” ஹலோ மிஸ் மேனகா… என்ன அப்பப்ப ட்ரீமுக்கு போயிடுறீங்க?” என்று அவளுக்கு முன்பு சொடக்கு போட்டான் ஜீவாத்மன்.
” சார்…” என்று சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள் மேனகா.
“ஆர் யூ ஓகே…” என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான்.
” ஐயம் ஓகே.” என்றவளுக்கு அவனது பார்வை உள்ளுக்குள் குளிரூட்டியது.
” ஓ… ஃபைன் மேனகா. இந்த யானை ஏன் திரும்பத் திரும்ப இதே ஊருக்கு வந்துட்டு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க? ஒரு வேளை காட்டுல இன்னும் இன்டீரியரா விட்டுட்டு வரணுமா?”
” அது ரிஸ்க் சார்.” என்று ஆதிரன் வாயைத் திறந்தான்.
அவனை அழுத்தமாக பார்க்க, அந்த பார்வையை புரிந்து கொண்ட ஆதிரன் அதற்குப் பிறகு வாயை திறக்கவில்லை.
” ம்… நீங்க சொல்லுங்க மேனகா…”என்று அவளிடம் வினவ.
ஆழ்ந்த பெருமூச்சு விட்ட மேனகாவோ அவனை நிமிர்ந்து நேராக பார்த்துக் கொண்டே, ” எவ்வளவு உள்ள போய் விட்டாலும் யானை இங்கு தான் திரும்பி வரும்.”
” வேட்டை தடுப்பு காவலர்களை நிறுத்தி வைக்கலாமா?” என்ற ஜீவாத்மனை, புரியாத பார்வை பார்த்தாள்.
” அந்த அளவுக்கு காவலர்கள் நம்ம கிட்ட இல்லை சார். இருந்தாலும் பயன்படாது.” என்றாள் மேனகா.
” ஒருவேளை யானையோட வலசை பாதையா? இல்லை யானையோட பாதையில் ஏதும் தடுப்பு இருக்கிறதா? அப்படி இருந்தாலும் கூட்டமாக தான யானை வரும். இந்த யானை மட்டும் ஏன் தனியா வருது” என்று ஜீவாத்மன் வினவ.
“அது வந்து…” என்று இழுத்த மேனகா, அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், வேறு பதில் சொன்னாள். “இந்த காட்டுல இருந்தா அது திரும்பத் திரும்ப வந்துட்ட தான் இருக்கும். வேற ஏதாவது வனப்பகுதிக்கு அனுப்பினால் தான் திரும்ப வராது. அதுவும் மயக்க ஊசி போட்டு தான் அனுப்ப முடியும். கும்கி யானைக்கு மசியாது.”
” புரியலை மேனகா. என்ன சொல்ல வர தெளிவா சொல்லு?” கும்கி யானைக்கு அடங்காதுன்னு எப்படி சொல்ற? உனக்குத் தெரியுமா?” என்று ஏதோ ஒரு ஞாபகத்தில் ஒருமையில் அழைத்தான் ஜீவாத்மன்.
அவனைப் பார்த்து முறைத்தாள் மேனகா.
மேனகாவிடம் இருந்து பதில் வரவில்லை என்றதும் அவளைப் பார்க்க…
அவளோ கோபமாக பார்த்தாள்.
அவளது கோபம் புரிந்தது. ஆனால் எதுக்கு முறைக்கிறாள் என்று புரியாமல் அவன் யோசித்துக் கொண்டிருக்க…
அருகில் இருந்த ஆதிரன் அவனது காதில் ஏதோ முனுமுனுத்தான்.
” ஓ…”என்ற ஜீவாத்மனோ,” சாரி மேனகா. ஏதோ யோசனையில் ஒருமையில் பேசிட்டேன். இப்ப சொல்லுங்க.” என்று அவளைப் பார்த்தான்.
மேனகாவோ தயங்கியபடியே அவனைப் பார்த்துக் கொண்டே,” மூணு மாசத்துக்கு முன்னாடி யானையோட குட்டி இறந்திடுச்சு. அதை தேடி தான் வருது.”என்றாள்.
“ஓ… காட்…” என்று ஜீவாத்மன் அதிர.
” எப்படி என்ன ஆச்சு?” என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஆதிரனும் பதறினான்.
மேனகாவோ இருவரையும் கவனிக்காமல் எங்கோ பார்வையை வைத்திருந்தாள். அவளது கண்களோ வேதனையை சுமந்து கொண்டிருந்தது.
அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட ஜீவாத்மன்,” மிஸ் மேனகா… என்ன நடந்தது?” என்று வினவ.
அவளது விழிகளோ கடந்த காலத்தில் பயணித்தது.
‘ “ஹேய் க்யூட்டி… பாவமில்லையா உங்க மம்மி. சமத்தா உங்க மம்மி கூட போங்க.” என்று கொஞ்சிக் கொண்டிருந்தாள் மேனகா.
” ஹேய் மேகி… நம்ம குழந்தையை கொஞ்ச வேண்டிய நேரத்துல இதை கொஞ்சிட்டு இருக்க?” என்று முணுமுணுத்தான்.
” என்ன அத்தான் சொல்றீங்க?” என்று கோபமாக பார்க்க முயன்றவளின் முகமோ வெட்கத்தால் சிவந்தது.
” இல்லை மேகி. இது என்ன குழந்தையா? இப்படி கொஞ்சிட்டு இருக்கேன்னு சொல்ல வந்தேன்.” என்று மேனகாவின் சிவந்த முகத்தை ரசித்துக் கொண்டே கூறினான்.
” அத்தான்… குட்டி யானை பண்ற சேட்டையை பார்த்தா குழந்தைங்க கூட தோத்துடும். அதுவும் இந்த க்யூட்டி ரொம்ப பண்ணுது. அவங்க அம்மாவை விட்டு வழி தவறி வந்துடுச்சு. நாங்க கவனிச்சு, சாப்பாடு கொடுத்து காட்டுல விட்டாலும் திரும்பத் திரும்ப வந்துட்டே இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த க்யூட்டியோட அம்மா தேடிட்டு வந்திடும்.”
” சரி மேகி… நீ கிளம்பு. நான் பார்த்துக்கிறேன்.”
” இல்லை அத்தான். க்யூடடியோட அம்மா வர்ற வரைக்கும் நான் க்யூட்டியோட விளையாடுறேன்.”
” மேகி… இது கூட நீ இப்படி விளையாடிட்டு இருந்தா எப்படி அது
உன்னை விட்டு காட்டுக்குள்ள போகும். இந்த யானை குட்டி இங்க இருந்தா அதுக்கு தான் ஆபத்து. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ மேகி.”
” அப்படி என்ன ஆபத்து வந்துட போகுது?”
” காடு தான் அதுக்கு பாதுகாப்பு. டெய்லி நியூஸ் பார்க்குறியா? இல்லையா? ஏதாவது ரயில் மோதி இறக்குறதும், பஸ், வேன் மோதி இறக்குறதும் நடந்துக்கிட்டு தானே இருக்கு. நாம ஒரு யானையை பாதுக்காத்தா, அது காட்டை பாதுக்காக்கும்.”
” ம் தெரியும் அத்தான்.” என்றவள், பிரிய மனமில்லாமல் அந்த யானைக் குட்டியை தடவிக் கொடுத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள். அது தான் கடைசியாக அந்த குட்டி யானையை உயிரோட பார்த்தது.
அடுத்து அவள் பார்த்த போது, அவளது பிரியமான க்யூட்டி இறந்து கிடந்தது.
காதில் காயம் ஏற்பட்டிருக்க. அதிகமான ரத்தப்போக்கு காரணமாக குட்டி யானை உயிரிழந்திருந்தது.
அவள் அழுத அழுகையில், கூட வந்திருந்த ரிஷிவர்மனும் தவித்து போனான்.
” அழாத மேகி.”
“எப்படி அழாமல் இருக்கிறது அத்தான். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாதவங்க. இந்த குட்டி யானை என்ன தொந்தரவு பண்ண போகுதுன்னு இப்படி நெருப்பை வச்சு தாக்கியிருக்காங்க. நான் மட்டும் இங்கு இருந்திருந்தா இப்படி ஆக விட்டுருக்க மாட்டேன். எப்படியும் கவனித்து காப்பாத்திருப்பேன். இப்பக் கூட என்ன தேடி தான் இங்கு வந்து இருக்கும். நான் ஊருக்கு போயிருக்க கூடாது. நீங்க போக சொன்னதால தானே போனேன்.” என்று அழ.
” அம்மா உன்னை பாக்கணும்னு சொன்னாங்க டா. அதான்…”
” நீங்க ரவுண்ட்ஸ் வந்து இருக்கணும் அத்தான். வந்துருந்தா க்யூட்டியை காப்பாத்திருக்கலாம்.” என்று புலம்ப.
ரிஷிவர்மனோ வாயடைத்து போய் நின்றான் .’அதை எல்லாம் நினைத்து பார்த்த மேனகா அமைதியாக இருக்க.
ஜீவாத்மனோ, அவளுக்கு முன்பு கை சொடக்கிட்டு, ” ஹலோ மேனகா… என்ன நடந்ததுன்னு சொல்ல போறீங்களா? இல்லையா?” என்று கடினமான குரலில் வினவினான்.
திடுக்கிட்ட மேனகாவோ, ” குட்டியானையை யாரோ தாக்கியிருக்காங்க. காதில் காயம். இரத்தம் அதிகமாக வெளியேறி,அதை கவனிக்காமல் இருந்ததுல இறந்திடுச்சு.”
” ஓ… அப்போ இந்த ஏரியாவுக்கு இல்லீகலா யாரோ வந்துட்டு, போயிட்டு இருக்காங்க… ரைட்…” என்று கண்கள் இடுங்க அவளைப் பார்த்துக் கொண்டே கூற.
” ஆமாம்…” என்பது போல் தலையாட்டினாள்.
” ரைட்… அப்படி வர்ற சமூகவிரோதிங்க இங்கே உள்ள அதிகாரிங்களுக்கு தெரிஞ்சு வந்தாங்களா? இல்லை தெரியாமல் வந்தாங்களா?”
” தெரியலை சார்…” என்றாள் தயக்கமாக.
“தெரியலையா? சீக்கிரம் தெரிய வச்சுடுறேன். அது மட்டுமில்லை… அந்த பழங்குடி பொண்ணு சாவுக்கும் நீதி வாங்கி கொடுப்பேன். யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி, அவர்களுக்கு தண்டனை உண்டு. அவங்க இந்த உலகத்தில் இல்லை என்றாலும் சரி குற்றவாளியாக அடையாளப்படுத்தப்படுவார். அப்புறம் எத்தனை நாளைக்குத் தான் தப்பிக்கிறீங்கன்னு பார்க்குறேன்.” என்றவனை ஆழ்ந்து பார்த்தாள் மேனகா.
அவளது பார்வையின் அர்த்தம் புரியாமல் தனக்குள் குழம்பி போனான் ஜீவாத்மன்.
அவனது யோசனையை தடை செய்வது போல்,” சார்… போகலாமா…” என்று வந்து நின்றான் முகுந்தன்.
” ம் போகலாம்…” என்றவன், அருகிலிருந்த ஆதிரனையும், மேனகாவையும் ஒரு பார்வை பார்த்து,” நீங்க ரெண்டு பேரும் என் கூட வாங்க… முக்கியமான விஷயத்தை பத்தி டிஸ்கஸ் பண்ணனும்.” என்றான்.
” நாளைக்கு பழங்குடி மக்களுக்கு விலங்குகள் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு விழிப்புணர்வு ஏற்படுத்தணும். அதுக்காக நாளைக்கு அவங்க கூட ஒரு மீட்டிங். அதுக்கு கட்டாயம் நீங்க வரணும் மேனகா.”
“என்ன சார் சொல்றீங்க?” என்று ஷாக்காக வினவினாள் மேனகா.
“எதுக்கு இவ்வளவு ஷாக்? அவங்களை பார்க்க பயமா இருக்கா?”
” நான் ஏன் பயப்பட போறேன்?”
“ஓஹோ… அப்புறம் ஏன் இவ்வளவு அதிர்ச்சி உங்க முகத்துல?” நக்கலாக அவளைப் பார்த்து சிரித்தான்.
” அவங்களுக்கு தெரியாத பாதுகாப்பு முறைமைகள் எதுவும் கிடையாது சார்.”
” புலி துரத்தும் போது மரத்து மேல ஏறினா அது ஒன்னும் பண்ணாது. இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா தப்பிச்சிருக்கலாம். இந்த மாதிரி இன்னும் சில விலங்குகள் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு சொல்லணும்னு நினைக்கிறேன். இப்போ இதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?”
” சார் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. நாளைக்கு உங்களைப் பார்த்து அவங்க சிரிக்க கூடாதுன்னு தான் சொல்றேன். அவங்க கிட்ட சொல்றதுக்கு பதிலா, நம்ம ஸ்டாப்ஸ் கிட்ட சொன்னா உபயோகமாக இருக்கும்.”
” உங்க கிட்ட நான் ஐடியா எதுவும் கேட்கலை. நாளைக்கு என் கூட வர்றீங்க. தட்ஸ் இட்.” என்றவன் அவளை கேலியாக பார்த்தான்.
அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட.
“எத்தனை மணிக்கு போகணும்னு சொல்லுங்க சார். நான் ரெடியா இருக்கிறேன்.” என்று விட்டு சென்றாள் மேனகா.
ஆதிரன் அமைதியாக இருக்க.
” என்ன ஆதி. நீ ஒன்னும் சொல்லை?”
” நீ எது சொன்னாலும் கரெக்டா தான் இருக்கும்ணா. எனக்குக் கூட அந்த யானை ஏன் திரும்பத் திரும்ப வருதுன்னு யோசிக்க தோணலை. பட் நீ கரெக்டா கண்டுபிடிச்சிட்டண்ணா. யூவார் ஆல்வேய்ஸ் கரெக்ட்.” என்றவனை அணைத்தான் ஜீவாத்மன்.
இந்த முறை அவனது அண்ணனின் எதிர்பார்ப்பு தரமட்டமாக போகிறது என்பதை அவன் அறியவில்லை.