52. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.6
(144)

சொர்க்கம் – 52

காலையில் தாமதமாக விழித்துக் கொண்ட விநாயக்கின் பார்வையோ தன் அருகே படுத்திருந்த தூரியைக் காணும் பொருட்டு ஆவலுடன் படுக்கையை அலசியது.

அவள் படுத்திருந்த இடம் வெறுமையாக இருக்க ‘நேரத்துக்கே எழுந்துட்டாளா..?’ என எண்ணியவாறு படுக்கையில் எழுந்து அமர்ந்தவன் அந்த அறை முழுவதும் தன்னுடைய பார்வையை சுழற்றினான்.

“பேபிஇஇஇ..?”

“தூரி….? வேர் ஆர் யு..?”

அவளை அழைத்தவன் அவளுடைய சத்தம் எங்கும் இல்லாது போக எங்கே சென்று விட்டாள் என எண்ணியவாறு படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.

ஒருவேளை தோட்டத்தில் இருக்கிறாளோ..?

வாக்கிங் செய்வதாக பொய் கூறிவிட்டு அங்கே உள்ள பெஞ்சில் படுத்திருந்தாலும் படுத்திருப்பாள் என சிரித்தவாறு நினைத்துக் கொண்டவன் ஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்தவாறு வேகமாக தோட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

ஏனோ தெரியவில்லை அக்கணமே அவளைப் பார்த்து விட வேண்டும் போல இருந்தது அவனுக்கு.

நேராக அவள் தூங்கும் அந்த கல்பெஞ்ச் இருந்த இடத்தை நோக்கிச் சென்றவன் அதுவும் வெறுமையாக இருப்பதைக் கண்டு புருவம் சுருக்கினான்.

அங்கே நின்ற வேலையாட்களை அழைத்தவன் செந்தூரியைப் பற்றி வினவ இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செந்தூரி இங்கிருந்து சென்றதைப் பற்றிக் கூறினான் காவலாளி.

“வாட் வெளிய போயிட்டாளா..? என்கிட்ட இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே.. எங்க போனா..?”

முகம் இறுக நின்றவன் சற்றே தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த செந்தூரியைக் கண்டதும் அமைதியானான்.

அவனுடைய விழிகள் பொறுமை இன்றி அவளை மொய்த்தன.

சாதாரண சுடிதார்தான் அணிந்திருந்தாள். முகத்தில் எந்தவிதமான ஒப்பனையும் இருக்கவில்லை.

ஆனால் இவள் மட்டும் எப்படி பேரழகியாக ஜொலிக்கின்றாள்..?

விந்தைதான்.

அவளோ ஆட்டோவில் இருந்து இறங்கி தோட்டத்து வழிப் பாதையாக உள்ளே நடந்து வந்து கொண்டிருக்க அவளை நோக்கி அவனும் சென்றவன் “காலையிலேயே எங்க போயிட்டு வர்ற..?” எனக் கேட்டான்.

“நான் எங்கேயும் போகக் கூடாதா..?” எதிர் கேள்வி கேட்டாள் அவள்.

“நான் உன்னை எங்கேயும் போகக் கூடாதுன்னு சொல்லவே இல்லையே.. ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாமே..?”

“நீங்க தூங்கிட்டு இருந்தீங்க.. அதனாலதான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைச்சேன்..”

என்றவள் அவனைத் தாண்டி செல்ல அவளுடைய கரத்தைப் பிடித்து நிறுத்தியவன்,

“இப்போ நீ எங்க போய்ட்டு வர்றேன்னு என்கிட்ட இன்னும் சொல்லலை..” என்க,

சலிப்போடு அவனைப் பார்த்தவள் “அப்பாவ பார்த்துட்டு வரேன்.. எல்லாத்துக்கும் உங்ககிட்ட பர்மிஷன் கேட்டு தான் பண்ணனுமா..?” எனக் கோபத்துடன் கேட்க,

“இங்கே இருக்கும் வரைக்கும் நீ என்கிட்ட கேட்டுதான் பண்ணனும்..” என்றவனின் குரல் மென்மையாகத்தான் வெளிவந்தது.

தான் கூறிய பொய்யை கண்டுபிடித்து விடுவானோ என உள்ளே படபடப்பு இருந்தாலும் வெளியே அதை மறைத்தவள் இயல்பாக இருப்பது போல அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறி விட்டு அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

“தூரி…”

அவளுடைய நடை நின்றது.

“இனி எங்கே போறதா இருந்தாலும் ட்ரைவரை உன் கூடவே அனுப்பி வைக்கிறேன்.. கார்லயே போயிட்டு வா.. தனியா எங்கேயும் போகாத.. ஜாக்கிரதை..” என்றவனின் குரலில் கசிந்த அக்கறை அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

“எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல இங்கே இருந்து போனதுக்கு அப்புறம் நான் தனியாதானே எல்லா இடத்துக்கும் போயாகணும்.. நான் இப்படி இருக்கிறதுதான் உங்களுக்கும் நல்லது.. எனக்கும் நல்லது..” என்றாள் அவள்.

“இஸ் இட்..? வாழ்க்கை முழுக்க நீ என்கூடதான் இருப்பேன்னு தோணுது…” என மையல் புன்னகையுடன் அவன் கூற அவளுக்கோ இதயம் நடுங்கித்தான் போனது.

“இ… இல்ல..” திணறினாள் அவள்.

“ஹேய் கூல்.. ஏன் டென்ஷன் ஆகுற..?” என்றவன் அவளுடைய கரத்தைப் பிடித்து அங்கே பூத்திருந்த ரோஜா தோட்டத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.

அங்கே இருந்த ரோஜா செடிகள் யாவும் இடுப்பளவு உயரத்திற்கு வளர்ந்து ஒவ்வொரு வண்ணங்களில் அழகாக பூத்திருக்க அவற்றைப் பார்த்தவளின் மனம் சற்றே மாறியது.

“ரொம்ப அழகா இருக்குல..?” என தன்னை மறந்து கூறியவளின் பின்னே மிக நெருக்கமாக வந்து நின்றவன்,

அவளைப் பின்னால் இருந்து மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“உன்ன விட இங்க எதுவுமே அழகா இல்லைடி..” என்றவனின் உதடுகள் அவளுடைய பின் கழுத்தில் அழுத்தமாகப் புதைந்தன.

உடல் இறுகிப் போய் நின்றாள் அவள்.

என்ன உரிமையில் என்னை முத்தமிட்டான் இவன்..?

ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது அவளுக்கு.

“இவ்ளோ நாளா நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல.. அது எல்லாத்தையும் சரி பண்ணனும்னு நினைக்கிறேன் தூரி..” என்றவனின் கரங்கள் அவளுடைய இடையில் தவழத் தொடங்கின.

அவனுடைய கரங்களை ஒதுக்கிவிட்டு விலகியவள் “நீங்க எதுக்காக இப்படி எல்லாம் பண்றீங்க..? நீங்க இப்படி பண்றது பேசுறது எதுவுமே எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. என்ன பழிவாங்கத்தானே இங்க அழைச்சிட்டு வந்தீங்க..? அப்படியே இருந்திடுங்க.. இப்படி நல்லவர் மாதிரி என்கிட்ட பிஹேவ் பண்ணாதீங்க…” என்றவளை வியப்பாகப் பார்த்தான் அவன்.

“என்னாச்சு தூரி..? ஏதாவது பிரச்சனையா..?” என அவன் புருவங்களைச் சுருக்கியவாறு கேட்க, பிரச்சனையே நீதான் எனக் கத்த வேண்டும் போல இருந்தது அவளுக்கு.

ஒருவனை அந்த அடி அடித்து படுக்கையில் படுக்க வைத்து விட்டு சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் எப்படி இவனால் சாதாரணமாக பேச முடிகின்றது.

மருத்துவமனையில் நடக்க முடியாது படுத்திருக்கும் கௌதமன் நினைவு அவளுடைய முகத்தில் கோபத்தைத் தூண்டி விட்டது.

இருந்தும் அதைப்பற்றி இப்போது கேட்டால் கௌதமிற்கு வேறு ஏதும் பிரச்சனை வந்து விடுமோ எனப் பயந்தவள் எதுவும் கூறாது வாயை இறுக மூடிக்கொண்டு அமைதியாக நின்றாள்.

“செந்தூரி உன்கிட்ட தான் கேட்கிறேன்.. என்ன ஆச்சு..?” அதட்டலாகக் கேட்டான் அவன்.

“ஒன்னும் இல்லையே.. காலைலயே வெளியே போயிட்டு வந்தது ரொம்ப டயர்டா இருக்கு.. நான் போகட்டுமா..?” என அவள் கேட்க,

“சரி போ..” என்றான் அவன்.

திரும்பியும் பார்க்காது வேகமாக நடக்கத் தொடங்கியவளுக்கு அவன் தொட்ட இடமெல்லாம் குறுகுறுக்கத் தொடங்கி விட்டது.

அதே நேரம் தோட்டத்துப் பக்கம் செடிகளின் வளர்ச்சி ஒரு ஒழுங்குமுறை இல்லாது அதிகமாக வளர்ந்து இருப்பதைப் பார்த்தவன் தோட்டக்காரர்களை வரவழைத்து திட்டத் தொடங்கினான்.

செந்தூரியோ பல்கனியில் வந்து நின்று கொண்டவள் தான் செய்யப்போவது சரியா பிழையா என மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினாள்.

அழுகை அழுகையாக வந்தது.

அந்த பல்கனியின் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள் தன் முகத்தை மூடிக்கொண்டு சத்தமின்றி அழத் தொடங்கி விட அவளுடைய விசும்பல் மட்டுமே அந்த பல்கனியில் எதிரொலிக்கத் தொடங்கியது.

விநாயக்கின் செயல் கௌதமனின் பேச்சு இரண்டுமே அவளை உடைத்திருந்தது.

சற்று நேரத்தில் அறைக்கு வந்த விநாயக்கின் செவிகளில் அவளுடைய விசும்பல் ஒலி கேட்க,

நேரே பல்கனிக்கு வந்தவன் தரையில் அமர்ந்தவாறு அழுது கொண்டிருந்தவளைக் கேள்வியாகப் பார்த்தான்.

இன்று காலையில் இருந்து இவள் இப்படித்தானே இருக்கிறாள். என்ன நேர்ந்தது என எண்ணியவன்,

“என்னாச்சு உனக்கு..?” எனக் கேட்டான்.

அவனுடைய குரலில் அதிர்ந்து மிக வேகமாக தன்னுடைய கண்களைத் துடைத்துக் கொண்டவள் ஒன்றுமில்லை என்பது போல தலையை மறுப்பாக அசைத்து விட்டு எழுந்து நின்று கொண்டாள்.

“இவ்வளவு நேரம் சத்தமே இல்லாம தேம்பித் தேம்பி அழுதுட்டு தான இருந்த..? என்ன பிரச்சனைன்னு சொல்லு..” என மீண்டும் கேட்டான் அவன்.

“எனக்குப் பிடிக்கல.. இங்க இருக்கவே பிடிக்கல.. உங்கள பாக்கவோ பேசவோ புடிக்கல.. தெரியாம உங்கள அடிச்சதுக்கு இவ்வளவு நாளா என்னை வச்சு செஞ்சிட்டீங்கள்ல..?

இவ்வளவும் போதாதா..? இங்கிருந்து என்ன அனுப்பி விட்ருங்க விநாயக்.. என்னால நிம்மதியா இருக்க முடியல.. நிம்மதியா தூங்க முடியல.. ஒவ்வொரு நிமிஷமும் பயந்து பயந்து வாழ்ந்துட்டு இருக்கேன்..” மனதை மறையாமல் கூறி விட்டாள் அவள்.

அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் தொடர்ந்து பேசு என்பதைப் போல அசையாமல் நிற்க, அவளுக்கோ மீண்டும் கண்களில் குளம் கட்டியது.

“ப்ளீஸ் போதும் இத்தோட முடிச்சுக்கலாம்..” என்றவள் அவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு விட,

அவளுடைய கரத்தைப் பற்றி கீழே இறக்கியவன் “சரி உன்னோட ட்ரஸ் எல்லாம் பேக் பண்ணு.. நானே உங்க வீட்ல உன்னைக் கொண்டு போய் விடுறேன்..” என்றான் அவன்.

அவளுக்கோ அவனுடைய வார்த்தைகளை நம்பவே முடியவில்லை. நிஜமாகத்தான் சொல்கின்றானா?

இன்று முதல் அவளுக்கு விடுதலை கிடைக்கப் போகின்றதா..?

நம்ப முடியாமல் அவனைப் பார்க்க,

“நான் பொய் பேசுறது கிடையாது.. சொன்னா சொன்னதுதான்.. நீ அவ்ளோ கஷ்டப்பட்டு நீ இங்க இருக்க வேணாம்.. நான் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தது முறை இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. நீ போ.. நானே உன்னைத் தேடி வருவேன்.. நமக்கு இடைல இருக்க எல்லா கசப்பையும் நிச்சயமா மாத்துவேன்..” என்றவன் அவளை நெருங்கி அவளுடைய கண்ணீரைத் துடைத்து விட்டு அவளுடைய முகத்தை காதலாய் பார்த்தவன்,

“இனி என் முன்னாடி அழாதடி.. என் நெஞ்சுக்குள்ள என்னவோ பண்ணுற மாதிரி இருக்கு.. நீ என்ன ரொம்பவே மாத்திட்ட தூரி.. சரி ஓகே ட்ரஸை பேக் பண்ணு..” என்றவன் அவளை விட்டு விலகி நிற்க,

வேகமாக அறைக்குள் நுழைந்தவள் தன்னுடைய ஆடைகளை எடுத்து அடுக்கத் தொடங்கினாள்.

அவள் எதிர்பார்த்த விடுதலை இவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என அவள் சிறிதம் எதிர்பார்க்கவில்லை.

உடனடியாக அவன் சம்மதித்ததும் தலையும் புரியாது காலும் புரியாது தடுமாறியவள் ஒருவாறாக ஆடைகளை அடுக்கி வைத்து விட்டு பையை தன்னுடைய தோளில் மாட்டியவள் கிளம்பலாம் எனும் விதமாக வேகமாக வந்து அவன் முன்னே நிற்க,

அடுத்த நொடி அவளை இழுத்து மிக மிக இறுக்கமாக அணைத்துக் கொண்டான் விநாயக்.

அதிர்ந்து திமிறியவளின் கன்னங்களைப் பற்றிக் கொண்டவன் அவளுடைய சிவந்த இதழ்களை வேகமாக கவ்விக் கொண்டான்.

இன்று இரவு அவளைப் பிரிய வேண்டுமே என்ற வேதனை அக்கணம் முதல் அவனை அரிக்கத் தொடங்கியிருந்தது.

அவளுடைய வீட்டில் பேசி கூடிய சீக்கிரமே திருமணத்தை முடித்து அவளை தன்னுடனேயே அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தவன் அவளுடைய இதழ்களை மிக மென்மையாக ருசித்த பின்பே அவளை விட்டு விலகினான்.

உறைந்து போய் நின்றாள் அவள்.

அவளுடைய இதயம் பலமாகத் துடிக்கும் ஓசை பல மைல் தூரங்களுக்கு அப்பாலும் கேட்கும் போல இருந்தது.

உடல் முழுவதும் சிவந்து போனது.

இதழ்களில் உணர்ந்த ஈரத்தை உணர்ந்து தடுமாறியவளின் உதடுகளை தன் விரலால் அழுத்தமாக துடைத்து விட்டவன் “நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் பேபி..” என கரகரப்பான குரலில் கூறினான்.

“போ.. போகலாமா..?” எனக் கேட்டவளின் குரல் கம்மியது.

“வா..” என்றவன் முன்னே நடக்க அந்த நரகத்தை விட்டு வெளியேறப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியில் அவன் பின்னாலேயே சென்றாள் அவள்.

இத்தனை நாட்கள் கிடைக்காத விடுதலை இன்று அவளுக்கு கிடைத்து விட்டிருந்தது.

💜🔥💜

70 star ⭐ ratings வந்தால் இன்னைக்கு இன்னொரு எபிசோட் போடுறேன் தங்கம்ஸ்..

டீலா..?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 144

No votes so far! Be the first to rate this post.

1 thought on “52. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!