சொர்க்கம் – 50
கௌதம் எதைக் காப்பாற்ற அவ்வளவு போராடினானோ அது அழகாக செந்தூரியின் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுடல் இறுகி விறைத்தது.
சில நிமிடங்கள் என்ன நடக்கின்றது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வளவு நேரமும் யாரோ திருடர்கள்தான் தன்னை அடித்து விட்டு அந்தச் சங்கிலியை எடுத்துச் சென்று விட்டார்கள் என எண்ணியிருக்க,
அதைக் கழுத்தில் சுமந்தவாறு செந்தூரி வந்ததைக் கண்டதும் அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
தனக்கு அநியாயம் நேர்ந்து விட்டதோ என எண்ணத் தொடங்கிவிட்டது அவனுடைய மனம்.
அவனுடைய மனதின் போக்கை பற்றி அறியாது அழுது கொண்டிருந்தாள் செந்தூரி.
“ஐயோ இப்படி போட்டு அடிச்சு வச்சிருக்காங்களே…” என அவள் வேதனையோடு அழ,
“எல்லாம் இந்த செயினுக்காகத்தானே..?” என இறுகிய குரலில் கேட்டான் கௌதமன்.
சடாரென அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அப்போதுதான் சில விடயங்கள் புரிந்தது.
“உ.. உன்ன அடிச்சிட்டுத்தான் இந்தச் செயினை எடுத்துட்டு வந்தாங்களா…?” என அவள் அதிர்ச்சியோடு கேட்க,
“இந்தச் செயினை கொண்டு வரச் சொன்னது விநாயக்கா..?” என இறுகிப்போன குரலில் கேட்டான் கௌதம்.
“ஆமா கௌதம்… அவனோட ஆளுங்களை அனுப்பி இந்த செயினை கொண்டு வந்தான்.. இத என்கிட்ட கொடுக்கும்போதுதான் எனக்கே தெரியும்…”
“ஓஹ்…”
“நான் உனக்கு நிறைய தடவை கால் பண்ணினேன்.. நீ கால் பிக்கப் பண்ணவே இல்ல.. இந்த செயின்ல ரத்தம் வேற இருந்துச்சு.. நான் எவ்வளவு துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா..?
உனக்கு ஏதாவது ஆயிருச்சோன்னு மறுபடியும் மறுபடியும் கால் பண்ணிட்டே இருந்தேன்.. கடைசி வரைக்கும் உன்கிட்ட இருந்து அதுக்கு பதிலே கிடைக்கல..” என்றவள் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“சாரி கௌதம்.. விநாயக் இவ்வளவு மோசமா நடந்துப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. என்கிட்ட செயினை மட்டும்தான் எடுத்துட்டு வர சொன்னேன்னு பொ.. பொய் சொல்லிட்டான்…” என்றவளுக்கு வேதனையில் உள்ளம் துடித்தது.
“உங்க ரெண்டு பேருக்கும் இந்த செயின் இவ்வளவு முக்கியம்னா எதுக்காக இதை என்கிட்ட கொடுத்த..?” ஆற்றாமையுடன் கௌதம் கேட்டு விட அவளுக்கோ பதில் பேச முடியவில்லை.
சீற்ற மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டவன் தனக்கு நடந்த அநியாயத்தை ஒன்று விடாமல் கூற உடைந்து போனாள் அவள்.
“சத்தியமா எனக்கு இப்படி எல்லாம் ஆகும்னு தெரியாது கௌதம்… நான் கேட்கும் போது செயினை மட்டும்தான் வாங்கிட்டு வரச் சொன்னேன்னு சொன்னான்.. ஆனா உன்ன இவ்ளோ மோசமா ட்ரீட் பண்ணிருக்கானே.. சே இவன் எல்லாம் என்ன மனுஷன்..? ஏன் இப்படி இருக்கான்னு தெரியல.. நிச்சயமா கடவுள் அவனுக்கு தண்டனை கொடுப்பார்..” என அவள் அழுகையோடு கூறிக் கொண்டிருந்த கணம் அந்த அறைக்குள் நுழைந்தார் சக்கரவர்த்தி.
அவரை அங்கே கண்டதும் இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
“வாங்க சார்..” என்றவள் சற்று விலகி நிற்க,
கௌதம் இவர் ஏன் இங்கே வந்தார் என்ற கேள்வியோடு சக்கரவர்த்தியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இப்போ எப்படிப்பா இருக்கு.?”
“ஏதோ இருக்கேன் சார்..” என விரக்தியாகக் கூறினான் அவன்.
“சரியாயிடும் வருத்தப்படாத..”
“ம்ம்… நீங்க ஏன் சார் என்னத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க..?” என கௌதம் கேட்டதும் பெருமூச்சோடு அவனைப் பார்த்தவர்,
“நேற்று ஈவ்னிங் உனக்கு ஷுட் இருந்தத நீ மறந்துட்டியா..? எத்தனையோ தடவை உனக்கு கால் பண்ணிப் பார்த்தேன்.. உன்கிட்ட இருந்து எந்த பதிலும் கிடைக்கல.. நீ இல்லாம அடுத்த சீன் ஷுட் பண்ணவும் முடியாது.. அதனாலதான் உன்னோட வீட்டுக்குத் தேடிப் போனேன்.. உன்னோட நைய்பர்ஸ் உனக்கு அடிபட்டு இருக்கிறதா சொன்னாங்க.. அதுதான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்..” என்றார் சக்கரவர்த்தி.
“சா.. சாரி சார்.. நான் நேத்து முழுக்க ஹாஸ்பிடல்ல இருந்தேன்.. என் போன் என்கிட்ட இல்ல.. இருந்திருந்தா கண்டிப்பா கால் அட்டென்ட் பண்ணி உங்களுக்கு சொல்லி இருப்பேன் சாரி…” எனத் தடுமாறியவாறு கூறினான் அவன்.
“இட்ஸ் ஓகே பா.. நீ உன்னோட ஹெல்த்த பாத்துக்கோ.. ஹெல்த்தான் முக்கியம்.. இப்போதைக்கு உன்னால படத்துல நடிக்க முடியாது.. உன்னோட கேரக்டருக்கு வேற யாரையும் நான் போட்டுக்கிறேன்..” என்றவர் எழுந்து கொள்ள அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
‘சார் நான் சீக்கிரமே குணமாகி வந்துடுவேன் சார்… ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..” என அழுது விடுபவன் போல கெஞ்சினான் கௌதம்.
பெருமூச்சோடு அவனை நெருங்கியவர் “உன்னோட ஒரு பக்க கன்னம் ரொம்ப டேமேஜ் ஆயிருக்கு… அழகும் திறமையும் உன்கிட்ட இருந்ததாலதான் உனக்கு வாய்ப்புக் கொடுத்தேன்.. ஆனா இந்த முகத்தோட எப்படி உன்னால இனி சினிமால நடிக்க முடியும்..? நீயே உன்னோட முகத்தை கண்ணாடில பாரு. நான் சொல்றது சரியா பிழையான்னு உனக்கே புரியும்.. உன்னை வருத்தப்பட வைக்கணும்னு நான் இத சொல்லல கௌதம்… பட் இதுதான் நிதர்சனம்..
சினிமாவப் பொறுத்த வரைக்கும் அழகு முக்கியம்.. அந்த கேரக்டருக்கு இனி நீ சரியா வரமாட்ட.. கவலைப்படாத நீ முழுசா குணமானதும் உன்னோட இந்த தழும்பெல்லாம் மறைஞ்சுதுன்னா நானே என்னோட வேற படத்துல உனக்கு சான்ஸ் தரேன்..” என்றவர் அவனுக்காக வாங்கி வந்த சில பழங்ளைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட இடிந்து போனான் கௌதம்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அவளுக்கும் இதயத்தில் இடியை இறக்கினாற் போலத்தான் இருந்தது.
எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள் செந்தூரி.
அனைத்தும் தன்னால் தானோ என்ற குற்ற உணர்ச்சி அவளை வாட்டத் தொடங்கியது.
அவள் மட்டும் விநாயக்கிற்கு உதவ அழைக்காமல் இருந்திருந்தால் இன்று இவன் நன்றாக இருந்திருப்பானே.
இவனுக்குப் பட வாய்ப்பு இல்லாமல் போயிருக்காது அல்லவா..?
அவனுடைய இலட்சியம் கனவு அனைத்தும் இந்தப் படத்தில் நடிப்பதில் அல்லவா இருக்கின்றது.
ஆனால் என்னால் அனைத்தும் தவிடு பொடி ஆகிவிட்டதே.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கௌதமைப் பார்த்தவள்,
“எல்லாத்துக்கும் நான்தான் காரணம்ல..? எ… என்ன மன்னிச்சிடுடா.. ப்ளீஸ்..” என மன்னிப்பை வேண்டினாள்.
அவனோ எதுவும் பேசவில்லை.
இறுகிப் போனவனாய் விழிகளை மூடிப் படுத்திருந்தான்.
அவனுடைய இலட்சியம் கனவு எல்லாம் ஒரே நொடியில் தவிடு பொடியாகி விட்டதல்லவா..?
இந்த இடத்திற்கு வருவதற்கு அவன் எவ்வளவு போராடி இருப்பான்..?
எத்தனை முறை எத்தனை இயக்குனர்களின் கால்களில் விழாத குறையாக வாய்ப்புக் கேட்டிருப்பான்.
அவனுடைய கடின உழைப்பை ஒருவனுடைய திமிர் முறியடித்து விட்டதல்லவா..?
உதிரம் கொதித்தது அவனுக்கு.
மிகச் சிரமப்பட்டு மெல்ல எழுந்து கொண்டவன் அருகே இருந்த ஜன்னல் கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தைப் பார்த்தான்.
தன் முகத்தைப் பார்த்ததும் அவனுக்கோ ஓவென கதற வேண்டும் போல இருந்தது.
நிற்க முடியாது அந்தக் கட்டிலின் விளிம்பைப் பிடித்துக் கொண்டவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்தது.
“நான் என்ன தப்பு பண்ணேன்..? யாருக்கும் எந்த பாவமும் நினைக்காத எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது..?” என அவன் வாய் விட்டுக் கதறி விட நொறுங்கிப் போனாள் செந்தூரி.
தன்னைப் பிடித்துக் கொண்ட சாபம் தன்னுடைய தோழனாக இருந்த ஒரே காரணத்துக்காக அவனுக்கும் தொற்றிக் கொண்டதோ..?
நெஞ்சம் நொறுங்கியது.
“நீ அழாத கௌதம்.. இது எல்லாத்துக்குமே கடவுள் கண்டிப்பா அவனுக்கு தண்டனை கொடுப்பாரு.. ப்ளீஸ் நீ அழாத..” என வேதனையோடு கூறியவளின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டவன்,
“கடவுள் தண்டனை கொடுப்பாரா..? எப்படி நம்புற..? சொல்லு எந்த தப்புமே பண்ணாத நீ அவன்கிட்ட மாட்டிகிட்டு எவ்வளவு கஷ்டப்படுற.. உன்னோட கஷ்டத்தை பார்த்த கடவுள் இப்போ வரைக்கும் மனசு இறங்கினாரா..? இல்லையே.. இதோ மனசால கூட நான் யாருக்கும் பாவம் நினைச்சதே இல்லை.. நான் என்ன தப்பு பண்ணினேன்..? ஆனா எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை…? இதுக்கப்புறமும் அவர் அவனைத் தண்டிப்பாருன்னு நினைக்கிறியா..?” ஆதங்கத்துடன் வெளிவந்தன அவனுடைய வார்த்தைகள்.
“இ… இப்போ இல்லைன்னாலும்..”
“ப்ச்.. ஸ்டாப் இட் சிந்து.. இந்தக் கடவுள் எல்லாம் பொய்… இனி நான் அந்தக் கடவுள நம்பப் போறதே கிடையாது..”
அவனுடைய விரக்திப் பேச்சில் அவளுக்கோ மனம் நொந்தது.
“அப்போ என்னதான் பண்றது..? நம்மளாலதான் எதுவுமே பண்ண முடியலையே.. கடவுள் தண்டிக்கட்டும்னு அவர் மேல பார்த்த போட்டுட்டு நாம நம்மளோட வாழ்க்கையை பார்க்க வேண்டியதுதான் கௌதம்.. சீக்கிரமே எல்லாம் சரியாயிடும்.. நீ கவலைப்படாத..” என்றவளின் கரத்தை இன்னும் அழுத்திப் பிடித்தவன்,
“முடியாது சிந்து… இந்த முறை நான் அவன சும்மா விடுறதா இல்ல..
வலின்னா என்ன..? வேதனைன்னா என்ன..? வாழ்க்கைன்னா என்னன்னு அவனுக்கும் புரியணும்.”
உறுதியான முடிவை எடுத்து விட்டாற் போல இருந்தது அவனுடைய பேச்சு.
“நல்ல போ.. போலீஸா பார்த்து கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா..?” எனக் கேட்டாள் அவள்.
“அவனுங்க அவன் கொடுக்கிற காச வாங்கிட்டு எலும்பத் தூக்குற நாய் மாதிரி அவன் பின்னாடியேதான் நிப்பாங்க.. இதெல்லாம் அவனுக்கு தண்டனையா இருக்காது செந்தூரி.”
“வேற என்னதான் பண்றது..? அவன எதிர்த்து நிக்க நம்ம கிட்ட எந்தப் பவரும் கிடையாது கௌதம்… புரிஞ்சுக்கோ.. நாம ரொம்ப கேவலமா தோத்து போயிருவோம்.. நாம அவனுக்கு எதிரா செயல்பட நினைக்கிறோம்னு அவனுக்குத் தெரிஞ்சாலே நம்மள பூண்டோட அழிச்சிடுவான்..” என்றாள் அவள்.
“நோ… நீ நினைச்சா முடியும்… எஸ் நீ நினைச்சா நாம அவனை ஈஸியா பழிவாங்கலாம் சிந்து… அதுக்கு உன்னோட உதவி எனக்குத் தேவை.. எனக்காக நான் கேட்கிற உதவியை நீ பண்ணுவியா..?” எனக் கேட்டான் கௌதம்.
“நான் கேட்காமலேயே எனக்காக நீ எவ்வளவோ பண்ணி இருக்க.. இப்போ என்னாலதான் உனக்கு இவ்வளவு பிரச்சனையும்.. நீ என்ன கேட்டாலும் நான் சத்தியமா பண்ணிக் கொடுப்பேன் கௌதம்.. எப்பவுமே நான் உனக்கு சப்போர்ட்டா உன் கூடவே இருப்பேன்..” என்றவளை விரிந்த புன்னகையுடன் பார்த்தவன்,
“விநாயக்கோட வீக்னெஸ் நீதான்..” என்றான்.
“எ.. என்னது நானா..?” திகைத்து விட்டாள் அவள்.
“ஆமா.. நீயேதான்.. விநாயக் உன்ன லவ் பண்றான்.. என்னோட கெஸ் சரியா இருந்தா இன்னும் கொஞ்ச நாள்ல உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கேட்பான்னு நினைக்கிறேன்..” என்றதும் அவளுக்கு மேனி படபடத்தது.
அவன்தான் திருமணத்திற்கு கேட்டு விட்டானே.
உள்ளம் பதைபதைக்க,
“இ.. இல்ல நீ சொல்ற மாதிரி எல்லாம் இருக்காது.. அவன் ஒன்னும் என்னைக் காதலிக்கல..” என உடனடியாக மறுத்தாள் அவள்.
“நீ அவன தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க சிந்து.. அவனோட ஒவ்வொரு பார்வையும் உன்னை பார்க்குற விதமே சரியில்ல.. உன்கிட்ட நான் பேசினாலே அவ்வளவு கோபப்படுறான்.. உனக்காக உன் மேல விழ இருந்த லைட்ட தள்ளிவிட்டு காப்பாத்தினான்…
இப்போ கூட அந்தச் செயினை உன்னோட கழுத்துலதான் போடக் கொடுத்திருக்கான்.. இதெல்லாம் பார்த்தா அவன் உன்ன லவ் பண்றான்னுதான் தோணுது.. நிச்சயமா இது காதலா இருந்தா காதலோட வலி என்னன்னு அவனுக்குக் காட்டினாலே போதும்.”
“ஐயோ நீ என்ன பேசுறன்னே எனக்குப் புரியல.. தெளிவா சொல்லு இப்போ என்னதான் பண்ணனும்..?” என சோர்வோடு கேட்டாள் அவள்.
“அவனோட காதல் தோக்கணும்னா நீ என்ன கல்யாணம் பண்ணிக்கணும்.. அதப் பார்த்து அவன் தினம் தினம் துடிக்கணும்.. அவனோட ஆசை நிறைவேறக் கூடாது.. நான் உன்கிட்ட பேசினாலே அவனுக்கு பிடிக்கலைல..? இனி தினமும் நீ என்கூட மட்டும்தான் இருக்கப் போறேன்னு தெரிஞ்சா அவனுடைய முகம் எப்படி மாறிப் போகும்னு பாக்குறதுக்கு நான் ரொம்ப ஆவலா இருக்கேன்..” என கூறிக் கொண்டிருந்த கௌதமை விக்கித்துப் போய் பார்த்தாள் செந்தூரி.
💜🔥💜
கமெண்ட் ப்ளீஸ்
Super and intresting sis
இது என்ன பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆகி போன கதையா இருக்கு