46. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.6
(102)

சொர்க்கம் – 46

சாக்லேட் பாய் போல இவ்வளவு நேரமும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவனின் முகம் சட்டென வெடிக்கும் எரிமலை போல மாறிப்போக அவனை விட்டு இரண்டு அடி பின்னால் விலகி நின்றாள் செந்தூரி.

‘மலை ஏறிட்டான் போல இருக்கே..’ அவளுடைய மனம் புலம்பத் தொடங்கிவிட்டது.

“அவன எதுக்கு கூப்பிட்ட..?”

“எனக்கு ட்ரைவ் பண்ணத் தெரியாதே..”

முகம் இறுகிப்போனவன் அதன் பின்னர் அவளிடம் எதுவுமே பேசவில்லை.

வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

அந்த அறைக்கு முன்பு எரிச்சலோடு அமர்ந்திருந்தான் கௌதம்.

செந்தூரிக்காக என்றால் அவன் என்ன வேண்டுமென்றாலும் செய்வான் ஆனால் செந்தூரியை வதைக்கும் விநாயக்கிற்கு உதவ அவனுக்குத் துளி அளவு கூட இஷ்டம் இருக்கவில்லை.

அதே கணம் தன் முன்னே வந்து நின்ற விநாயக்கைக் கண்டதும் எழுந்து நின்றான் கௌதம்.

கௌதமனை அழுத்தமாகப் பார்த்தவாறு “பேபி வா போகலாம்..” என்றவன் கௌதமிடம் ஒரு வார்த்தையும் பேசாதே முன்னே நடக்கத் தொடங்க வேகமாக அவன் முன்னே வந்து நின்றவள் “ஹாஸ்பிடல் பில் கட்டணுமே..” என சங்கடத்துடன் கூறினாள்.

“இங்கே என்ன கொண்டு வந்து சேர்த்த சாரே பில்லைக் கட்டட்டும்.. நீ வா..” என அலட்சியமாகக் கூறியவன் நில்லாமல் நடந்து தன்னுடைய காருக்குச் சென்றுவிட விக்கித்துப் போய் நின்று விட்டாள் செந்தூரி.

இவனுக்குத்தானே உதவ வந்தோம்..?

உதவி செய்ய வந்தவர்களையே உபத்திரத்தில் தள்ளி விடுவதா..?

என்ன மனிதன் இவன்..?

சற்று முன்னர் அவனுக்காக இதயம் இளகி உருகி நின்றதையெல்லாம் நினைத்து அவளுக்கு தன்மீதே வெறுப்பு உண்டாகியது.

எப்படியும் நிச்சயம் செலுத்த வேண்டிய பணம் லட்சத்தைத் தொட்டிருக்கும்.

அப்போதே கௌதமன் கூறினானே அவள் தானே இந்த மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றாள்.

விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து விட்டது.

சற்று தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கௌதமோ விநாயக் வெளியே சென்றதும் அவளை நெருங்கினான்.

“என்னாச்சுடி ஏன் அழுற..?”

அவனிடம் பேசுவதற்கு அவளுக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.

எல்லா தவறும் தன் மீதுதான்.

விநாயக்கிற்கு கௌதமனை சிறிதும் பிடிக்காது எனத் தெரிந்தும் அவனிடம் உதவி கேட்டது தன் தவறுதானே..

இப்படியே உதிரத்தோடு கிடக்கட்டும் என விட்டிருந்தால்தான் அவனுக்குப் புத்தி வந்திருக்கும் என எண்ணியவள் தன் முன்னே நின்ற கௌதமனை வலியோடு பார்த்தாள்.

“ஏய் என்னடி என்னன்னு சொல்லு.. எதுனாலும் பாத்துக்கலாம்.. எதுக்காக நீ எப்போ அழுற..? அவன் உன்னத் திட்டினானா..?”

“இ… இல்லடா பில் எவ்வளவு வந்துச்சுன்னு தெரியுமா..?”

“ம்ம் ஒன் லாக் சம்திங் சொன்னாங்க.”

“ஓஹ்..”

நெஞ்சம் நடுங்கி விட்டது.

எப்படி இந்தப் பணத்தை செலுத்துவது..?

இவனை இங்கே தனியாக தவிக்க விட்டு அவளால் செல்ல முடியாதல்லவா..?

அதை கணம் அவளுடைய அலைபேசிக்கு அழைப்பு வர அதனை ஏற்றவள் விநாயக்தான் அழைக்கிறான் என்பதை புரிந்து அழைப்பை ஏற்றவள் வெறுப்போடு எதுவும் பேசாது அமைதியாக இருந்தாள்.

“பேபி இன்னும் 2 மினிட்ஸ்தான் உனக்கு டைம்.. அதுக்குள்ள நீ என்னோட கார்ல இருக்கணும்.. லேட் பண்ணினா உள்ள வந்து தூக்கிட்டுப் போவேன்..” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட தன் போனை வெறித்துப் பார்த்தவள் இயலாமையுடன் விழிகளை மூடித் திறந்தாள்.

என்ன செய்வது..?

எப்படி இப்போது பிரச்சனையைத் தீர்ப்பது..?

“என்னடி அவன் பில் கட்ட முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டானா..?” கௌதமன் சரியாக ஊகித்துக் கேட்டு விட அவ்வளவுதான் இவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழியத் தொடங்கியது.

“சாரி கௌதம் சாரி.. என்னாலதான் உனக்குப் பிரச்சனை..”

“சரி விடு பாத்துக்கலாம்..” எனக் கூறியவனைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள் தன்னுடைய கழுத்தை வருடினாள்.

விநாயக் அணிவித்துவிட்ட சங்கிலி வைரம் என்றல்லவா சொன்னான்..?

நொடியும் தாமதிக்காது அந்தச் சங்கிலியை கழற்றியவள்,

“இத ஏதாவது ஒரு கடையில அடகு வச்சுரு.. அதுல வர்ற பணத்தை இந்த ஹாஸ்பிடலுக்கு கட்டிடு..” என்றாள்.

“இல்ல வேணாம்.. நீ இத போட்டுக்கோ… நான் பாத்துக்கிறேன்..”

“ஹேய் நீ ஏன்டா பார்த்துக்கணும்..? நீ பண்ண ஹெல்ப்பே போதும்… நான் சொன்னத பண்ணு…”

“ஆனா பில் பே பண்ணாம எப்படி ஹாஸ்பிடல் விட்டு வெளியே போறது..?” என அவன் தயக்கத்தோடு கேட்க அவளுக்கும் அது புரியவில்லை.

இன்னும் சில நிமிடங்களுக்கு மேல் தன்னை அவன் இங்கே இருக்க விட மாட்டான் என்பதை அறிந்து கொண்டவள் என்ன செய்வது எனப் புரியாது தன் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

அதே நேரம் அந்த மருத்துவமனையின் சீஃப் டாக்டர் அந்த வழியால் வந்தவர் செந்தூரியைக் கண்டதும்,

“ஹாய் மேடம்.. என்ன உங்க அப்பாவைப் பார்க்க வந்தீங்களா..?” எனக் கேட்டார்.

“இல்ல டாக்டர் வேறொரு விஷயமா வந்தேன்..”

“ஓகே.. விநாயக் சார் கூடவா வந்தீங்க..?”

“ஆமா அவருக்கு கைல அடிபட்டுருச்சு.. அவருக்காகத்தான் ஹாஸ்பிடல் வந்தோம்.. அவர் கார்ல இருக்காரு..”

“ஓகே ஓகே..”

“டாக்டர் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..?”

“சொல்லுங்க மேடம்..”

“விநாயக் சாருக்கு அடிபட்டதால அப்படியே கிளம்பி வந்துட்டோம்.. பர்ஸ் கிரெடிட் கார்ட் எதுவுமே எடுத்துட்டு வரல.. இன்னும் ஒன் அவர்ல வந்து பில்ல பே பண்ணட்டுமா..?”

“நோ ப்ராப்ளம்.. நான் ரிசப்ஷன்ல இன்பார்ம் பண்ணிடுறேன்.. நீங்க அப்புறமா வந்து பே பண்ணிடுங்க..” என அவர் கூறியதும்தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்..”

அவரோ சிறு தலையசைப்போடு அங்கிருந்து சென்றுவிட,

“எல்லாத்துக்கும் என்ன மன்னிச்சிடுடா..” என்றவள் அவனுடைய கரத்தில் அந்த சங்கிலியைக் கொடுத்துவிட்டு அவனைப் பார்த்து விடைபெறும் பொருட்டு தலை அசைத்தாள்.

“நீ கிளம்பு நான் பாத்துக்கிறேன்..”

“நீ எப்படி போவ கௌதம்..?”

“இங்க இருந்து கொஞ்ச தூரம் தானே… நடந்து போனா என்னோட பைக் நிக்கிற இடத்துக்கு போயிருவேன்..” என்றவனைப் பார்க்க அவளுக்கோ வருத்தமாக இருந்தது.

“நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தறனா கௌதம்..?”

“முட்டாள் மாதிரி பேசாதடி.. எனக்கு இங்க இருக்கிற ஒரே ஒரு பிரண்ட் நீ மட்டும்தான்.. உனக்காக நான் இதக் கூட பண்ண மாட்டேனா..? நீ சீக்கிரமா கிளம்பு… இல்லன்னா அந்த ஹிட்லர் மறுபடியும் உன்னைத்தான் கத்துவான்.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்..” என அவன் கூறியதும் நகர்ந்து போய் அவனுடைய கரங்களைப் பற்றிக் கொண்டவள்,

“ஐ ப்ராமிஸ் யூ கௌதம்.. உனக்குன்னு ஒரு பிரச்சனை வரும்போது கண்டிப்பா நான் உன் கூட நிப்பேன்.. நீ என்ன கேட்டாலும் நான் உனக்காக பண்ணுவேன்.. ஐ ப்ராமிஸ் யூ..” என மனம் உருகிக் கூறியவள் அவனிடம் தலையசைத்து விடை பெற்று விட்டு அந்த மருத்துவமனையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

அவள் கௌதமிற்கு பண்ணிக் கொடுத்த சத்தியமே அவளுடைய வாழ்க்கையை புரட்டிப் போடப் போகும் சாவியாக அக்கணம் மாறிப்போனது.

வெளியே காரில் காத்திருந்தவனின் பொறுமை சுத்தமாகக் காணாமல் போயிருந்தது.

அவன் வெளியே வந்ததும் அவளும் வந்திருக்க வேண்டியதுதானே..?

அவனுடன் இவளுக்கு என்ன பேச்சு..?

அவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள்.

என்னுடைய வாழ்க்கையின் சொந்தக்காரி அவள் என எண்ணிக்கொண்டவனின் மனம் அவளை நினைத்து உருகி வழிந்தது.

ஆம் இவ்வளவு நாட்களும் அவனைக் குழப்பிக் கொண்டிருந்த கேள்விகளுக்கான விடையை தெள்ளத் தெளிவாக இன்று அறிந்து கொண்டான் அவன்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது செந்தூரியின் மீது அந்த சரவிளக்கு விழுந்து விடுமோ என அவன் எண்ணிப் பதறிய நொடியையும், அந்த விளக்கு நேரே அவள் மீது விழப்போன நொடியையும் அவனால் வாழ்க்கையில் எப்போதும் மறக்கவே முடியாது.

எங்கே தன்னவளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என அவனுடைய மனம் பதறித் துடிக்க தன்னுயிரே போனாலும் பரவாயில்லை என குறுக்கே பாய்ந்திருந்தான் அவன்.

அவனுடைய கரத்தில் பட்ட காயமோ, அவனுக்கு வரவிருந்த ஆபத்தோ, ஏன் சுற்றி நின்ற அனைவரும் அவனை வியந்து பார்த்த விதமோ எதையுமே அவன் அறியான்.

அவன் அறிந்ததெல்லாம் அவனுடைய தூரியை மட்டும் தான்.

அவள் நலமாக இருக்கின்றாளா..?

அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை தானே

கீழே விழுந்து நொறுங்கிய சரவிளக்குகளின் கண்ணாடித் துண்டுகள் அவளைக் காயப்படுத்தி விட்டனவோ

இந்த கேள்விகள் மட்டும் தான் அவனுக்குள் அக்கணம் ஓடிக்கொண்டிருந்தது.

அவனுடைய ஐம்புலன்களும் அவளுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்பதை அறிந்து கொண்டதன் பின்னரே அமைதி கண்டன.

அவள் நலமாக இருக்கின்றாள் என்பதை உணர்ந்த பின்னால்தான் அவனுடைய கரத்தில் காயம் ஏற்பட்டதே அவனுக்குத் தெரிந்தது.

உள்ளங்கையில் வலியை அதன் பின்னர்தான் உணர்ந்து கொண்டான் அந்த ஆண்மகன்.

உடலும் மனமும் ஒருத்திக்காக இந்த அளவு பதறுகின்றது என்றால் அதற்கு வேறு என்னதான் காரணமாக இருக்கக்கூடும்.

அப்படி என்றால் அவனுடைய உலகமாக அவள் மாறிப்போனாள் என்று தானே அர்த்தம்.

இத்தனை நாட்களும் எதற்காக செந்தூரியின் மீது மட்டும் மையல் தோன்றியது என்பது தெளிவாகப் புரிந்தது அவனுக்கு.

அவனுடைய உடலும் உள்ளமும் வேறு பெண்களை தவிர்த்து எதற்கு செந்தூரியை மட்டுமே நாடியது என்பதற்கு விடை கிடைத்துவிட்டது.

ஆம் அவன் அவளைக் காதலிக்கின்றான்.

உயிருக்கு உயிராக நேசிக்கின்றான்.

எப்படி

எப்போதிருந்து

ஏன்..

எதுவும் அவனுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை.

காட்டாற்று வெள்ளமாய் யாருக்கும் கட்டுப்படாத அவனுடைய மனம் சிறு பெண்ணவளின் சிரிப்பில் சிக்கித் தவிப்பதை உணர்ந்து கொண்டவனுக்கு உள்ளம் முழுவதும் தித்தித்தது.

இனி என் வாழ்க்கை முழுவதற்கும் அவள் மட்டுமே போதும் என்ற முடிவோடு அவன் நிமிர்ந்து பார்க்க அவளோ கௌதமின் அனுப்பில் அல்லவா அக்கணம் இருந்தாள்.

கொதித்துப் போனான்.

தனக்குச் சொந்தமானவளை இன்னொருவன் அணைப்பதா..? நெஞ்சமெல்லாம் அவனுக்கு எரிந்தது.

வலியை வெளியே காட்டி கண்ணீர் சிந்தும் பழக்கம் அவனுக்கு இல்லையே.

கோபத்தை ஆயுதமாக எடுத்துக்கொண்டான் அவன்.

அடுத்த நொடியே அந்த இடத்தை விட்டுக் காரில் ஏறியவனுக்கு கையில் வழிந்த உதிரம் பெரிதாகத் தெரியவில்லை

ஏன் அந்த நொடி அவனுடைய உயிர் போனால் கூட அவன் வேதனைப் பட்டிருக்க மாட்டான். அதைவிட செந்தூரி அவனுடைய கை வளைவுக்குள் நின்றதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை.

இதோ இப்போது கூட தனக்காக அவள் வந்திருக்கிறாள் என்றால் அந்த கௌதமனை அல்லவா அழைத்து வந்திருக்கிறாள்.

அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்கும்போது மனம் வெந்து வேகுகின்றதே.

இதை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியவில்லை அவனுக்கு.

என்ன நடந்தாலும் உலகமே அழிந்தாலும் அவன் ஒருபோதும் தன்னவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான்.

குறுக்கே எவன் வந்தாலும் கொலை செய்யவும் தயங்க மாட்டான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 102

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “46. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!