பூமி மங்கையைத் தேடி காதலோடு தழுவ காலையிலேயே தன்னுடைய பொற் கரங்களைப் பரப்பியிருந்தான் ஆதவன்.
அந்த அழகிய காதல் காலைப் பொழுதில் அரச மருத்துவமனையில் முகம் முழுவதும் ஏராளமான காயங்களுடன் மயக்கத்தில் படுத்துக் கிடந்தான் கௌதமன்.
சில நொடிகளில் அவனுடைய இமைகள் அசையத் தொடங்கின.
மெல்ல மெல்ல தன்னுடைய விழிகளைத் திறந்து தான் எங்கே இருக்கின்றோம் என்பதை உணர முயன்றவனுக்கு முகத்திலும் பின் தலையிலும் சுளீர் என்ற வலி சட்டென தாக்கியது.
“ஸ்ஸ் ஆஆஆ..” என முனகியவாறு தன்னுடைய ஒற்றைக் கரத்தை தூக்க முயன்றவன் வலியில் அதனை அசைக்க முடியாது மிகவும் சிரமப்பட்டான்.
என்னவாயிற்று எனக்கு என்ற அதிர்ச்சியில் சற்றே குனிந்து தன்னுடைய உடலை பார்த்தவனுக்கு கைகளிலும் கால்களிலும் போடப்பட்டிருந்த கட்டைப் பார்த்ததும்தான் நடந்தது நினைவுக்கு வர ஆரம்பித்தது.
செந்தூரி கொடுத்த சங்கிலியை அடகு வைப்பதற்கு சென்றபோது அது பல லட்சங்களுக்கு தகுதியானது என்பதை அறிந்து கொண்டவன் அதிர்ந்து போனான்.
தேவையான அளவு பணத்திற்கு மட்டும் அந்தச் சங்கிலியை அடகு வைத்துவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றவன் பில்லை செலுத்துவதற்கு பணத்தைக் கொடுக்க அங்கிருந்த பெண்ணோ “விநாயக் சார் அப்போவே ஆன்லைன்ல பில் பே பண்ணிட்டாரே..” என்ற பதிலே அவனுக்குக் கிடைத்தது.
சற்றே எரிச்சல் அடைந்தவன் இதை முதலே சொல்லியிருந்தால்தான் என்ன என அவனை மனதிற்குள் திட்டியவாறு மீண்டும் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு அடகு வைத்த கடைக்குச் சென்றவன் அந்தப் பணத்தைக் கொடுத்து அவளுடைய சங்கிலியை மீட்டு எடுத்தான்.
அந்தச் செயினை வாங்கி வைத்தவருக்கோ அதை கௌதமனிடம் கொடுப்பதற்கு சற்றும் விருப்பம் இல்லாதது போலவே முகத்தை வைத்திருக்க அதை பற்றி சிறிதும் கணக்கில் எடுக்காதவன் அந்தச் செயினை எடுத்துக்கொண்டு தன்னுடைய பைக் நிறுத்தி இருந்த இடத்துக்கு நடந்தே வந்து சேர்ந்திருந்தான்.
பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்தவன் அவன் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சில மணி நேரத்தில் அவனுடைய வீட்டுக் கதவு படபடவெனத் தட்டப்பட்டது.
இந்த நேரத்தில் தன்னைத்தேடி யார் வந்திருக்கக்கூடும் என எண்ணியவாறு அவன் கதவைத் திறக்க திடகாத்திரமான கறுப்பு உடை அணிந்தவர்கள் அவன் சுதாரிக்கும் முன்னரே அவனுடைய வீட்டுக்குள் நுழைந்து கொண்டனர்.
“டேய் யாருடா நீங்க..? எதுக்காக உள்ள வந்துருக்கீங்க..?” என கௌதமன் கோபத்தில் கேட்க,
உள்ளே வந்த இரண்டு பேரில் முன்னே வந்து நின்ற ஒருவன் அவனை இழுத்து சுவற்றோடு அழுத்திக் கொண்டான்.
கௌதம் அசையாத வண்ணம் சுவற்றோடு அழுத்திக் கொண்டதும் மற்றையவன் அவனுடைய பர்ஸ் பாக்கெட் என ஒவ்வொன்றாகத் தேடத் தொடங்க இவனுக்கோ இவர்கள் திருடர்களா என்ற சந்தேகம் வலுத்தது.
“ஹே என்கிட்ட எதுவுமே இல்லடா.. என்ன விடுங்க.. நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் பணக்காரன் கிடையாது.. இங்க நீங்க எவ்வளவு தேடினாலும் பத்து பைசா தேறாது.. முதல்ல என்ன விடுங்க..” என அவன் கத்த அவனுடைய பாக்கெட்டினுள் இருந்து அந்த வைரச் சங்கிலியை எடுத்தான் ஒருவன்.
அவ்வளவுதான் பதறிப் போய்விட்டான் கௌதம்.
“ஹேய் அதைக் கொடுத்துடு.. அது என்னோடது இல்ல… என் ப்ரண்டோடது…” எனக் கத்தியவனுக்கு எங்கிருந்துதான் வேகம் வந்ததோ தன்னுடைய காலை உயர்த்தி தனக்கு எதிரே நின்றவனின் அடிவயிற்றில் மிதித்தவன் அவனுடைய கரத்தில் இருந்த சங்கிலியைப் பறித்து தன்னுடைய உள்ளங்கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.
“மரியாதையா வெளிய போங்க.. இல்லன்னா போலீஸ கூப்பிட வேண்டி வரும்..” என அவன் கத்த,
அவன் மிதித்ததில் வலியோடு தரையில் விழுந்தவனுக்கோ கௌதமின் மீது கொலை வெறி முகிழ்த்தது.
“டேய் ******* எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட பார்ட்னரையே அடிப்ப..” என்றவன் கௌதமின் முகத்தில் இடைவிடாது குத்தத் தொடங்க கீழே விழுந்து கிடந்தவனோ அவனுடைய வயிற்றில் எட்டி மிதித்தான்.
அவர்களுடைய கோபம் வெறியாக மாறி அவர்கள் இருவரும் சேர்ந்து கௌதமனை தாக்க தன்னால் முயன்ற அளவுக்கு அவர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தான் கௌதம்.
ஒரு கட்டத்தில் ஒருவன் கௌதமனைப் பிடித்துக் கொள்ள மற்றவன் அவனுடைய முகத்திலேயே மீண்டும் குத்தினான்.
மூக்கு உடைந்து இரத்தம் கொட்டத் தொடங்கியது.
“டேய் போதும்டா… செத்துடப் போறான்… அந்தச் செயினை எடுத்துட்டுப் போயிடலாம்…” என மற்றவன் கூற,
அடி வாங்கியவனுக்கோ அவனை அவ்வளவு எளிதில் விட்டுவிட சிறிதும் விருப்பமில்லை.
இவன் எப்படி என்னை மிதிக்கலாம் என்ற ஆத்திரத்தில் அவனுடைய தோள் புறத்திலும் ஓங்கிக் குத்தினான் அவன்.
மற்றையவன் அந்தச் செயினை வாங்குவதிலேயே குறியாக இருக்க அவ்வளவு அடி வாங்கியும் அவன் தன்னுடைய கரத்தை விரிக்கவே இல்லை.
அவன் கரத்தை விரித்தால் செந்தூரியின் விலை உயர்ந்த சங்கிலியை இவர்கள் திருடிக் கொள்வார்களே..
அவனை நம்பியல்லவா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கொடுத்துவிட்டுச் சென்றாள்.
இதை தொலைத்தால் எப்படி அவளுடைய முகத்தில் விழிப்பது..?
என்ன ஆனாலும் இந்தக் கயவர்களிடம் அதைக் கொடுத்து விடக்கூடாது என்ற உறுதியே அவனை இன்னும் அடி வாங்க வைத்தது.
தனியாக அவனும் எவ்வளவு நேரம்தான் போராட முடியும்.?
ஒரு கட்டத்தில் நிற்க முடியாது அவனுடைய கால்கள் துவண்டு சரிய தரையில் விழுந்தவனின் கரத்தைப் பிய்த்து எடுத்து விடுவது போல இருவரும் மாறி மாறி இழுக்க அவனுடைய கரத்தில் வழிந்த உதிரமோ அந்த வைரச் சங்கிலியை நனைத்தது.
“இவனைஐஐஐ…” என பல்லைக் கடித்த அந்தத் தடிமாட்டு தாண்டவராயனோ அருகே இருந்த நாற்காலியைத் தூக்கி கீழே விழுந்து கிடந்த கௌதமனின் பின் தலையில் ஓங்கி அடிக்க அவ்வளவுதான் அவனுடைய அத்தனை போராட்டமும் முடிவுக்கு வந்தது.
சுயநினைவின்றி அவன் அப்படியே மயங்கி விட அதன் பின்னர் அவனுடைய கரத்துக்குள் பத்திரமாக பதுங்கி இருந்த அந்த வைரச் சங்கிலியை எடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கவே இல்லை.
“வாடா இந்த வேலையை முடிச்சுக் கொடுத்தா நாலு லட்சம் கிடைக்கும்.. சீக்கிரமா இத பாஸ்கிட்ட கொடுத்துடலாம்..” என்றவர்கள் அடிபட்டுக் கிடந்தவனை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட உதிரம் வழிந்து ஓட உதவுவதற்கு யாருமே இன்றி தரையில் கிடந்தான் அந்தப் பாவப்பட்ட ஆண்மகன்.
வழமையாக மாலை நேரத்தில் அவனுடன் வீடியோ கேம் விளையாட வரும் பக்கத்து வீட்டுச் சிறுவன் வந்து பார்த்துதான் கௌதமன் நிலை மற்றவர்களுக்குத் தெரிய வந்தது.
அந்தச் சிறுவனின் தந்தையோ உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்ப்பித்து விட இதோ ஒரு நாள் முழுவதும் மயக்கத்தில் இருந்து இப்போதுதான் தன்னுடைய விழிகளைத் திறந்திருக்கிறான் அவன்.
உடல் முழுவதும் அப்படி ஒரு வலி.
எழுந்து நடக்க முடியுமா என்பதே அவனுக்கு சந்தேகமாக இருந்தது.
அவன் கண் விழித்ததை உறுதி செய்து கொண்ட தாதி சில கேள்விகளை அவனிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு வெளியே சென்றுவிட,
அவனை மருத்துவமனையில் சேர்த்த அந்த சிறுவனின் தந்தை குமார் அவனைப் பார்ப்பதற்காக உள்ளே வந்தார்.
“எப்படிப்பா இருக்க…?”
“பரவால்ல அண்ணா..” என்றவனுக்கு முகம் வலியில் சுருங்கியது.
“என்னாச்சு தம்பி..? என்னோட பையன் வந்து சொல்லித்தான் உனக்கு அடிபட்டுருக்குன்னே எனக்கு தெரியும்.. யார் உன்ன போட்டு இப்படி அடிச்சது..? அவனுங்கள சும்மாவே விடக்கூடாது… போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்…” என அவர் கூற அவனுக்கோ தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.
அந்த நொடியில் கூட செந்தூரியிடம் என்ன பதில் சொல்லப் போகின்றோம் என தவித்துப் போனான் அவன்.
“உன்னோட முகம் முழுக்க இப்படி ரணமா இருக்கே தம்பி..” என வேதனைப் பட்டார் அந்த நல்ல மனிதர்.
“தேங்க்ஸ் அண்ணா.. என்ன ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இப்பவும் பார்க்க வந்ததுக்கு ரொம்ப நன்றி..” என அவன் கூற,
“இதுல என்னப்பா இருக்கு..? மறக்காம போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடு.. என் பொண்டாட்டி உனக்கு இட்லி கொடுத்து விட்டா.. உன்னால சாப்பிட முடியுமா..? இல்ல நான் எடுத்துக் கொடுக்கவா…?” என அவர் அக்கறையாகக் கேட்க,
“இல்லண்ணா நானே சாப்பிடுறேன்.. நான் சொல்ற நம்பருக்கு கால் மட்டும் எடுத்துக் கொடுக்க முடியுமா..? ப்ளீஸ்…” எனப் பேசத் தடுமாறியவாறு அவன் கேட்க,
“தாராளமா..” என்றவர் அவன் கூறிய இலக்ங்களை தன்னுடைய அலைபேசியில் அழுத்தி அவனுடைய கரத்தில் ஃபோனைக் கொடுத்தார்.
ஒரு கரத்தை அவனால் அசைக்கவே முடியவில்லை. மற்றைய கரத்தால் அவருடைய அலைபேசியை வாங்கி காதில் வைத்தவன் மறுபுறத்தில் அழைப்பு ஏற்கும் நொடிக்காக காத்திருந்தான்.
சற்று நேரத்தில் அந்த அழைப்பு ஏற்கப்பட்ட “ஹலோ யார் நீங்க..?” என்ற செந்தூரியின் குரலைக் கேட்டதும்தான் இவனுக்கு சற்றே உடலில் பலம் வந்தது போல இருந்தது.
“சிந்து நா.. நான் கௌ.. கௌதம் பேசுறேன் டி.. ஸ்ஸ்… என்னால ரொம்ப பேச முடியாது… உன்னால எப்போ ஜி எச்சுக்கு வர முடியுமா..?” என தடுமாறிய குரலில் கரகரப்பாக அவன் பேச அவனுடைய குரலில் தெரிந்த வித்தியாசத்தில் நடுங்கித்தான் போனாள் அவள்.
“இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க இருப்பேன்..” என அழுகையை அடக்கிய குரலில் கூறியவள் அடுத்த நொடி விநாயக்கிடம் கூடக் கூறாது தன்னிடம் இருந்த சொற்ப பணத்தை எடுத்துக்கொண்டு வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியே வந்து ஆட்டோ ஒன்றைப் பிடித்து ஜிஎச்ஐ நோக்கி செல்லத் தொடங்கினாள்.
பேசி முடித்துவிட்டு அலைபேசியை குமாரிடம் கொடுத்தவன்,
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. இனி நான் பார்த்துக்கிறேன்.. நீங்க வேலைக்குக் கிளம்புங்க..” எனக் கூறியதும் “பாத்துக்கோப்பா.. எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு.. உன்னோட போன் எங்க..?” எனக் கேட்டார் அவர்.
“அது என் வீட்லதான் இருக்கு அண்ணா..”
“சரிப்பா நான் மதியம் வரும்போது எடுத்துட்டு வரேன்..” என்றவர் அங்கிருந்து சென்றார்.
யார் அவர்கள்..?
அவர்களுக்கு எப்படி என்னிடம் அந்தச் சங்கிலி இருப்பது தெரிந்தது..?
தெரிந்துதான் வந்தார்களா..?
தெரியாமல் வந்து திருடி விட்டார்களா..?
வெகுவாக அவனால் சிந்திக்க முடியவில்லை.
உடலில் இருந்த காயங்கள் அவனைப் படுத்தி எடுத்தன.
சற்று நேரம் விழிகளை மூடிப் படுத்தவன் அவன் எப்போதும் விரும்பும் அவளுடைய தோழியின் நறுமணம் அந்த அறைக்குள் வீச மெல்ல தன்னுடைய விழிகளைத் திறந்து பார்த்தான்.
ஆம் அது அவள்தான்.
கௌதமன் எந்த அறைக்குள் இருக்கிறான் என்பதைக் கேட்டு விசாரித்து அங்கே வந்து சேர்ந்தவளுக்கு உடல் முழுவதும் காயங்களோடு படுத்திருந்த கௌதமனைக் கண்டதும் தலை சுற்றி விட்டது.
தன்னுடைய மெல்லிய கரங்களால் வாயை மூடியவள் அதிர்ந்து போய் வாசலிலேயே நின்றுவிட அவளை விழிகளால் அருகே அழைத்தான் அவன்.
“ஐயோ கௌதம்.. உனக்கு என்னடா ஆச்சு..?” என்ற கதறலோடு அவன் அருகே ஓடி வந்தவள் அவனைத் தொட முயன்றவள் உடல் முழுவதும் காயத்தோடும் முகம் சிதைந்த வண்ணமும் அவன் கிடப்பதைக் கண்டு வாய்விட்டு கதறி விட அவளுடைய கழுத்தில் கிடந்த அதே வைரச் சங்கிலியைக் கண்டு உடல் விறைத்துப் போனான் கௌதமன்.
ஓற்றைச் சங்கிலி அவர்களுடைய தலை எழுத்தை மாற்றுமா..?
ஆம்..
அது அவர்களுடைய தலை எழுத்தை தலைகீழாக மாற்றப் போகின்றது.
💜🔥💜
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 89
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,114
3 thoughts on “49. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”
Super sis
Super sis 💕
பாவம் கௌதம் இனி எப்படி நடிக்க முடியும்