அரண் 27
துருவன் ஆவுஸ்திரேலியா செல்வதற்கு தனது உடைகளையும் வேறு பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க அறைக்குள் நுழைந்த வள்ளி அதனைப் பார்த்துக் கொண்டே அருகில் உள்ள சோபாவில் போய் அமர்ந்தாள்.
துருவனுக்கும் அவள் இந்த ஒரு மாத பிரிவை எண்ணி கவலை கொள்கிறாள் என்று புரிந்தது இருந்தும் அவளிடம் இதைப் பற்றி பேசி மேலும் வருத்தப்பட வைக்காமல் அவள் போக்கிலேயே அவளை விட்டு விட்டான்.
துருவன் எதுவும் பேசாமல் தனது வேலையிலேயே கண்ணாக இருக்க துருவனின் அருகில் வந்த வள்ளி,
“நா…ன் நான் உங்களுக்கு ஏதும் உதவி செய்யட்டுமா…” என்று வினவ,
“இல்லை வள்ளி, நீ கொஞ்சம் இரு நான் வரேன் இதோ முடிஞ்சிருச்சு உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்று கூறியதும் சற்று முகம் மலர்ந்தவள் எதுவும் பேசாமல் பதுமை போல போய் இருக்கையில் அமர்ந்து விட்டாள்.
அனைத்து வேலைகளையும் முடித்து பெட்டிகளை அருகில் அடுக்கி வைத்து விட்டு வள்ளியின் அருகில் வந்த அமர்ந்த இளஞ்செழியன்,
“அற்புதம் நான் தந்த போன தா.. அதுல நான் ஒவ்வொரு நாளும் உன் கூட பேசுவேன் எந்த டைம்னு வந்து சொல்ல முடியாது எனக்கு எப்போ எல்லாம் டைம் கிடைக்குதோ அப்போ உனக்கு கால் பண்ணுவேன் நாம நேர்ல பேசுற மாதிரி முகம் பார்த்து பேசலாம்..” என்று துருவன் கூறியதும் ஆச்சரியத்துடன் கண்கள் விரித்து,
“அது எப்படிங்க முகம் பார்த்து பேசுவது..?”
“அதைத்தான் இப்போ சொல்லித் தரப் போறேன் இதுல வாட்ஸ் ஆப்னு ஒரு ஆப் இருக்கு அதை நான் தரவிறக்கம் செய்திட்டேன். இதோ பார் இத கிளிக் பண்ணினா வீடியோ கால் போகும் இரு என்னோட போனுக்கு நான் கால் பண்ணி காட்டுகிறேன்..” என்று கூறிவிட்டு தனது தொலைபேசிக்கு அழைப்பெடுத்தான்.
உடனே வள்ளியிடம் அந்தத் கைத்தொலைபேசியை கொடுத்துவிட்டு தனது தொலைபேசியை எடுத்து பேசத் தொடங்கினான்.
அதனை அழுத்தி துருவனின் முகத்தை தனது தொலைபேசியில் பார்த்ததும் வள்ளிக்கோ பெரும் ஆனந்தம் ஏதோ வானத்தில் சிறகடித்து பறப்பது போல இருந்த இடத்திலேயே குதித்துச் சிரித்தாள்.
அவளது சந்தோஷத்தைப் பார்த்து தானும் அகம் மகிழ்ந்த துருவன்.
“ஹலோ அற்புதம்..”
“ஹலோ ங்க..”
“என்ன செய்றீங்க..”
“தூங்கப் போறேன்..”
“அச்சோ நானும் தூங்க தான் போறேன் அப்புறம் சாப்டீங்களா..?”
“சாப்பிட்டேன்ங்க..”
“என்ன சாப்பிட்டீங்க..?”
“தோசை..”
“நீங்களும் தோசையா இங்கேயும் தோசை தான் வட் அ கோ இன்சிடென்ட்..” என்று கூறிச் சிரிக்க அற்புதவள்ளிக்கு சிரிப்பு வரவில்லை மாறாக கோபம் தான் வந்தது.
அற்புதவள்ளியைச் சிரிக்க வைப்போம் என்று முயற்சி செய்த துருவனின் முயற்சிகள் அனைத்தும் தவிடு பொடியாய் இருந்தும் அவளது மாசற்ற எழில் பொங்கும் வதனத்தில் இருந்து அந்த புன்னகையை பார்த்த பின்பு உறங்கச் செல்வோம் என்று இருந்தவனுக்கு அனைத்துமே ஏமாற்றமே இவ்வளவு பேசியும் சிரித்தும் அவளது முகம் வாடியே காணப்பட்டது.
தொலைபேசியில் அழைப்பை எடுத்ததும் மின்னல் கீற்றுப் போல ஒளிர்ந்து மறைந்த அவளது அந்தப் புன்னகையை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு, நேரத்தை பார்த்தவன்,
“சரி உனக்கு மூடு சரியில்லை நான் நாளைக்கு நேரத்துக்கு கிளம்பனும் அதனால நேரத்துக்கு தூங்கணும் சரி பாய் குட் நைட்..” என்று அவன் எழுந்து நிற்க இவளோ தலையசைத்து விட்டு சோபாவில் சரிந்து படுத்தாள்.
துருவன் போய் மெத்தையில் படுத்தவன் திரும்பி வள்ளியை பார்க்க வள்ளி கை தேர்ந்த சிற்பியான பிரம்மன் படைத்த சிறந்த சிற்பமாய் செதுக்கிய மெழுகு சிலை போல் அழகாக படுத்திருந்தாள்.
அவளது கண்கள் மூடியே இருந்தன ஆனால் உறங்கவில்லை உறக்கத்தை தொலைத்தவளாக அங்கும் இங்கும் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு மனம் அமைதிப்படவே இல்லை. நாளையில் இருந்து துருவன் கடல் கடந்து தூர தேசத்திற்கு செல்கிறான் என்பதை நினைக்கவே அவளுக்கு தூக்கம் தூரப்போனது.
துருவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவள் ஒரு புறம் சரிந்து படுத்த நேரம் அவளது புடவை விலகி பப்பாசி பழம் போன்ற வளைவு சுழிவுகளுடன் மடிப்புகள் நிறைந்த வள்ளியின் இடுப்பு துருவனின் கண்களுக்கு விருந்தளித்தது.
அதைப் பார்த்ததும் அவனது கண்களில் ஒரு நிமிடம் மின்னல் வெட்டி மறைந்தது.
அவளோ புடவை விலகியது கூட தெரியாமல் அப்போதுதான் தனது உறக்கத்தை தேடிக்கொண்டிருந்தாள்.
நாளைக்கு ஆவுஸ்திரேலியா கிளம்புற இந்த நேரமா பார்த்து இப்படி ஒரு இன்ப அவஸ்தையில் என்னை மாட்டி விட்டுட்டாளே என்று அவன் அவளது இடையின் மடிப்புகளை எண்ணியபடி அதனை கண்களால் வருடி அதன் மென்மையை உணர முயற்சி செய்து கொண்டிருந்தான்.
அவனது கண்களோ தேன் பருகும் வண்டுகள் போல அந்த இடையே சுற்றி சுற்றி வட்டமிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த மடிப்புகளை வருடி விட வேண்டும் என்று கைகள் பரபரத்தன.
மனதின் என்ன ஓட்டங்களுக்கு கடிவாளமிட அவன் பெரிய பிரேயத்தனம் மேற்கொண்டான்.
கண்களை இறுக மூடி போர்வையை இழுத்துப் போட்டுக் கொண்டு படுக்க கண்களும் மீண்டும் அவளைப் பார் என்று கூவல் விட்டது.
ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்தவன் அதன் அழகில் சொக்கி மறுகண் தானாகவே திறந்து அவளது எழிலை பார்த்து மொய்த்தது.
அவனது இரசனை வெள்ளோட்டம் போல பாய்ந்து மோதின.
வள்ளி அருகில் போய் அமர எண்ணம் கொண்டவன் அப்படியே நாளைய பயணத்தை எண்ணி அனைத்தையும் மூட்டை கட்டி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு போர்வையை மூடிக்கொண்டு படுத்தான்.
இருந்தும் தனது அன்பு ராட்சசியின் அழகு அவனை கட்டி இழுத்தது. அவளோ உறக்கத்தில் மறுபக்கம் திரும்ப அவளிடம் இருந்து வெளிப்பட்ட அங்கலாவன்யங்கள் போர்வையால் மறைந்து போயின.
நொடியில் வானில் தெரிந்த வெண்ணிலவு மறைந்து இருள் மேகம் சூழ்ந்தது போல இருந்தது.
அதைப் பார்த்து நட்சத்திரங்கள் வாடுவது போல துருவனின் கண்களும் நொடியில் வாடிப்போயின.
அந்தக் கவலையிலேயே உறங்கியும் போனான்.
காலையில் எழுந்ததும் மிகவும் வேகமாகப் புறப்பட்டு கொண்டு விமான நிலையத்துக்கு செல்ல அன்னையிடமும் தந்தையிடமும் கூறிவிட்டு வெளியே செல்ல வள்ளி அருகில் வந்து எதுவும் கூறாமல் நின்றாள்.
“வள்ளி இங்கே பார் நீ சின்ன பிள்ளை இல்ல நான் ஒவ்வொரு நாளும் உனக்கு கால் பண்ணுவேன் சரியா என்ன நினைச்சு நீ எப்பவும் கவலைப்படக் கூடாது இன்னொரு முறை நான் உன்னைய கட்டாயம் கூட்டிட்டு போறேன் இப்போ நீ இங்கே இருப்பது தான் நல்லது..” என்று நடக்கும் விபரீதங்களை மனதில் எண்ணி அவளிடம் பட்டும் படாமல் சொல்லிவிட்டு தனபாலை பார்த்து,
“கவனம்ப்பா… பார்த்துக்கோங்க..” என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டான்.
புறப்பட்டவன் காரில் இருந்து கொண்டு வள்ளியை பார்த்துவிட்டு முதல் பெரு விரலையும் கடைசி விரலையும் விரித்து இனிய விரல்களை மடக்கியபடி காதில் வைத்து தொலைபேசியில் அழைக்கும் படி செய்கை செய்து தலையாட்டிவிட்டுச் சென்றான்.
அவனது செய்கையை நொடியில் உணர்ந்தவளது மனதில் சிறு புன்னகை பூத்தது. அதுவே அவளுக்கு பெரும் பனிச்சாரல் போல மனதை வருடிச் சென்றது.
விமான நிலையத்துக்கு சென்றதும் அனைத்து விடயங்களையும் செய்து முடித்தவன் விமானத்தில் ஏறி சில மணி நேரங்களிலேயே ஆவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் தரை இறங்கினான்.
தரை இறங்கிய உடனே வெளியே வந்து வள்ளிக்கு அழைப்பெடுத்தான்.
தொலைபேசியில் அவளது முகத்தை பார்த்ததும் தான் அவனுக்கு நிம்மதியாகவே மூச்சு உள்ளிருந்து வலி வந்தது.
அவளது பிரிவு ஒரு சில மணி நேரங்களிலேயே இப்படி வாட்டி வதைக்கும் என்று அவன் என்ன கனவாக கண்டான். அங்கிருக்கும் போது காலையில் சென்றால் இரவு தானே அவளை சந்திப்போம் அது போல தொலைபேசியில் அவளை பார்க்கலாம் என்றிருந்தவனுக்கோ அங்கு வேலை செய்யும் போது எப்படியாவது நேரில் சந்திக்கலாம் என்று இருந்த அந்த நிம்மதி இங்கே தொலைந்து போனது.
அவளது அருகாமையைத் தேடி மனம் துடித்தது.
அவளும் மிகவும் ஆர்வமாக தலையைசைத்து அவனிடம் கதை பேச அவனுக்கோ அனைத்து உற்சாகமும் எங்கோ போய் சோகமே குடி கொண்டிருந்தது.
அவள் பல கேள்விக்கணைகளை தொடுக்க இவனுக்கு அது ஒன்றுமே காதில் விழவில்லை. அனைத்தும் காற்றில் அசைவது போலவே தெரிந்தது.
அவனது உள்ளம் போகும் திசையை எண்ணி அவனுக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது. அம்மா சொன்னார் என்பதற்காக கட்டாயத்தின் பேரில் தாலி கட்டியவனா இன்று சில மணி நேர பிரிவை தாங்க முடியாமல் தவிக்கின்றான்.
அப்படி என்றால் இந்த பிரிவில் எனக்கு காதல் முகிழ்த்து விட்டதா..? துருவன் காதலிக்கின்றானா..? வள்ளியை அதுவும் வள்ளியை காதலிக்கின்றானா..? உண்மையிலேயே இது மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்.
எப்போதும் ஒரு பொருள் அருகில் இருக்கும் போது அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை அது தொலைதூரம் சென்ற பிறகு அதை எண்ணி வாடுவோம் அதுபோலத்தான் இங்கு துருவன் அற்புதவள்ளியின் அன்பும் தொலைதூரம் சென்ற பிறகுதான் காதலெனும் பயிர் அவர்களுக்குள் துளிர்விட தொடங்கியது.