லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 31
“வீட்டுக்கு பூ ஆர்டர் பண்ணோமா? என்ன அண்ணே சொல்றீங்க..?”
அந்த வீட்டில் இருந்து பூ கொடுக்க சொல்லி யார் அவரிடம் சொல்லி இருப்பார்கள் என்ற யோசனையில் தீரன் இருக்க அப்போது வீட்டின் கேட்டை திறந்து கொண்டு அந்த பூக்கடைக்காரர் அருகில் வந்து நின்றார் அவரின் மனைவி..
“ஏன்யா.. உன்னை எங்கல்லாம்யா தேடுறது..? அங்க மூணாவது வீட்டில பூ கொடுத்துட்டு வரேன்னு சொன்னேன் இல்ல? உன்னை வெளியில தானே நிக்க சொன்னேன்.. அதுக்குள்ள இங்க வந்துட்ட.. நான் வீடு வீடா போய் கேட்டுக்கிட்டு இருக்கேன்.. என் புருஷன் வந்தானா வந்தானான்னு.. நம்ம தீரா தம்பி வீட்டுக்கு தான் வரேன்னு என்கிட்ட சொல்லிட்டு வரலாம் இல்ல..?”
கணவனை சரமாரியாக திட்டிக் கொண்டே வந்தார் அந்த பெண்..
தீரனை பார்த்ததும் “என்ன தம்பி.. நல்லா இருக்கியா? உனக்கு கல்யாணம் ஆகிட்டுதாமே.. இது சொல்லி தான் தெரிஞ்சுச்சு.. எங்க கிட்ட எல்லாம் சொல்லாமே சைலன்டா செலவில்லாம ஜோலியை முடிச்சிட்ட போல..”
“அது.. வந்துக்கா” என்று தீரன் பேச தொடங்கும் போதே தீரனின் பின்னால் மதி வந்து நிற்க “ஓ.. இதுதான் புது பொண்ணா..? மகாலட்சுமி கணக்கா நல்லா இருக்குதுப்பா.. உங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தமும் பார்க்க அந்த சிவன் பார்வதியையே ஒண்ணா பார்த்த மாதிரி இருக்கு.. வூட்ல பெரியவங்க யாராவது இருந்தா கண்ணேறு கழிக்க சொல்லுயா.. ரெண்டு பேரும் இதே மாதிரி ஜோடியா நல்லபடியா ரொம்ப நாள் வாழனும்.. இந்தாப்பா.. இந்த பூவை அந்த பொண்ணு தலையில வச்சு விடு..”
அவர் கையில் இருந்த கூடையில் இருந்து ஒரு சிறிய பூச்சரத்தை எடுத்து அவன் கையில் கொடுக்கவும் அவனோ ஒரு நிமிடம் திகைத்து போனான்..
மதியும் திடுக்கிட்டபடி அவனை பார்க்க என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவனிடம் “இன்னாப்பா.. அப்படி பாக்குற.. உன் பொண்டாட்டி தானே..? நேத்து உங்க விசேஷத்துக்காக தான் உன் தம்பியும் இன்னொரு பொண்ணும் கடைக்கு வந்து பூ வாங்கிட்டு வந்தாங்கன்னு அது சொல்லிச்சே.. ஹான்.. கல்யாணத்துக்கு தான் எங்களை எல்லாம் கூப்பிடாம காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சுட்ட..” அவர் சொன்னதை கேட்டு மதிக்கு முகம் எங்கும் நாணத்தில் குப்பென செவ்வாப்பை பூசிக் கொண்டது..
அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை என்பது அவர்களுக்கு மட்டும் தானே தெரியும்.. ஆனால் அந்த பெண்மணி பேசும் போது மதியையும் தீரனையும் குறு குறு என்று பார்த்து கொண்டிருந்தது மதியையும் தீரனையும் கொஞ்சம் சங்கடமாய் நெளிய தான் வைத்தது..
அந்த சூழ்நிலையை இயல்பாக்க “இல்லக்கா… கண்ணாலத்துக்கு யாரையுமே கூப்பிடல.. திடீர்னு நடந்தது..” என்றவன் மதி பக்கம் திரும்பி பார்க்க அவளோ தான் அப்படியே நின்று இருந்தால் அந்த பெண்மணி இன்னும் பதில் சொல்ல முடியாத நிறைய கேள்விகளை கேட்பாள் என்று யோசித்தவள் அவன் அருகில் நடந்து வந்து அவனுக்கு எதிர்ப்புறமாய் முதுகு காட்டி நின்று கொண்டாள்..
தலையில் இருந்து தோள் வரை முடியை கொஞ்சம் தளர்வாக விட்டு அதன் பிறகு நீண்ட பின்னலிட்டு இடை வரை நீண்டு ஆடிக் கொண்டிருந்த சடையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவனின் கண்கள் மெல்ல அவள் பின்னழகையும் அவன் அனுமதி இல்லாமலேயே ரசிக்க தொடங்கியது..
சட்டென தன்னிலை உணர்ந்தவன் “ஊஃப்..” என ஊதி பெருமூச்சை விட “ஏம்பா.. அதான் அந்த பொண்ணு வந்து உன் முன்னாடி பூ வச்சி விட சொல்லி நிக்குதில்ல..? இன்னும் என்ன ரோசனை…? இந்த பூவை வாங்கி அது தலையில் வச்சு விடுப்பா..”
அந்த அம்மாள் மறுபடியும் சொல்ல மதியின் செய்கையில் அவள் ஒப்புதலை அறிந்து கொண்டவன் வேறு வழியின்றி மெதுவாக புன்னகைத்த படி அந்த பெண்மணி கொடுத்த பூவை அவள் தலையில் சூட்டி விட்டான்..
வெளியில் கொஞ்சம் தயங்கினாலும் மானசீகமாக இருவருமே அந்த இனிய தருணத்தை தாங்கள் அனுபவிப்பதற்கு காரணமாய் இருந்த அந்த பூக்கடைக்காரருக்கும் அவர் மனைவிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்..
பூ வைத்ததும் மதி வாயில் புறமாய் திரும்பி நிற்க அவளுக்கு திருஷ்டி கழித்தாள் அந்த பூக்கார அம்மாள்..
“அம்மாடி.. உன் பேர் என்னம்மா..?”
“என் பேரு மதியழகிக்கா..”
“அழகான பேரு.. தீரனுக்கு ஏத்த மதி தான் நீ..”
அவர் அப்படி சொன்னது வீரனுக்கும் மதிக்கும் தித்திக்கும் தேனாய் இனித்தது..
அதற்குள் அவ்வளவு நேரம் அவர்கள் வெளியே நின்றே பேசிக் கொண்டிருக்கவும் “அக்கா.. உள்ள வாங்களேன் அக்கா.. வெளியே ரொம்ப நேரமா நின்னு பேசிகிட்டு இருக்கீங்க..” என்றாள்..
“அதெல்லாம் வேண்டாம்மா.. இன்னும் நிறைய வீடுகளுக்கு போய் பூ கொடுக்கணும்.. இந்த ஆளு இன்னைக்கு உங்க வீட்ல பூ கொடுத்ததுக்கு பணம் வாங்கிட்டு வரணும்னு சொன்னாரு.. அதான் புதுசா கல்யாணம் ஆன தம்பதிகளை பார்த்துட்டு போலாமேனு வந்தேன்..”
அவர் சொன்னதும் சட்டென மதி “ஒரு நிமிஷம் அக்கா.. இங்கேயே இருங்க..” என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள்..
அவள் எதற்கு அப்படி ஓடுகிறாள் என்று தெரியாமல் தீரன் புருவம் சுருக்கி பார்க்க இரண்டு நிமிடங்களில் இரண்டு குவளைகளில் பாயசத்தை எடுத்துக்கொண்டு வந்தவள்
“அக்கா.. இன்னைக்கு முதல் முதல்ல வீட்டில சமையல் பண்ணேன்.. அதனால பாயசம் செஞ்சேன்.. எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன அப்புறம் எங்க வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளி நீங்க தான்… இந்த பாயசத்தை குடிங்க கா.. உள்ள வாங்க.. உள்ள வந்து குடிச்சிட்டு போங்க.. அஞ்சு நிமிஷத்துல ஒன்னும் நேரம் ஆகிறாது..”
அவள் சொன்னதும் சிரித்தபடி “வாயா போலாம்.. அந்த புள்ள அவ்வளவு வருத்தி வருத்தி கூப்பிடுது இல்ல..?” என்று சொல்லி கணவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் அந்த பெண்..
வரவேற்பறையில் அவர்களை அமர வைத்து பால் பாயசம் கொடுத்ததும் “இந்த பிள்ளைக்கு நல்ல சமைக்கவுமீ தெரியும் போல.. கொடுத்து வெச்சவன் தான் தீரா நீ.. இவளும் சமைக்கிறாளே.. வாயில வைக்க வணங்கல.. இத்தனைக்கும் 20 வருஷமா சமைச்சுக்கிட்டு இருக்கா..” பூக்கடைக்காரர் சொல்லவும் அவர் கன்னத்தில் இடித்தார் அவருடைய மனைவி..
“சொல்லுவயா சொல்லுவே.. ஒரு வேளை கூட உன்னை பட்டினி போடாம பார்த்து பார்த்து வாய்க்கு ருசியா வக்கணையா சமைச்சு கொடுக்கிறேன் இல்ல.. இப்படி தான் பேசுவே.. ரவைக்கு வீட்டுக்கு வா.. வயித்துல ஈர துணி போட்டு வெளியில் படுக்க வைக்கிறேன்..”
அவர்களுக்குள் நடந்த அழகான செல்ல சண்டையை தீரன் மதி இருவரும் பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்..
அப்போது உள்ளிருந்து கல்லூரிக்கு தயாராகி இந்தரும் மலரும் வெளியே வர அவர்களை பார்த்து அந்த பூக்கடைக்காரர் “வந்துட்டீங்களா? எம்மாடி.. இவங்க ரெண்டு பேரையும் வீட்டில எப்படி சமாளிக்கிறீங்க? நேத்து ஒரு நாள் என் கடைக்கு வந்ததுக்கே எனக்கு நாக்கு தள்ளிருச்சு.. ரெண்டு பேரும் ஓயாம அப்படி எலியும் பூனையுமா சண்டை போட்டுக்குறாங்க.. கடைசி வரைக்கும் என்ன பூ வேணும்னு தீர்மானம் பண்ணி சொல்லவே இல்ல.. ரெண்டு பூக்கூடையையும் வெளியில் வெச்சுட்டு நான் கடையோட கதவை பூட்டிக்கிட்டு போயிட்டேன்னா பாத்துக்கோ..”
அவர் சொன்னதைக் கேட்டு தீரன் இந்தரை முறைக்க மதி மலரை முறைத்துக் கொண்டிருந்தாள்..
அதற்குள் அந்த பெண்மணி தன் கூடையிலிருந்து இன்னொரு பூச்சரத்தை எடுத்து “ஏம்மா காலேஜுக்கு போறியா? இந்தா.. இந்த பூவை வெச்சுக்கிட்டு போ..”
அவர் சொல்லவும் சங்கடமாய் விழித்த மலரழகி “அக்கா.. நான் குர்தி ஜீன்ஸ் பேண்ட் போட்டு இருக்கேன்.. இதுக்கு பூவெச்சா நல்லா இருக்காதுக்கா..” என்றாள் சிணுங்கலாய்..
மதி “இது என்ன பழக்கம் மலர்? அவங்க ஆசையா கொடுக்குறாங்க.. அவங்க மனசு வருத்தப்படுற மாதிரி வேணாம்னு சொல்ல கூடாது.. வாங்கி வச்சுக்கோ..” என்றாள் கறாராக..
அதற்குள் இந்தர் “அக்கா நீங்க என்ன முல்லை பூ கொடுக்குறீங்க..? பேய்க்கெல்லாம் மல்லி பூன்னா தான் ரொம்ப பிடிக்கும்.. நீங்க மல்லிப்பூவை கொடுங்களேன்.. அவ நிச்சயமா வாங்கி வச்சுக்குவா..” என்று மலரழகியை வம்பு இழுக்க அவள் பல்லை கடித்துக் கொண்டு இந்தரை தீவிரமாக முறைத்தாள்..
அதற்குள் தீரன் “மதி.. அவளுக்கு பூ வைக்க இஷ்டம் இல்லன்னா விடு.. அந்த அக்கா ஒன்னும் நெனச்சுக்க மாட்டாங்க.. அக்கா.. அது சின்ன புள்ள.. ஏதோ கொஞ்சம் நாகரீகமா ட்ரஸ் பண்ணிட்டு போக நினைக்குது.. பூ வச்சா அந்த டிரஸ்க்கு நல்லா இருக்காதுன்னு நினைக்குது.. தப்பா எடுத்துக்காதிங்க அக்கா..”
“ஹே.. மாமான்னா மாமா தான்.. இனிமே நீங்க இருக்கும் போது எனக்கு கவலையே இல்லை மாமா.. நீங்க தான் எனக்கு ஏத்த ஆளு..”
அவள் சொன்னதைக் கேட்டு இன்னும் முகம் சுருக்கி அவளை முறைத்தாள் மதியழகி..
“ஹான்.. இப்பவே கொழந்தியாளுக்கு ரொம்ப தான் பரிஞ்சு பேசற.. சரி சரி.. நான் ஒன்னும் தப்பா நினைக்கல.. ஆனா உன் பொண்டாட்டிக்கும் கொழுந்தியாளுக்கும் சண்டை வராம பார்த்துக்க..”
அந்த பூ விற்கும் பெண்மணி கேலியாய் சொல்ல “அதெல்லாம் வரவே வராது.. ஏன்னா எனக்கு அவரைப் பத்தி தெரியும்.. அவர் மனசு எல்லா பொண்ணுங்களையும் தாயா தங்கச்சியா மகளா பார்க்குமே தவிர வேற கண்ணோட்டத்தில பார்க்கவே பார்க்காது.. எப்பேர் பட்ட அழகியா இருந்தாலும் அவர் மனசை கலைக்க முடியாது..”
“ம்ம்.. பார்ரா புருஷன் மேல எம்புட்டு நம்பிக்கை.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க போல.. அதான் தீர அவ்வளவு அவசர அவசரமா உன்னை கட்டிக்கிட்டான் போல.. எல்லாரும் நல்லா இருந்தா சரிதான்..” என்றார்..
தீரனோ பெருமை பொங்கிய விழிகளோடு மதியை பார்க்க அவளும் அவன் புறம் கனிவான ஒரு பார்வையை வீசினாள்..
இந்தர் பக்கம் திரும்பிய தீரன் “இந்தர் நீ எதுக்கு மலரை வம்பு பண்ணிக்கிட்டு இருக்க..? அந்த அக்கா கேட்டதுக்கு அவ பதில் சொல்லிக்கிட்டு இருக்கா.. நீ நடுவுல எதுக்கு என்னவோ பேசி அவளை வம்புக்கு இழுக்கிறே.. இன்னொரு தடவை இந்த மாதிரி அவ கிட்ட வம்பு வச்சுக்கிட்ட அப்புறம் அவ்வளவு தான்.. சொல்லிட்டேன்..”
அவன் இந்தரை கண்டிப்புடன் பார்த்து சொல்ல இந்தர் ‘சாரிண்ணா” என்று அமைதியாக இருந்து கொண்டான்..
மலர் தன் குர்த்தி காலரை தூக்கி விட்டு அவனை ஏளனமாக திமிர் பார்வை பார்க்க அதை கவனித்துவிட்ட மதி “மலரு.. போதும்” என்று சோல்ல அப்படியே அடங்கி போனாள் மலர்..
“சரிப்பா.. எனக்கு நேரம் ஆகுது.. இன்னும் பத்து பதினஞ்சு வீட்டுக்கு வேற போகணும்.. நேத்து பூ வாங்கிட்டு வந்ததுக்கு பணத்தை கொடுத்துட்டீங்கன்னா நான் கிளம்பிடுவேன்ப்பா..”
தீரன் “எவ்வளவுண்ணா ஆச்சு?” என்று கேட்க அவர் ஒரு தொகையை சொல்லவும் அந்த தொகையை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான்..
அவர்கள் சென்ற பிறகு தீரனின் அத்தை மட்டும் வீட்டில் இருக்க எல்லோரும் தீரனோடு கிளம்பினர்..
காரில் தீரனும் மதியழகியும் முன் இருக்கைகளில் அமர்ந்திருக்க பின் இருக்கையில் இந்தர் ஒரு ஓரமும் மலரழகி ஒரு ஓரமுமாக அமர்ந்திருக்க நடுவில் தமிழ்வாணன் அமர்ந்திருந்தார்..
தமிழ்வாணன் வண்டியை விட்டு இறங்கும் வரை வண்டி அமைதியாக தான் சென்று கொண்டிருந்தது..
தமிழ்வாணனை அவர் வேலை பார்க்கும் இடத்தில் இறக்கி விட இப்போது இந்தரும் மலரழகியும் அருகருகே அமர்ந்திருக்க இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு கதவு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள்..
தீரனுக்கும் மதியழகிக்கும் அவர்களின் நடவடிக்கையை பார்த்து சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அடுத்ததாக மலர் அழகியின் கல்லூரிக்கு சென்றார்கள்..
கல்லூரி வாசலில் மலரழகி இறங்கவும் அவள் பின்னாலேயே தீரனும் வண்டியிலிருந்து இறங்க கல்லூரி வாசலிலேயே நின்று கொண்டிருந்த அவளுடைய தோழிகள் அவளை தீரன் கொண்டு விடுவதை பார்த்து ஆச்சரியப்பட்டு போய் “மலரு சொன்ன மாதிரியே உனக்கு பிடிச்ச அந்த ஆறு அடி ஆளை உனக்கே சொந்தமா ஆக்கிக்கிட்டியா..?”
தீரன் இறங்கியதும் தானும் வண்டியிலிருந்து இறங்கிய மதியழகியின் செவிகளில் மலரழகியின் அந்த வார்த்தைகள் விழ அவள் மட்டும் இன்றி அதை கேட்டு தீரனும் கொஞ்சம் கலங்கி தான் போனான்..
“ஆமா.. என் தீரா மாமாவை நான் எனக்கு சொந்தம் ஆக்கிக்கிட்டேன்..” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் அவள் தன் தோழியிடம்..
தொடரும்..