சொர்க்கம் – 39
அடுத்த நாள் காலை படப்பிடிப்போ சூரிய உதயத்துடன் ஆரம்பமாகியது.
சொன்னது போலவே முதல் டேக்கிலேயே தன்னுடைய காட்சியை அழகாக நடித்து முடித்திருந்தாள் செந்தூரி.
இன்று என்ன செய்து வைத்து சொதப்பப் போகிறாளோ என அச்சத்துடனே நின்றிருந்த சக்கரவர்த்தியின் வயிற்றில் அழகாக நடித்து பாலை வார்த்திருந்தாள் அவள்.
விநாயக்கின் முகத்திலோ மெச்சுதல் தெரிந்தது.
சிறிது நேரத்தில் அடுத்தக் காட்சி முடிவடைந்ததும் சக்கரவர்த்தி பிரேக் எனக் கூறியதால் விநாயக்கோ கேரவனுக்குள் சென்றுவிட சற்று நேரத்தில் அவளை நெருங்கி வந்தான் கௌதமன்.
அவனைக் கண்டதும் அவளுடைய முகம் பூவாக மலர்ந்தது.
“ஹேய் கௌதம் எப்ப வந்த..? நான் உன்ன பாக்கவே இல்லையே.. நேத்து முழுக்க உன்னத் தேடினேன்.. பட் உன்ன காணலை..” என்றாள் செந்தூரி.
“நேத்து எனக்கு எந்த ஷூட்டும் இல்லைன்னு சார் சொன்னாரு.. அதனாலதான் அவசர வேலையா ஊருக்கு போயிட்டு வந்தேன்..”
“ஓஹ்.. அப்படியா..? ஊர்லதான் உன்னோட பேமிலி இருக்கா..?” என அவள் ஆர்வமாகக் கேட்க,
“அம்மா என்னோட சின்ன வயசுலையே ஃப்ளட் கேன்சர்ல இறந்து போயிட்டாங்க.. அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாரு..
என்ன சின்ன வயசுல இருந்து வளர்த்தது என்னோட பெரியம்மாதான். அவங்களுக்கும் யாரும் இல்ல.. உறவுன்னு சொல்லிக்க நான் மட்டும்தான் இருக்கேன்.. ரொம்ப நல்லவங்க.. என்னோட அம்மா மாதிரி…” என நெகிழ்ந்த குரலில் கூறினான் கௌதம்.
“சாரி கௌதம்..”
“எதுக்கு சாரி..? இதெல்லாம் என்னோட விதி..” என்றான் அவன்.
“சரி விடு கௌதம்.. வருத்தப்படாத.. அது சரி அப்போ பெரியம்மாவ பாக்குறதுக்காகவா ஊருக்குப் போன..?”
“இல்லடி.. என்னோட பூர்வீக நிலம் ஒன்னு இருந்துச்சு.. அத விக்கிறதுக்காக போயிருந்தேன்..”
“பூர்வீக நிலமா..? என்ன சொல்ற..? ஏதாவது பணம் அவசரமா தேவைப்பட்டுச்சா..? அதனாலதான் வித்திட்டியா..?”
“ஆமா.. 40 லட்சம் கிடைச்சுது..” என்றவன் ஒரு பையை அவளிடம் கொடுக்க திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள் அவள்.
“எ..என்ன இது…?”
“இதுல 40 லட்சம் பணம் இருக்கு செந்தூரி.. மீதிப் பணத்த நான் எப்படியாவது ரெடி பண்ணிடுறேன்.. நீ இத அவன்கிட்ட கொடுத்துட்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்துடு. இதுக்கு மேலயும் நீ அங்கே இருந்து கஷ்டப்பட வேணாம்..” என கௌதம் கூறியதும் ஒரு கணம் விக்கித்துப் போய் நின்று விட்டாள் செந்தூரி.
“நீ நடந்த எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொன்னப்போ என்னால சத்தியமா தாங்கிக்கவே முடியலடி.. அதனாலதான் ஊருக்கு கிளம்பிட்டேன்.. அவ்வளவு பணத்தை எப்படி புரட்டுறதுன்னு தெரியலை.. அதனாலதான் பூர்வீக நிலத்தை வித்துட்டேன்..
மீதிப் பணத்தை எப்படியாவது கொண்டு வந்து கொடுத்திடுறேன்.. நீ அந்த நரகத்துல இருந்து வெளியே வந்துடு..’ என்றதும் அடுத்த கணம் இடம் பொருள் அனைத்தும் மறந்து அவனைப் பாய்ந்து இறுக அணைத்துக் கதறி விட்டாள் அவள்.
அவளுடைய கதறலில் அங்கே ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் செந்தூரியின் மீதும் கௌதமின் மீதும் விழுந்தது.
அதே கணம் கேரவனை விட்டு வெளியே வந்த விநாயக்கின் பார்வையும் உக்கிரமாக அவர்கள் இருவரையும்தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அவளோ கௌதமை அணைத்துக் கதறிவிட்டாள்.
யார் இவன்..?
எனக்காக எதற்கு இவ்வளவு பெரிய உதவியை செய்கின்றான்..?
தான் எத்தனை வருடங்களாக நம்பி இருந்த சேகர் கூட அவளை கைவிட்டுச் சென்றுவிட எங்கிருந்தோ வந்த ஒருவன் தனக்காக அனைத்தையும் இழந்து விட்டு வந்து நிற்கின்றானே..!
அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கௌதமோ தன்னை அணைத்துக் கதறும் செந்தூரியைத் தழுவிக் கொண்டான்.
“அழாத செந்தூரி.. எல்லா பிரச்சனையும் சரியாயிடும்.. இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.. கவலைப்படாத..” என அவன் ஆறுதல் வார்த்தைகளைக் கூற சில நொடிகளில் சுயம் புரிந்து அவனை விட்டு விலகியவளின் கன்னம் முழுவதும் கண்ணீர்.
“எல்லாரும் பாக்குறாங்க.. நீ அழாத..” என்றான் அவன்.
வேகமாக தன்னுடைய கண்ணீரைத் துடைத்தவள் அவனுடைய கரத்தைப் பிடித்து அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சற்றே தள்ளி வந்து விட அவளைக் கேள்வியாகப் பார்த்தான் கௌதமன்.
“இந்தப் பணம் எனக்கு வேணாம் கௌதம்..”
“என்னது வேணாமா..? உனக்கு என்ன பைத்தியமா..?”
“இல்ல வேணாம்… நான் யோசிச்சுதான் சொல்றேன்.. இந்தப் பணத்தைக் கொண்டு போய் கொடுத்தாலும் எதுவுமே மாறப்போறதில்ல.. என்னோட பெயர் கெட்டுப் போனது கெட்டுப் போனதுதான்..”
“அதுக்காக அங்கேயே இருக்கப் போறியா..?”
“இல்ல இன்னும் ஒரு மாசத்துல என்ன வீட்டை விட்டு அனுப்பிடுவேன்னு அவனே சொல்லி இருக்கான்.. இப்போ இந்த பணத்தை கொண்டு போய் கொடுத்தாலும் மீதி பணத்தை கேப்பான்.. இல்லன்னா வேற ஏதாவது பிரச்சனை பண்ணுவான்.. நான்தான் உன்கிட்ட சொன்னேனே அவனுக்கு பிரச்சனை பணம் கிடையாது..” என அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் அருகே வந்து நின்றான் விநாயக்.
அவனுடைய முகம் அப்பட்டமாக ரௌத்திரத்தை வெளிப்படுத்தியது.
அவளுக்கோ அச்சத்தில் தேகம் படபடத்துப் போனது.
அவளுடைய கரத்தில் இருந்த பணக்கட்டையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தவன்,
“என்னோட முடிவை இந்த பணத்தாலையோ யாராலையோ மாத்த முடியாது.. மிஸ்டர் கௌதம்..” என்றான் மிக மிக அழுத்தமாக.
கௌதமின் பார்வையோ அவனை அனலாக எரித்தது.
அவனுடைய அனல் பார்வையை அலட்சியப்படுத்திவிட்டு அட்டகாசமாக சிரித்தான் விநாயக்.
நிலமை கைமீறிப் போவதை உணர்ந்து பதறிப் போனாள் செந்தூரி.
அவளுடைய கரத்தில் இருந்த பணப் பையை வாங்கி கௌதமின் கரத்தில் வைத்தவன் “ஸ்டே யுவர் லிமிட்..” என்றான்.
கோபமாக வார்த்தைகளை விட முயன்ற கௌதமின் கரத்தை சட்டென இறுகப்பற்றிக் கொண்டாள் செந்தூரி.
“ப்ளீஸ் கௌதம்.. இந்தப் பணத்த எடுத்துட்டுப் போயிரு.. எனக்காக ப்ளீஸ்..” என அவள் கண்ணீரோடு கெஞ்ச வாயை மூடி அழுத்தமாக நின்றான் கௌதமன்.
அவளுடைய கரங்கள் கௌதமனின் கரங்களை பிடித்திருப்பதைக் கண்ட விநாயக்கிற்கோ இதயம் தீப்பற்றி எரிவதைப் போல இருந்தது.
அடுத்த நொடி விருட்டன அங்கிருந்து வெளியேறத் தொடங்கினான் அவன்.
அதே நேரம் அங்கே வந்து நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ப்ரொடியூசர் காந்தனின் விழிகளிலோ சுவாரஸ்யம் கூடியது.
விநாயக் கோபத்தில் ஷூட்டிங்கை முடிக்காமல் பாதியிலேயே சென்றுவிட பயந்து போனாள் செந்தூரி.
சற்று நேரத்தில் விநாயக்கின் கார் பார்க்கிங் ஏரியாவை விட்டு அவர்கள் நின்ற இடத்திற்கு உள்ளே வர,
தங்களை இடிப்பது போல வேகமாக வந்து கொண்டிருந்த காரைக் கண்டு விக்கித்துப் போனாள் அவள்.
கிட்டத்தட்ட கௌதமின் மீது மோதி விடுவதைப் போல காரை நிறுத்தியவன் ஹாரனை அடித்துக் கொண்டே இருக்க அவன் தன்னைத்தான் அழைக்கின்றான் என்பதை புரிந்து கொண்டவளுக்கு கால்கள் உதறின.
“ப்ளீஸ் நீ ஏதாவது பேசி பிரச்சினையை வாண்டட்டா வாங்கிக்காத கௌதம்.. இத நான் பாத்துக்குறேன்.. நீ கிளம்பு.. இன்னும் ஒரு மாசத்துல நானே வந்துருவேன்..” என அவனிடம் அவசர அவசரமாக கூறியவள் வேகமாக விநாயக்கின் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அடுத்த நொடி அந்தக் காரோ புயல் வேகத்தில் அந்த செட்டை விட்டு வெளியேறிச் சென்றுவிட அங்கிருந்த அனைவருக்கும் அப்போதுதான் இதயத்துடிப்பு சீராகியது.
பெரிய பிரச்சனை வந்து விடுமோ என்ற கலவரம் அங்கிருந்த அனைவரின் கண்களிலும் தெரிய தன்னுடைய கரத்தில் இருந்த பணத்தை வெறுப்போடு பார்த்தான் கௌதமன்.
செந்தூரி கௌதமிடம் பேசிக் கொண்டிருந்ததால் தான் இத்தனைக் கோபமா என எண்ணிய காந்தனுக்கோ ஆச்சரியமாக இருந்தது.
இதுவரை விநாயக் உறவு வைத்துக் கொண்ட எந்த பெண்ணையும் தன்னுடன் வைத்திருப்பதே இல்லை அல்லவா..?
ஆனால் செந்தூரியை இவன் கூடவே அழைத்து வருவதும் இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் அவளைக் காரில் ஏற்றித் தன்னுடனேயே அழைத்துச் செல்வதும் அவள் யாருடனும் பேசினால் மூக்கு விடைக்க கோபமாக வந்து நிற்பதையும் கண்டு ஏதோ ஒன்று அவர்களுக்குள் இருக்கின்றது என்றே தோன்றியது.
அருகில் இருந்த சக்கரவர்த்தியைப் பார்த்தவன்,
“என்ன சக்கரவர்த்தி சார் படம் எல்லாம் எப்படி போகுது..?”
“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையோட போகுது சார்..” என்றார் அவர்.
“இந்தப் படத்தோட கதையில ஹீரோவோட ஃப்ரெண்ட்டு ஹீரோயின்கிட்ட தப்பா நடந்துக்கிற மாதிரி சீன்ஸ் எல்லாம் இருக்குன்னு சொன்னீங்கல்ல..?”
“ஆமா சார்.. ஏன் கேக்குறீங்க..?” என்றார் சக்கரவர்த்தி.
“சும்மாதான் கேட்டேன்.. ஹீரோ பிரண்ட்டா நடிக்கிறது அந்த பையன் கௌதமன் தானே..?”
“ஆமா அவன்தான் நல்ல பையன் நல்லா நடிக்கிறான்..” என சக்கரவர்த்தி பாராட்டாகக் கூற சரிதான் என்றவன் வேறு விடயங்கள் பற்றி பேசத் தொடங்கியிருந்தான்.
மித மிஞ்சிய வேகத்தில் சென்று கொண்டிருந்த காருக்குள் அமர்ந்தவளுக்கோ தேகம் தூக்கிப் போட்டது.
“ப்ளீஸ் மெதுவா போங்க.. எ.. எனக்கு பயமா இருக்கு..” என அச்சத்தில் கெஞ்சியே விட்டாள் அவள்.
அவனோ அவளுடைய வார்த்தைகளை சிறிதும் செவிமடுக்கவே இல்லை.
முழு வேகத்தில் காரை எடுத்தவன் தன்னுடைய வீட்டில்தான் காரின் வேகத்தை குறைத்து இருந்தான்.
என்ன பிரச்சனை எல்லாம் வரப்போகின்றதோ என எண்ணியவாறு அவள் கலங்கிப் போய் அமர்ந்திருக்க “வா..” என ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு அவன் சென்றுவிட,
காரை விட்டுக் கீழே இறங்கியவளுக்கு தன்னால் கௌதமனுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்றே தோன்றியது.
மேலே அவள் வந்ததும் அவளுடைய முகத்தை அழுத்தமாகப் பார்த்தவன்,
“யார் அவன்..?” எனக் கேட்க இவளுக்கும் கோபம் வந்தது.
அவள் யாருடன் பழகினால் இவனுக்கு என்ன..?
அனைத்தையும் இவனிடம் சொல்லித்தான் ஆக வேண்டுமா..?
“ஏய்ய்ய்… உன்கிட்டதான் கேட்கிறேன் அவன் யாரு..?
“என்னோட ஃப்ரெண்ட்..” என்றாள் அவள்.
“ஓஹோ.. ப்ரண்டத்தான் அவ்வளவு இறுக்கமா ஹக் பண்ணியா..?” என அவன் கேட்டதும் இவளுக்கு கோபத்தில் முகம் சிவந்தது.
“இதோ பாருங்க அசிங்கமா பேசாதீங்க..”
“நீ பண்ணத சொன்னா நான் அசிங்கமா பேசுறேன்னு அர்த்தமா..? அத்தனை பேரு முன்னாடி நீ தான் அவன கட்டிப் புடிச்சுட்டு நின்ன.. டாமிட்..”
“நான் தான் சொல்றேன்ல்ல அவன் என்னோட ஃப்ரெண்ட்..”
“ஃப்ரெண்ட்டுன்னா அத்தனை பேரு முன்னாடியும் அப்படி பண்ணுவியாடி..?”
“ஏன் பண்ணினா என்ன தப்பு..?”
“வாட் த ×××××××× அங்க நின்ன எல்லாரும் உன்னையும் அவனையும் பத்தி என்ன நினைப்பாங்க..?”
“நீங்க அத்தனை பேரு முன்னாடியும் என்ன கீப்னு சொல்லி கேரவனுக்குள்ள கூட்டிட்டுப் போகும் போது என்ன நினைச்சாங்களோ அதேதான் இப்பவும் நினைச்சிருப்பாங்க.. அவங்க என்ன நினைச்சாலும் எனக்கு கவலையே இல்லை.. அதே மாதிரி நான் யார் கூட எப்படி பழகினாலும் உங்களுக்கு என்ன..?” என தன்னை மீறி கோபத்தில் அவள் கேட்டு விட,
கட்டுப்படுத்த முடியாத கோபத்தோடு ஓங்கி அவளுடைய கன்னத்தில் அறைந்து விட்டான் விநாயக்.
💜🔥💜
Super sis 💞