அரண் 25
வீடு வந்து சேர்ந்ததும் காரில் இருந்து இறங்கியவன் சற்று நேரம் காரில் சாய்ந்த படி யோசித்துக் கொண்டிருந்தான்.
‘நான் எப்படி அற்புதத்தின் முகத்தினை எதிர் நோக்குவேன் அவளது முகத்தை பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது இப்படியா நடந்து கொள்வேன் என்னதான் கோபமாக இருந்தாலும் அப்படி வார்த்தையை நான் கூறியிருக்கக் கூடாது
என்னை முழுதாய் நம்பியதால் தானே அவளது ஆசைகள், கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் என்னிடம் கூறினாள் அதை வைத்து நான் அவளை குத்திக்காட்டி கோபம் தீர்க்கக் கூடாது
ஒருவர் நம்பி கூறும் ஒரு விடயத்தை அவர் மீது கோபம் வரும்போது திருப்பி குத்திக் காட்டுவது மிகப்பெரிய தவறு அதை நான் செய்து விட்டேன் எப்படி அவளிடம் மன்னிப்பு கேட்பது..” என்று புரியாமல் தவித்தவன், இங்கு நின்று கொண்டிருந்தால் நேரம் தான் வீணாகும் என்று உள்ளே சென்றான்.
வைதேகியும், தனபாலும் டைனிங் டேபிளில் இருந்து இரவு உணவை உண்டு கொண்டிருந்தனர்.
உள்ளே வந்ததும் கண்களால் அற்புத வள்ளியை தேடியவன் அவள் இங்கே இல்லை என்றதும் அன்னையின் அருகே சென்று,
“அம்மா அற்புதம் எங்கே..?” என்று கேட்டதும்,
மிகவும் கவலையுடன் வைதேகி துருவனை அருகில் அழைத்து இருக்க வைத்து,
“துருவா நான் சொல்றேன்னு கோவிச்சு கொள்ளாத உனக்கு விருப்பமில்லாத பொண்ண தான் நான் கட்டி வைச்சேன் ஆனா அவள் ரொம்ப நல்ல பொண்ணுடா..” என்று தலையை பாசமாக தடவி அப்படி கூற,
“ஓஹ் அதுக்குள்ள உங்க மருமக போட்டு கொடுத்துட்டாளா? அது.. அது.. வந்து மா..” என்று நடந்த பிரச்சினையை கூற எடுத்தவன் எப்படி அதனை சொல்வது என்று தடுமாறி நிற்க,
“இல்லப்பா என்ன நீ ஒன்னும் சொல்லத் தேவையில்லை. காலையிலிருந்து அவளுக்கு முகம் சரியே இல்லை நான் என்ன ஏது என்று கேட்டும் அவள் ஒரு வார்த்தை கூட சொல்லல தலை ரொம்ப வலிக்குதுன்னு சொல்லிட்டு மேலே போய் கதவை பூட்டினவ தான்
அதுக்கு அப்புறம் எத்தனையோ தடவை கூப்பிட்டேன் கீழ வரவில்லை சாப்பிட கூப்பிட்டும் வரவே இல்ல
அப்போவே எனக்கு விளங்கிட்டு உனக்கும் அவளுக்கும் ஏதோ பிரச்சனை என்று நீ ஒரு நாள் கூட என்கிட்ட சொல்லாம வேலைக்கு கிளம்பினதே இல்லை ஆனால் இன்னைக்கு அம்மாக்கு சொல்லாம போயிட்ட
அதுலயே விளங்கிட்டு ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு புருஷன் பொஞ்சாதிக்குள்ள ஆயிரம் பிரச்சனை வரும் போகும் அது சகஜம் தான்ப்பா
அதுவும் நீங்க புதுசா கல்யாணம் கட்டினவங்க உங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும்வரையும் பிரச்சனைகள் வந்து போகும் அது எல்லாத்தையும் சமாளிச்சு போனாதான் குடும்பம் என்ற ஒரு அழகான பந்தம் உருவாகும்
ஏன் எங்களையே வைத்துக் கொள்ளேன் நாங்க இரண்டு பேரும் லவ் பண்ணி தானே கல்யாணம் கட்டினோம் ஆனா கல்யாணம் பண்ணி ஒரு மாசத்திலேயே பேசாம டைவர்ஸ் பண்ணிட்டு பிரிந்து போய்விடுவோமா என்று தோணுற அளவுக்கு அவ்வளவு சண்டை நடந்துச்சு
ஆனால் எங்களுக்குள்ள அந்த பிரிவு உண்டு பண்ணாத அளவுக்கு சண்டையை விட அதிக அளவில் அன்பு இருந்துச்சு அந்தக் காதல் என்ற பிடிமானம் தான் இன்று வரைக்கும் நாங்க எவ்வளவு சண்டை பிடிச்சாலும் சந்தோசமா இருக்கிறதுக்கு காரணம்
உன்ன நான் குறை சொல்லல அவ சின்ன பொண்ணு ஏதாவது தப்பு செய்திருந்தால் நீ தான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும் அவளுக்கு இது தப்பு இது சரி என்று நீ புரிய வை அவளுக்கு உன்னை, எங்களை, அவங்க அம்மா அப்பாவைத் தவிர வேறு எதுவுமே தெரியாது இந்த உலகத்தை நீ தான் அவளுக்கு புரிய வைக்கணும் நல்லது கெட்டதை நீ தான் எடுத்து சொல்லணும்..” என்று வைதேகி மிகவும் நீளமாக அறிவுரைகளை கூறிக் கொண்டு செல்ல அனைத்தையும் பொறுமையாக கேட்ட துருவன் அப்போதுதான் ஒரு விடயத்தை கவனித்தான்.
சிறிது நேரம் கூட பசி பொறுக்காத அற்புதவள்ளி காலையிலிருந்து இன்னும் உணவு உண்ணாமல் இருப்பது அவனுக்கு பெரிய அதிசயமாகவும் சங்கடமாகவும் இருந்தது.
அதனை உணர்ந்தவன்,
“சரிமா இனிமே நான் அவளுக்கு பேச மாட்டேன்க் நான் போய் அற்புத வள்ளிய சாப்பிட கூட்டிட்டு வாரேன்..” என்று கூறிவிட்டு மாடிப்படிகளில் வேகமாக ஏறி தனது அறைக்குச் சென்றான்.
அங்கு துருவன் வாங்கி கொடுத்த புதிய வகை நவீனரக கையடக்கத் தொலைபேசியை எடுத்து அவனது மெத்தையில் படுத்திருந்து காலை மேலே ஆட்டியபடி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
துருவன் மெல்லக் கதவைத் திறந்து உள்ளே பார்க்க அவன் வந்தது கூட தெரியாமல் படுத்திருக்க வள்ளியின் வெண்ணிற வாழைத்தண்டு கால்கள் துருவனின் கண்களுக்கு விருந்தளித்தன.
ஒரு நிமிடம் அவளது கால்களை கண்டதும் ஸ்தம்பித்து போய் நின்று விட்டான் துருவன். அவனது விழிகள் அசைவற்று இமைக்க மறந்து அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றன. தொண்டைக் குழிக்குள் உமிழ் நீர் இறங்க மறுக்க, துருவனின் கதியோ பரிதாபத்தில் வந்து முடிந்தது.
சிறிது நேரத்தின் பின் சுயம் பெற்றவன் அப்படியே பூனை போல மெதுவாக உள்ளே வந்து அவளை நெருங்கி மெத்தையில் அமர,
தடாரென மிகுந்த பயத்துடன் அற்புதவள்ளி எழுந்து நின்றாள்.
அவள் துருவன் உள்ளே வருவான் என்று எதிர்பார்க்காமல் கைத்தொலைபேசியில் மூழ்கிப் போயிருக்க அவனது திடீர் வருகை அவளுக்கு பயத்தினை உண்டாக்கியது.
இருந்தும் காலையில் நடந்த விஷயங்கள் கண் முன்னே தோன்ற மீண்டும் கண்கள் கண்ணீரைத் தேடியபடி அலைந்தது.
அதனை வெளிக்காட்டாமல் வள்ளி மறுபக்கம் திரும்பி நிற்க,
அவளது முக மாற்றத்தை வைத்தே கண்டுபிடித்து விட்டான் காலையில் நடந்த விடயம் மிகவும் விபரீதமாக அவளின் மனதை பாதித்திருக்கின்றது என்று,
திரும்பி நின்றவளின் பின்புறமாக அவளது உடல் துருவனின் உடலோடு உரச மிகவும் நெருக்கமாக நிற்க,
இவளுக்கு உடல் ஆட்டம் கண்டது, உடனே நகர்ந்து செல்ல, மீண்டும் அவன் அதேபோல அருகில் வந்து நின்றான்.
மீண்டும் நகர முற்பட அவளது இடுப்பில் கை கொடுத்து தனது உடலோடு இறுகி பின்புறமாக அணைத்துக் கொண்டான்.
அற்புதவள்ளிக்கு சற்று நேரம் என்ன நடக்கின்றது என்பதை புரியவில்லை உடல் குளிரில் தவிப்பது போல விரைக்கத் தொடங்கியது. உடலெங்கும் இரத்தம் வேகமாக பாய்வது போல் உணர்ச்சிகளும் தரிகெட்டு ஓடத் தொடங்கின.
உதடுகள் தந்தி அடித்தபடி “எ…என்…என்ன வி…வி..விடுங்க….” என்று கட்டு தடுமாறிய ஒரு வார கூறி முடித்தாள்.
அவனோ காதில் கேளாதது போல “என்ன..?” என்று அவளை சீண்டிப் பார்த்தான்.
அவ்வளவு கஷ்டப்பட்டு வார்த்தைகளை ஒன்றாக கோர்த்து கூறி முடித்தவளுக்கோ அவன் கேட்ட கேள்வியில் அச்சோ என்று ஆனது.
அவனிடம் இருந்து விடுபட அவள் முயற்சிக்க அவன் இடையில் பற்றி பிடித்திருந்த கையின் பிடி இரும்பினைப் போல உறுதியாக இருந்தது. அந்தக் கையை விலக்க தனது பூ கரங்களால் அவள் முயற்சிக்க அனைத்தும் யானையை எதிர்க்கும் சிறு எறும்பு போலானது.
அவளது தவிப்பினை பார்த்து புன்முறுவல் அளித்தவன். மெதுவாக காதருகில் வந்து தனது வெப்பமான மூச்சுக்காற்றை அவள் மீது மோதச் செய்து அவளது காதோரத்தில் முளைத்திருக்கும் சிறு பூனை முடிகளை வாயினால் ஊதி தள்ள,
அவனது காற்றுப்பட்டு அவளது காதில் அணிந்திருந்த சிறு ஜிமிக்கி நர்த்தனம் ஆடியது.
அவனது செய்கையால் அவளது உள்ளங்கால் கூச்சத்தில் தடுமாறியது.
காதின் அருகே வந்த அவனது உதடுகள் “ஐ அம் ரியலி வெரி சாரி..” என்று மன்னிப்பை யாசித்தன.
அவளிடம் இருந்து எது வித பதிலும் வராமல் போக இடையிலிருந்து கையை எடுத்து அவளை விடுவித்து அவள் முன்னே வந்து நின்றான்.
அற்புதவள்ளியோ அவனது முகம் பார்க்க பிடிக்காமல் தடவி குனிந்து கொண்டு பிடிவாதத்துடன் நின்றாள்.
“ப்ளீஸ் அற்புதம் நான் செய்தது தப்புதான் ஆனா அதனால இவ்வளவு பெரிய விபரீதம் நடந்திருக்குன்னு உனக்குத் தெரியுமா?
எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்துதான் நான் வந்திருக்கேன் ஆனா அதுலயும் ஒரு நன்மை நடந்திருக்கு. நீ காலையில டென்ஷன் ஆக்கி அந்த…” என்று தனது குடிக்கும் நீரில் விஷம் கலந்த விடயத்தை வாய் தவறி சொல்ல எடுத்தவன் இடையில் நிறுத்திவிட்டு முழிக்க,
கூற வந்ததை கூறாமல் அவன் இருக்க,
“என்ன நடந்துச்சு..” என்று அவள் சந்தேகத்துடன் கேட்டாள்.
“இல்லை இல்லை ஒன்றும் இல்லை… அதுதான் நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுட்டேனே அப்புறமும் ஏன் இந்த முகம் வாடிப் போய் இருக்கு..”
“நீங்க செய்ற எல்லாம் செய்துட்டு ஈசியா கடைசியா வந்து நல்லவர் மாதிரி சாரி கேப்பீங்க நாங்க உடனே உங்கள மன்னிச்சுரனுமா..?” என்று அற்புதவள்ளி வீம்பாகப் பேச,
“ஓகே ஆனா நான் உனக்கு ஒன்னு வாங்கி வந்து இருக்கேன் நீ என்ன மன்னிச்சா தான் அதை உன்கிட்ட காட்டுவேன்.. டீல் ஓகே யா..?” என்று துருவன் குறும்பாக சிரித்துக் கொண்டு கேட்க,
“எனக்கு ஒன்னும் தேவையில்லை..” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் அற்புதவள்ளி.
“ஓகே உனக்கு ரொம்ப பிடிக்கும் வேண்டாம் என்று சொல்லிட்டு அப்புறம் பீல் பண்ணக்கூடாது..”
“நான் ரொம்ப ரோசக்காரியாக்கும் வேணும்னா எங்க அப்பா அம்மா கிட்ட கேட்டு பாருங்க என்னோட கோபம், ரோஷம் எந்த அளவுக்கு இருக்கும்முன்னு அவங்க நல்லா சொல்லுவாங்க அவங்களுக்கு என்னை பற்றி நல்லா தெரியும் எனக்கு இதெல்லாம் தேவையில்லை நீங்க கொண்டு போங்க..”
“உண்மையாகவா..?”
“உண்மையா தான்..”
“ஓகே இன்னைக்கு இந்த டைரி மில்க் சாக்லேட், பூந்தி லட்டு, ஜாங்கிரி இந்த மூணும் எனக்குத்தான் எனக்கு மட்டும் தான் ஐயா ஜாலி..” என்று கையில் இருந்த பையை திறந்து மூன்றையும் வெளியே எடுத்தான்.
உடனே கண்கள் பிரகாசிக்க ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தவள் திடீரென மீண்டும் மறுபக்கம் திரும்பி விட்டாள்.
‘என்ன வள்ளி இப்போ தானே பெரிய ரோசக்காரி என்று நீளமா வசனம் எல்லாம் பேசினா அதுக்குள்ள உனக்கு ரோஷமும், கோபமும் போயிருச்சா ஒரு சாப்பாட்ட பார்த்ததும் ஈஈஈ ன்னு பல்லக் காட்டிட்டு ஓடிடுவியா வள்ளியின்னா அவ்வளவுதானா சேச்சே நம்மட கெத்த நாம விட்டுக் கொடுக்கக் கூடாது மலை இறங்காத வள்ளி அப்படியே மெயின்டன் பண்ணு..’ என்று மனதுக்குள் அவளுக்கே அவள் தைரியமூட்டி கொண்டாள்
அவன் வெளியே எடுத்து அதனை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி காட்ட இவளோ ஓரக்கண்ணால் அதைப் பார்த்து முறைத்தாள்.
அவள் முறைப்பதை பார்த்து வெளியே தெரியாமல் நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டு, ஜாங்கிரியை எடுத்து ரசித்து ருசித்து உன்ன தொடங்க வள்ளி,
‘இங்கிருந்தால் சரிப்பட்டு வராது நம்மளோட மனச இவர் மாத்திடுவாரு அதுக்குள்ள இங்கிருந்து கிளம்பிடனும்..’ என்று எண்ணியவள்,
அந்த அறையை விட்டு அவசரமாக வெளியே செல்வோம் எனத் திரும்ப, அதனைப் பார்த்த துருவன் உடனே அவளது கையைப் பிடித்து இழுத்தான்.
அவன் இழுத்த இழுப்பில் நிலை தடுமாறி அவன் மீது மோத வர பின்னே நகர்ந்தவன், கால்மிதியில் இடறுப்பட்டு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மெத்தையின் மீது சரிந்து விழுந்தனர்.
சரிந்த வேகத்தில் துருவனின் வாயில் பாதி வெளியே பாதி உள்ளே இருந்த ஜாங்கிரியானது வள்ளியின் உதடுகள் துருவனின் வாயின் மேல் மோத ஜாங்கிரியின் பாதி அப்படியே வள்ளியின் வாயிற்குள் போய்விட்டது.
இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்தன. உதடுகள் அருகில் இருந்தும் அது இணைய எண்ணமின்றி பார்வையிலேயே அவர்களது அன்பு அங்கு பரிமாறப்பட்டது.
இருவரின் எண்ண ஓட்டங்களும் அன்பில் கலந்த காதலாக அங்கு உருவாகிக் கொண்டிருந்தது.
கண்கள் இமைக்க மறந்து கண்களாலேயே ஒருவரை ஒருவர் களவாடிக் கொண்டிருந்தனர்.
காதல் மிகவும் அழகானது என்பதை இருவரும் உணர்வுகளாலேயே உணர்ந்து கொண்டனர்.
அந்த அழகிய தருணத்தை இருவரும் தங்களது மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்க முதலில் வள்ளியே தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து கொண்டாள்.
அவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்பது போல இருந்தது. துருவனின் முகத்தைப் பார்க்க அவளால் முடியவே இல்லை. ஒரு சுவற்றின் ஓரம் போய் தலையை குனிந்து கொண்டு நின்று விட்டாள்.
துருவனும் எழுந்து நின்று தனது சட்டையிலிருந்து ஜாங்கிரி துண்டுகளை கைகளால் தட்டிய வண்ணம்,
“அப்போதே கேட்டேன் தானே உனக்கு வேணுமான்னு நீ தானே வேணாம்னு சொன்ன இது என்ன புதுப் பழக்கம் வேண்டாம் என்று சொல்லிட்டு என்னோட வாயில இருக்கின்ற எச்சி பண்ணிய ஜாங்கிரியை சாப்பிடுறது சேச்சே பேட் கேர்ள்…” என்று துருவன் கூற,
“இ..இல்..இல்ல நீ…ங்க தான் இழுத்தீங்க..” என்று அவள் வார்த்தைகளை மென்று முழுங்க,
“சரிமா உன்னுடைய ஜாங்கிரி எனக்கு வேணாம் இனிமே இப்படியான வேலை எல்லாம் செய்யாத அச்சா பிள்ளையா இருக்கணும் அம்மாவும் அப்பாவும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க நீ காலைல இருந்து சாப்பிடலையாம் ரொம்ப வருத்தப்பட்டாங்க சாப்பிடலாம் வா எனக்கும் ரொம்ப பசிக்குது அதோட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேச இருக்கு..” என்று துருவன் கூற,
கேள்வி ஒன்றும் கேட்காமல் சரி என்று தலையாட்டி விட்டு துருவனுடன் கீழே சென்றாள்.