சொர்க்கம் – 51
நாம் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு ஆயுதங்களை விட மிகுந்த சக்தி இருக்கிறது.
அவை சில நொடிகளில் ஒருவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.
சில நொடிகளில் ஒருவரின் மனதை உடைத்து நொறுக்கி விடும்.
வாளே இன்றி போர் புரிந்து விடும் ஆற்றல் வார்த்தைகளுக்கு உண்டெனில் அது மிகையல்ல.
கௌதமனின் வார்த்தைகளைக் கேட்ட செந்தூரிக்கும் அப்படிப்பட்ட நிலை தான்.
விநாயக் தவறு செய்திருக்கிறான்.
தவறே செய்யாமல் கௌதம் தண்டிக்கப்பட்டிருக்கிறான்.
சரிதான் ஆனால் தண்டனையை இறைவன் தானே கொடுக்க வேண்டும்..?
நாம் அவற்றை கையில் எடுத்துக் கொள்வது சரியா..?
ஒருவருக்கு ஒருவர் பழி வாங்குவது எனக் கிளம்பி விட்டால் வாழ்க்கையில் நிம்மதி எங்கே நிலைத்து விடப் போகின்றது..?
அவனுக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லாமல் அல்லவா போய்விடும்.
அதுவும் கௌதமனைத் திருமணம் செய்து கொள்வதா..?
அவளைப் பொறுத்தவரை அவன் நல்ல ஒரு நண்பன் மட்டுமே.
அவளால் எப்படி அவனைத் திருமணம் செய்து கொள்ள முடியும்..?
அதுவும் விநாயக்கிடம் நெருக்கமாக இருந்துவிட்டு இவனைத் திருமணம் செய்ய அவளால் ஒருபோதும் முடியாது அல்லவா.?
வேதனையுடன் கௌதமனைப் பார்த்தாள் செந்தூரி.
அவனுடைய காயம் கண்ட மனமே அவனை இப்படி எல்லாம் பேச வைக்கின்றது.
இவன் கூறுவதைப் போல விநாயக் நிஜமாகவே என்னை காதலித்து இருந்தால்..?
ஒருவேளை அதனால்தான் என்னைத் திருமணம் செய்யக் கேட்டானோ..?
தலை வெடித்து விடும் போல இருந்தது அவளுக்கு.
“இதெல்லாம் சரியா வரும்னு தோணல கௌதம்.. நாம எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்..? நாம இப்போ வரைக்கும் நல்ல பிரண்ட்ஸ்ஸாதான இருக்கோம்.. நம்ம நட்புக்கு அர்த்தமே இல்லாம போயிடுமே..” என்றவளுக்கு இதழ்கள் அழுகையில் துடித்தன.
“நான் உன்கிட்ட எந்த தப்பான நோக்கத்திலையும் என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கல சிந்து.. நான் எப்பவுமே உனக்கு ஒரு நல்ல கார்டியனா மட்டும்தான் இருப்பேன்.. உன்னை இந்த சாக்கடையில் இருந்து சீக்கிரமா வெளியே எடுக்கணும்..
நீ வெளிய வந்தா நிறைய கழுகுகள் உன்னை மொய்க்கும்… கல்யாணம்கிற பாதுகாப்பு வளையத்தை என்னால உனக்கு கொடுக்க முடியும்.. அதே நேரம் நம்ம எதிரிய பழி வாங்கின மாதிரியும் இருக்கும்.. அதனால தான் கேட்டேன்.. தயவு செஞ்சு என்ன தப்பா நினைச்சுடாத..” என்றான் அவன்.
அவனுக்கு எப்படி சொல்லிப் புரிய வைப்பது எனத் தடுமாறினாள் செந்தூரி.
“நான் உன்கிட்ட இதுவரைக்கும் எதுவுமே கேட்டதில்லை செந்தூரி.. முதல் முறையா இது ஒன்னுதான் கேட்டுருக்கேன்.. எனக்காக இத நீ பண்ணுவியா..?” எனக் கேட்டதும் உடைந்து போனாள் அவள்.
இனி எப்படி மறுப்பது..?
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து விட்டது.
என்னதான் விநாயக் அவளைத் தவறாகப் பயன்படுத்தி இருந்தாலும் கூட அவனுடைய நெருக்கத்தை மட்டுமே ஏற்றுப் பழகியவளுக்கு வேறு யாரையும் தன்னுடைய கணவனாக சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை.
“கௌதம் உனக்கு சில விஷயங்கள் தெரியாது.. எங்களுக்குள்ள தப்பா எதுவுமே நடக்கல.. ஆனா அ.. அவன் என்ன முழுசா பாத்… ப்ச்… எல்லாத்தையும் உன்கிட்ட ஓபனா என்னால பேச முடியாது கௌதம்.. சில நேரம் அவன் கூட நெருக்கமா இருந்திருக்கேன்.. என்னால் தவிர்க்க முடியலை.. என்ன தப்பா நினைச்சுக்காத.. இப்படி எல்லாம் இருந்துட்டு என்னால வேற ஒருத்தரை கல்யாணம் பண்றத நினைச்சுக் கூடப் பாக்க முடியல..” என்றவளின் கரத்தை அழுத்திக் கொடுத்தான் அவன்.
அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் விநாயக்கை அடித்துக் கொல்ல வேண்டும் போல வெறியே எழுந்தது கௌதமிற்கு.
ஒரு பெண்ணாக அவளுடைய மனம் என்ன பாடுபடும் என்பதை உணர்ந்து அவன் உள்ளம் மருகியது.
“அந்த பொறம்போக்கு உன்ன இவ்வளவு கஷ்டப் படுத்திட்டான்ல..? நாம அப்படி அவனுக்கு என்ன பாவம் பண்ணிட்டோம்..? இல்ல சிந்து அவன சும்மா விடக்கூடாது.. அவனை சும்மா விடவே கூடாது.. அவன் பண்ண பாவத்துக்கு வலிய அனுபவிச்சே ஆகணும்..” பிடிவாதமாக நின்றான் அவன்.
அவனுடைய விழிகளில் தெரிந்த பழிவெறியைக் கண்டவள் விக்கித்துப் போனாள்.
இதே பார்வையைத் தானே அன்று விநாயக்கின் விழிகளிலும் கண்டாள்.
இந்தப் பழிவாங்கும் படலம் எல்லாம் எப்போது முடிவுக்கு வரும்..?
“சிந்து ஏன் அமைதியா இருக்க..?”
“ஒருவேளை விநாயக் என்ன காதலிக்கலைன்னா நீ நினைச்சது நடக்காதே..?”
“எனக்கு ஹன்ரட் பர்சன் தெரியும் சிந்து.. அவனுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.. அதனாலதான் உன்ன அவன் கூடவே வெச்சிருக்கான்.. செட்ல யாருமே உன்கிட்ட தப்பா நடந்துக்க கூடாதுன்னு நீ இல்லாத நேரத்துல ஒரு தடவை எல்லார் முன்னாடியும் மிரட்டிட்டுப் போனான்.. அவனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை உனக்கும் கொடுக்கணும்னு சொன்னான்..” என்றதும் அதிர்ந்து போனாள் அவள்.
இதெல்லாம் எப்போது நடந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.
“நீ அவனுக்கு கிடைக்கவே கூடாது..” என்றவன் சட்டென தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“சிந்து நீயும் அவனைக் காதலிக்கிறியா..? அவன் கூட வாழணும்னு ஆசைப்படுறியா..? உன் மனசுல அப்படி ஏதாவது ஆசை இருந்தா இப்பவே சொல்லிடு.. இது எல்லாத்தையும் இப்போவே நிறுத்திடலாம்..” எனக் கேட்டான் கௌதமன்.
அவள் விநாயக்கை காதலிக்கிறாளா..?
சிறுபிள்ளை போல மலங்க மலங்க விழித்தாள் அவள்.
தெரியவில்லையே..!!
இப்போது கூட அவனுடைய மனம் வருத்தப்படும் விடயங்களில் ஈடுபட அவளுடைய மனம் விரும்புவதே இல்லையே.
ஒருவேளை இது காதலாகத்தான் இருக்குமோ..?
இல்லை அப்படியெல்லாம் இல்லை.
கிட்டத்தட்ட என்னைக் கட்டம் கட்டித் தூக்கி வந்தவன் மீது எனக்கு எப்படிக் காதல் வரும்..?
அவன் மீது இருப்பதெல்லாம் வெறுப்பு மட்டுமே என எண்ணியவள் கௌதமனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தாள்.
அதன் பின்னர்தான் நிம்மதியாக மூச்சு விட்டான் அவன்.
“இனி நீதான் முடிவு சொல்லணும்..”
“என்ன சொல்லணும் கௌதம்..?”
“என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு சந்தோஷப்படுவேன்..”
“நீ என்னை லவ் பண்ணினா..? என்ன கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படுறியா..? இல்ல என் மேல பரிதாபப்பட்டு எனக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு நினைக்கிறியா..?” என அவள் கேட்டுவிட அவளை அதிர்ந்து பார்த்தவன் மறுப்பாக தலையசைத்தான்.
“ஏய் அப்படி எல்லாம் எந்த எண்ணமும் எனக்கு இதுவரைக்கும் வந்ததே இல்லடி.. ஆனா நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. வாழ்க்கை முழுக்க நீ என் கூட வர்றதா இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்..” என்றான் அவன்.
அவனுடைய பதிலை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை.
“கௌதம் நாம வேணும்னா கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி நடிக்கலாம்.. விநாயக்கை பழி வாங்குறதுதானே உன்னோட நோக்கம்..? கோவில்ல எனக்கு நானே தாலியைக் கட்டிக்கிறேன்.. ரெண்டு பேரும் ஜோடியா நின்னு போட்டோ எடுத்துக்கலாம்.. அந்த போட்டோ எடுத்து அவனுக்கு அனுப்பி வச்சிடு.. நீ ஆசைப்பட்டது நடந்திரும்..”
“ஆனா எத்தனை நாளைக்கு நம்மளால நடிக்க முடியும்..?”
“முடிஞ்ச அளவுக்கு நடிக்கலாம் கௌதம்.. இப்போ என்னால நிஜமான கல்யாணத்தைப் பத்தி எல்லாம் நினைச்சுக் கூடப் பாக்க முடியல.. முதல்ல நான் விநாயக் வீட்ல இருந்து வெளியே வரணும்.. கொஞ்சம் தனியா இருந்து நிறைய யோசிக்கணும்.. அதுக்கப்புறமாதான் என்னால ஒரு முடிவுக்கு வர முடியும்..”
“இட்ஸ் ஓகே சிந்து.. நீ சொன்ன மாதிரியே பண்ணலாம்.. உனக்கு நீயே தாலிய கட்டிக்கோ.. கொஞ்ச நாளைக்கு இதுவே தொடரட்டும்.. உன்னோட மனசு மாறினா சொல்லு.. நானே உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்றவனை கண்ணீரோடு பார்த்தவளுக்கு தனியாக இருக்க வேண்டும் போல இருந்தது.
“உண்மைய சொல்லணும்னா எனக்கு பழி வாங்குறதுல எல்லாம் கொஞ்சம் கூட விருப்பமே இல்ல கெளதம்.. ஆனா நான் உனக்கு வாக்கு கொடுத்துருக்கேன்.. நீ என்ன கேட்டாலும் உனக்கு பண்ணுவேன்னு உன்கிட்ட சத்தியம் பண்ணிருக்கேன்.. அதனாலதான் இதுக்கு ஒத்துக்கிறேன்..” என்றவளின் கூந்தலை ஒதுக்கி விட்டவன் “ரொம்ப கஷ்டமா இருக்குடி..” என்றான்.
“என்னோட வாழ்க்கையே போயிருச்சுல்ல.. இனி இந்த முகம் பழையபடி மாறிடுமா..?” என வேதனையைத் தாங்கிக் கேட்டவனைப் பார்க்க முடியாது விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள் அவள்.
“எல்லாமே சரியாயிடும்டா.. கவலைப்படாத…” என அவனுக்கு ஆறுதலை மட்டும்தான் அவளால் கொடுக்க முடிந்தது.
அருகே இருந்த இட்லி பார்சலைப் பார்த்தவள் அதைப் பிரித்து உணவைப் பிசைந்து அவனுக்கு ஊட்டத் தொடங்கி விட்டாள்.
முதலில் வேண்டாம் என மறுத்தவன் பின்பு மௌனமாக அவள் கொடுத்த உணவை உண்டான்.
எதுவுமே ருசிக்கவில்லை அவனுக்கு.
“கைல ரொம்ப அடிபட்டுருக்கு.. நான் போனதுக்கு அப்புறம் எப்படி சாப்பிடுவ..?”
“குமார் அண்ணா வருவாங்க.. என் ஃபோனை எடுத்துட்டு வரச் சொல்லிருக்கேன்.. நீ என்ன பத்தி யோசிக்காத..”
“ம்ம்….”
“என்னால நடக்க முடிஞ்சதுக்கு அப்புறமா நான் உனக்கு கால் பண்றேன்.. அப்போ நீ நான் சொல்ற கோவிலுக்கு வந்துடு.. அங்க வச்சு நம்ம பிளான நடத்தி முடிச்சிடலாம்..”
“சரி..” என்றாள் அவள்.
மனம் வெகுவாக சோர்ந்து போனது.
அவனுக்கு உணவை ஊட்டி முடித்துவிட்டு அவனுக்குத் தேவையான பொருட்களை அருகில் இருந்த மேஜையின் மீது எடுத்து வைத்தவள் நேரத்தைப் பார்த்தாள்.
அவள் அங்கே வந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.
விடியே எழுந்ததும் இங்கே வந்துவிட்டிருந்தாள்.
இவ்வளவு நேரமும் அவளைக் காணாது விநாயக் தேடத் தொடங்கி இருப்பானே.
“கௌதம் நான் இப்போ கிளம்பணும்.. இதுக்கு மேல லேட் பண்ணா அடுத்த பிரச்சனையும் நாமதான் ஃபேஸ் பண்ண வேண்டி வரும்.. நான் ரொம்ப டயர்ட் ஆயிட்டேன் கௌதம்.. என்னால முடியல.. நான் போகட்டுமா..?” எனக் கேட்டவளைப் பார்த்தவனுக்கு உள்ளம் வேதனையில் தத்தளித்தது
அவளுடைய அனைத்து சோகத்தையும் ஒட்டுமொத்தமாக துடைத்து விட வேண்டும் போல அவனுடைய உள்ளம் பரபரத்தது.
“கவலைப்படாதடி.. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இந்த கஷ்டம் எல்லாம்.. அதுக்கு அப்புறமா என்கிட்ட வந்துரு.. நான் உன்ன நல்லா பாத்துக்குறேன்.. யோசிக்காத.. எல்லா பிரச்சினையும் சீக்கிரமா சரியாயிடும்.. நானும் சீக்கிரமா சரியாக ட்ரை பண்றேன்.. அடுத்த படத்துலயாவது நடிக்கணும்..” என்றவனைப் பார்த்து அவளுக்கு உள்ளம் உருகிப் போனது.
என்னைப் பற்றி கவலைப்படும் ஒரே ஒரு நண்பன்.
இவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என எண்ணிக் கொண்டவள் அவனிடம் தலையசைத்து விடை பெற்றாள்.
“கவனமா போயிட்டு வா சிந்து..”
“ம்ம்..”
“எதுல போவ..?”
“ஆட்டோதான்..” என மென்மையாகச் சிரித்தாள் அவள்.
“கைல பணம் வச்சிருக்கியா..?”
“ம்ம் இருக்குடா..”
“சரி பத்திரமா போயிட்டு வா..” என்றான் அவன்.
அதற்கு மேலும் தாமதித்தால் விபரீதமாகிப் போய்விடும் என எண்ணியவள் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்
அடக்கி வைத்த அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
அவளுடைய வாழ்க்கையில் சுயமாக அவளால் எப்போதுதான் முடிவெடுக்க முடியும்.?
அலைகளின் மத்தியில் தள்ளாடியபடி இழுத்துச் செல்லப்படும் படகை போல் அல்லவா அவளுடைய நிலை இருக்கின்றது.
ஓரிடத்தில் நிலையாக அவளால் நிற்க முடியவில்லை. ஒவ்வொருவரின் இழுப்புக்கும் ஏற்றவாறு அல்லவா அசைந்து கொண்டிருக்கிறாள்.
வழிந்த கண்ணீரை வேகமாகத் துடைத்தவள் வெளியே வந்த ஆட்டோ ஒன்றில் ஏறிக் கொண்டாள்.
அக்கணம் அவளுடைய மனமோ “கடவுளே விநாயக் என்னைக் காதலிக்கக் கூடாது.. நான் யாரையும் காயப்படுத்த விரும்பல.. என்னால யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது.. கௌதமும் கஷ்டப்படக்கூடாது விநாயக்கும் வேதனைப் படக்கூடாது..” என மனமுருக வேண்டிக் கொண்டவளைப் பார்த்து விதியை மாற்றி எழுத முடியாது என்பதைப் போல புன்னகைத்தார் அந்தக் கடவுள்.
Super and intresting sis 💞