சொர்க்கம் - 44
செந்தூரியை நினைத்து வன்மத்தின் உச்சியில் தகித்துக் கொண்டிருந்தான் சேகர்.
மிகவும் அழகான செந்தூரியின் பின்னே சுற்றி அவன் காதலிக்க வைத்ததெல்லாம் வீணாகிப் போய்விட்டதா.?
அவளை சினிமாவில் நடிக்க வைத்து பணக்காரனாகி விடலாம் என்ற கனவுக் கோட்டையை அவன் கட்டி வைத்திருக்க அனைத்தும் நொறுங்கி அல்லவா போய்விட்டது.
வெல்லம் சாப்பிட்டது ஒருவன் விரல் சூப்புவது இன்னொருவனா..?
அவள் நடிப்புத் துறைக்கு வருவதற்கு அவன் தானே காரணம்.
அந்த நன்றி கூட சிறிதுமில்லாமல் அவள் பெரிய பணக்காரனைப் பிடித்து அவனோடு ஜாலியாக இருக்கின்றாளே.
நினைக்க நினைக்க அவனுக்கு வயிறு பற்றி எரிந்தது.
இதுவரை காதலன் என்று இருந்த என்னைக் கூட நெருங்கவே அவள் விடவில்லையே.
அவன் கேட்டதும் உடனே சம்மதித்து விட்டாள் போலும்.
நான் அவனிடம் செல்லச் சொன்ன போது ஏதோ பெரிய பத்தினி போல பேசிவிட்டு இப்போது அவனுடன் கூத்தடிக்க எப்படித்தான் மனம் வந்தது..?
அந்த விநாயக் எப்போது அவளை அனுப்பி நான் எப்போது அவளை அனுபவிப்பது..?
இனி அவள் பணக்காரியாகி விடுவாள்.. என்னைக் கண்டு கொள்வாளா..?
நான் வேறு அவசரப்பட்டு முட்டாள்தனமாக வார்த்தைகளை விட்டு விட்டேனே இதைச் சற்று பொறுமையாக கையாண்டிருக்கலாமோ..?
மீண்டும் அவளோடு நல்லவன் போல சேர்ந்து கொள்ள முயற்சித்தால் என்ன..?
எப்படியும் விநாயக்குடன் நடிக்கும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெறும்.
இலட்சக்கணக்கான பணம் அவளுடைய கைகளில் குவியும்.
எப்படியாவது அவளுடன் ஒன்று சேர்வது தான் நல்ல வழி.
அவளுடைய பெயருக்குக் கலங்கம் வராத வகையில் திருமணம் செய்து வாழ்க்கை கொடுக்கிறேன் எனக் கூறினால் கட்டாயம் என்னுடன் வந்து விடுவாள் என எண்ணியவன் அவளைத் திருமணம் முடிப்பதற்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கினான்.
அவன் ஒன்றும் இராமன் இல்லைதான்.
எத்தனையோ பெண்களுடன் சுகித்திருக்கின்றான்தான்.
ஆனால் அத்தனை பெண்களும் நிச்சயமாக செந்தூரியின் அழகின் அருகே கூட நெருங்க முடியாது.
கொள்ளையழகை கொட்டி வைத்திருப்பவளை ஒரு முறையாவது அனுபவித்து விட வேண்டும் என அவாக் கொண்டது அவனுடைய மனம்.
ஆம் கேடுகெட்ட மனம்.
வேறு வேறு இடத்தில் இரவுத் தூக்கத்தை தொடர்ந்த இருவரும் காலையில் விழித்துக் கொண்டதும் ஒன்றாகவே ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்ல ஆயத்தமாயினர்.
அவளோ அவனுடைய முகத்தைப் பார்க்கவே இல்லை.
தவறு செய்து விட்டோமோ எனக் குற்ற உணர்ச்சியில் வாட்டத் தொடங்கியது அவளுடைய மனம்.
அவனும் அவளுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
இனி எந்தச் சூழ்நிலை வந்தாலும் நன்றி என்ற வார்த்தையை அவள் அவனிடம் சொல்லவே போவதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்துக் கொண்டாள் அவள்.
அந்தோ பரிதாபம் அன்றே அவள் மீண்டும் அவனிடம் நன்றி கூற வேண்டி வரப்போகிறது என்பதை அக்கணம் அறியவில்லை.
அரை மணி நேரத்தில் தயாராகி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அவர்கள் சென்றதும் அங்கே கௌதமனும் நின்றிருந்தான்.
லைலாவோ அன்றைய நாளுக்கான மேக்கப்பை போடுவதற்காக செந்தூரியை அழைத்துச் சென்றுவிட விநாயக்கின் பார்வை அழுத்தமாக கௌதம் மீது பதிந்தது.
அங்கிருந்த இருக்கையில் கால் மீது காலைப் போட்டு அமர்ந்து கொண்டவன் சக்கரவர்த்தியிடம் கௌதமை விழிகளால் காட்டி அவனை அழைக்கும் படி கூற, சக்கரவர்த்தியும் கௌதமனை அவர்கள் இருந்த இடத்திற்கு அழைத்தார்.
கௌதம் அங்கே வந்ததும்,
“உட்காருங்க மிஸ்டர் கௌதம்” என்றான் விநாயக்.
மறுக்காமல் அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் கௌதம்.
அதற்குள் துணை நடிகர்கள் ஏதோ சந்தேகம் என வந்துவிட,
“எக்ஸ்க்யூஸ் மீ கைஸ்” என்ற சக்கரவர்த்தியோ அங்கிருந்து எழுந்து சென்றுவிட,
இப்போது கௌதமின் பார்வையும் விநாயக்கின் பார்வையும் ஒருவரை ஒருவர் அழுத்தமாக ஏறிட்டது.
“தூரி கிட்ட இருந்து நீ தள்ளியே இரு” என எச்சரித்தான் விநாயக்.
“அவ என்னோட பிரண்டு..” அவனுடைய எச்சரிக்கையை மறைமுகமாக மறுத்தான் கௌதமன்.
விநாயக்கின் முகம் இறுகியது.
“நீங்க செந்தூரிக்கு பண்றது ரொம்ப தப்பு..” என்ற கௌதமின் வார்த்தைகள் விநாயக்கை எரிதனலாக மாற்றின.
“ஆஹான்..?” என தன் உணர்வுகளை மறைத்து சிரித்த வண்ணம் கேட்டான் விநாயக்.
“இது ஒன்னும் ஜோக் இல்ல சார்..”
“என்ன நடந்ததுன்னு தெரியாம நீ நடுவுல வராத..”
“நடந்த எல்லாமே எனக்குத் தெரியும் செந்தூரி என்கிட்ட எப்பவோ சொல்லிட்டா..” என்றதும் கோபத்தில் அவனுடைய விழி வெண்படலம் சிவந்தது.
அதே கணம் செந்தூரி அங்கே வந்தவள் நேருக்கு நேர் அமர்ந்தவாறு முறைத்துக் கொண்டிருந்த இருவரையும் கண்டு பதறிப் போனாள்.
விநாயக்கிடம் கேட்க தைரியமற்றவளோ கௌதமை நெருங்கி,
“என்னாச்சு கௌதம் எல்லாம் ஓகே தானே..?” எனக் கேட்க,
“நத்திங் டி இந்தா உனக்கு பிடிச்ச சாக்லேட் வாங்கிட்டு வந்தேன்..” என கேலக்ஸி சாக்லேட்டை எடுத்து அவளிடம் நீட்டினான் கௌதம்.
“தேங்க்ஸ் டா.” என்றவள் அதனை வாங்கிக் கொள்ள, வெடிக்க காத்திருக்கும் எரிமலை போல் ஆகினான் விநாயக்.
வேகமாக சாக்லேட்டை பிரித்து உண்ணலாம் என நினைத்தவள் விநாயக்கின் பார்வையில் அதிர்ந்து அந்த எண்ணத்தை அக்கணமே அழித்து விட்டாள்.
அக்கணம் சக்கரவர்த்தியோ,
“ஷூட் ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என்றவாறு அங்கே வந்துவிட ஒவ்வொருவரும் எழுந்து அவர்களின் முன்பு பிரம்மாண்டமாக இருந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.
அந்த வீட்டின் வரவேற்பு அறையில்தான் அன்றைய படப்பிடிப்பு நிகழ இருந்தது.
கௌதமனும், செந்தூரியும் சக்கரவர்த்தி கூறிய காட்சியை தத்ரூபமாக நடித்துக் கொண்டிருந்தனர்.
கௌதமன் செந்தூரியின் கரங்களைப் பிடித்து பேசுவது போன்ற காட்சியைப் பார்த்த விநாயக் தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
சகிக்க முடியவில்லை.
இதெல்லாம் என்ன படம் என அவனுடைய மனம் திட்டிக்கொண்டது.
முதல் முறை சக்கரவர்த்தி படத்தின் கதையைப் பற்றி கூறியதும் அருமையான படம் என பாராட்டிய அதே வாய்தான் தற்போது படத்தை கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருந்தது.
இதற்கு மேலும் அங்கேயே அமர்ந்து அவர்கள் ஒன்றாக நடிப்பதை பார்க்க முடியாது என எண்ணி கொண்டவன் எழுந்து கொண்டான்.
அப்போது அந்த வரவேற்பு அறையின் மேலே அழகுக்காக தொங்கவிடப்பட்டிருந்த கிரிஸ்டல் சாண்டிலையர் (சர விளக்கு) அசைவது போல இருக்க அவனுடைய விழிகளோ சட்டென கூர்மை பெற்றன.
ஏதோ ஒன்று சரியில்லையே என சற்றே பின்னால் நகர்ந்து அந்த விளக்கில் தொங்கவிடப்பட்டிருந்த சங்கிலியைப் பார்த்தவன் அது கழன்று விளக்கு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் அதிர்ந்து போனான்.
எப்போது வேண்டுமானாலும் அந்த மிகப்பெரிய சரவிளக்கு தரையை நோக்கி விழுந்து விடக் கூடும் என எண்ணி அவன் எச்சரிக்க முன்னரே சரசரவென்ற சத்தத்தோடு அந்த விளக்கு கீழே விழ அவனுக்கோ உயிரே போனதைப் போல இருந்தது.
நொடியும் தாமதிக்காது அதற்கு கீழே நின்ற செந்தூரியைப் பார்த்து,
“பேபிஇஇஇஇஇ தள்ளிப்போ…” என கத்தியவன் கிட்டத்தட்ட பாய்ந்து அவள் மீது விழவிருந்த விளக்கை தன்னுடைய கரத்தால் தட்டி விட அவனுடைய உள்ளங்கையோ அந்த விளக்கின் கண்ணாடி துண்டுகளால் பிளவு பட்டது.
அந்த சர விளக்கோ அவன் தள்ளிய வேகத்தில் தரையோடு மோதி நொறுங்கியது.
அதே கணம் கௌதமனும் செந்தூரியை தன்னருகே இழுத்து பாதுகாப்பாக தன்னுடைய கை வளைவுக்குள் நிறுத்திக் கொண்டான்.
அந்த மிகப்பெரிய சரவிளக்கு கீழே விழுந்து நொறுங்கிய வேகத்தில் சில கண்ணாடித் துண்டுகள் அருகே நின்றவர்களின் உடலிலும் பட்டு காயத்தை உண்டு பண்ண நொடியில் அந்த இடமே கலவரமாக மாறியது.
கேமரா மேனின் முகத்தில் கூட கண்ணாடித் துண்டுகள் கிழித்து விட கூச்சலும் சத்தமும் என அந்த இடத்தை நிறைத்தன.
சிலர் கூச்சலிட்டவாறு அந்த இடத்தை விட்டு விலகி நின்றுவிட உதிரம் வழிந்த கையை உதறிவிட்டவாறு படபடத்த இதயத்துடன் செந்தூரிக்கு ஏதாவது அடிபட்டு விட்டதோ எனப் பார்த்த விநாயக்கின் விழிகள் கௌதமனின் அணைப்பில் நின்றவளையே வெறித்துப் பார்த்தன.
திடீரென நடந்து முடிந்த அந்த விபத்தில் இருந்து வெளியே வருவதற்கு அனைவருக்கும் சில நிமிடங்கள் எடுத்தன.
சிலருக்கு கண்ணாடித் துண்டுகள் சிதறி காயத்தை கொடுத்திருந்தாலும் அங்கே இருந்த அனைவரையும் விட விநாயக்கின் காயம்தான் பெரிதாக இருந்தது.
கிட்டத்தட்ட அவனுடைய உள்ளங்கை நடுப்பகுதியில் கத்தியால் பாதியாக வெட்டி விட்டது போன்ற மிகப்பெரிய காயம் அது.
சில நொடிகள் அச்சத்தில் உறைந்து போய் நின்றவள்,
அதன் பின்னர் தான் தெளிவடைந்து கௌதமின் அணைப்பிலிருந்து விலகினாள்.
விநாயக்கின் காயத்தை பார்த்தவளுக்கோ தலை சுற்றிக்கொண்டு வந்தது.
அவனுடைய ஷர்ட் தொடை முழுவதும் அளவுக்கு அதிகமான உதிரம் வழிந்து இருக்க விழிகள் கலங்கிவிட்டன அவளுக்கு.
சக்கரவர்த்தி,
“ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் கொண்டு வாங்க சீக்கிரம்” என சத்தமாக கத்த அடுத்த சில நொடிகளில் முதல் உதவிப் பெட்டியுடன் அங்கு வந்த ஒரு பெண் விநாயக்கின் கரங்களைப் பற்ற வேகமாக உதறிவிட்டவன்,
“ஷூட்டிங் கேன்சல் பண்ணிடுங்க..” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, அவனுடையக் கரத்தைப் பார்த்த சக்கரவர்த்திக்கோ சற்று வேதனையாகத்தான் இருந்தது.
இன்று காலையில் தான் அந்த மிகப்பெரிய சரவிளக்கை படத்திற்காக பொருத்தினார்கள்.
மிகப்பெரிய விளக்கு என்பதால் அந்தப் பாரத்தை சங்கிலியால் தாங்கி விட முடியவில்லை போலும் என எண்ணியவர், அவனுடைய காயம் குணமாகும் வரை அவனை செட்டிற்க்கு வர வேண்டாம் என்று கூறலாம் என எண்ணினார்.
அவன் தன் மேல் விழ இருந்த விளக்கை தன்னுடைய கரங்களால் தட்டிவிட்டு காயத்தை வாங்கிக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்ததும் துடித்துப் போனாள்.
அவன் மட்டும் இடையே நுழையவில்லை என்றால் நிச்சயம் அந்த விளக்கு அவள் மீதும் கௌதமின் மீதும் தான் விழுந்திருக்கும்.
விநாயக் உதிரப்போக்கோடு அங்கிருந்து செல்வதைப் பார்த்தவள் அவன் பின்னாலேயே வேகமாக ஓடிச் சென்றாள்.
அவன் டிரைவர் சீட்டில் இருப்பதைக் கண்டதும் அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் ஏறி அமர்ந்தவளுக்கோ உதிரம் நில்லாமல் வழிந்து கொண்டிருந்த அவனுடைய கரத்தைப் பார்த்ததும் அச்சம் பிறந்துவிட்டது.
அவனோ காயம் பட்ட கரத்தை ஸ்டேரிங்கில் பதிக்க முடியாது தன்னுடைய தொடை மீது வைத்தவன் ஒற்றை கையால் காரை ஸ்டார்ட் செய்ய, “ஹாஸ்பிடல் போகலாம்” என்றாள் அவள்.
“ஒரு மண்ணும் தேவலை.. என்ன பாத்துக்க எனக்குத் தெரியும்..” என அவள் மீது இருந்த கோபத்தில் கர்ஜித்தவன் ஒற்றைக் கரத்தாலேயே காரை ஸ்டார்ட் செய்து செலுத்தத் தொடங்கி விட்டான்.
அவளுக்கோ தான் என்ன தவறு செய்து விட்டோம் என்றே புரியவில்லை.
எதற்காக இப்படிக் கோபப்படுகிறான் என எண்ணியவாறு அமைதியாக இருந்தவளுக்கு உதிரத்தின் போக்கு அதிகரிப்பதைக் கண்டதும் இருப்புக் கொள்ளவில்லை.
சட்டென தான் அணிந்திருந்த துப்பட்டாவை கழற்றி அவனுடைய தொடையில் இருந்த கரங்களை சுற்றி அவள்கட்ட எதுவும் கூறாது அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.
கையில் இருந்த மிகப்பெரிய காயம் வலிப்பதை விட கௌதமனின் அணைப்பில் செந்தூரி இருந்த காட்சிதான் அவனுக்கு அதிகமாய் வலித்தது.
தன்னுடைய கைப்பொருளை யாரோ ஒருவன் தொடுவதா..?
மனம் அமைதி இன்றி தவித்தது.
அவன் வீட்டிற்கு செல்லும் பாதையில் காரை மிகச் சிரமப்பட்டு திருப்புவதைக் கண்டவள்,
“ப்ளீஸ் ஹாஸ்பிடல் போகலாமே.. இந்தக் காயத்தோடு வீட்டுக்கு போய் என்ன பண்ண முடியும்..? ஹாஸ்பிடல் போங்க..” என அழு குரலில் கூற,
“இப்ப எதுக்கு இல்லாத அக்கறைய இருக்கிற மாதிரி நடிக்கிற.. உன்னோட ப்ரண்டுக்கு ஏதாவது ஆயிடுச்சான்னு பார்த்து கவலைப்பட்டுக்கோ.. என்கிட்ட இதெல்லாம் கேட்காத.. என்ன பாத்துக்க எனக்குத் தெரியும்..” என்றவன் அதற்கு மேல் அவளிடம் ஒற்றை வார்த்தை கூட பேசவே இல்லை.
💜💜💜
Super and intresting sis