எவ்வளவோ கூறியும் அவளோடு எடுத்த புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டு விட்டானே எனப் பதறியது அவளுடைய மனம்.
கீப் எனக் குறிப்பெழுதி பதிவிட்டிருப்பானோ எனப் பதறியவள் சற்றும் சிந்திக்காது அவனை நெருங்கி அவனுடைய கரத்தில் இருந்த அலைபேசியை பறிக்கத் தொடங்க அவளுடைய உயரத்திற்கு எட்டாத வகையில் தன் கரத்தில் இருந்த அலைபேசியை உயர்த்திப் பிடித்தான் விநாயக்.
“அந்த போட்டோவ என்னென்னு போட்டுருக்கீங்க..? ப்ளீஸ் அதை டெலிட் பண்ணுங்க.. யாரும் பாத்துடப் போறாங்க ப்ளீஸ்..” எனக் கெஞ்சியவாறே அவனுடைய கரத்தில் இருந்த அலைபேசியை பறிக்கப் போராடியவளின் முன் உடல் முழுவதும் அவனுடைய மார்பில் உரச அவனுடைய பார்வையோ சட்டென மாறியது.
“செந்தூரி மூவ்..” என்றிருந்தான் அவன்.
அவனுடைய குரலில் அப்படியொரு அழுத்தம்.
அப்போதுதான் அவளுக்கும் அவனுடனான நெருக்கம் புரிய நெஞ்சில் கை வைத்தபடி பதறி பின்னால் விலகி நின்றவளுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.
“சா.. சாரி..” திணறிப் போனாள் அவள்.
அவனோ இயல்புக்கு மாறியவன்,
“போட்டோ எல்லாம் டெலிட் பண்ண முடியாதுடி. இன்னும் கொஞ்ச நேரத்துல நாம ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயாகணும்..” என்றான்.
“இன்னைக்கே ஷூட்டிங் ஸ்டார்ட்டா..?” என அதிர்ந்து போய் கேட்டாள் அவள்
“இல்ல.. பட பூஜை பண்றாங்க.. சோ ரெண்டு பேரும் ஒன்னாவே போயிட்டு வந்துடலாம்…” என அவன் இமை சிமிட்டிச் சிரிக்க அவனுடைய இமை சிமிட்டலில் இவளுக்கோ எரிச்சல் எரிச்சலாக வந்தது.
“நீங்க தனியா உங்க கார்ல போங்க..”
“ஆஹான்..?”
“நான் ஆட்டோ பிடிச்சு அங்க வரேன்..”
“ஓகே நோ ப்ராப்ளம்.. நீ ஆட்டோலயே அங்க வந்துரு.. ஆட்டோக்கு பணம் நான்தான் கொடுப்பேன்..” என்றான் அவன் விசமமாக.
“என்ன ரொம்பவே டேமேஜ் பண்ணிட்டீங்க.. இதுவே போதும் ப்ளீஸ்..” அழுது விடுபவள் போல கூறினாள் அவள்.
“இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லடி..” எனச் சிரித்தான் அவன்.
‘ராட்சசன்..’
‘இரக்கமே இல்லாத அரக்கன்..’
என தனக்குள் அவனைத் திட்டிக் கொண்டவள் எதுவும் கூறாது வலித்த தன்னுடைய நெற்றியை நீவி விட்டவாறு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
“வாவ் நான் போட்ட போஸ்ட் இப்பவே ஒரு மில்லியன் வியூஸ் தாண்டிடுச்சு.. கிட்டத்தட்ட ஊருக்கே நீ என்கூடதான் இருக்கேன்னு தெரிஞ்சிருக்கும்.. இதுக்கப்புறம் எதுக்கு ஆட்டோல வரணும்..? என்கூட கார்லயே வா..” என்றவன் படப்பிடிப்பு நடக்க இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு தயாராகத் தொடங்கினான்.
யார் யாரெல்லாம் விநாயக் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்தார்களோ என எண்ணியவளுக்கு உள்ளே பயமும் பதற்றமும் தொற்றிக் கொண்டது.
இனி தன்னைத் தெரிந்தவர்கள் கூட தன்னைக் கண்டால் முகத்தை சுளிக்கக் கூடுமோ..?
பணத்திற்காக இவனுடைய படுக்கைக்கு வந்து விட்டேன் என்றுதானே நினைப்பார்கள்.
கண்கள் கலங்கி விட அப்படியே இருந்தவளின் முன்பு அவளுடைய முகத்தருகே குனிந்தவன்,
“இப்போ ஏன் அழகுற..?” எனக் கேட்டான்.
“நான் அழலையே..” மறுத்தாள் அவள்.
“குட் சீக்கிரமா ரெடி ஆகிடு.. நல்ல ட்ரெஸ்ஸா போட்டுக்கோ..” எனக் கூறிவிட்டு அவன் சென்று விட அவனுடைய கன்னத்தில் மாறி மாறி அறைய வேண்டும் போல அவா எழுந்தது.
அப்படியே அவனுடைய கழுத்து மார்பு முழுவதும் தன்னுடைய நகங்களால் பிராண்டி வைக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றத் தைரியம் இல்லாது எழுந்து சென்று தன்னுடைய பையைத் திறந்தவளுக்கு புதிதாக எந்த ஆடையும் இல்லை என்பது நினைவில் வந்தது.
இருக்கும் ஆடைகளில் மிகவும் பழையதாக இல்லாமல் சுமாராக இருந்த ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவள் வெளியே வந்தபோது அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தான் அவன்.
“ஓஹ் கமான் பேப்.. நீ இப்போ ஒரு ஹீரோயின். இப்படியா வருவ..? ட்ரெஸ் சேஞ்ச் பண்ணு..”
“என்கிட்ட வேற ட்ரெஸ் இல்ல.. இருக்கிறதுல இதுதான் கொஞ்சம் நல்லா இருந்துச்சு..” சத்தமே இல்லாமல் வெளிவந்தன அவளுடைய வார்த்தைகள்.
“ஓஹ்.. இட்ஸ் ஓகே.. கம் வித் மீ..” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு கீழே செல்ல இவளுக்கோ அவன் வளர்க்கும் நாயைப் போல அவன் பின்னே செல்ல வேண்டிய நிலை.
அமைதியாக சென்று அவனுடைய காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டவள் அவனுடன் பேசப் பிடிக்காது வீதியை வெறித்தவாறு வர,
சற்று நேரத்தில் மிகப்பெரிய மால் ஒன்றில் வண்டியை நிறுத்தியவன் முகத்திற்கு மாஸ்கை அணிந்து விட்டு அவளுக்கும் அதனை அணிவிக்கும் படி கொடுத்தவன் அவள் அதை அணிந்ததும் வா என அவளை அழைத்தவாறு அந்த மாலுக்குள் செல்ல இங்கே எதற்கு அழைத்து வந்திருக்கிறான் என்ற குழப்பத்தோடு அவன் பின்னே சென்றாள் அவள்.
விஐபி பிரிவுக்குள் அவளை அவன் அழைத்துச் சென்று விட அங்கே மக்களின் கூட்டமே இல்லாது ஒரு சிலருடன் காட்சியளித்தது அந்தத் தளம்.
அங்கே நின்ற பெண்கள் எல்லாம் விநாயக்கைக் கண்டதும் அத்தனை பற்களையும் காட்டிச் சிரித்தவாறு என்ன உதவி வேண்டும் எனக் கேட்க இவளுக்கோ இவனைப் பார்த்து இப்படி வழிகின்றார்களே என்ற எண்ணம்தான் உள்ளே எழுந்தது.
அனைவருக்கும் பிடித்த புகழ்பெற்ற நடிகனைத் தனக்குத்தான் பிடிக்கவில்லையோ..?
திரைப்படங்களைப் பார்த்தால் தானே நடிகர்களை ரசிப்பதற்கு.
திரைப்படங்கள் பார்ப்பதற்கு அவளுக்கு எங்கே நேரம் இருந்தது.?
வேலைக்குச் செல்வதும் வேலை விட்டு வந்து வீட்டு வேலைகளைக் கவனிப்பதும் தன்னுடைய தந்தையை பார்த்துக் கொள்வதற்குமே அவளுக்கு நேரம் சரியாக அல்லவா இருந்தது.
“மேடத்துக்கு நல்ல டிசைனர் புடவையா எடுத்துக் காட்டுங்க..” என உத்தரவிட்டான் விநாயக்.
அந்தப் பெண்களோ அவளுடைய முகத்தைப் பார்த்தும் தங்களுடைய ஃபோனை பார்த்தும் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுக்க,
செந்தூரிக்கோ அங்கே நிற்கவே அசிங்கமாக இருந்தது.
தன்னைப் பற்றித்தான் கிசுகிசுக்கிறார்கள் என்பதை புரிந்து தலையை குனிந்து கொண்டாள் அவள்.
இன்னொரு பெண்ணோ அவளை அழைத்து டிசைனர் புடவைகளைக் காட்டத் தொடங்க அவற்றை பார்வையிடும் நிலையிலா அவள் இருந்தாள்..?
இப்படியே நிலத்திற்குள் புதைந்து போய் விட மாட்டோமா என்றிருந்தது பேதைக்கு.
அவளைப் பார்த்தவன் அவள் இப்போதைக்கு எதையும் தேர்ந்தெடுக்க மாட்டாள் என்பதை உணர்ந்து அவளுக்கான சில அழகிய உடைகளை வேகமாக அவனே தேர்ந்தெடுத்தவன் அதற்கான பில்லை செலுத்திவிட்டு அவளுடைய கரத்தைப் பற்றி இழுக்காத குறையாக அவளைக் காருக்கு அழைத்து வந்தான்.
“முட்டாளா நீ..? பப்ளிக் பிளேஸ்ல எப்படி நடந்துக்கணும்னு உனக்குத் தெரியாதா..? அங்க எதுக்காக தலைய குனிஞ்சுகிட்டு நிக்கிற..?” என காரில் அமர்ந்தவாறு அவளை அவன் திட்ட,
“அசிங்கமா இருக்கு.. யாரோட முகத்தையும் என்னால பார்க்க முடியலை…” எனச் சீறினாள் அவள்.
“நான்சென்ஸ்..” என்றவன் மீண்டும் அவளைத் தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான்.
அவன் எடுத்து வந்த புடவைகளில் அழகிய வெள்ளிக் கற்கள் பதிக்கப்பட்ட கருப்பு நிற டிசைனர் புடவையைக் கொடுத்தவன் “சீக்கிரமா இத கட்டிக்கிட்டு வா..” என உத்தரவிட “பிளவுஸ்..?” என இழுத்தாள் அவள்.
“ரெடிமேட் பிளவுஸ் வாங்கிட்டேன்..”
“ஆனா நான் அளவு கொடுக்கவே இல்லையே..?” என தயங்கியவாறு கூறினாள் அவள்.
“ஆல்ரெடி உன்னோட அளவு எனக்குத் தெரிஞ்சதுதானே சோ கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன்..” என்றதும் தன்னுடைய கரத்தில் இருந்த புடவையை பறிக்காத குறையாக வாங்கிக் கொண்டவள் வேகமாக ஆடை மாற்றும் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டாள்.
‘விவஸ்தை கெட்டவன்..’ என்ன திட்டியது அவளுடைய மனம்.
சற்று நேரத்தில் மிக நேர்த்தியாக அந்தப் புடவையைக் கட்டி வெளியே வந்த செந்தூரியைப் பார்த்தவனுக்கு ஒரு கணம் தன்னுடைய விழிகளை இமைக்க முடியவில்லை.
“பியூட்டிஃபுல்..”
அவளை அழைத்து வந்து ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்பு நிறுத்தியவன் பின்னல் போட்டிருந்த அவளுடைய நீண்ட கூந்தலை விரித்து அவளுடைய மார்பில் படர விட்டான்.
அவள் காதில் போட்டிருந்த வெள்ளைக் கல் பதிக்கப்பட்ட சிறிய தங்கத் தோடே அவளுக்கு மிகுந்த அழகை அள்ளி இறைப்பது போல இருந்தது.
“லிப்ஸ்டிக் வச்சிருக்கியா..?”
“இல்ல..”
“காஜல்..?”
“ம்ஹும்..”
“ப்ச் ஐலைனராவது வச்சிருக்கியா..?”
“இல்லையே..”
“ஏன்டி மேக்கப் போடவே மாட்டியா..?”
“மாட்டேன்..” என்றாள் அவள்.
“பட் உன்னோட உதடு இன்னும் கொஞ்சம் சிவப்பா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது..”
“என்கிட்டதான் லிப்ஸ்டிக் இல்லையே..”
“இட்ஸ் ஓகே நான் வேணும்னா ஒரு லிப் லாக் டீப்பா பண்றேன்.. கண்டிப்பா உன்னோட உதடு சிவந்துடும்..” எனக் கூறிவிட்டு அவன் தன்னுடைய உதட்டை நாவால் ஈரப்படுத்த தூக்கி வாரிப் போட்டது செந்தூரிக்கு.
“ஐயோ வேணாம்.. நான் வேணும்னா பக்கத்து கடையில ஓடிப்போய் லிப்ஸ்டிக் வாங்கிட்டு வந்துடட்டுமா..?” எனப் பதற்றத்துடன் அவள் கேட்க வாய்விட்டு சிரிக்கத் தொடங்கி விட்டான் அவன்.
“பயப்படாதடி ஒரு பொண்ணோட இஷ்டம் இல்லாம நான் கிஸ் எல்லாம் பண்ண மாட்டேன்..” எனக் அவன் கூறியதும்தான் அவளுக்கு நின்ற மூச்சு சீராக இயங்கத் தொடங்கியது.
******
முதல் நாள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்திருந்த கௌதமனுக்கோ உள்ளே சற்று படபடப்பு இருக்கத்தான் செய்தது.
படபடப்பு ஒரு ஓரம் இருக்க அதைவிட அதீத மகிழ்ச்சி அவனுடைய மனமெங்கும் பரவியிருந்தது.
பின்னே சினிமாவில் இப்போது முன்னணி நடிகனாக இருக்கும் விநாயக் மகாதேவுக்கு நண்பனாக நடிப்பதற்கு அல்லவா அவனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முதல் படமே அவனுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட மகிழ்ச்சியின் உச்சத்தில்தான் மிதந்து கொண்டிருந்தான் கௌதம்.
இன்று படப்பிடிப்பிற்கான பூஜை ஆரம்பமாக இருந்தது.
டைரக்டர் சக்கரவர்த்தியோ ஒவ்வொருத்தருக்கும் கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
எப்படியாவது இந்த படத்தில் நடித்து மக்களின் மனதில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அமர்ந்திருந்தவன் தன் அருகே நின்று எதையோ கோபத்துடன் முணுமுணுத்துக் கொண்டிருந்த அழகிய பெண்ணை யார் இது என்றவாறு திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்துதான் போனான்.
மூன்று படங்களை நடித்து தன்னுடைய கவர்ச்சியிலும் நடிப்பிலும் வாலிபர்களை ஈர்த்து வைத்திருந்த நாயகி வர்ஷா தன்னருகே நிற்பதைக் கண்டு அவனுக்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
“ஹாய் மேடம் நான் உங்க பிக் ஃபேன்.. இந்த படத்துலயும் நீங்கதான் ஹீரோயினா..?” என நட்பாகச் சிரித்தவாறு அவன் கேட்க முகத்தை திருப்பிக் கொண்டு நடந்து சென்று விட்டாள் வர்ஷா.
“இப்போ நான் என்ன கேட்டுடேன்னு இந்த அம்மா இப்படி சிலுப்பிக்கிட்டு போகுது..?” என கௌதம் முணுமுணுக்க,
“அட ஏன் ப்ரோ நீங்க வேற.. அவங்களே இந்த படத்துல ஹீரோயினா நடிக்க முடியலன்னு கடுப்புல இருக்காங்க.. இப்போ போய் அவங்ககிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டா இப்படித்தானே பிஹேவ் பண்ணுவாங்க..” என அருகில் நின்ற கேமராமேன் கிசுகிசுப்பாகக் கூறினான்.
“ஓஹோ அப்ப இவங்க இந்த படத்துல நடிக்கலையா..?”
“இவங்கதான் செகண்ட் ஹீரோயினாம் ப்ரோ..”
“அப்படியா..? அப்ப நம்ம விநாயக் சாருக்கு ஜோடி யாரு.?” என ஆர்வமாகக் கேட்டான் கௌதம்.
“தெரியல ப்ரோ.. யாரோ புது நடிகையாம்.. சக்கரவர்த்தி சார்தான் இன்ட்ரோ பண்றாங்களாம்..” என தனக்கு தெரிந்த விடயத்தை கூறிவிட்டு அவன் அமைதியாக நிற்க கௌதமோ யார் வந்தால் தனக்கு என்ன தன்னுடைய நடிப்பை சரியாக நடித்தால் போதும் என எண்ணியவாறு நின்றிருந்தான்.
அந்த புதிய நடிகை தன்னுடைய நெருங்கிய தோழி என அறிந்து கொள்ளும் போது அவனுடைய முகபாவனை எப்படி இருக்குமோ அவனுக்குத்தான் வெளிச்சம்.
💜🔥💜
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 60
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,370
3 thoughts on “23. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”
Interesting
Intresting sis
Super 👌 💖