சொர்க்கம் - 31
அனைவருடைய ஏளனமான பார்வையும் அவளைத்தான் மொய்த்துக் கொண்டிருந்தது.
கௌதமனின் அதிர்ச்சியான பார்வையை சந்தித்ததன் விளைவால் அவனையும் நெருங்காது ஓரமாக விலகி அமர்ந்திருந்தாள் செந்தூரி.
மீண்டும் இடையில் விடப்பட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியது.
இங்கிருந்து சீக்கிரமாக கிளம்பினால் நன்றாக இருக்கும் என எண்ணியது அவளுடைய காயம் கொண்ட மனம்.
ஆனால் அது இப்போது சாத்தியமில்லையே.
விநாயக் நடித்து முடிக்கும் வரை அவளும் அங்கே காத்திருக்கத்தான் வேண்டும்.
மெல்ல தயங்கியவாறு கௌதமனின் முகத்தைப் பார்த்தாள். அவனுடைய முகம் இறுகிப்போய் இருந்தது.
ஒரு விதமான வெறுப்போடு அவனுடைய பார்வை அக்கணம் அவள் மீது படிய உடைந்து போனாள் செந்தூரி.
நான் எந்த தவறும் செய்யவில்லை என அலற வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
அவளுக்கென கிடைத்த ஒரே ஒரு நல்ல நட்பு அவன் மட்டும் தானே. இந்த சம்பவத்தின் பின்னர் அவனும் தன்னை வெறுத்து விடுவானோ எனப் பயந்து போனாள் அவள்.
அருகே சென்று நடந்த உண்மையைக் கூறிவிடலாம் ஆனால் தான் சென்று பேசினால் பேசுவானா..?
இல்லை என்னையும் தவறான பெண்ணாக எண்ணி விடுவானோ..?
கிட்டத்தட்ட அங்கே நின்ற அத்தனை பேருக்கும் தன்னை பற்றி அபிப்பிராயம் தவறாகவே தோன்றியிருக்கும்.
கலங்கிய விழிகளை துடைத்துவிட்டு சற்று நேரம் தன்னுடைய மனதை அமைதிப் படுத்த தனக்குள் போராடிக் கொண்டிருந்தாள் அந்தப் பேதை.
‘ஏதோ பெரிய உத்தமி மாதிரி அன்னைக்கு நம்ம சார இவதானே அடிச்சா.. இப்போ அவளே சார்கூட தான் இருக்காளாமே.. இந்த பொண்ணுங்க எல்லாம் பணத்தை பார்க்கும் வரைக்கும்தான் உத்தமிங்க.. பணத்தைப் பார்த்தா யார் கூட வேணும்னாலும் படுக்கைக்கு போயிருவாளுங்க..” என அவளைத் தாண்டி செல்லும்போது அங்கே இருந்த ஒருவன் இவ்வாறு கூறிக் கொண்டு செல்ல துடித்துப் போனாள் அவள்.
சாதித்து விட்டான்.
அவன் நினைத்ததை சாதித்து விட்டான்.
அன்று தான் செய்த தவறுக்கு மிகக் கொடூரமான பதிலடி கொடுத்துவிட்டான்.
சட்டென அந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டாள் செந்தூரி.
அவளால் அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை.
அவள் எழுந்த கணம் சக்கரவர்த்தியும் “பேக்கப்..” என்று கூற அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என நினைத்தவாறு எழுந்து நடக்கத் தொடங்கியவளை சக்கரவர்த்தியின் குரல் நிறுத்தியது.
“நாளைக்கு நீங்க இங்க சீக்கிரமே வந்துருங்க.. லைலா உங்க கூடவே இருப்பா.. சீன்ஸ் எல்லாத்தையும் பிராக்டீஸ் பண்ணிப் பார்த்துக்கோம்மா..”
“ஓகே சார்..” என்றவளின் அருகே வந்த விநாயக்கோ தன்னுடைய கூலிங் கிளாஸை எடுத்து கண்களில் அணிவித்தவன் செந்தூரியின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.
அவனுடைய கையை அக்கணமே உதறிவிட்டு அவனுடைய கன்னத்தில் பளார் என்று அறைய வேண்டும் என்ற அவா பிறந்தது.
ஆனால் முதல் இருந்த செந்தூரி போல இப்போது இருந்த செந்துரியால் எதையும் நினைத்ததும் செய்து முடித்து விட முடியாதே.
அவளுடைய கரங்கள் அங்கே கண்களுக்கு தெரியாத இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கின்றன.
எதுவும் செய்யாது அவனோடு இணைந்து நடக்க ஆரம்பித்தாள் அவள்.
காருக்குள் ஏறி அமர்ந்த அடுத்த நொடியே காலை சீட்டில் மடித்து வைத்தவள் தன்னுடைய முழங்கால்களில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை.
மிதமான வேகத்தில் கார் அவனுடைய வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கியது.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் பின்பு தானே தன்னுடைய அமைதியை உடைத்தாள்.
“நான் எங்க வீட்டுக்குப் போகணும்..”
சட்டென காரின் பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தியவன் அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தான்.
“ப்ளீஸ் பத்து நிமிஷம்.. எங்க அப்பாவ நான் பாக்கணும்.. ரெண்டு நாளா நான் அவரைப் பார்க்கவே இல்லை.. அவர் என்ன தேடுவாரு..”
“ஓஹ்….?”
“இவ்ளோ நாளா நான்தான் எங்க குடும்பத்தைப் பார்த்துகிட்டு இருந்தேன்.. இப்போ நானும் அவங்கள அப்படியே விட்டுட்டு வந்துட்டேன்.. அவங்க என்ன பண்றாங்க.. எப்படி இருக்காங்கன்னு கூட எனக்குத் தெரியல.. ப்ளீஸ் என்ன இங்கேயே இறக்கி விட்டீங்கன்னா கூட போதும்.. நான் ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போய் எங்க அம்மாவையும் அப்பாவையும் பார்த்துட்டு மறுபடியும் வந்துடுவேன்…” என தொண்டை அடைக்கக் கூறினாள் அவள்.
அவன் அவள் கூறியதற்கு எந்த பதிலும் கூறவில்லை.
மீண்டும் கார் மிதமான வேகத்தில் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது.
அவளுக்கோ வெறுத்துப்போனது.
இவன் எல்லாம் மனிதனா..?
இரக்கம் என்பதை இவனுக்கு ஏன் இவனுடைய பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கவே இல்லை..?
ஒருவேளை கடவுள்தான் இவனை அவசரத்தில் படைத்து விட்டாரோ..?
மனித குணம் எதையுமே இவனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லையோ என்றெல்லாம் அவள் உள்ளுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க வேறு பாதையில் கார் திரும்புவதை அப்போதுதான் கவனித்தாள் செந்தூரி.
ஆம் அது அவளுடைய வீட்டிற்கு செல்லும் பாதைதான்.
பொங்கிக் கொண்டிருந்த அவளுடைய மனம் சற்றே அமைதி அடைந்தது.
அவளுடைய கோரிக்கை அவனிடம் ஏற்கப்பட்டு விட்டது என்பது அக்கணம் புரிந்தது.
விழிகளை அழுந்தத் துடைத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள் அவள்.
“நீ ஏன் வேலைக்குப் போன..?”
“ஹாங்…” விழித்தாள் அவள்.
“உன்ன பாத்தா சின்ன பொண்ணு மாதிரிதான் இருக்கு.. ஒரு குடும்பத்தை காப்பாத்துற அளவுக்கு கெபாசிட்டி உனக்கு எப்படி வரும்..? உங்க அம்மா வேலைக்கு போய் இருக்கலாமே..?” எனக் கேட்டான் அவன்.
“அப்பாக்கு உடம்பு நல்லா இருக்கும்போது அவர் நல்ல வேலைல இருந்தாரு.. மாசா மாசம் நல்ல சம்பளம்… அம்மா கேட்கிறது நான் கேட்கிறது எல்லாத்தையுமே அப்பா வாங்கிக் கொடுப்பாரு.. அதெல்லாம் ஒரு பொற்காலம் மாதிரி இருக்கும்..” என சிறு புன்னகையோடு கூறியவளின் முகம் நன்றாகவே மலர்ந்தது.
“ஆனா அப்பாக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு அப்புறம் எல்லாமே தலைகீழா மாறிடுச்சு.. அம்மாவால பழைய வாழ்க்கைல இருந்து மீள முடியல.. நினைச்சதை வாங்கிக்கணும் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட ஆசை. அதெல்லாம் கூடும்போது எல்லாருமே திணறிப் போயிட்டோம்..
நானே வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணினேன்.. சாதாரண ஒரு வேலைக்கு என்னோட படிப்பு போதும்னு தோணுச்சு.. அதனால போனேன்.. சின்ன பொண்ணுனா குடும்பத்தை காப்பாத்த முடியாதா..? என்னோட மனசுல தைரியம் இருக்கு.. அந்த கெபாசிட்டி போதும்னு நினைக்கிறேன்..” என்றாள் அவள்.
“ம்ம்… ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாதிரி..” என்றான் அவன்.
“உண்மைதான்…” என்றவளுக்கு அவனுடைய குடும்பம் எப்படிப்பட்டது என்ற கேள்வி உள்ளே எழுத்தான் செய்தது.
“உங்க அம்மா அப்பா எப்படி..?₹ என அடக்க முடியாமல் கேட்டே விட்டாள் அவள்.
சில நொடி அவனுடைய காரின் வேகம் அதிகரித்தது.
அவனுடைய கை விரல்கள் இறுகின.
“செத்துப் போய்ட்டாங்க..” என்றான் அவன்.
“ஐயோ சாரிங்க..” உண்மையான வருத்தத்துடன் கூறினாள் அவள்.
“அவங்க போய் சேர்ந்ததுக்கு நான் கவலைப்படவே இல்லை..” என்றவன் மீண்டும் காரை நிதானமாக செலுத்த அவளோ அதிர்ந்து போனாள்.
அதன்பின் அவள் வாயே திறக்கவில்லை.
“செந்தூரி…?”
“ம்ம்..?”
“உங்க அம்மா கடன் வாங்காம ஆடம்பர செலவ அவாய்ட் பண்ணி இருந்தாலே நீங்க நல்லா இருந்திருப்பீங்க..” என்றவனின் வார்த்தைகள் அவளுடைய முகத்தை வாடச் செய்தன.
20 நிமிடத்தில் அவளுடைய வீட்டின் முன்பு காரை நிறுத்தியவன்,
“லெட்ஸ் கோ..” என்றான்.
‘எதே லெட்ஸ் கோவா..? நீ எதுக்குடா.? நான் மட்டுமே போயிட்டு வர்றேன்..’ என மனதுக்குள் அலறினாள் அவள்.
“என்னாச்சு நீதானே அம்மா அப்பாவைப் பார்க்கணும்னு சொன்ன..? இப்போ அப்படியே அசையாம இருக்க..?”
“இல்ல பாக்கணும்தான்…” என்றவள் காரிலிருந்து இறங்க அவனும் அவளோடு இணைந்து அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
ஹாலில் அமர்ந்து காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த மேகலாவோ முதலில் உள்ளே வந்த தன்னுடைய மகளைக் கண்டதும் “அம்மாடி வந்துட்டியா..?_ என்ற ஆனந்தக் கூச்சலோடு ஓடிச் வந்து அணைத்துக் கொள்ள தன்னுடைய அன்னையை இறுக அணைத்துக் கொண்டாள் செந்தூரி.
“நீ இல்லாம வீடு வீடாவே இல்ல தெரியுமா..? என் கண்ணம்மா இனி எங்கேயும் நீ போக மாட்டல்ல..? இங்கேயே எங்க கூட இருந்திரு…” என பதைபதைப்புடன் கூறிய அன்னையிடமிருந்து வேதனையோடு விலகினாள் அவள்.
அப்போதுதான் அவர்களுடைய சிறிய வாயிலை முழுவதுமாக அடைத்தவாறு நின்றிருந்த விநாயக்கைப் பார்த்தார் மேகலா.
இவன் எதுக்கு வந்திருக்கிறான் என எண்ணியவருடைய முகமோ கோபத்தில் சுருங்கியது.
உள்ளே வந்த விநாயக்கின் பார்வையோ அவர்களுடைய வீட்டை ஆராய்ந்தது.
“இல்லம்மா இப்போதைக்கு என்னால இங்க வர முடியும்னு தோணல..” என தன்னுடைய அழுகையை மறைத்து கசப்பான புன்னகையை வெளிப்படுத்தியவாறு கூறியவள் “அப்பா என்ன தேடினாரா..?” என உடைந்த குரலில் கேட்டாள்.
“ஆமாம்மா அவர் எப்படி உன்னை தேடாம விடுவாரு.? என்னோட ஆசைக்காக சினிமால நடிக்க போயிருக்கேன்னு சொல்லி வச்சிருக்கேன்.. ஷூட்டிங் வெளியூர்ல நடக்குதுன்னு சொன்னேன்.. என் முகத்தையே பாக்க மாட்டேங்குறாரு.. என் கூட பேசுறதையே நிறுத்திட்டாரு.. அவரப் போய் பாரு.” என்றார் மேகலா.
அவளோ தன் கண்களை துடைத்து தன்னை திடப்படுத்திக் கொண்டு தந்தையின் அறைக்குள் நுழைந்ததும் மேகலாவின் பார்வை விநாயக்கின் மீது நிலைத்தது.
“சார் என் பொண்ணு தெரியாம அப்படிப் பண்ணிட்டா.. அவளை மன்னிச்சு விடக் கூடாதா..? அவ யாருக்கும் எந்த பாவமும் செய்யாதவ..”
“ஆனா எனக்கு பாவம் பண்ணிட்டாளே..” என்றான் அவன்.
வாயடைத்துப் போனார் மேகலா.
“அ.. அது தெரியாம பண்ணிருப்பா..”
“இல்ல தெரிஞ்சிதான் என்ன அடிச்சா..” என்றான் அவன்.
“சரிதான் அவ.. அவளை மன்னிக்கக் கூடாதா.?”
“இத பாருங்க அவ்ளோ சீக்கிரமா மன்னிப்புக் கொடுக்கிறதுக்கு நான் ஒன்னும் சாதாரணமா அவமானப்படல.. எங்கிருந்தோ வந்த ஒருத்தி என் மேலேயே கைய வச்சா ஐயோ பாவம்னு நான் மன்னிச்சு விடணுமா..?” என்றவன் அவருடைய முகம் சுருங்கிப் போனதைக் கண்டதும் இதழ்களைப் பிதுக்கி கைகளை விரித்தான்.
“உங்க மக ஈசியா என்னோட கஸ்டடிக்கு வந்ததுக்கு நீங்கதான் முதல் காரணம்.. அவ்வளவு பணத்தை நீங்க வட்டிக்கு வாங்கியதாலதான் எனக்கு ஈஸியா போயிருச்சு..” எனச் சிரித்தவனைப் பார்த்து தன்னையே நொந்து கொண்டார் மேகலா.
அவன் கூறுவதும் சரிதானே தன்னால்தானே இந்த நிலைமை.
“இட்ஸ் ஓகே ஆன்ட்டி.. இன்னும் கொஞ்ச நாளைக்கு என் கூட இருக்கட்டும்.. அதுக்கு அப்புறமா அனுப்பி விடுறேன்..” என்றான் அவன்.
உள்ளே சென்ற செந்தூரியோ தன்னுடைய தந்தையை அனைத்து முத்தமிட்டவள் அவரை சமாதானம் செய்து சிறிது நேரம் பேசிவிட்டு பாரமான மனதோடு வெளியே வந்தாள்.
அவள் கூறியதை தந்தை எந்த அளவுக்கு நம்பினார் என்றே தெரியவில்லை.
வெளியே வந்தவள் அங்கே வேறு வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றிருந்த தன்னுடைய அன்னையையும் விநாயக்கையும் கண்டு சோர்ந்து போனாள்.
“அம்மா செலவுக்கெல்லாம் என்ன பண்றீங்க..? இன்னும் ரெண்டு நாள்ல இஎம்ஐ கட்டணுமே..?”
“அக்கம்பக்கத்துல வேலை செஞ்சு வர்ற பணம் செலவுக்கு நல்லாவே பத்துது கண்ணம்மா.. இஎம்ஐ கட்றதுக்கு யார்கிட்டயாவது கடனா பணம் கேட்கலாம்னு இருக்கேன்..” எனத் தயக்கத்துடன் கூறியவறை இயலாமையோடு பார்த்தவள் தன்னுடைய காதுகளில் அணிந்திருந்த சிறிய தங்கத்தோடுகளை வேகமாக கழற்றி அன்னையின் கரத்தில் கொடுத்தார்.
“அம்மா இது பத்துமான்னு தெரியல.. இத வித்து வர்ற பணத்துல அதைக் கட்டிக்கோங்க.. அடுத்த மாசத்துக்குள்ள நான் எப்படியாவது பணத்தோட வர்றேன்..” என்றவள் கூறியது போலவே 10 நிமிடத்தில் அவளுடைய அன்னையிடமிருந்து விடைபெற்று வெளியே வந்து விட காரில் ஏறி அமர்ந்தவனுக்கு அவளுடைய வெற்றுக் காதுகளைப் பார்த்ததும் என்னவோ போல இருந்தது.
தன்னுடைய செக் புக்கை எடுத்து ஒரு தொகையை எழுதியவன் அதை செந்தூரியிடம் நீட்டினான்.
“இந்த அமௌன்ட்டை வச்சு உன்னோட தேவை எல்லாத்தையும் முடிச்சிடு..” என்றவனை வெறித்துப் பார்த்தவள்,
“உழைக்காம வர்ற ஒத்த ரூபாயும் எனக்கு வேணாம்..” என ஒரே பிடியாக மறுத்து விட்டாள்.
“ஓஹ்..? உன்னோட இந்த திமிர் மட்டும் இல்லைன்னா நீ எப்பவோ நல்லா இருந்துருப்ப..”
“தப்பு பண்ற உங்களுக்கே இவ்வளவு திமிரு இருக்கும்போது எனக்கு கொஞ்சமா திமிர் இருக்கிறது ஒன்னும் தப்பு இல்லையே..”
“ஏய் ஷட் அப்..” என கர்ஜித்தவன் தன்னுடைய கரத்தில் இருந்த செக்கை கசக்கி எரிந்து விட்டு காரை செலுத்தத் தொடங்கினான்.
யாருக்கு வேண்டும் இவனுடைய பணம்..?
என்னை இந்த நரகத்திலிருந்து விடுதலை செய்தாலே போதுமே.
இன்று தந்தையின் விழிகளில் தெரிந்த ஏக்கத்தைப் பார்த்தவளுக்கு உயிரோடு மரித்ததைப் போல இருந்தது.
சீக்கிரமாக அனைத்தையும் சரி பண்ணி விட வேண்டும் என எண்ணியவள் சோர்வோடு விழிகளை மூடி காரின் இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.
அன்னையையும் தந்தையையும் பார்த்தது மனதிற்கு சற்றே நிம்மதியைக் கொடுத்தது.
சற்று நேரத்தில் அவனுடைய மிகப் பெரிய வளாகத்திற்குள் கார் நுழைய பெருமூச்சோடு நிமிர்ந்து அமர்ந்தாள் அவள்.
அவளுடைய மனம் மீண்டும் நரகத்திற்கு வந்து விட்டோமா என அலறியது.
Super sindhu