சொர்க்கம் – 24
சாதாரணமாகவே மிக அழகாக இருப்பவள் இன்று விநாயக் மகாதேவின் கைவண்ணத்தில் இன்னும் அழகாக மிளிர்ந்து கொண்டிருந்தாள்.
எந்தவிதமான ஒப்பனையும் அவளுடைய முகத்தில் இல்லை.
நேர்த்தியான சிகை அலங்காரமும் அழகிய மெல்லிய கருநிற புடவையும் அவன் அணிவித்துவிட்ட மெல்லிய செயினும் அவளை வசீகரிக்கும் பேரழகியாக மாற்றப் போதுமாக இருந்தது.
அவளுடைய பிம்பத்தை கண்ணாடியில் பார்த்ததும் அவளுக்கே ஆச்சரியம்தான்.
இருந்தும் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாது காரில் வந்து அமர்ந்துவிட்டவளுக்கு இப்போது விநாயக்கைப் பற்றி சற்றே புரியத் தொடங்கியிருந்தது.
இதுவரை தன்னை உடல் ரீதியாக அவன் துன்புறுத்தவில்லை என்பதை எண்ணியவளுக்கு அது சற்றே நிம்மதிதான்.
அனைவரிடமும் தன்னுடைய பெயரைக் கெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றான் என்பதையும் தெளிவாக புரிந்து கொண்டவள் இது இன்னும் எவ்வளவு தூரம் செல்லுமோ என்ற அச்சத்துடன்தான் காருக்குள் அமர்ந்திருந்தாள்.
சற்று நேரத்தில் பட பூஜை நடக்கும் இடத்திற்கு கார் வந்துவிட அவளுக்கோ பதற்றம் பற்றிக்கொண்டது.
அவனுடைய கார் அங்கே வந்து நின்றதும் ஒருவன் ஓடிவந்து அவனுடைய கார்க் கதவைத் திறக்க காருக்குள் இருந்து கம்பீரமாக இறங்கி நின்றான் அந்த பேரழகுக்கு சொந்தக்காரனான விநாயக்.
அவனை எத்தனை முறை பார்த்தாலும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்குக் கூட சலிக்காது.
அவனுடைய தேகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஆண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துவது போல கம்பீரமாகவே இருக்கும்.
காரில் இருந்து இறங்கியவன் முன்னேறிச் செல்லாது அப்படியே தேங்கி நிற்க செந்தூரிக்கோ அவன் தனக்காகத்தான் காத்திருக்கிறான் என்பது புரிந்தது.
வெளியே கால்களை எடுத்து வைக்கவே பாதம் கூசியது.
ஆனால் வேறு வழி இல்லையே சென்று தானே ஆக வேண்டும்.
இது அவள் எடுத்த முடிவல்லவா என மனதிற்குள் எண்ணியவள் மெல்ல கார்க் கதவைத் திறந்து வெளியே இறங்க இருவரையும் ஒன்றாக பார்த்த அனைவரும் தங்களுக்குள் கிசு கிசுக்கத் தொடங்கினர்.
ஏற்கனவே அவன் போட்ட ஃபோட்டோ வேறு வைரலாகி விட்டிருக்க அனைவரின் பார்வையும் கூர்மையாக செந்தூரியின் மீதுதான் குத்தியது.
“கம் பேபி…” என்றவன் கம்பீரமாக நிமிர்ந்து முன்னே நடக்கத் தொடங்கி விட அவனைப் போல நிமிர்ந்து நடக்கும் நிலையிலா அவள் இருந்தாள்..?
அவளுடைய தலையோ தானாக தரையை நோக்கி தாழ்ந்து விட்டிருந்தது.
நேராக அவளைப் பற்றி பேச யாருக்கும் அங்கே தைரியம் இருக்கவில்லை.
காரணம் யாராலும் அசைக்க முடியாத பணபலம் படைத்த புகழ் ஓங்கிய விநாயக் மகாதேவின் அருகில் அல்லவா அவள் நடந்து வருகின்றாள்.
அவளைப் பற்றி ஒரு வார்த்தை தவறாக அங்கே பேசினாலும் கூட பேசியவர்களுக்கான தண்டனை உடனடியாக கிடைத்து விடுமே.
அவன் மீது இருக்கும் பயம் அக்கணம் செந்தூரியின் மீதும் மற்றவர்களுக்கு வந்து விட அனைவரும் கண்டும் காணாதது போலத்தான் இருந்தனர். ஒருவனைத் தவிர.
ஆம் ஒன்றாக நடந்து வந்த இருவரையும் கண்டு அதிர்ந்து போய் நின்றான் கௌதமன்.
அவனால் அவனுடைய விழிகளை நம்ப முடியவில்லை.
சற்று நேரத்திற்கு முன்னர்தான் அவர்களுடைய புகைப்படத்தை அவன் முகப்புத்தகத்தில் பார்த்திருந்தான்.
அதுவும் வித் மை டார்லிங் என்ற கேப்ஷன் உடன் விநாயக் பதிவிட்டிருந்த புகைப்படத்தை பார்த்ததும் அவனுக்கோ பேரதிர்ச்சியாக இருந்தது.
ஒருவேளை செந்தூரி விநாயக்கிடம் மன்னிப்புக் கேட்டதால் இருவரும் நண்பர்களாக மாறி எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்குமோ என கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த அவனுடைய மனதுக்கு இப்போது இருவரும் ஒன்றாக நடந்து வருவதைக் கண்டதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
அதிலும் சிலர் இவங்கதான் புது ஹீரோயினாம் என அருகே நின்றவர்களிடம் கிசுகிசுக்கத் தொடங்க அவனுக்கோ அடுத்த பேரதிர்ச்சி.
ஆனால் சில நொடிகளிலேயே அந்தப் பேரதிர்ச்சி மகிழ்ச்சியாக மாறிப்போனது.
பின்னே தன்னுடைய தோழியும் தன்னுடன் படத்தில் நடிக்கப் போகின்றாளே இதைவிட அவனுக்கு வேறு என்ன சந்தோஷம் கிடைக்கப் போகின்றது..?
செந்தூரியுடன் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என எண்ணி இருந்தவனுக்கு முதல் படத்தில் செந்தூரியும் நடிக்க இருக்கின்றாள் என்று தெரிந்ததும் இதழ்கள் தானாக மகிழ்ச்சியில் விரிந்தன.
விநாயக்கோ பூஜை நடக்கும் இடத்திற்கு அருகில் வந்து நிற்க சக்கரவர்த்திதான் அவனோடு வழியச் சென்று பேசத் தொடங்கினார்.
அவர் கேட்ட கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் கூறத் தொடங்கியிருந்தான் விநாயக்.
அக்கணம் “ஹே நட்பு..” எனக் கிட்டத்தட்ட கூவி அழைத்து இருந்தான் கௌதமன்.
அந்தக் குரலில் சடாரென தன்னுடைய தலையை நிமிர்த்தி திரும்பிப் பார்த்தவளுக்கு அங்கே நின்ற கௌதமனைக் கண்டதும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
“ஹேய் கௌதம்… நீ எப்படி இங்க..?” என முகம் மலர்ச்சியில் விகசிக்க கேட்டாள் அவள்.
தனக்கு சமமான ஒருவனை அங்கே கண்டதும் அவளுடைய முகத்தில் இருந்த அத்தனை வாட்டமும் நொடியில் மறைந்தது.
இவ்வளவு நேரமும் விநாயக்கின் அருகே பதுமை போல நின்றிருந்தவள் வேகமாக விநாயக்கை விட்டு விலகி கௌதமனின் அருகே சென்று நின்று கொண்டாள்.
“ஏய் நான்தான் உன்கிட்ட ஆல்ரெடி சொன்னேனே.. எனக்கு படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு.. இந்த படத்துலதான் நீயும் ஹீரோயினா நடிக்கிறியா..? அப்படித்தான் இங்க சொல்லிக்கிறாங்க..” என ஆர்வமாக கௌதமன் கேட்க அவளோ ஆம் என தலையசைத்தாள்.
“வாவ் அடி பொலி… அப்போ நாம எல்லாரும் ஒன்னாதான் நடிக்கப் போறோமா..? சத்தியமா என்னால நம்பவே முடியல நட்பு..” என மகிழ்ச்சியில் கொண்டாடியவனை நெகிழ்ந்த புன்னகையோடு பார்த்தவள்,
“சத்தியமா நான் உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்ல.. உன்ன பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு கௌதம்..” என்றாள் அவள்.
அதன் பின்னர் தாழ்த்திய குரலில் இருவரும் மாறி மாறிப் பேசத் தொடங்கி விட சற்றே தள்ளி நின்ற விநாயக்கின் பார்வையோ தீப் பார்வையாக மாறி இருவரையும் எரிக்கத் தொடங்கியிருந்தது.
தன்னுடன் இருக்கும் நொடிகளில் ஒரு நொடி கூட சிந்தாத புன்னகையை கௌதமின் அருகே அள்ளி வழங்கிக் கொண்டிருந்த செந்தூரியின் மீது அளவு கடந்த கோபம் பொங்கிப் பெருக,
“பேப் கம்..” என அனைவருக்கும் முன்பும் அவளை சத்தமாக அழைத்து விட்டிருந்தான் விநாயக்.
அங்கே பேசிக் கொண்டிருந்த அனைவரின் சத்தமும் நொடியில் நின்று போக அந்த இடமே மயான அமைதியில் நிரம்பியது.
அவளோ அதிர்ந்து விழித்தவள் அவனை என்னவென்பது போல பார்க்க விநாயக்கிற்கோ இன்னும் சினம் கூடிப் போனது.
“இங்கே வா..” என அழுத்தமான குரலில் அழைத்தான் அவன்.
இதற்கு மேலும் செல்லாவிட்டால் ஏதேனும் செய்து விடுவான் என்ற அச்சத்தில் கௌதமனைப் பார்த்தவள் அவனிடம் மௌனமாக தலை அசைத்து விடை பெற்று விட்டு விநாயக்கின் அருகே செல்ல எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியது போல இருந்தது அவனுக்கு.
தான் அழைத்தும் உடனே வராது அவனிடம் மௌனமாக விடை பெற்று விட்டு வந்து செந்தூரியின் மீது சினம் துளிர்க்க அவளுடைய கரத்தை தன்னுடைய கரங்களுக்குள் சிறை பிடித்தவன் “ஸ்டே ஹியர்..” எனப் பற்களைக் கடித்தவாறு கூறியிருந்தான்.
கௌதமனின் பார்வையோ கோர்த்திருந்த இருவருடைய கரங்களின் மீது நிலைத்து பின் அதைப் பார்க்கப் பிடிக்காது மறுபுறம் திரும்பிக் கொண்டது.
அவளோ அவனுடைய கரத்திற்குள் சிக்கிக் கொண்டிருந்த தன்னுடைய கரத்தை விடுவிக்கப் போராட இன்னும் அவளுடைய கரத்தை அழுத்தமாக இறுக்கிப் பிடித்தான் விநாயக்.
அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய அழுத்தத்தில் கரம் வலிக்கத் தொடங்கியது.
விழிகள் இதோ கலங்கி விடுவேன் என்பதைப் போல இருக்க வலியைத் தாங்க முடியாது கையை உதறவும் முடியாது தவித்துப் போனவளாய் நின்றிருந்தாள் பேதை.
சற்று நேரத்திலேயே பூஜை ஆரம்பமாகி விட மீடியா அந்த இடத்தை நெருங்கியிருந்தது.
ஏகப்பட்ட புகைப்படங்களும் வீடியோவும் அங்கே எடுக்கப்பட அனைத்திலும் அவளுடைய கரத்தை விடாது இறுகப்பற்றி இருந்தான் விநாயக்.
அரை மணி நேரத்தில் பூஜை முடிவடைந்து விட ப்ரொடியூசரும் டைரக்டரும் அவனிடம் ஓரிரண்டு வார்த்தைகளைப் பேசத் தொடங்கினர்.
அப்போதுதான் அவளுடைய கையை விடுவித்தான் அவன்.
அவளுக்கு அவளுடைய கை கழன்று விழுந்ததைப் போலத்தான் இருந்தது.
உள்ளங்கை முழுவதும் அவ்வளவு வலி.
கையை விரிக்கவே முடியாது வலியில் தன்னுடைய கீழ் உதட்டைப் பற்களால் அழுத்திக் கடித்துக் கொண்டவளுக்கு அத்தனை பேரின் முன்பும் நிற்காது எங்காவது மறைவிடம் சென்று கண்ணீரைத் துடைத்து விட்டு தன்னை திடப்படுத்த வேண்டும் போல இருந்தது.
ஆனால் அதற்கும் அருகில் நிற்பவன் சம்மதிக்க மாட்டானே.
அதே நேரம் ப்ரொடியூசர் காந்தனோ “வெல்கம் டு அவர் சினி பீல்டு..” என்றவாறு செந்தூரியை நோக்கி தன்னுடைய கரத்தை நீட்ட, அவனைப் பார்த்து அதிர்ந்தவள் அவனுக்குக் கரத்தைக் கொடுக்காது கைகளை கூப்பி வணக்கத்தை தெரிவித்தாள்.
“இந்த அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் இப்போ உங்களுக்குப் பழகி இருக்கும்னு நினைக்கிறேன்..” என அவன் குத்தலாகக் கூற இவளுக்கோ கோபத்தில் முகம் சிவந்தது.
சற்று தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்த விநாயக்கை திரும்பிப் பார்த்தவள் காந்தனிடம் எதுவும் கூறாது விறுவிறுவென நடந்து சென்று விநாயக்கின் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
யாரையும் பார்க்கவே பிடிக்கவில்லை.
யாருடன் பேசவும் பிடிக்கவில்லை.
இப்படியே தனியாக இருந்தாலே நிம்மதியாக இருக்கும் போலத் தோன்ற சீட்டில் சாய்ந்து கண்களை மூடியவளுக்கு அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் வழியத் தொடங்கி இருந்தது.
‘ஷூட்டிங் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இனி தினமும் இவங்க எல்லாரையும் பார்க்கணுமா..? இன்னைக்கு ஒரு நாளே என்னால தாங்கிக்க முடியலையே.. தினம் தினம் எப்படி இவங்க மத்தியில என்னால வேலை பார்க்க முடியும்..? அவசரப்பட்டு படத்துல நடிக்கிறேன்னு சொல்லிட்டேனோ..?’ என தன்னையே நொந்து கொண்டிருந்தாள் அவள்.
அவள் காருக்குள் வந்து அமர்ந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் விநாயக்கும் வந்துவிட்டிருந்தான்.
“இடியட் உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் கிடையாதா..? நான் வரும் வரைக்கும் வெயிட் பண்ணனும்னு கூட தெரியாத அளவுக்கு நீ என்ன முட்டாளா..?” என அவன் அதட்டிப் பேச,
அழுகையை அடக்கிக் கொண்டிருந்தவளுக்கு விம்மி வெடித்து விட்டது அழுகை.
“உங்களோட பணக்கார மேனர்ஸ் எல்லாம் எனக்குத் தெரியாது.. இனி எனக்குத் தெரியவும் வேணாம்..” என சீறியவள் விழிகளைத் துடைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொள்ள,
“எவ்வளவு அனுபவிச்சாலும் உன்னோட வாய்க்கொழுப்பு மட்டும் உனக்கு இன்னும் குறையவே இல்லடி.. என்கிட்ட எவனும் இப்படி எதிர்த்து பேசுறது கிடையாது.. இதுக்கு மேல என்ன எதிர்த்து பேசினா நடக்கிறதே வேற.. நான் என்ன சொல்றேனோ அத மட்டும்தான் நீ கேட்கணும்… நான் என்ன சொல்றேனோ அதை மட்டும்தான் நீ பண்ணனும்.. உன்ன 70 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கேன்.. கொடுத்த பணத்துக்கு நாய் மாதிரி விசுவாசமா இருந்துக்கோ… என்னையே எதிர்த்து பேசுற வேலை வெச்சுக்காதே..” என அவன் கோபத்தில் வார்த்தைகளை எரி கற்களாகத் துப்ப, துடித்துப் போனவளாய் தனக்குள் சுருங்கிக் கொண்டாள் செந்தூரி.
💜🔥💜
So sad