இன்னிசை-12

5
(2)

இன்னிசை-12

“மேகி… எனக்கு பசிக்குது… ஏதாவது டிஃபன் ரெடி பண்ணு.” என்று அவளை அங்கிருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான் ரிஷிவர்மன்.

‘இப்போ தானே அங்கே பசிக்கலைன்னு சொன்னாங்க. ‘ என்று எண்ணிய மேனகா, அருகில் இருக்கும் அன்னியரின் முன் வாதாட விரும்பாமல் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள்.

“ஊஃப்.” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட ரிஷிவர்மன், கார்த்திக் அருகே சென்றான்.

” டேய் கார்த்தி… என்னடா அவசரம் உன்னை யார் இங்க வர சொன்னது.” என்று கடிந்துக் கொண்டான் ரிஷிவர்மன்.

“ஃபோன் போட்டேன். ரீச் ஆகலை. இதுக்கு மேல எனக்கு பொறுமையும் இல்லைடா‌… அதான் நேர்லயே வந்துட்டேன். சரி சொல்லு. போன விஷயம் என்ன ஆச்சு‌?”

“வேலைக்கு ஆகலை. ஊத்திக்கிச்சு.” என்று உதட்டை பிதுக்கினான் ரிஷிவர்மன்.

“என்னடா சொல்ற? அந்த கிழவன் இல்ல தானே.”

” ஆமாம்.அந்த கிழவனை அங்க காணோம். நல்லாதா போச்சுன்னு அந்த கிழவிக் கிட்ட லேசா கோடு போட ஆரம்பிச்சா, அது அந்த கிழவனுக்கு மேல இருக்கும் போல. என்னை அறிமுகப்படுத்தும் போதே முகம் மாறிடுச்சு. ஏதோ நீ ஃபோன் பண்ணி அங்க போக சொல்லவும், திடீர்னு மேகி ஞாபகம் வந்துச்சு. அவளுக்கு அந்த பழங்குடி மக்களைப் பார்க்கணும்னு ஆசை. அதுவுமில்லாமல் ஊருக்கு போறதுக்காக லீவு போட சொல்லியிருந்தேன். இந்த சான்ஸை பயன்படுத்தி அவளை கூட்டிட்டு போனதால ஏதோ கொஞ்சம் சமாளிக்க முடிஞ்சது. அவ உற்சாகமா அவங்களோட பேசவும் கொஞ்சம் முகம் கொடுத்து பேசினாங்க. ஆனாலும் அந்த காட்டுல இருந்து வேற இடத்துக்கு போறதுக்கு சம்மதிக்கல.” என்று கார்த்திக்கிடம் மெல்லிய குரலில் எல்லாம் பகிர்ந்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன்.

” இப்போ என்னடா பண்றது ரிஷி?”

“கொஞ்சம் பொறுமையா தான் ஹேண்டில் பண்ணணும்.”

” நமக்கு டைம் கிடையாதே ரிஷி. அவனுங்கக் கிட்ட காசை வேற வாங்கிட்டோம். இப்போ என்ன பண்றது. ஒன்னும் புரியலை. ரெண்டு பக்கமும் மாட்டிக்கிட்டோம். இந்த சிக்கல்ல இருந்து எப்படி வெளிவர்றதுன்னு தெரியலையே.

நீ இவ்ளோ நேரமா ஃபோன் பண்ணலைன்னதும், போன விஷயம் சக்ஸஸ் என்று நினைத்துவிட்டேன்.” என்று கார்த்திக் புலம்பிக் கொண்டிருந்தான்.

“எதுக்கு இப்போ புலம்பிட்டு இருக்க. காம் டவுன் கார்த்தி.”

” உனக்கு பயமே இல்லையா ரிஷி?” என்று தனது நண்பனை பார்த்தான் கார்த்திக்.

” எதுக்கு பயப்படணும். அவங்க நைட்டு நேரம் தான் வந்து வேலைப் பார்ப்பாங்க. அப்ப யாரும் இந்த காட்டுல உலாவ மாட்டாங்க. அப்படியே இருந்தாலும் என் கண்ட்ரோல்ல தான் இந்த ஏரியா இருக்கும். உள்ள யாரையும் நுழைய விடாமல் நான் பார்த்துக்கிறேன். அப்படியே யாராவது வந்து பார்த்தாலும் பழங்குடி மக்கள் தான் அழைச்சிட்டு வந்தாங்கன்னு சொல்லி நம்ம தப்பிச்சுக்கலாம். இதனால நமக்கு எந்த பிரச்சனையும் வராது. இது ஒரு மேட்டரா? இதுக்கு ஏன் இப்படி பயப்படுற.”என்று கேலியாக சிரித்தான் ரிஷிவர்மன்.

“அப்போ சார் மட்டும் எதுக்கும் பயப்பட மாட்டீங்களோ? அப்புறம் எதுக்கு மெதுவா பேசுற? உன் மாமா பொண்ணுக்கு எதுவும் தெரியக் கூடாதுன்னு தானே ரகசியம் பேசுற? அப்போ சாருக்கு பயம் தானே. ஒத்துக்கோ மேன்.” என்ற கார்த்திக் நக்கலாக ரிஷிவர்மனை பார்த்தான்.

 ” பயமெல்லாம் கிடையாது. கொஞ்சம் கல்யாணம் வரைக்கும் அடக்கி வாசிக்கணும். அதான்.” என்ற ரிஷிவர்மன், ‘ இந்த முறை வீட்ல பேசணும்.’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

” அப்போ கூடிய சீக்கிரமே கால்கட்டு போட போற. அதானே.” என்று கார்த்திக் சிரிக்க.

” ஆமாம் டா. அவ கொஞ்சம் எங்க அப்பா, அம்மா மாதிரி நீதி, நேர்மைன்னு வெட்டித்தனமா ஏதாவது பேசிகிட்டு இருப்பா. அந்த பழங்குடி மக்களோட வேற ரொம்ப அட்டாச் ஆகிட்டா. மரம் ஏற கத்துக்கணும், பாசி எடுக்க கத்துக்கணும்னு சொல்லிட்டு இருக்கா. விட்டா அங்கேயே தங்கிடுவா போல இருக்கு. சப்போஸ் நான் பண்ணுற வேலை மட்டும் தெரிஞ்சா அவ்வளவு தான். என்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டா. சோ முதல்ல அவங்களோட சேர விடக் கூடாது. இப்போதைக்கு தனியா போகக் கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன். அதுக்குள்ள கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டா, வேலைக்கு வர விடாமல் பண்ணிடுவேன்.” என்று திட்டத்திற்கு மேல் திட்டம் போட்டுக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன்.

ரிஷிவர்மன் அறியவில்லை,அவனுக்கு மேல் ஒருவன் இருக்கிறான் இவன் போடும் திட்டங்கள் எல்லாவற்றையும் மாற்றி ஆட்டிவிக்கும் வித்தகர் அவர் தான் என்பதை அறியாமல் தீவிரமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.

 ” அப்போ சரி. சீக்கிரமே கால்கட்டு போட கடவுள் அருள்புரிவாராக.” என்று கார்த்திக் கேலி செய்ய.

ரிஷிவர்மன் முகம் கனவில் ஆழ்ந்தது.

“டேய் ரிஷி ட்ரீம்ஸுக்கு போனது போதும். நம்ம பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு.” என்று நடப்புக்கு அவனை அழைத்து வந்தான் கார்த்திக்.

“இப்போதைக்கு கொஞ்ச நாள் அமைதியாக இருப்போம். அவங்களுக்கு எப்பயாவது நம்ம உதவி தேவைப்படும்.

 அப்ப வந்து வச்சு செய்வோம்.” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான் ரிஷிவர்மன்.

“என்னத்தான் யார வச்சு செய்யப் போறீங்க?” என்று வினவியபடியே மேனகா அங்கு வர.

 ஒரு நிமிடம் திடுக்கிட்ட ரிஷிவர்மனோ, இமைப் பொழுதில் தன்னை சமாளித்துக் கொண்டான்.

” வச்சு செய்யப்போறோம்னு எங்க சொன்னேன். வச்சு செய்வேன்னு தான் சொன்னேன்.” என்றவனை, குழப்பமாக பார்த்தாள் மேனகா.

” எதுக்கு முறைக்குற தாயே. உன்ன தான் சொன்னேன். நியூ ஜாய்னி. எதுக்கு இப்படி லீவு போடுறீங்கன்னு கார்த்திக் கேட்டான். அது தான் உன்ன விட்டுட்டு நான் மட்டும் ஊருக்கு போனா, என்ன விட மாட்ட. வச்சு செய்வேன்னு சொல்லிட்டு இருந்தேன்.” என்ற ரிஷிவர்மன் நகைக்க.

மேனகாவின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. ” ஹலோ சார். நியூ ஜாய்னினா லீவ் கிடையாதா? அவங்களுக்கும் ஃபேமிலி இருக்கும் தானே.” என்று கார்த்திகைப் பார்த்து பயப்படாமல் வினவ.

 லேசாக சிரித்த கார்த்திக்கோ, ” அவங்களுக்கு ஃபேமிலியும் இருக்கும். அதைவிட வாய் அதிகமாக இருக்கும். மேலஅதிகாரியின் மேல துளி கூட பயம் கிடையாது.அப்படித் தானே மேனகா.” என்றான்.

” நான் என்ன தப்பு செஞ்சேன் பயப்படுறதுக்கு?” என்று அவனைப் பார்த்து நிமிர்வுடன் வினவினாள் மேனகா.

” அது சரி தான். நீங்க சொன்னதுல எந்த தப்பும் கிடையாது. இருந்தாலும் நீயு ஜாய்னி கொஞ்ச நாள் லீவு போடாம இருக்கறது நல்லது. அப்போ தான் நீங்க நிறைய கத்துக்க முடியும். அதுக்காக தான் சொல்றேன். தென் அஃபிஷியல் வேற, ஃப்ரெண்ட்ஷிப் வேற. சோ எந்த சலுகையும் கிடையாது. இரண்டு நாள் லீவ் அப்ளை பண்ணியிருந்தீங்க. அதுக்கு மேல எக்ஸ்டண்ட் பண்ணாமல் ஒழுங்கா வேலைக்கு வந்து சேருங்க.” என்று சற்று கண்டிப்புடன் கூறினான் கார்த்திக்.

” பரவாயில்லையே… நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க. நானும் உங்களை மாதிரி தான்.தெரிஞ்சவங்களா இருந்தாலும் அவங்க கிட்ட எந்த சலுகையும் எதிர்ப்பார்க்க மாட்டேன்.” என்று அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தவள், ” டிஃபன் ஆறுவதற்குள் சாப்பிட வாங்க.” என்று இருவரையும் சேர்த்து அழைத்தவளோ, முன்னே சென்று இருவருக்கும் தட்டில் எடுத்து வைத்தாள்.

அவள் அங்கிருந்து செல்லவும், ரிஷிவர்மனும், கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

” ஹா…ஹா… ரிஷி… உன்னை நினைச்சா பாவமா இருக்கு. எப்படி தான் இந்த அராத்த வச்சு சமாளிக்கப் போற. சரி சீக்கிரம் போய் சாப்பிடுவோம். இல்லைன்னா மறுபடியும் வந்து லெக்சர் எடுக்கப் போறாங்க.”

” ஹும்… போவோம்.” என்ற ரிஷிவர்மனோ சற்று சலிப்புடன் கூற.

” ஏன் டா இவ்வளவு சலிச்சுக்குற? நல்லா தானே சமைப்பாங்க.” என்று தனது நண்பனை பார்த்தான் கார்த்திக்.

” உள்ள வந்து சாப்பிடத் தானே போற. நீயே தெரிஞ்சுக்கோ.” என்ற ரிஷிவர்மன் இப்போது நகைக்க.

“ஏன் டா சிரிக்கிற?”

” அதுவா துன்பம் வரும்போது சிரிக்க சொல்லி பெரியவங்க சொல்லி இருக்காங்க.”

” டேய் ரிஷி எதுக்கு இப்போ தேவையில்லாமல் உளறிட்டு இருக்க.”

” சரி… சரி… உளறாமல் தெளிவா சொல்றேன் கார்த்தி. அது வந்து யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்னு திருமூலர் சொல்லி இருக்கார். நான் பெற்ற இன்பத்தை உலகத்துல உள்ளவங்க பெற்றாங்களோ, இல்லையோ என்னுடைய உற்ற நண்பன் நீ பெறப்போகிற. அதை நினைத்து தான் ஆனந்தம் பெருகி வருகிறது. வா வந்து அனுபவி. அப்போ புரியும் நான் சொல்றது உனக்கு.” என்ற ரிஷிவர்மன் கார்த்திக்கை இழுத்துக் கொண்டு சென்றான்.

இவர்கள் வருவதற்குள் டேபிளில் எல்லாவற்றையும் அழகாக செட் செய்திருந்தாள் மேனகா.

” வாங்க சார். வாங்க அத்தான்.” என்று இருவரையும் நாற்காலியில் அமர வைத்து ப்ளேட்டில் பரிமாறியவள், ” நீங்க சாப்பிடுங்க… இதோ வந்துடுறேன். ” என்றவள் மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்தாள்.

” என்னடா இது?” பரிதாபமாக வினவினான் கார்த்திக்.

” என் டார்லிங்குக்கு செய்ய தெரிஞ்ச ஒரே டிஷ் இது தான். அதனால தான் நான் அவளை செல்லமா மேகின்னு கூப்பிடுறேன். ஆறுறதுக்குள்ள சாப்பிடு டா. சூடா இருந்தா தான் கொஞ்சமாவது எனக்கு உள்ள போகும்.” என்ற ரிஷிவர்மன், மேகி என்ற பெயரில் இருந்த வஸ்துவை மல்லுக் கட்டி உள்ளத் தள்ளினான்.

கார்த்திக்கும் தன்னோட தலைவிதியை நொந்துக் கொண்டு, ” நண்பா… எதிர்காலத்துல சாப்பிடும் நேரத்தில் மட்டும் உன் வீட்டுக்கு வர மாட்டேன்.” என்று புலம்பிக் கொண்டே சாப்பிட்டான்.

கிச்சனிலிருந்து மேனகா மீண்டும் ஹாலிற்கு வர. வேகமாக எழுந்தான் கார்த்திக்‌.

” என்ன சார் ? அதுக்குள்ள எந்திரிச்சிட்டிங்க. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்ல.” என்று கேட்க.

“ஐயோ! வயிறு ஃபுல். நான் விரதத்துல இருக்கேன். இதுக்கு மேல சாப்பிட முடியாது.”

“என்ன சார் சொல்றீங்க?” என்று புரியாமல் அவனைப் பார்த்தாள் மேனகா.

“ச்சே… அது வந்து டயட்ல இருக்கேன்னு சொல்ல வந்தேன். டங் ஸ்லிப்பாகிடுச்சு. சரி நான் கிளம்புறேன்‌.” என்று அங்கிருந்து நழுவ முயன்றான் கார்த்திக்.

” டேய் கார்த்தி… இருடா… எங்களை பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு போகலாம்.” என்று அவனை செல்ல விடாமல் தடுத்தவன், கை கழுவ எழுந்திருக்க.

 “எங்க அத்தான் போறீங்க? இன்னும் கொஞ்சம் தான் இருக்கு.

 இதையும் சாப்பிடுங்க.நம்ம வர்றதுக்கு எப்படியும் ரெண்டு நாள் ஆகும். அப்புறம் வீணாகப் போகுது.”என்ற மேனகா, அவனது தட்டில் மீதிருந்த மேகி எல்லாவற்றையும் வைக்க.

 அவன் முழித்துக் கொண்டு இருந்தான்‌‌.

 கார்த்திக்கோ அடக்க மாட்டாமல் நகைக்க.

மேனகா‍,”எதுக்கு சார் இப்படி சிரிக்கிறீங்க?” என்று வினவினாள்.

கார்த்திக் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க.

 அவனுக்கு உதவி செய்ய வந்தான் ரிஷிவர்மன். ” நீ என்னை கவனிக்கிறது பார்த்து அவனுக்கு பொறாமை. நீ போய் ரெடியாகு மேகி.” என்று அவளை அனுப்பி விட்டு கார்த்திக்கை பார்த்து முறைத்தான்.

மேனகாவும், கிளம்பிட ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பி ஊட்டிக்கு சென்றனர்.

இவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது, கிட்டத்தட்ட மதியம் நெருங்கி விட்டது.

 இவர்களுக்காக காத்திருந்து தனம் கொதி நிலைக்கே போய்விட்டார்.

” அத்தை…” என்று உற்சாகமாக அவரை கட்டிப் பிடித்தாள் மேனகா.

 அவரோ முறைத்துக் கொண்டு நின்றார்.

” கோவமா இருக்கீங்களா அத்தை.” என்று லேசான புன்சிரிப்புடன் வினவ.

அவரோ ஒன்றும் கூறாமல் அமைதியாகவே நின்றார்.

” எல்லாம் இந்த அத்தான் தான் அத்தை காரணம். கிளம்புற நேரத்துல டிஃபன் செய்ய சொல்லி என்ன வேலை வாங்கினார் தெரியுமா?” என்று சலுகையாக அத்தை மேல் சாய்ந்துக் கொண்டு கூறினாள் மேனகா.

 அதுவரை கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டிருந்த தனம், ” ஏன்டா நேரத்தோட தானே கிளம்பி இங்க வரேன்னு சொல்லி இருந்தீங்க. அப்புறம் ஏன் புள்ளைய வேலை வாங்கின.”

” ஐயோ அம்மா. கிளம்ப கொஞ்ச நேரம் ஆயிடுச்சு சரின்னு டிபன் செய்ய சொன்னேன். என்ன டிபன் செஞ்சான்னு கேளுங்க மா. மேகி… அது செய்ய எவ்வளவு நேரம் ஆகிடப் போகுது.”

” அது ஈஸி தான் அத்தை. நானும் சீக்கிரம் செஞ்சிட்டேன். அதை சாப்பிடுறேன்னு அத்தான், எவ்ளோ லேட் பண்ணாங்க தெரியுமா?” என்றாள்.

” அடிப்பாவி…” என்று அவன் முணுமுணுக்க.

” சரி விடுங்க அத்தை. நோ கோபம்… அத்தான் பாவம். மன்னிச்சு விட்டுடுங்க. அதான் நாளைக்கு வரைக்கும் இருக்க போறோமே?” என்றாள் மேனகா.

” ப்ச்… நீங்க காலையில சீக்கிரம் வந்துடுவீங்கனானு கோவில்ல அபிஷேகத்துக்கு சொல்லி இருந்தேன்.” என்று மெல்லிய குரலில் கூறினார்.

” சரி விடு தனம்.நீயும், நானும் தான் போயிட்டு வந்துட்டோமே .”என்று சமாதானம் சொன்னார் ராமன்.

” என்ன விஷேஷம் மாமா? அபிஷேகம்லாம் ஏற்பாடு பண்ணியிருக்கீங்க.”

” உங்க அத்தை மனசு சரியில்லன்னு சொல்லி, இன்னைக்கு அபிஷேகத்துக்கு ஏற்பாடு பண்ணியிருந்தா.”

” சரி விடுங்க அத்தை. நான் தான் வந்துட்டேனே. இனி நல்லதாகவே நடக்கும்.”என்று சமாதானம் செய்தாள் மேனகா.

ஆனால் அவருக்கு மனது சங்கடமாக இருந்தது. ஏதோ நடக்கப் போவதாக உள்ளுணர்வு உறுத்தியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!