லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 30
தீரனின் நெஞ்சில் தெறித்த பாயசத்தை துடைத்து விட்டதற்காக மதி மன்னிப்பு கேட்க அவனும் சங்கடமாக “இ..இல்லை.. பரவால்ல மதி..” என்றான் அவன்..
அந்த தர்ம சங்கடமாக நிலையிலிருந்து வெளியேறுவதற்காக மதியழகி “நான் எல்லாருக்கும் போய் பாயசம் கொடுத்துட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு ஒரு தட்டில் குவளைகளை அடுக்கி அதில் பாயசத்தை விட்டு ஒரு குவளையை தீரனிடம் நீட்டினாள்..
அவனும் அதை வாங்கிக்கொண்டு “தேங்க்ஸ் மதி..” என்றவன் அப்படியே அந்த சமையல் மேடையில் சாய்ந்து கொண்டு நின்றபடி அந்த பாயசத்தை சுவைக்கலானான்..
ஒரு வாய் சுவைத்தவன் “அப்படியே எங்க அம்மா செய்யற பால் பாயாசம் மாதிரியே இருக்கு மதி.. ரொம்ப நல்லா இருக்கு..”
அவனுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு பாயச குவளைகள் அடங்கிய தட்டை வெளியே எடுத்து வந்த மதி தீரனின் அத்தை.. தன் தந்தை.. மலரழகி.. என்று ஒவ்வொருவராக பாயசத்தை கொடுக்க எப்படி தீரனிடம் பாயசத்தை கொடுக்கும்போது இந்தர் பிடுங்கி சென்றானோ அதேபோல மலரழகியை பாயசத்தை எடுத்துக்கொள்ள சொல்லி மதி அவள் முன் தட்டை நீட்டிட இடை புகுந்து அந்த பாயசத்தை தான் எடுத்துக் கொண்டான் இந்தர்..
“டேய்.. நீ தான் ஏற்கனவே குடிச்சிட்ட இல்லடா.. இப்ப மறுபடியும் எனக்கு கொடுத்த பாயாசத்தையும் எடுக்கிற..?”
“ம்ம்.. பாயசம் நல்லா இருக்கு.. எனக்கு புடிச்சிருக்கு.. இப்ப என்ன..? இன்னொரு க்ளாஸ் பாயசம் குடிக்க போறேன்.. உனக்கு வேணும்னா நீ உள்ள போய் எடுத்து குடிச்சுக்கோ..”
அவன் அலட்சியமாய் சொல்லவும் அவன் அடாவடியில் மலரழகிக்கு கோபம் பொங்கி எழுந்தது.. “அது சரி தான்.. நான் உள்ள போயி டீசன்டா எனக்கு கிளாஸ்ல பாயசத்தை எடுத்து குடிச்சிக்கிறேன்.. ஏன்னா உன்னால அப்படி எல்லாம் பண்ண முடியாதில்ல? நாங்க எல்லாம் மனுஷங்களா மாறி ரொம்ப யுகங்கள் ஆகுது.. நீதான் இன்னும் மனுஷனா மாறாம நம்ம மூதாதையரை மாதிரியே இருக்க போலயே.. என்ன வாலு தான் மிஸ்ஸிங்.. உனக்கு எல்லாத்தையும் புடுங்கி திட்டுற வியாதி இருக்கிறது ஒன்னும் ஆசாசரியம் இல்ல.. டீசண்டா கேட்டு வாங்கி குடிக்கிறது எல்லாம் உனக்கு சுட்டு போட்டாலும் வராது..”
அவள் நக்கலாய் சொல்லவும் “ஏய் யாரை பாத்துடி குரங்குங்கற.. நீ தாண்டி பிசாசு.. ஒரு க்ளாஸ் பாயசம் எடுத்ததுக்கு இந்த பேயாட்டம் ஆடற..?”
இவர்கள் சண்டை போடுவதைப் பார்த்து மதியழகி மலரிடம் “ஏய் மலரு.. இப்ப என்ன? அவன் எடுத்துகிட்டா நீ உள்ள போய் இன்னொரு டம்பளர் பாயசம் எடுத்துக்கோ.. எதுக்கு அவனோட சண்டை போட்டுக்கிட்டு இருக்கே..?”
இவர்களின் கூச்சலை கேட்ட சமையல் அறையில் இருந்து வெளியே வந்த தீரன் “மதி.. எதுக்கு நீ மலரை திட்டிகிட்டு இருக்க? அவ சொல்றது கரெக்ட் தானே? உள்ள எனக்கு கொடுக்க வந்த பாயசத்தை பிடிங்கிட்டு வந்தான்..? அதான் அவன் அதை குடிச்சிட்டான் இல்ல..? இப்ப அவளுக்கு கொடுக்க போற பாயசத்தையும் புடுங்கினா என்ன அர்த்தம்? என்ன இந்தர்? உனக்கு இன்னும் கொஞ்சம் வேணும்னா உள்ள வந்து எடுத்து குடிக்க முடியாதா? இல்லை மதியை கேட்டா அவ எடுத்து கொடுக்க போறா.. இது என்ன பழக்கம்.. அடுத்தவங்களுக்கு கொடுக்கும் போது பிடுங்கிக்கறது..?”
தீரன் சொன்னதைக் கேட்டு “ஓ.. அங்க வேற புடுங்கி தின்னியா? அப்ப நான் உன்னை பத்தி சொன்னது கன்ஃபார்ம்ட் தான்.. சரியா தான் சொல்லி இருக்கேன்..”
மலர் சொன்னதை கேட்டு பல்லை கடித்தான் இந்தர்.. ஆனால் அருகில் தீரன் இருக்கவும் கோபத்தை காட்ட முடியாமல் தன் கையில் இருந்த பாயசத்தை குடிக்காமல் அப்படியே மேஜை மேல் வைத்துவிட்டு அங்கிருந்து எழுந்து விடுவிடுவென தன் அறைக்கு சென்று விட்டான்..
தீரன் செல்லும் அவனையே முறைத்துக் கொண்டிருக்க மதி மலரிடம் “உனக்கு என்னடி? இப்ப உன் சொத்து பாழா போச்சு.. அவன் ஒரு கிளாஸ் பாயசம் தானே குடிச்சான்.. அதுக்கு போய் எதுக்குடி அவனோட இப்படி சண்டை போடுற.. பாரு.. அவன் கோவத்துல அந்த பாயசத்தை கூட குடிக்காம போயிட்டான்..”
“போனா போகட்டும்… அந்த பாயசத்தை நான் குடிச்சுக்குறேன்.. சும்மா நீ எப்ப பாரு அவனுக்கே சப்போர்ட் பண்ணாதக்கா.. அவன் செஞ்சது கரெக்ட்டா?’
அப்போது தீரனின் அத்தை மலரழகியின் அருகில் வந்து “அம்மாடி.. அது அப்படி இல்லடா.. இத்தனை நாள் அண்ணனும் தம்பியும் ஏனோதானோன்னு வாழ்ந்துகிட்டு இருந்தாங்க.. இப்பதான் பொறுப்பா ஒரு பொம்பள புள்ள வந்து இந்த வீட்ல புழங்க ஆரம்பிச்சி இருக்கா.. ரெண்டு வருஷம் கழிச்சு அவனோட அம்மா செய்யற மாதிரி பால் பாயசம் மாதிரியே சுவையா இருக்கற பாயசத்தை குடிச்சதும் அவனுக்கு அதை நிறைய குடிக்கணும்னு ஆசை வந்து இருக்கும்.. அதான் அப்படி உனக்கு கொடுத்த பாயசத்தையும் வாங்கி இருப்பான்.. அவனை தப்பா நினைக்காத டா..”
மலரின் கன்னத்தை வருடி சொல்லிவிட்டு மறுபடியும் பூஜை அறைக்குப் போய் அமர்ந்து கண்ணை மூடி நமச்சிவாய நாமத்தை ஜெபம் செய்ய தொடங்கினார் தீரனின் அத்தை..
தீரனின் அத்தை சொன்னது மலருக்கு புரிந்ததோ என்னவோ அவர் சொன்னது மதியழகிக்கு நன்றாகவே புரிந்தது.. அவன் அன்னை போனதிலிருந்து அன்னையின் பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறான் அவன் என்பது தெள்ளத் தெளிவாக இனி தான் அந்த வீட்டில் இருக்கும் வரை தன் அன்னை இல்லாத குறை அவனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள் மனதில்..
தமிழ்வாணன் மலரிடம் “மலர்மா.. நம்ம இன்னும் கொஞ்ச நாள் தான் இங்க இருக்க போறோம்.. நீ எதுக்கு இப்படி மாப்பிள்ளையோட தம்பி கிட்ட வம்பு வளர்த்துக்கிட்டு இருக்க.. இருக்கிற வரைக்கும் அமைதியா இருந்துட்டு போலாம்.. வர வர உனக்கு வாய் ரொம்ப நீளமா ஆயிடுச்சு.. சரி.. உனக்கு காலேஜ் டைம் ஆச்சு இல்ல? நீ போய் காலேஜுக்கு கிளம்பு.. இங்க உன்னோட ஸ்கூட்டி இல்ல.. பஸ்ல தான் போகணும்.. நான் வேலைக்கு போகும் போது உன்னை உன் காலேஜூக்கு போற பஸ்ல ஏத்தி விட்டுட்டு போறேன்..”
தமிழ்வாணன் சொன்னதை கேட்டு தீரன் சட்டென “இல்ல மாமா.. இன்னைக்கு என் கார்லயே எல்லாரையும் நான் கூட்டிட்டு போறேன்.. உங்களை உங்க வேலை பண்ற இடத்துல விட்டுட்டு மலரை அவ காலேஜ்ல விட்டுட்டு இந்தரையும் மதியையும் அவங்க காலேஜ்ல இறக்கி விடுறேன்.. அப்புறம் நான் ஷூட்டிங்க்கு போறேன்..”
“இல்ல மாப்ள.. எங்களையெல்லாம் அழைச்சுட்டு போய் விட்டுட்டு போறதுக்குள்ள உங்களுக்கு உங்க ஷூட்டிங்க்கு லேட் ஆகிட போகுது..”
“இல்ல மாமா.. இன்னைக்கு ஷூட்டிங் கொஞ்சம் லேட்டா தான் தொடங்குது.. பத்து மணிக்கு மேல.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா..”
“சரி மாப்ள.. அப்ப நான் போய் வேலைக்கு கிளம்புறேன் மாப்ள..” என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டார் தமிழ்வாணன்..
மதி உள்ளிருந்து ஒரு குவளை பாயசத்தை எடுத்துக் கொண்டு இந்தரின் அறைக்கு சென்றாள்.. அதை கவனித்த தீரனுக்கு தன் தம்பியை அன்னையாய் மாறி கவனித்துக் கொள்ளும் ஒருத்தி அந்த வீட்டிற்கு வந்து விட்டாள் என்ற எண்ணம் வலுப்பட மனதிற்குள் வெகு நாளைக்கு பிறகு ஒரு வித நிறைவை உணர்ந்தான்..
சரியாக அப்போது அவனுடைய கைபேசி ஒலித்தது.. அதை எடுத்து பார்க்க திரையில் சின்னாவின் பெயர் தோன்றவும் உடனே அழைப்பை ஏற்றான்..
“அண்ணே என்னண்ணே.. மணி ஏழரை ஆவுது? வழக்கமா எட்டு மணிக்கு ஷூட்டிங்னா 7:00 மணிக்கு எல்லாம் இங்க ஸ்பாட்ல இருப்ப.. இன்னிக்கு என்னன்ணே இன்னும் ஆளையே காணோம்.. ட்ராஃபிக்குல மாட்டிக்கினியா?”
“டேய்.. அந்த டைரக்டர் கிட்ட சொல்லிரு.. இனிமே இந்த தீரன் பத்து மணிக்கு தான் செட்டுக்கு வருவான்..”
“எது? 10:00 மணிக்கா.. அண்ணே.. உங்களுக்கு அந்த ஆளை பத்தி தெரியாதாண்ணே.. அந்த ஆள் கத்து கத்துன்னு கத்துவான்ண்ணே..”
“கத்துனா கத்தட்டும்டா.. அப்புறம் உனக்கு ஒரு சூப்பர் மேட்டர் ஒன்னு சொல்றேன்.. கேட்டா அப்படியே ஸாக் ஆயிருவ.. இந்த அண்ணனுக்கு கண்ணாலம் ஆயிருச்சுடா..”
கொஞ்சம் வெட்கம் கலந்த குரலில் அவன் சொல்ல “என்ன..? என்ன சொல்றண்ணே.. கண்ணாலம் ஆயிருச்சா.. இந்த அதிசயம் எப்பண்ணே நட்ந்துது..?”
“அதெல்லாம் அப்படித்தான்டா.. இதை பாரு.. நான் குடும்பஸ்தன் ஆயிட்டேன்.. இனிமே முன்னாடி மாதிரி எப்பவும் செட்டிலயே வந்து குந்திகினு இருக்க முடியாது.. வீட்ல வேலை எல்லாம் முட்ச்சுட்டு தான் வருவேன்.. அப்படி ஒத்து வராதுன்னா வேற ஆளை பார்த்துக்க சொல்லு உங்க தலைய.. நான் பாண்டி கிட்ட பேசிக்கிறேன்..”
அவன் கரராய் சொல்ல “சரி சரிண்ணே.. நீ ரொம்ப கோவப்பட்டுக்காதே.. அந்த ஆள் கொஞ்சம் காட்டு கத்து கத்தினாலும் அதுக்கப்புறம் ஒன்னும் சொல்ல மாட்டாரு.. ஏன்னா உன்னை விட்டா அந்த ஆளுக்கு வேற ஆள் கிடையாது..”
“சரி.. எனக்கு வேலை இருக்குதுடா.. நான் ஃபோனை வச்சுடறன்டா சின்னா..”
அவன் சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டு திரும்ப அங்கே மதி இடுப்பில் கையை வைத்து படி அவனை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்..
“என்ன மதி? எதுக்கு இப்படி முறைக்கிற?”
அவன் யோசனையோடு கேட்க “இப்ப எதுக்கு ஷூட்டிங்க்கு 10:00 மணிக்கு தான் வருவேன்னு சொல்றீங்க? எங்க அப்பாக்கு தெரிஞ்சுதுன்னா இங்க தங்கவே மாட்டாரு.. உங்க வேலைக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாதுன்னு சொல்லி இப்பவே கிளம்பி வீட்டுக்கு போயிடுவாரு.. பேசாம நீங்க ஷூட்டிங் போங்க.. நாங்க எல்லாரும் பஸ்ல போய்க்கிறோம்..”
அவள் முடிவாய் சொல்ல “இல்லை மதி.. உங்க அப்பா வீட்டுக்கு போனாலும் நான் பத்து மணிக்கு தான் ஷூட்டிங் போவேன்.. இது உங்க அப்பாக்காகவோ வேற யாருக்காகவோ எடுத்து முடிவு இல்ல.. இது நான் இந்தருக்காக எடுத்த முடிவு.. இத்தனை நாளா அவன் ஒழுங்கா காலேஜ் போய் படிச்சிட்டு இருக்கான்னு நினைச்சேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு அவனை பத்தி ரொம்ப கவலை இல்லாம இருந்தேன்.. ஆனா அப்படி நான் அவனை கண்டுக்காம இருந்ததுனால தான் அவன் இவ்வளவு பெரிய தப்பு பண்ண துணிஞ்சுட்டான்.. அதனால இனிமே தினமும் வேற யாருக்காக இல்லனாலும் அவருக்காக காலைல நான் காலேஜ்க்கு கூட்டிட்டு வந்து விடுறேன்.. அதுக்கப்புறம் சாயந்திரம் நேரத்துக்கு வீட்டுக்கு வந்து கொஞ்சம் அவனோட செலவழிக்கிற நேரத்தை அதிகப்படுத்தனும்னு நினைக்கிறேன்..”
அவன் சொன்னதும் நியாயமாக விஷயமாகப் பட்டது மதிக்கு.. அதன் பிறகு அந்த விஷயமாக அவள் விவாதிக்கவில்லை.. ஆனால் தீரனோ மனதிற்குள் “இந்த முடிவு இந்தருக்காக மட்டும் இல்லை மதி.. உனக்காகவும் தான்.. உனக்காகன்னா உனக்காக மட்டும் இல்லை.. உன் குடும்பத்துக்காக.. இப்போ ஒண்ணா இருக்குற நம்ம குடும்பத்துக்காக.. நம்ம குடும்பத்துல எல்லாரும் ஒண்ணா கலகலன்னு பேசிகிட்டு சிரிச்சுகிட்டு இருக்கணும்னு ஆசைப்படுறேன்.. வேலை வேலைன்னு போயி இந்த அழகான நேரங்களை இழக்க நான் தயாரா இல்லை..”
அப்படி தனக்குள் எண்ணி கொண்டு புன்னகைத்த படியே “அது சரி.. எங்க எல்லாருக்கும் பாயசம் கொடுத்த.. நீ குடிச்சியா?” என்று கேட்க அவள் “இதோ இனிமேதான்..” என்றாள் அவள்..
உள்ளே சென்று ஒரு குவளையில் பாயசத்தை எடுத்து அவளுக்கு கொடுத்தான் தீரன்..
சமையலறையில் ஒரு பக்கம் மேடையில் அவன் சாய்ந்து நின்று இருக்க இன்னொரு புறம் அவள் சாய்ந்து நின்று கொண்டு தன் கையில் இருந்த குவளையில் இருந்த பாயசத்தை மெது மெதுவாக உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தாள்..
பாயசம் நிறைந்த குவளையை பார்த்தபடி அவள் குடித்துக் கொண்டிருந்தாலும் தன் முகத்திலேயே அதுவும் இதழிலேயே அவன் பார்வை ஊறி கிடப்பதை அறிந்து தான் இருந்தாள் பெண் அவள்.. அந்தப் பார்வையின் தாக்குதலில் அவளுடைய கன்னங்கள் செங்கொழுந்தாய் சிவந்து போயின..
அந்நேரம் வாயிலில் “தீரா.. வீட்ல இருக்கியா பா?” என்று யாரோ கேட்டுக் கொண்டு வர வாயிலில் எட்டிப் பார்த்தவன் அங்கே நின்று இருந்தவரை பார்த்து “அட பூ கடைக்கார அண்ணன்.. என்ன அண்ணே.. நீங்க இந்த பக்கம்..? நம்ம வீட்டு பக்கம் எல்லாம் நீங்க வர மாட்டீங்களே.. என்னைக்காவது பூவுக்கு ஆர்டர் பண்ணா கூட நேரா செட்டுக்கு வந்து தானே குடுப்பீங்க..”
அவன் கேட்க “செட்டுககு ஆர்டர் பண்ணா செட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கலாம் தம்பி.. இப்போ உங்க வீட்டுக்கு இல்ல பூ ஆர்டர் பண்ணி இருக்கே..”
அவர் சொன்னதை கேட்டு புரியாமல் புருவத்தை சுருக்கினான் அவன்..
தொடரும்..