சொர்க்கம் - 54
கௌதம் கூறியிருந்த கோயிலுக்கு வந்தவள் அங்கே தனக்காக அவன் காத்திருப்பதைக் கண்டதும் சிரிக்க முயன்று தோற்றாள்.
இது நிஜத் திருமணம் இல்லைதான்.
ஆனால் அவளுடைய மனம் படபடப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.
ஏதோ தவறாக நடக்கப் போகின்றதோ என அவளுடைய உள்ளம் நொடிக்கு ஒரு முறை மருகியது.
அவளை நோக்கி வேகமாக வந்த கௌதமனின் முகத்தில் இன்னும் காயங்கள் இருப்பதைக் கண்டவள் மீண்டும் குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனாள்.
எந்தக் காயமும் இல்லாத அழகாக இருந்த அவனுடைய முகம் சிதைந்ததற்கு அவளும் ஒரு காரணமாயிற்றே.
அவனுடைய இலட்சியம் கைநழுவிப் போனதுக்கும் அவள்தான் காரணம்.
அவளுடைய முகம் வாடுவதைப் பார்த்தவன்,
“என்னாச்சு சிந்து..?” என அக்கறையாகக் கேட்டான்.
இந்த அதீத அக்கறைதான் அவளை வெகுவாக தடுமாற வைத்தது.
“ஒன்னும் இல்ல.. கௌதம்.. நான் நல்லாதான் இருக்கேன்..” என்றவளை முழுமையாக ஒரு முறை பார்த்தவன்,
“வாவ் நீ புடவைல ரொம்ப அழகா இருக்க…” எனக் கூறினான்.
அக்கணம் விநாயக் அவளிடம் அடிக்கடி கூறும் வார்த்தைகள் அவளுடைய செவிகளில் மோதின.
‘நீ ரொம்ப அழகா இருக்க பேபி..’ இந்த வார்த்தைகளை அவன் நிறைய தடவை அவளிடம் கூறி இருக்கின்றானே.
சட்டென தன் தலையை உலுக்கிக் கொண்டவள் இப்போது எதற்காக அவனைப் பற்றி சிந்திக்கின்றோம் என தன்னையே கடிந்து கொண்டாள்.
அவன் கூட தன்னை இந்த இரண்டு நாட்களில் மறந்து போயிருப்பான்.
ஆனால் நான்தான் அங்கிருந்து வந்ததிலிருந்து அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேனோ..?
அவள் முகத்தின் முன்பு சொடக்கிட்டு அழைத்தான் கௌதம்.
“என்னடி பகல் கனவு காணுறியா..?” என அவன் சிரித்தவாறு கேட்க மீண்டும் தன்னுடைய கவனத்தை விநாயக்கிடமிருந்து திருப்பி கௌதமின் முகத்தில் நிலைக்கச் செய்தவள்,
“வீட்டு ஞாபகம் வந்திருச்சு..” என சமாளித்தாள்.
“சரி ஓகே.. என்ன முடிவெடுத்திருக்க..? நீ கட்டுறியா.. இல்ல நானே இந்தத் தாலியை உன் கழுத்துல கட்டட்டுமா..?” என தன் கரத்தில் இருந்த தாலிக்கயிற்றைக் காட்டியவாறு சிரித்தபடியே அவன் கேட்க அவனை முறைத்துப் பார்த்தாள் செந்தூரி.
“உனக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கா..? இது ஒன்னும் சின்ன விஷயம் இல்ல கௌதம்.. ப்ளீஸ் இப்படி விளையாடாத..” என சற்று கோபமாகக் கூறினாள் அவள்.
“சாரி சாரி… இனி இப்படி பண்ண மாட்டேன்..” என்றவன் அவளுடைய கரத்தில் அந்தத் தாலிக்கயிற்றை வைக்க அதை ஏந்தியவளுக்கு இதயம் அதிவேகமாகத் துடித்தது.
“கட்டிக்கோ..” என்றான் அவன்.
“சாமி கும்பிட்டுட்டு வரட்டுமா..?” எனக் கேட்டவளைப் பார்த்து அவன் சரியென தலையசைக்க அந்தத் தாலியை வைத்திருக்க முடியாது அவனிடமே கொடுத்துவிட்டு அங்கே இருந்த விநாயகரை மனம் உருக வேண்டிக் கொண்டாள் செந்தூரி.
இவருடைய பெயரைத்தானே அவன் வைத்திருக்கிறான்.
அவள் வீட்டை விட்டு வந்த பிறகும் அவளுடைய தந்தைக்கு மருத்துவ செலவை அவன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இந்தப் பணத்தை எல்லாம் எப்படியாவது திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என எண்ணியவளுக்கு அவளுடைய கழுத்தோடு உரசி உறவாடிக் கொண்டிருந்த வைரச் சங்கிலி மனதை உறுத்தியது.
இதையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
விநாயகரை வணங்க வந்து விட்டு விநாயக்கைப் பற்றி சிந்திக்கின்றோமே.
சே..!
அவனைப் பற்றிய சிந்தனைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தவள் தன்னுடைய வேண்டுதலை முடித்துவிட்டு மீண்டும் அவள் கௌதமனின் அருகே வந்தபோது அவளின் மனம் சற்று அமைதி அடைந்திருந்தது.
“இன்னும் கொஞ்ச நேரத்துல பூஜை ஆரம்பமாயிடும்… இனி நிறைய பேர் இங்கே வந்துடுவாங்க.. சீக்கிரமா அதுக்குள்ள நீ இதை உன்னோட கழுத்துல கட்டிடு..” என கௌதம் கூற மீண்டும் அந்தத் தாலியை கரங்கள் நடுங்க வாங்கிக் கொண்டவள் கண்கள் கலங்க தனக்குத்தானே அந்தத் தாலியைக் கட்டிக் கொண்டாள்.
ஏதோ மாபெரும் பிழை செய்தது போல அவளுடைய இதயம் தொண்டைக் குழியில் வந்து துடிக்கத் தொடங்கியது.
கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தைத் தொட்டது.
“இட்ஸ் ஓகே.. அவ்ளோதான்டி..”
“பயமா இருக்கு..”
“பயப்படாத.. எதுவுமே தப்பா நடக்காது.. நான் உன்ன கஷ்டப்படுத்திறேனா..?” என அவளுடைய கண்ணீரைக் கண்டு கவலை கொண்டவனாக கௌதம் கேட்க,
எந்தப் பதிலும் கூறாது மேலும் கண்ணீரை உகுத்தாள் அவள்.
அவளை மெல்ல அணைத்துக் கொண்டான் கௌதமன்.
“ப்ளீஸ்டி அழாத.. இதனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது.. இதுவும் நீ சினிமால நடிக்கிற ஒரு காட்சியா நினைச்சுக்கோ.. இதை பெருசா எடுத்து கவலைப்படாத…” என அவன் அவளை அணைத்து சமாதானப்படுத்த ‘கிளிக்..’ என புகைப்படம் எடுக்கும் சத்தம் அவர்கள் இருவரையும் திடுக்கிட வைத்தது.
சட்டென ஒருவரிடம் இருந்து மற்றவர் விலகி சுற்றி முற்றிலும் பார்க்க அங்கே யாரையும் காணவில்லை.
“யாரோ ஃபோட்டோ எடுத்த மாதிரி சத்தம் கேட்டுச்சுல்ல…?” பதறினாள் அவள்.
“எனக்கும் கேட்டுச்சு.. பட் யாரையும் காணோமே..” என்றவன் மீண்டும் அந்தக் கோயிலை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.
கோயிலில் பூஜை செய்யும் பூசாரியைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட கௌதம் “யாரும் இல்லடி..” என்றான்.
பின் தன்னுடைய ஃபோனை எடுத்து அவளுடன் இணைந்தவாறு செல்பி எடுத்துக் கொண்டான்.
“ஹேய் என்னடி முகத்த இப்படி வச்சிருக்க..? இந்த போட்டோவ பார்க்குறவன் நான் உன்னக் கடத்தி வந்து கல்யாணம் பண்ணிட்டேன்னு நினைக்கப் போறான்.. கொஞ்சம் சிரி.. அப்போ தானே அவன வெறுப்பேத்தி பார்க்க முடியும்..” என்றவனின் தலையில் நங்கென கொட்டியவள் “உன்ன மாதிரி ஒருத்தன பிரண்டா வச்சுட்டு நான் படுற பாடு இருக்கே… லூசுப் பயலே..” என அவனைத் திட்டிவிட்டு அவன் சொன்னது போலவே சிரிக்க அழகாக அவனுடைய அலைபேசியில் அந்தப் புகைப்படம் சேமிக்கப்பட்டது.
“நிஜமாவே இந்த போட்டோவ நீ விநாயக்கு அனுப்பப் போறியா..?”
“அடிப்பாவி இவ்வளவு தூரம் வந்து போட்டோ எடுத்ததே அவனுக்கு அனுப்பத்தானே..? ஏன்டி இப்படி கேக்குற..?”
“ஏதாவது பிரச்சனை பண்ணுவான்னு பயமா இருக்கு.. இப்போதான் எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டு நிம்மதியா வீட்ல இருக்கேன்… மறுபடியும் இன்னொரு பிரச்சனைன்னா என்னால தாங்கிக்க முடியாது கௌதம்..”
“அப்படியெல்லாம் எதுவும் ஆகாது.. நீ கவலைப்படாத.. நான் உன் கூடவே இருப்பேன்.. என்ன பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன்..” என அவளைச் சமாதானம் செய்தான் கௌதம்.
அமைதியாக இருந்தாள் அவள்.
இதற்கு மேல் இறைவன் விட்ட வழி என எண்ணியவள் அமைதியாக இருந்துவிட,
விநாயக்கின் தனிப்பட்ட அலைபேசி எண்ணை செந்தூரியிடம் இருந்து வாங்கியவன் வாட்ஸ்ஆப்பில் அவனுக்கு அவர்கள் எடுத்த செல்பியை அனுப்பி வைத்தான்.
போட்டோவை அனுப்பிவிட்டு சிந்துவைப் பார்த்து சிரித்தான் கௌதம்.
“இந்த போட்டோவைப் பார்த்ததும் அவனுடைய மூஞ்சி எப்படி மாறும்னு நேர்ல பார்க்க ஆசையா இருக்கு..” என்ற கௌதமைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்,
“எனக்கு என்னவோ நீதான் ரொம்ப எக்சைட் ஆகிறியோன்னு தோணுது.. இதெல்லாம் அவன் பெருசாவே எடுத்துக்க மாட்டான்..”
“நோ… நீ சொல்ற மாதிரி நடக்க சான்சே இல்ல.. என்னோட கெஸ் சரியா இருந்தா இப்பவே உன்னோட ஃபோனுக்கு கால் வரும் பாரேன்..” என்றான் அவன்.
நேரம் சென்று கொண்டே இருந்ததே தவிர விநாயக்கிடமிருந்து அவளுக்கு எந்த அழைப்பும் வரவே இல்லை.
“நீ போட்டோ அனுப்பி அஞ்சு நிமிஷம் ஆச்சு.. இப்போ வரைக்கும் அவன் கிட்ட இருந்து கால் வரவே இல்லை.. நான்தான் சொன்னேன்ல.. அவன் ஒன்னும் என்ன லவ் பண்ணல.. நீதான் தப்பா புரிஞ்சுகிட்டு இப்படி எல்லாம் பண்ற..? இந்த பழி வாங்குறதை எல்லாம் தூக்கி குப்பைல போட்டுட்டு காயம் மாறுனதுக்கப்புறம் சக்கரவர்த்தி சார போய் மீட் பண்ணு..” என்க,
கௌதமனின் முகமோ வாடியது.
தன்னையும் தன்னுடைய தோழியையும் படுத்தி எடுத்தவனை கொஞ்சம் கூட வலிக்கச் செய்ய முடியாதோ என சோகமாகிப் போனான் அவன்.
“ஆனா அவனோட கண்ணுல பொசசிவ்னஸ்ஸ நான் பார்த்தேனே..”
“டேய் வீட்டுக்கு போலாமா..? நீ வர்றியா இல்லை நான் கிளம்பவா..?” என அவள் கேட்க கௌதமனுக்கு முகம் சுருங்கியது.
அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை எடுத்துப் பார்த்தவன் அந்தப் புகைப்படத்தை விநாயக் பார்த்து விட்டான் என்பதை அறிந்து மேலும் குழம்பிப் போனான்.
இந்நேரத்துக்கு அவன் பொறாமையில் பொங்கி வெடித்திருக்க வேண்டுமே. ஆனால் எதற்காக இப்படி அமைதியாக இருக்கிறான் என எண்ணியவாறு செந்தூரியைப் பார்த்தவன் “சரி வா.. கிளம்பலாம்..” என்றான்.
“நீ பத்திரமா வீட்டுக்குப் போ.. நான் ஆட்டோல போய்க்கிறேன்..” என்றவளைத் தடுத்து தன்னுடைய ஸ்கூட்டியிலேயே சிந்துவையும் ஏற்றியவன் அவளுடைய வீட்டை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினான்.
அங்கே வீட்டில் அவர்களுக்காக அணுகுண்டே காத்திருப்பதை அறிந்திருந்தால் அங்கே செல்வதை தவிர்த்திருப்பானோ என்னவோ..?
****
இரண்டு நாட்களாக செந்தூரி இல்லாத தனிமை விநாயக் மகாதேவை வாட்டி வதைக்கப் போதுமானதாக இருந்தது.
இத்தனை நாட்களாக அவள் இருந்த அறையோ இப்போது அவள் இல்லாமல் சஹாரா பாலைவனம் போல காட்சி அளிக்க அந்த இரண்டு நாட்களையும் கடக்கவே மிகுந்த சிரமத்திற்கு உள்ளானான் அவன்.
அவள் அழுதால் என்கின்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவசரப்பட்டு அவளை அனுப்பி வைத்து விட்டோமோ என ஆயிரத்தெட்டாவது தடவையாக சிந்தித்துச் சிந்தித்து தன்னையே நொந்து கொண்டிருந்தான் அவன்.
அவளுக்கு நிம்மதியை வழங்கி விட்டு தன்னுடைய நிம்மதியை தொலைத்து விட்டோமோ..?
இக்கணமே அவளுடைய வீட்டிற்குச் சென்று இனி வாழ்நாள் முழுவதும் நீ என்னுடன் மட்டும் தான் இருக்க வேண்டும் என அவளுடைய செவிகள் தேயும் அளவிற்கு அந்த வார்த்தைகளை அவளிடம் கூறி தன்னுடனேயே அவளை அழைத்து வரவேண்டும் போல அவனுடைய உடலும் உள்ளமும் பரபரத்தது.
ஆனால் உடனே அவளை அழைத்து வந்தால் மீண்டும் அவளுக்கு தன் மீது வெறுப்பு மட்டுமே வந்து விடுமோ என அச்சம் கொண்டவன் சற்றே அவளை விட்டுப் பிடிக்கலாம் என எண்ணினான்.
அவள் அவனை அடித்தாள்.
அவளை பழிவாங்க இவனும் அழைத்து வந்து விட்டான்.
ஆனால் அத்தோடு நிற்காமல் காதலில் அல்லவா விழுந்து விட்டான்.
அவன் இழைத்த தவறுகளை சரி செய்து ஆக வேண்டுமே.
திடீரென மன்னிப்புக் கேட்டு அவளுடைய காலில் விழுந்து கெஞ்சி மன்றாடி காதலைப் பெற எல்லாம் அவனுக்குத் தெரியாது.
அவன் இப்போது வரை மன்னிப்புக் கேட்ட ஒரே ஒரு நபர் என்றால் அது செந்தூரிமட்டும் தான்.
அப்படி இருக்கும்போது காதலை எல்லாம் அவனால் நிச்சயமாக ஒருபோதும் யாசகம் கேட்கவே முடியாது.
தன் மனதில் அவள் மீது காதல் பூத்தது போல அவளுக்கும் தன் மீது காதல் பூக்க வேண்டும்.
தன்னுடைய ஒவ்வொரு செயல்களாலும் தன்னை அவளுக்குப் பிடிக்க வைக்க வேண்டும்.
அவள் மனதில் குத்திய முட்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அவளுடைய காயங்களுக்கு மருந்தாக மயிலிறகாக அவனுடைய காதல் மாற வேண்டும்.
இதற்கெல்லாம் அவனுக்கு நிச்சயமாக அவகாசம் தேவை தானே.
ஆதலால்தான் தனிமை அவனைக் கொல்லாமல் கொன்ற போதும் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு காத்திருந்தான் அவன்.
அதே கணம் அவனுடைய அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்த சத்தம் அவனுடைய காதுகளை எட்ட,
அலட்சியமான பாவனையுடன் அலைபேசியை எடுத்து புதிய எண்ணில் இருந்து வந்த அந்த மெசேஜைப் பார்த்தவனுக்கு ஒரு கணம் உலகமே தன் சுழற்சியை நிறுத்தியது போல இருந்தது.
Intresting sis