” அம்மா… இதோட போதும்.” என்று எழ பார்த்தான் ஜீவாத்மன்.
” டேய் இரண்டு தோசை எப்படி போதும். இதையும் சாப்பிடு.” என்ற நிர்மலா அவனது தட்டில் ஒரு தோசையை வைத்தார்.
” ப்ச்… இன்னைக்கு சீக்கிரமா போகணும் மா.”
“சீக்கிரமா போகணும்னா நைட்டே சொல்ல வேண்டியது தானே.”
” முக்கியமான வேலை ஒன்னு முடிக்க வேண்டியிருந்தது.அதை நைட் பார்க்கலாம்னு நினைச்சேன். உன் சின்ன பையன் பண்ண வேலையால செய்ய முடியாமல் போயிடுச்சு.” என்று தனதருகே அமர்ந்து தோசையை சாம்பாரிலும், சட்னியிலும் தோய்த்து, தோய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதிரனை பார்த்துக் கொண்டே கூறினான் ஜீவாத்மன்.
அதுவரை சாப்பிடுவது ஒன்றே குறிக்கோள் என்பது போல் இருந்த ஆதிரன் தன் அண்ணனை பார்த்து முறைத்துக் கொண்டே, ” உனக்கு பொறுப்பு இல்ல. அதுக்கு என்ன சாக்கு சொல்றியா? காலையில் எழுந்ததும் அம்மாகிட்ட சொல்ல வேண்டியது தானே
எதையும் முன்னாடியே சொல்றது கிடையாது” என்றான்.
“ஓஹோ… முன்னாடியே சொல்லணுமா… தட்ஸ் ஃபைன். அம்மா… ஆதிக்கும் தோசை போதும். அவனுக்கும் தான் முக்கியமான வேலை இருக்கு. ஆஃபீஸ் போனதும் இன்ஃபார்ம் பண்ணுவோம்னு நினைச்சேன். பட் சார் தான் முன்னாடியே சொல்லணும்னு சொல்லிட்டாருல்ல…” என்றவன், ஆதியை இழுத்துக் கொண்டு செல்ல.
“டேய் அண்ணா… விடு டா. இன்னும் இரண்டே இரண்டு தோசை சாப்பிட்டு வரேன். அட்லிஸ்ட் ஒரு நெய் தோசையாவது சாப்பிட்டுட்டு வரேன்.”
” ஏற்கனவே கொழுப்பு அதிகம். இதுல நெய் தோசை வேற வேணுமா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் தம்பி.” என்ற ஜீவாத்மன், ட்ரைவருக்கு ஃபோன் செய்ய.
“டேய் அண்ணா… காட்டுல போய் நான் பசியா இருக்க போறேன். உனக்கென்ன நீ ஜாலியா இருப்ப.” என்று கிளம்பாமல் புலம்பிக் கொண்டே இருந்தான் ஆதிரன்.
” வாவ்… சூப்பர் மம்மி…” என்றவன் நிர்மலாவின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“டேய் போடா. காலங்கார்த்தால வம்பு பண்ணிக்கிட்டு… “என்ற நிர்மலா சிரித்துக் கொண்டே ஜீவாத்மனிடமும் ஒரு டப்பாவை நீட்டினார்.
அதை வேகமாக பிடுங்கிய ஆதிரன்,” என்னோட ஃப்ரெண்டுக்கு வேணும். சாருக்கு இல்லனா பரவாயில்ல.” என்றவன், இப்பொழுது ஜீவாத்மனை இழுத்துக் கொண்டு செல்ல.
” டேய் ஆதி இருடா… உனக்கு வேணும்னா இன்னொரு டப்பா எடுத்துட்டு வரேன். அதை அண்ணாவுக்கு குடு…” என்று நிர்மலா கத்த.
“அதெல்லாம் வேணாம். ஒரு நாள் சாப்பிடலைன்னா ஒன்னும் பிரச்சினை இல்ல. கொழுப்பாச்சும் கொஞ்சம் குறையும். நீ கவலைப்படாமல் சாப்பிடு மம்மி.” என்றவன் வெளியே காத்திருந்த முகுந்தனைப் பார்த்ததும் தனது அண்ணனின் கையை விட்டான்.
முகுந்தனோ இவர்கள் இருவரையும் பார்த்ததும், வழக்கம் போல காலை வணக்கம் கூறினான். ஆனால் அவனது முகமோ குழப்பத்தில் ஆழ்ந்தது.
” என்ன முகுந்த்? ரொம்ப குழப்பமா இருக்கா?” என்ற ஜீவாத்மனிடம்,
“சார்… நீங்க நம்ம ஆதி தம்பியோட அண்ணனா?” என்று வினவ.
” இல்லை.”
” அப்போ… ” என்று முகுந்தன் இழுக்க.
” என்னோட தம்பி தான் ஆதி.” என்ற ஜீவாத்மனின் முகத்தில் புன்னகை வழிந்தது.
” அதைத்தானே சார் நானும் சொன்னேன்.” என்ற முகுந்தனோ அயர்ந்து போனான்.
” ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.”
‘அப்படி என்ன வித்தியாசம்?’ என்று இந்த முறை முகுந்தன் வினவவில்லை. மனதிற்குள்ளே கேட்டுக் கொண்டான்.
” நான் தான் அண்ணன். ஆதி எனக்கு பிறகு பிறந்தவன். சோ என்னோட தம்பின்னு சொல்றது தான் கரெக்ட் முகுந்த்.”
முகுந்தனோ ஒன்றும் கூறாமல் தலையாட்டிக் கொண்டே வண்டி ஓட்டினான்.
” முகுந்தன் ப்ரோ சொன்னது கரெக்ட் தான். நான் தானே இங்க முதல்ல வேலைக்கு வந்தேன். அதனால தான் அவர் அப்படி சொன்னாரு.” என்று ஆதிரன் வாக்குவாதம் பண்ண.
‘ கடவுளே! என்னைக் காப்பாத்து. இவங்க இரண்டு பேர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்கு.’ என்று மீண்டும் மனதிற்குள் முகுந்தன் பேசிக் கொண்டிருக்க.
” அதெல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது முகுந்த். ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. எங்கூட தான் குப்பைக் கொட்டியாகணும்.” என்ற ஜீவாத்மனின் குரலில்,
சட்டென்று வண்டியை ப்ரேக் போட்டு நிறுத்தினான் முகுந்தன்.
” முகுந்த் ப்ரோ… பார்த்து… எங்க அண்ணன் அப்படி தான் மனசுல நினைக்குறதை எல்லாம் கண்டுபிடிச்சிடுவாங்க. மைண்ட் ரீடிங் தெரியும். இதுக்காகலாம் அதிர்ச்சியாகாதீங்க. பார்த்து ஓட்டுங்க.”
“சரி.” என்று தலையாட்டியவன் ஒரு வழியாக ஆதிரனை செக் போஸ்டில் இறக்கி விட்டான்.
” பை அண்ணா…” என்ற ஆதிரன் டிஃபன் பாக்ஸை நீட்ட.
“பரவாயில்லை… உன் ஃப்ரெண்டை சாப்பிட சொல்லு. சாப்பிட்டே பல நாள் ஆகிருக்கும் போல. இப்படியே இருந்தா காத்துல கரைஞ்சிட போறாங்க.”
” ஓஹோ…” என்ற ஆதிரன், ஜீவாத்மனை குறுகுறுவென பார்க்க.
” அப்புறம் இன்னைக்கு அந்த புலி அடிச்சு இறந்தாங்கல்ல அவங்க வீட்டுக்கு போகணும். உன் ஃப்ரெண்டையும் ரெடியா இருக்க சொல்லு. லஞ்ச் முடியவும் போகலாம்.” என்ற ஜீவாத்மன், முகுந்தனுக்கு கண் காட்ட… அங்கிருந்து ஜீப் கிளம்பியது.
முகம் மாற ஆதிரனை பார்த்தவளோ, சாப்பிட்டதாக தலையாட்டினாள்.
” உங்கள பார்த்தா சாப்பிட்ட மாதிரி தெரியலை. இதுல மஷ்ரூம் பிரியாணி இருக்கு சாப்பிடுங்க. ” என்று டிபன் பாக்ஸை நீட்ட.
அவளோ அதை வாங்காமல் அவனை முறைத்தாள்.
” முறைக்காதீங்க மேனகா. இது எங்க அம்மா செஞ்சது. என் ஃப்ரெண்டுக்கு தாங்கண்ணு கேட்டு வாங்கிட்டு வந்தேன். நீங்க சாப்பிடலைன்னா அவங்க மனசு கஷ்டப்படும்.” என்றவன் மனதிலோ ’ அம்மா மனசு கஷ்டப்படுமா? இல்லை அண்ணன் மனசா?’ என்ற கேள்வி ஓடிக் கொண்டிருந்தது.
அப்பொழுதும் அவள் வாங்காமலே இருக்க.
” மேனகா… என்ன ஃப்ரெண்டா நினைச்சா வாங்குங்க.” என்று ஆதிரன் வற்புறுத்த.
தயக்கத்துடன் வாங்கினாள் மேனகா.
” சாப்பிட்டு வாங்க. அப்புறம் பேசலாம்.” என்று அங்கிருந்து நகர்ந்தான்.
மேனகா சாப்பிட்டு முடித்ததும் அங்கு ஆஜரான ஆதிரன், “இன்னைக்கு என்ன வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிச்சிடுங்க. ஆஃப்டர்நூன் புலி தாக்கி இறந்த பொண்ணோட குடும்பத்தை போய் பார்க்கணும். ரெடியாக இருங்க. என்று ஜீவாத்மன் சொன்ன தகவலை அவளிடம் சொல்ல.
அவள் கண்கள் கலங்கியது. அதை சமாளித்தவள், ” சார்… நான் அவசியம் வரணுமா? வேற யாரையாவது கூட்டிட்டு போங்களேன்.” என்றாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிரன், ” லுக் மேனகா… உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்க ஒரு ஃபாரஸ்ட் ஆஃபிஸரா இருந்துகிட்டு இப்படி ஒரு சென்ஸிட்டிவ் பெர்ஸனா இருக்கீங்க. கமான் மேனகா. தைரியமாக இருங்க. இந்த மாதிரி காட்டுல வாழுற நாம எல்லாத்தையும் தைரியமா ஃபேஸ் பண்ணனும்.” என்றான்.
” யாரையும் ஃபேஸ் பண்ண பயந்துட்டு வரலைன்னு சொல்லலை. அது வந்து…” என்று ஏதோ கூற வந்தவள், பிறகு தலையசைத்து,” நான் சொன்னாலும் உங்களுக்கு புரியாது. ஐ கேன் மேனேஜ். நான் வரேன்.” என்றவள் மத்த வேலைகளை பார்ப்பதற்காக அங்கிருந்து கிளம்பினாள்.
ஆனால் சற்று நேரத்திலே பதற்றத்துடன் ஆதிரனிடம் வந்தாள்.
அவளது பதட்டத்தை பார்த்த ஆதிரனோ, ” என்னாச்சு மேனகா? ஏன் இவ்வளவு பதட்டம்?” என்று வினவ.
” அது வந்து மாமாவுக்கு உடம்பு சரி இல்லை. உடனே வர சொல்லி அத்தை ஃபோன் பண்ணாங்க. பாவம் அவங்களால தனியா மேனேஜ் பண்ண முடியாது. நான் போகணும்.” என்று பர்மிஷன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
” சரி… போயிட்டு வாங்க மேனகா. டேக் கேர்.” என்று வாய் வார்த்தைகளை வெளியிட்டாலும், மனதிற்குள் யோசனை ஓடியது.
‘ ஒரு வேளை மேனகாவிற்கு அந்த பழங்குடி மக்களை பார்ப்பதற்கு விருப்பம் இல்லையோ.’என்று சந்தேகம் கொண்டான்.
ஆனால் ஜீவாத்மனுக்கு அந்த சந்தேகமே இல்லை. அவன் உறுதியாக நம்பினான்.
அவன் மதியம் வந்த போது மேனகா இல்லை என்றதும் ஆதிரனை கடிந்து கொண்டான்.
” ஓ காட்… உன்னை யார் முன்னாடியே சொல்ல சொன்னா. அந்த மேனகாவையும், அந்த பழங்குடி மக்களையும் பார்க்க வைத்து என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாம் என்று நினைத்தேன். ஷிட்…” என்றவனின் கண்களோ புலியின் கண்கள் போல ஜொலித்தது.