இன்னிசை-9

4
(2)

இன்னிசை -9

” என்ன ஆஃபிஸர் இந்த பக்கம் காத்து வீசுது. என்ன உங்க தோல்வியை ஒத்துக்கறதுக்காக வந்து இருக்கீங்களா? இல்ல அதிசயத்திலும், அதிசயமாக தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டீங்களா?” என்று அளவுக்கு அதிகமாக வியந்து வரவேற்றார் பொன்னம்மாள்.

” நீங்க சொன்னது கூடிய சீக்கிரம் நடக்கும் மா. இப்ப வந்தது வேற ஒரு முக்கியமான விஷயம்.”என்ற ஜீவாத்மன் திரும்பிப் பார்த்தான். இன்னும் மேனகாவும், ஆதிரனும் அங்கு வந்திருக்கவில்லை.

‘ ப்ச்… ஆடி அசைஞ்சு வந்துட்டுருக்காங்க போல. பயம்… இருக்கட்டும்… எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தான்.’ என்று எண்ணியவன் தலையை உலுக்கிக் கொண்டு எதிரே இருந்த பொன்னாம்மாளிடம் மீண்டும் பேச்சுக் கொடுத்தான்.

” இங்கே பாருங்க மா. விலங்குகளோட தான் நாம வாழணும். அதுக்கு நாம முன் ஜாக்கிரதையா இருந்தா தப்பில்லை. அதான் விலங்குகள் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு உங்களுக்கு சொல்லலாம்னு வந்திருக்கேன்.” என்றான் ஜீவாத்மன்.

” தப்பு செஞ்சவுகள ஒன்னும் பண்ண முடியலையா? பரவால்ல விடுங்க. நான் உங்களை குத்தம் சொல்லல. அதுக்காக தேவையில்லாமல் உளறிக்கிட்டு இருக்க வேணாம்.” என்று நல்லத்தனமாகவோ கூறினார் பொன்னாம்மாள்.

” நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியலை. இப்போ சில நாளா ஒரு யானை வேற சுத்திட்டு இருக்கு. அது எப்ப வேணும்னாலும் இந்த பக்கம் வரலாம். அதுக் கிட்ட இருந்து உங்களை காப்பாத்தணும்னு நினைக்கிறேன்.அதுபோல ஒவ்வொரு விலங்குகள் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு விழிப்புணர்வு ஏற்படுத்த தான் வந்திருக்கோம்.”

” எங்களை கேலி செய்றீகளா தம்பி. உங்களை மாதிரி மனுஷங்களுக்கு வேணும்னா நாங்க சொல்ல வர்றது விளங்காமல் இருக்கலாம். ஆனால் நீங்க சொல்றீங்களே அந்த யானை அது நாங்க சொல்றதை கேட்கும். இந்த காட்டோட வளர்ச்சிக்கு எங்களைப் போல உதவுற ஜீவன். எங்க குலசாமி அது. எங்களை ஒன்னும் பண்ணாது. அதோ நிக்குதே எங்க வீட்டு புள்ளைங்க அதுங்களை கேட்டா கூட சொல்லும். எப்படி எந்த விலங்குகள் கிட்ட நடந்துக்கணும்னு அதுங்களுக்கு நல்லாவே தெரியும். ” என்றவர்‍, அங்கு நின்றிருந்த சிறுவனை அழைத்தார்.

” டேய் முருகா… சிங்கம் துரத்தினா என்ன பண்ணனும்.” என்று வினவ.

” நிமிர்ந்து தைரியமா பார்த்தாலே போதும். நம்ம உயரத்தைப் பார்த்தே மிரண்டுடும்.”

” யானை துரத்துனா?”

” தாழ்வான பகுதியை நோக்கி ஓடணும் பாட்டி.”

” புலி துரத்துனா?” என்று வினவியரின் குரலோ நடுங்கியது.

” மரத்துல ஏறி தப்பிக்கலாம்.” என்ற சிறுவனது குரலிலும் அழுகை வந்தது.

” எங்க புள்ள சொன்னதை கேட்டீங்களா? இதெல்லாம் எங்க ரத்தத்துல ஊறினது.

யாரும் சொல்லி தரணும்னு அவசியமில்லை.”

” ஓ… அப்போ உங்க மருமக எப்படி புலி கிட்ட மாட்டிக்கிட்டாங்க?” என்று குழப்பத்துடன் இடையிட்டான் ஆதிரன்.

“அது வந்து…” என்று பொன்னம்மாள் தயங்க.

” சொல்லுங்கம்மா…”என்று ஜீவாத்மனும் வற்புறுத்தினான்‌.

” அது அவளோட போதாத காலம். அதுக்காக உங்க தப்பை மறைக்காதீங்க. நாங்க புலி நடமாட்டம் இருக்குன்னு சொல்லியும் நீங்க நடவடிக்கை எடுக்கல. நீங்க நினைச்சிருந்தா அந்த புலியை புடிச்சுட்டு போயிருந்திருக்கலாம். என் மருமவளும், இந்த புள்ளைங்களுக்கு ஆளா உசுரோட இருந்திருப்பா.” என்று பொன்னாம்மாள் புலம்ப.

“இங்க பாருங்க அம்மா. அது அவ்ளோ ஈஸியான வேலை கிடையாது. இருந்தாலும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கோம்.” என்ற ஜீவாத்மன் ஏதோ தோன்ற சுற்றும் முற்றும் பார்த்தான்.

அருகே மேனகா இல்லாததை கவனித்தவனது புருவ முடிச்சிட அருகிலிருந்த ஆதிரனிடம்,” எங்கே மேனகா?” என்று வினவினான்.

” என் கூட தான் வந்தாங்க.” என்ற ஆதிரனும் பின்னாடி திரும்பி பார்த்தான்.

 மேனகா என்ற பெயரை கேட்டதும், “யாரு வந்ததா சொன்னீங்க? மேனகாவா? அந்த பொண்ணா?” என்று பரபரப்பாக பொன்னாம்மாள் வினவ.

” ஆமாம்.” என்ற ஜீவாத்மனோ அவரை குழப்பத்துடன் பார்த்தான்.

 அங்கிருந்த இரு சிறுவர்களும் வேகமாக ஓட… பொன்னாம்மாளும் தன் வயதுக்கு மீறி வேகமாக ஓடினார்.

“ஓ… காட்… மேனகாவை தேடி தான் போறாங்களோ… ஒரு வேளை அவளை ஏதாவது பண்ணிட போறாங்க.” என்று பதறிய ஆதிரனும் அவர்கள் பின்னே சென்றான்.

 ஜீவாத்மனுக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், நிதானமாக இருப்பது போல் சமாளித்துக் கொண்டு அவர்களை பின்பற்றி சென்றான்.

அங்கு கண்ட காட்சியோ அவர்களது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

ஒரு மரத்தின் அடியில் மேனகா கதறி அழுதுக் கொண்டிருக்க… அவளை அணைத்து சமாதானம் செய்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள்.

 அவளருகே இருபுறமும் நின்றிருந்த சிறுவர்களும் கண் கலங்க அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘ இங்கே என்னடா நடக்குது.’ என்று எண்ணிய ஆதிரனோ விழிகள் தெறித்திட அவர்களை வெறித்துப் பார்த்தான். அவனது தோளை தட்டிய ஜீவாத்மன்,” என்ன?” என்பது போல் பார்க்க.

ஆதிரனோ ” ஒன்னும் புரியவில்லை.” என்று உதட்டை பிதுக்கினான்.

” வன மோகினி… எதுக்கு புள்ள இப்படி அழுதிட்டு இருக்க? நீ போட்ருக்க உடைக்கும், அழுகைக்கும் எங்கேயாவது பொருத்தம் இருக்கா ? உன்ன மாதிரி என் பேர பிள்ளைகளுக்கும் யூனிபார்ம் போட்டு பார்க்கணும்னு ஆசைப்பட்டு, அவங்க கிட்டயும் பெரிய ஆஃபிஸராகணும்னு சொல்லிட்டு வச்சுருக்கேன். அதெல்லாம் தப்புன்னு ஆக்கிடுவே போல இருக்கு. நீ இப்படி சின்ன பிள்ளை மாட்டம் கண்ணை கசக்கிட்டு இருந்தீன்னா இங்குட்டு வராதா…” என்று அதட்டினார் பொன்னாம்மாள்.

” அது வந்து கோல்டு… நான் வேலை விஷயமாக வந்தேன்.” என்று தயங்கித் தயங்கி கூறினாள்.

” அதானா சேதி.சரி வா… முடிஞ்சது முடிஞ்சிருச்சு. அதையே நினைச்சுட்டு இருந்தா ஆகற வேலையா? இனி மறுபடியும் அந்த தப்பு நடக்கக் கூடாதுன்னு தான் நான் போராடுறேன். முதல்ல கண்ணைத் துடை. உனக்கு புடிச்ச கீரை அடை செஞ்சிருக்கேன். வந்து ஒழுங்கா சாப்பிடு. உனக்கு குடுத்து விட தான் எடுத்து வச்சேன். அது ஆறி இருக்கும். வேற சூடா சுட்டு தர்றேன்.” என்றவர், சுடச் சுட அவளுக்கு அடை சுட்டு தர… மேனகாவோ அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

இரு அப்பாவி ஜீவன்களைப் பற்றி அக்கறை இல்லாமல் அவர்கள் இருக்க.

 அண்ணனும், தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு முழித்துக் கொண்டிருந்தனர். ஏதோ கருணை வந்தது போல் மேனகா அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, ” கோல்டு… அவங்க என்னோட பெரிய அதிகாரிங்க.” என.

” இருந்துட்டு போகட்டும்.” என்று அலட்சியமாக பொன்னாம்மாள் கூறினார்.

” கோல்டு… நான் என்ன சொல்ல வர்றேன்னா…” என்ற மேனகாவை முழுதாக சொல்ல விடாமல் அவர் பதிலளித்தார்.

” நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். உன்னை விட அப்படி ஒன்னும் அவங்க பெரிய ஆளு கிடையாது. நீயாவது தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை கிடைக்காதுன்னு சொன்ன. ஆனால் இவக தண்டனை எப்படியும் வாங்கித் தந்துடுவேன்னு சொல்லி, சொல்லியே, என்னை ஏமாத்துனாங்க.”

” ப்ச்… கோல்டு… அது இருக்கட்டும். முதல்ல அவங்களை சாப்பிட சொல்லுங்க.” என்று அவர்கள் இருவரையும் ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே கூறினாள் மேனகா.

” டேய் முருகா… அக்காவுக்கு கொடுக்க சொன்ன அடையை எங்க வச்சுருக்க. அதை அவுகளுக்கு எடுத்து கொடு.” என்ற பொன்னாம்மாளோ மேனகாவை கவனிப்பதிலே குறியாக இருந்தார்.

“எங்களுக்கு ஒன்னும் வேண்டாம்.” என்று ஜீவாத்மன் கூறிக் கொண்டிருக்கும் போதே, ஆதிரன் வாங்கிக் கொள்ள.

ஜீவாத்மனோ, ஆதிரனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

‘ சாப்பாடா? அண்ணனா?’ என்று இரண்டையும் மாறி, மாறி பார்த்தவன், பிறகு தோளைக் குலுக்கிக் கொண்டு,’ முதல்ல சாப்பாட்டை கவனிப்போம். அப்புறம் அண்ணனைப் பார்த்துக்கலாம்.’ என்று தனக்குள் முனுமுனுத்துக் கொண்டு சாப்பிட்டான்.

“உண்மையிலே உங்க அடை வேற லெவல்.சூப்பரா இருக்குமா.” என்று மனதார கூறினான் ஆதிரன்.

” கோல்டோட கை வண்ணம் அப்படி. எது செய்தாலும் சூப்பரா தான் இருக்கும்.” என்று உணவருந்தி முடித்த மேனகா வாயை திறந்தாள்.

” கோல்டுனா? ஓ… அவங்க பேரா?” என்றவன் நகைக்க.

” ஆமாம்…” என்றவள், சிறுவர்களிடமும், பொன்னாம்மாவிடமும் விடை பெற்றாள்.

“நேரம் கிடைக்கும் போதெல்லாம் வா மோகினி.” என்றார் பொன்னம்மாள்.

கலங்கிய கண்களை சமாளித்து,” அதுக்கென்ன கோல்டு வந்துட்டா போச்சு.”என்று கூறியவள், ஆதிரனுடன் கிளம்பினாள்.

 கலகலவென பொன்னம்மாளுடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவளது முகத்தில் அவ்வப்போது கலக்கம் வந்து போனது.

ஒருவாறு அவளது கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்து, சுற்றிலும் பார்வையிட்டாள்.

திடீரென்று ஏதோ தோன்ற,” எங்கே ஜீவாத்மன் சாரை காணும்?” என்று மேனகா வினவ.

” ஓ… இப்பதான் உனக்கு சாரோட ஞாபகம் வருதாக்கும். அவர் எப்பவோ போயிட்டாரு. ” என்றான் ஆதிரன்.

” ஓ… இப்பவாவது என் மேல உள்ள சந்தேகம் தீந்துச்சா?” என்று வினவ.

” அப்படியெல்லாம் உன் மேல சந்தேகம் இல்லை மேனகா.” என்று ஆதிரன் கூறிக் கொண்டிருக்கும் போது, “இப்போ தான் இன்னும் சந்தேகம் அதிகமா இருக்கு.” என்று ஒரு மரத்தின் மேல் சாய்ந்து இருந்த ஜீவாத்மன் கூறினான்.

திடீரென்று கேட்ட குரலில் அதிர்ந்த மேனகா, அவனை முறைத்துப் பார்த்தாள்.

” எதுக்கு முறைக்கிறீங்க மிஸ் மேனகா. நான் உண்மையாகத்தான் சொல்றேன். முதல்ல அவங்க கிட்ட என்ன சொல்லி இருக்கீங்க? தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்காதுன்னு தானே. சோ அது தெரிஞ்சு தான் தப்பு செஞ்சீங்களா? புலி நடமாட்டம் இருக்குன்னு கம்ப்ளையின்ட் பண்ணியும் அலட்சியமாக நடந்துருக்கீங்க? என்னத்த இவங்க செஞ்சுட போறாங்க? மிஞ்சி, மிஞ்சி போனா சஸ்பெண்ட் பண்ணுவாங்க. அப்படி இல்லையா டிரான்ஸ்பர் பண்ணுவாங்க. அவ்வளவு தானே நினைச்சிட்டீங்க. நீங்க நினைச்சு இருந்தா, உங்க ரிலேடிவ் தானே ஃபாரஸ்ட் ரேஞ்சரா இருந்தாரு. அவர் மூலமா ஆக்ஷன் எடுத்திருக்கலாம்.

அது மட்டுமா ரெண்டு பேரும் அடிக்கடி இங்கே வந்திருக்கீங்க? எதுக்கு வந்தீங்க? இங்கே உங்களுக்கு என்ன வேலை?” என்று ஜீவாத்மன் அவளைப் பார்த்து வினவ.

” சார்… மேனகா மேல தப்பு இருந்தா அந்த பொன்னாம்மாள் எப்படி ஆதரவா இருந்திருப்பாங்க?” என்று மேனகாவிற்காக வக்காலத்து வாங்கினான் ஆதிரன்.

” அவங்களும் உன்னை போல ஏமாந்து இருக்கலாம். நான் ஒன்னும் சும்மா சந்தேகப்படலை. எதுக்கு மேனகா இங்கே வர்றதுக்கு தயங்கணும். அதுவுமில்லாமல் அந்த மரத்தடியில் எதுக்கு உட்கார்ந்து அழணும். தப்பு செய்யலைன்னா எதுக்கு கலங்கணும்?” என்று ஜீவாத்மன் ஆணித்தரமாக அவளைப் பார்த்துக் கொண்டே வினவ.

 அவளோ ஆணி அடித்தார் போல் நின்றாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!