இன்னிசை -16

4.5
(4)

இன்னிசை- 16

” ஐயோ!மேனகா மா… எதுக்கு அந்த பக்கம் போறீங்க? அங்கன போகாதீங்கம்மா.”என்ற லட்சுமியும் அவள் பின்னே ஓடினாள்.

அவள் பேச்சு மேனகாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தாள்.

” மேனகாமா சொன்னா கேளுங்க. அங்கன தானே புலி சத்தம் கேட்குது. கூறுக்கெட்டத்தனமா அங்கன போறீங்க.” என்ற லட்சுமியும் அவளுக்கு பின்னே ஓடினாள்.

” ஐயோ லட்சு கா. அங்க முருகன் இருக்கான்.” என்று திரும்பிப் பார்க்காமல் கூறினாள்.

” முருகனுக்கு அங்கிருந்து எப்படி தப்பிக்கணும்னு தெரியும். நீங்க வாங்க மா.” என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள் லட்சுமி.

” அக்கா… அங்க நம்ம பட்டுவும் இருக்கு கா.” என்றவளின் பயத்தை, இப்போது லட்சுமியும் உணர்ந்தாள்.

 இவர்கள் இருவரும் ஓடுவதைப் பார்த்து, அவர்களுக்கு பின்னே வந்த பொன்னம்பாளும் பதறினார்.

இவர்கள் அங்கு சென்று பார்த்த காட்சி அவர்கள் மூவரையும் உறைய செய்தது. இதைப் போல் பல நிகழ்வுகளை சர்வசாதாரணமாக கண்டிருந்த பொன்னாம்பாளும், லட்சுமியும் கூட மூளை மரத்துப் போய் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சமைந்து நின்றனர்.

 அங்கு முருகன் பயத்துடனும், அவனது கையிலிருந்த பட்டு என்கின்ற ஒரு வயதான குழந்தை கைக் கொட்டி சிரித்துக் கொண்டும் இருக்க, அவர்களுக்கு அருகே ஆட்கொல்லி புலி உறுமிக் கொண்டிருந்தது.

 ஒரு நொடியில் அடுத்து என்ன செய்வது என்பதை முடிவெடுத்துக் கொண்டாள் மேனகா.

புலியின் கவனத்தை திருப்புவதற்காக சத்தமிட்டு கொண்டு பக்கவாட்டில் ஓடினாள். புலியும் தனது பார்வையை திருப்ப, பொன்னம்பாளுக்கு சுரணை வந்தது. படக்கென்று முருகனையும், பட்டுவையும் வேகமாக இழுத்துக் கொண்டு அவர்களது குடில் இருக்கும் பக்கம் ஓடினார்.

 லட்சுமியோ மேனகாவை தனியே விடாமல், அவள் கூடவே ஓடியிருந்தாள்.

 அதனால் மேனகாவை லட்சுமி பார்த்துக் கொள்வாள் என்ற நிம்மதியுடனே பொன்னம்மாள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு ஆட்களை திரட்டிக் கொண்டு வந்தார். ஆனால்???

**********

  வேகமாக ஓடிய லட்சுமியும் மேனகாவுடன் சேர்ந்துக் கொண்டாள்.

” மேனகாமா… ஓடிக்கிட்டே இருந்தா அது துரத்திக்கிட்டே சீக்கிரம் நம்மக் கிட்ட வந்துடும். அதோ அங்கன தெரியுதே அந்த மரத்து மேல ஏறுங்க மா. நான் அடுத்ததுல ஏறிக்கிறேன்.” என்றாள் லட்சுமி.

மேனகாவும், சூழ்நிலையை புரிந்துக் கொண்டு வேகமாக மரத்தில் ஏறினாள். எல்லாம் லட்சுமி கற்றுக் கொடுத்தது தான். அவள் பின்னே ஏற முயன்ற லட்சுமியோ, கால் எதிலோ இடறி கீழே விழுந்தாள். ஒரு நொடி தான்.

” ஐயோ!” என்ற மேனகாவின் குரல் வெளிவருவதற்குள், புலி லட்சுமியை கவ்விக் கொண்டது.

 குழந்தைகளை பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு ஆட்களை திரட்டிக் கொண்டு பொன்னம்மாள் வருவதற்குள் காரியம் கை மீறி சென்றிருந்தது. புலி லட்சுமியை சிறு தூரம் இழுத்துச் சென்றிருக்க. மேனகாவோ அவளை காப்பதற்காக கீழே குதித்திருந்தாள். அவளது காலோ பிசகியிருந்தது.

 கம்பெடுத்து வந்த பழங்குடியினர் புலியை விரட்டியடிக்க… லட்சுமியோ குற்றுயிரும் குலையியுருமாக இருந்தாள்.

மெல்ல எழுந்த மேனகாவோ, காலை தரையில் ஊன, வலி உயிர் போனது. பல்லைக் கடித்துக் கொண்டு நடந்தாள். லட்சுமியை பார்க்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் நடந்து அங்கே சென்றாள்.

லட்சுமியோ, அங்கே அழுதுக் கொண்டிருந்தவர்களை எல்லாம் பார்க்கவில்லை. மேனாகாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மேனகாவிற்கோ லட்சுமியை பார்க்கவும் கண்களை இருட்டிக் கொண்டுவந்தது. உடலில் பல இடங்களில் இருந்து ரத்தமும், சதையுமாக தொங்கிக் கொண்டிருந்தது.

முகம் வெளுத்து உயிர் ஒடுங்கிக் கொண்டிருந்த லட்சுமியோ, “வனமோகினி…” என்று தீனமான குரலில் அழைத்தாள். அவள் என்ன

சொல்கிறாள் என்பது மற்றவர்களுக்கு புரியவில்லை. ஆனால் மேனகாவிற்கு புரிந்தது.

“வனமோகினின்னு கூப்பிடு லட்சுகா.”என்று அவள் பலமுறை லட்சுமியிடம் கூறியிருக்கிறாள்.

” போங்கம்மா… நீங்க பார்க்க வன மோகினியாட்டந்தான் இருக்கீக. ஆனா அப்படிலாம் கூப்பிட முடியாது. நீங்க எங்க குலத்தை வாழ வைக்க வந்த சாமி. மேனகாம்மானு தான் கூப்பிடுவேன்.” என்று மறுத்திருந்தாள். ஆனால் இன்று அவள் கேளாமலே, ” வனமோகினி.” என்று அழைத்திருக்க.

 மேனகாவோ வாய்விட்டு கதறினாள்.

மறுபடியும் தீனமான குரலில் லட்சுமி அழைக்க.

அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு லட்சுமியை பார்த்தாள்.

” பிள்ளைகள்… படிப்பு… வேலை…” என்று வார்த்தைகள் விட்டுவிட்டு ஒலிக்கும் போதே அவரது உயிர் பிரிந்தது.

மேனகாவின் கதறல் அந்த வனத்தையே அசைத்தது.’

கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்த பொன்னம்பாள், ” என் மருமக உயிரு போகுற நேரத்தில் கூட மேனகா பாப்பாட்ட என்ன சொல்லுச்சு தெரியுமா? புள்ளைங்களுக்கு சொல்லி கொடுக்க சொன்னுச்சு. எங்க புள்ளைங்க நல்லபடியா படிச்சு இந்த காட்டுல அதிகாரிகளா வரணும். இது ஒன்னு தான் என்னோட மருமக ஆசை.அதை மேனகா பொண்ணால்ல தான் நிறைவேத்த முடியும்னு நம்புச்சு. அந்த நம்பிக்கை எங்களுக்கு சும்மா ஒண்ணும் வந்துடலை. எங்க கூடவே இருந்து எங்க கஷ்ட நஷ்டத்தை எல்லாம் புரிஞ்சுகிட்டு, எங்க பிள்ளைகளுக்கு தினமும் பாடம் சொல்லிக் கொடுக்குது அந்த பிள்ளை. இப்பவும் கூட எங்க இடத்துக்கு வந்தா தான் லட்சுமியோட ஞாபகத்துல சொனங்கிப் போறான்னு, இங்கன வரவேணாம்னு சொல்லிட்டோம். ஆனா எங்க புள்ளைங்க அங்க வந்து பாடத்தை கத்துக்கிடுதுக. அதை தவிர நிறைய விஷயத்தையும் எங்க பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்துட்டு தான் இருக்குது. இதையெல்லாம் தெரிஞ்சுக்காமல் எங்களுக்கு நல்லது செய்யுற அந்த பிள்ளையை பத்தி குறை சொல்லி, எங்க கிட்ட இருந்து பிரிக்க பாக்குறீங்களா? அது மட்டும் எங்க உசுரு இருக்குற வரைக்கும் நடக்காது.” என்றார்.

” மா… மிஸ் மேனகா மேல லைட்டா சந்தேகம் இருந்தது. அதான் சொன்னேன்.”

” எதை வச்சு அப்படி சொன்னீங்க ஆஃபிஸர். அந்த புள்ள தங்கமானது. இனி இப்படி உளறிக்கிட்டு இங்கிட்டு வராதீக.”

” மன்னிச்சிடுங்க மா. இந்த காட்ல என்னென்னவோ நடந்துருக்கு. இனி வருங்காலத்தில் எதுவும் நடக்காமல் நான் பார்த்துக்குவேன். உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம என் கிட்ட கேளுங்க. அப்புறம் அரசாங்கம் தர உதவிப்பணத்தை வாங்கிக்கோங்க.”

” எங்க மோகினி சொல்லுச்சு, அந்த பணத்துல இங்குள்ள புள்ளைங்களுக்கு உபயோகப்படுற மாதிரி ஏதாவது செய்யலாம்னு சொல்லுச்சு. அதுக்கோசுறம் நான் வாங்கிக்கிறேன்.”

” ரொம்ப சந்தோஷம்மா. நான் அதுக்கான ப்ரொஸிஜரெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு உங்களை கூப்பிடுறேன்.” என்ற ஜீவாத்மன் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் உள்ளமோ மேனகாவை நினைத்து பெருமிதத்தில் தளும்பியது.

சற்று உற்சாகத்துடனே வீட்டிற்கு வந்தான். அங்கு ஆதிரனைப் பார்த்ததும் சற்று வடிந்தது.

அண்ணனின் உற்சாகத்தையும் பார்த்தான். பிறகு தென்பட்ட ஏமாற்றத்தையும் பார்த்தான்.

” என்னாச்சு அண்ணா?”

” ஒன்னுமில்லை.” என்ற ஜீவாத்மன் அங்கு நிற்காமல் அவனது அறைக்கு செல்ல.

” சொல்ல விருப்பமில்லைன்னா பரவாயில்லை. இப்போ எதுக்கு இப்படி பயந்து ஓடுற?”

” யார் பயந்து ஓடுறா? நானே இப்போ தான் வர்றேன். ரொம்ப டயர்டா இருக்கேன். உன்னோட இன்வெஸ்டிகேஷனுக்கு பதில் சொல்ல தெம்பு இல்லை. அதான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்.”

” எதையோ என்கிட்ட இருந்து மறைக்க பார்க்கிற. சரி விடு. உண்மை ஒரு நாள் வெளியில வந்து தான் ஆகணும். அது போகட்டும். அம்மா உனக்கு சாய்ந்திரத்தில் இருந்து ஃபோன் பண்ணிட்டே இருக்காங்க. நாட் ரீச்சபிள்னு வந்ததாம்? எங்க போன? ஏதாவது சொல்லிட்டு போறீயா? என்னை போட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க. அவங்க கிட்ட பேசு.” என்றவன், ஜீவாத்மனின் பதிலை எதிர்பார்க்காமல் நிர்மலாவிற்கு அழைத்திருந்தான். தம்பியை முறைத்துக் கொண்டே ஃபோனை வாங்கி பேசினான் ஜீவாத்மன்‌.

” ஹலோ மா.”

” எங்கடா போயிட்ட சாயங்காலத்திலிருந்து உனக்கு எத்தனை தடவை முயற்சி பண்ணேன் தெரியுமா?”

” மா… ஒரு தடவை கால் பண்ணிட்டு, லைன் கிடைக்கலைன்னா மெசேஜ் பண்ணியிருக்கலாமே. நானே கால் பண்ணியிருப்பேனே. எதுவும் முக்கியமான விஷயமா? அப்பா எல்லாம் நல்லா இருக்காங்க தானே?”

“அதெல்லாம் நல்லா இருக்காங்க உங்கப்பா.நான் ஒரு நல்ல விஷயத்தை பேசலாம்னு தான் பண்ணுனேன். உனக்கு ஒரு பொண்ணு பார்த்துட்டேன். அந்த பொண்ணும் உங்க டிபார்ட்மெண்டு தானாம். நீங்க வேலை பார்க்கிற அதே ஏரியா தானாம். நம்ம ஆதி கூட அந்த பொண்ணை பார்த்து இருக்கானாம். ரொம்ப நல்ல பொண்ணு. குணமான பொண்ணு. நல்லா சமைக்கும்னு வேற சொன்னான். உன் செல்லுக்கு அந்த பொண்ணோட ஃபோட்டோ, மத்த டீடெயில்ஸெல்லாம் அனுப்பி இருக்கேன். பார்த்துவிட்டு ஓகேன்னா சொல்லு. இந்த வாரமே போய் நிச்சயம் பண்ணிட்டு அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணிடலாம்.”என்றார் நிர்மலா.

” மா… கொஞ்சம் மெதுவா மா. எதுக்கு இப்படி மூச்சு வாங்க பேசிட்டு இருக்கீங்க. ஏதோ நீங்க அவசரப்படுற மாதிரியே தெரியுது. எனக்கு இப்ப கல்யாணத்துல இஷ்டமில்லை.”

” இப்ப பண்ணாமல் அறுபது வயசுலையா பண்ணுவாங்க

 எங்களுக்கும் வயசு ஆயிட்டு இருக்கு. என்னைக்கும் நாங்க நிரந்தரம் இல்லை. காலா காலத்தில் பேரன் பேத்தி எடுக்கணும்னு ஆசை இருக்காதா? ” என்று நிர்மலா ஆதங்கப்பட.

” மா… இப்படியெல்லாம் பேசாதீங்க.” என்ற ஜீவாத்மனின் குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

” எதுக்கு இப்படி டென்ஷனாகுற தம்பி ? இந்த பொண்ணோட ஜாதகம் உனக்கு அமோகமா பொருந்தி போகுது. இப்போ விட்டா அப்புறம் நமக்கு அமையாது. புரிஞ்சுக்கோ ஜீவா. ஃபோட்டோவை பாரு

 உனக்கு புடிக்கலைன்னா சொல்லு. நான் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்.” என்ற நிர்மலாவிடம், அதற்கு மேல் மறுக்க இயலாமல், ” சரி மா.” என்றான்.

” சரி ஜீவா. ஆதி கிட்ட போனை குடு.” என்ற நிர்மலா ஆதிரனிடம்,” டேய் ஆதி. முதல்ல உன் அண்ணனை போன்ல உள்ள போட்டோவை பார்க்க சொல்லு. பாத்துட்டு என்ன முடிவு எடுக்குறான்னு கேட்டு சொல்லு. கொஞ்சமாவது பொறுப்பா இருடா. எங்கேயாவது அண்ணணுக்கு கல்யாணம் ஆகணும்னு எண்ணமிருக்கா? ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ. உன் அண்ணணுக்கு கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம் தான் உனக்கு. இல்லைன்னா நீயும் இப்படியே இருக்க வேண்டியது தான் புரியுதா?”

” மா… அவன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நான் என்னம்மா அதுக்கு பண்ண முடியும். அதுக்கு எதுக்கு எனக்கு தண்டனை. நான் ஏன் பிரம்மச்சரியம் காக்கணும்? சொல்லு மா சொல்லு?”

“டேய் எரும என் கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ணாம அவனுக்கு சொல்லி புரிய வை.”

“அது சரி … அவன் என்ன பண்ணாலும் அதுக்கு நான் தான் காரணம். இருக்கட்டும் அவனுக்கு கல்யாணம் ஆகட்டும். அண்ணியோட சேர்ந்து அவனுக்கு இருக்குது.” என்று விட்டு ஃபோனை வைத்தான் ஆதிரன்.

 தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஜீவாத்மனுக்கருகே வந்து தொப்பென்று அமர்ந்தான் ஆதிரன்.

“டேய் அண்ணா போட்டோவ முதல்ல பாரு.”

“ப்ச்… அப்புறமா பார்க்கிறேன் டா.”

” இப்பவே பாரு. பார்க்குறதுல உனக்கு என்ன பிரச்சனை?”

” ப்ச்… ஒரே இம்சைடா.” என்ற ஜீவாத்மன், அவனது வாட்ஸ் அப்பை திறக்க.

அங்கு புடவையில் தேவதை போல் மேனகா சிரித்துக் கொண்டிருந்தாள். அந்த போட்டோவை பார்த்து நம்ப முடியாமல் மீண்டும் கண் சிமிட்டி பார்த்தான் ஜீவாத்மன். அங்கு லேசான வெட்க புன்னகையுடன் இருந்தது மேனகாவே தான். எப்பொழுதும் யூனிபார்மிலும், அரிதாக சுடிதாரில் மட்டுமே பார்த்திருக்க. புடவையில் பார்த்ததும் தன்னை மறந்து இருந்தான் ஜீவாத்மன்.

“ம்கூம்.” என்ற ஆதரனின் கணைப்பில் அப்பொழுதுதான் தம்பியை பார்த்தவன், “சாரி ஆதி. அம்மா கிட்ட இது சரி வராதுன்னு சொல்லிடு.”

” ஏன்ணா… இன்னும் நீ மேனகா மேல சந்தேகத்தோடத் தான் சுத்துறீயா?”

“இல்லை…”என்று தலையசைத்தவன், சற்று முன்பு பொன்னம்மாளை சந்தித்து மேனகாவை பற்றி அறிந்ததைக் கூற.

” அப்புறம் என்னண்ணா?”

” அது வந்து நீ…” என்று இழுக்க.

“ஹா…ஹா…” என்ற ஆதிரன் விழுந்து விழுந்து சிரிக்க.

“இப்போ எதுக்கு இப்படி பல் சுளுக்கிக்கிற மாதிரி சிரிக்கிற?” என்று தம்பியிடம் கடுப்படித்தான் ஜீவாத்மன்.

” டேய் அண்ணா… நோ டென்ஷன். நான் சும்மா உன்னை வெறுப்பேத்துனேன். மேனகா மேல எனக்கு எந்த இன்ட்ரெஸ்டும் இல்லை. அவங்க எனக்கு நல்ல ஃப்ரெண்ட் அவ்வளவு தான்.” என்று ஆதிரன் கூற.

ஜீவாத்மனின் முகம் வெட்கத்தில் மலர்ந்தது.

“அட… அண்ணனுக்கு வெட்கத்தைப் பாரு. சரி அம்மா கிட்ட உன் சம்மதத்தை சொல்லு. “

” நீயே சொல்லுடா.”என்று விட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் ஜீவாத்மன்.

அவனுக்கு உள்ளுக்குள் ஏகப்பட்ட யோசனை மேனகாவைப் பற்றி ஓடியது. ‘பொண்ணு பார்க்க தான் செல்லும் போது அவள் என்ன நினைப்பாள்.என்னை அவளுக்கு பிடிக்குமோ? இல்லை பிடிக்காதோ?’என்று யோசித்துக் கொண்டிருந்தவன்… முக்கியமான ஒன்றை மறந்து விட்டான். இருவருக்கும் இடையில் இருக்கும் ரிஷிவர்மன் என்றவனைத் தான். அவன் மறைந்தாலும் அவனால் ஏற்பட்ட விளைவுகள் அப்படியே தான் இருந்தது. அது அவர்கள் இருவருக்கும் இடையில் வெடிக்குமா? இல்லை புஸ்வானமாகுமோ?  

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!