ஏதேனும் பிரச்சனைகள் வருமோ எனப் பயந்தவள் கௌதமிடம் எதுவுமே கூறாது அந்த வழியே வந்த ஆட்டோ ஒன்றில் ஏறிக் கொண்டாள்.
நேரே அவனுடைய வீட்டிற்கு செல்லும் வழியைக் கூறிவிட்டு சீட்டின் நுனியில் அமர்ந்திருந்தவளுக்கு நொடிக்கு நொடி பதற்றம் கூடிக் கொண்டே போனது.
தான் எடுத்த முடிவு சரிதானா..?
அவசரப்பட்டு ஆமெனக் கூறிவிட்டோமோ..?
அங்கே சென்றதும் என்னை என்னவெல்லாம் செய்வான்..?
கொடுமைப்படுத்துவானோ..?
தகாத வார்த்தைகளால் திட்டுவானோ..?
நான் அடித்ததற்கு பதிலாக தினம் தினம் என்னை அடித்துத் துவைப்பானோ..?
வலி தாங்கி எனக்குப் பழக்கமே இல்லை அல்லவா..?
என்னால் அங்கே தாக்குப் பிடிக்க முடியுமா.?
அத்துமீறி என்னையும் தொடுவானா..?
அவனுடைய இச்சைக்கு நடிகைகளைப் பயன்படுத்திக் கொள்வதைப் போல என்னையும் தினம் தினம் தவறாகப் பயன்படுத்துவானோ..?
ஏற்கனவே தவறான நோக்கத்துடன் தானே அழைத்திருக்கிறான் பின்னே என்னை பூஜை செய்ய வா அழைத்திருக்கிறான்..?
கண்டிப்பாக எனக்கு நரகத்தைத்தான் காட்டப் போகிறான் என எண்ணியவளுக்கு உடலும் உள்ளமும் பதறியது.
“கடவுளே அவனுக்கு என்ன பிடிக்கவே கூடாது.. கொஞ்சம் கூட பிடிக்கக் கூடாது.. என்னோட முகத்தைப் பார்த்தாலே எரிச்சல் எரிச்சலா வரணும்.. என்னைப் பார்த்து சகிக்க முடியாம அம்மா தாயே தயவு செஞ்சு இங்கிருந்து கிளம்பிடு அப்படின்னு அவனே என்னை வீட்டை விட்டு துரத்தி விட்றணும்.. இது மட்டும் நடந்துச்சுன்னா முருகா உனக்கு நூறு தேங்காய் உடைக்கிறேன்..” என தன் வேண்டுதலை முடித்துக் கொண்டவள் கண்களைத் திறக்கும் போது ஆட்டோ நின்றிருந்தது.
அவனுடைய வீடு அதற்குள் வந்து விட்டதா..?
இவ்வளவு சீக்கிரமாக நரகத்திற்கு வந்து சேர்ந்து விட்டேனா என எண்ணியவள் சிறிதும் விருப்பமே இன்றி ஆட்டோவில் இருந்து இறங்கினாள்.
ஆட்டோகாரனுக்குப் பணத்தை அவள் கொடுக்க முயற்சிக்கும் போது வேகமாக வந்த வாட்ச்மேனோ அவள் வந்ததற்கான பணத்தை கொடுக்க அவரை அதிர்ந்து பார்த்தவள்,
“நீங்க எதுக்கு பணம் கொடுக்கிறீங்க..?” என அதட்டலாகக் கேட்டாள்.
“மேடம் சார்தான் நீங்க எந்த வேக்கில்ல வந்தாலும் நீங்க வந்ததுக்கு பணம் கொடுக்கச் சொன்னாரு..” என அவன் பவ்யமாகக் கூற இவளுக்கோ அவனுடைய பணிவைப் பார்த்து கோபம் தான் வந்தது.
“அதெல்லாம் வேண்டாம்.. என்னோட செலவுகளை நானே பார்த்துப்பேன்..” என்றவள் மீண்டும் பைக்குள் பணத்தை துலாவ வாட்ச்மேனோ தன் கரத்தில் இருந்த பணத்தை ட்ரைவரிடம் கொடுத்துவிட அவளோ எரிப்பது போல பார்த்தாள்.
“ஹலோ நான் சொல்றது உங்களுக்கு புரியலையா..? நீங்க எதுக்கு குடுக்குறீங்க..? முதல்ல உங்க பணத்தை வாங்கிக்கோங்க..” என இவள் கோபமாகக் கூற,
“நீங்க இனி சாரோட கீப்னு சார்தான் சொன்னாரு.. அவரோட கீப்புக்கு எல்லாம் செலவும் அவர்தான் பார்ப்பாராம்..” எனக் காவலாளி கூறிவிட கீப் என்ற வார்த்தையில் விக்கித்துப் போய் நின்று விட்டாள் அவள்.
ஆட்டோவை ஓட்டி வந்த சாரதியோ யாராவது ஒருத்தர் பணத்தைக் கொடுத்தால் போதும் என எண்ணிக்கொண்டு அதை வாங்கிவிட்டு அங்கிருந்த சென்றுவிட இவளுக்கோ கோபமும் அழுகையும் ஒன்றாக வந்தது.
Adura varai aduda vinayak