58. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.7
(56)

சொர்க்கம் – 58

கௌதமனின் மனம் முழுவதும் அக்கணம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.

தனக்கு தீங்கு செய்த விநாயக்கின் மனதை மிகப்பெரிய அளவில் பாதித்து விட்டோம் என்ற திருப்தி அவனுடைய வேகத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது.

செந்தூரியுடன் கையடக்கத் தொலைபேசியில் பேசியவாறு தன்னுடைய ஸ்கூட்டியில் வேகமாக சென்று கொண்டிருந்தவன் அவன் திரும்ப வேண்டிய வளைவு வந்ததும் சட்டென ஸ்கூட்டியைத் திருப்பினான்.

அந்நேரம் கௌதமை செந்தூரியின் வாழ்க்கையில் இருந்து தூக்கி விட்டு அவளுடைய வாழ்க்கையில் தான் வந்து ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற பேராசையோடு கௌதமை கொல்வதற்காக சேகர் அனுப்பி வைத்திருந்த லாரியும் கௌதமை பின் தொடர்ந்தது.

தன்னை முட்டி மோதி விடுவதற்காக வேகமாக லாரி ஒன்று பின்னால் துரத்துவதை அறியாதவன் எதிரே வந்த திருப்பத்தில் வண்டியைத் திருப்ப எதிர்பாராத விதமாக அந்த வழியால் வந்த காரொன்று கௌதமனை இடித்து தூக்கி எறிந்து விட்டிருந்தது.

அது திட்டமிடப்பட்ட விபத்து அல்ல.

கௌதம் தலைக்கவசம் அணியாது கவனயீனமாக அலைபேசியில் உரையாடியவாறு வாகனத்தை திருப்பியதுதான் அங்கே தவறாகிப் போனது.

காருடன் மோதிய வேகத்தில் கௌதம் தூக்கி வீசப்பட அவனை மோதுவதற்காக வந்த லாரியின் முன்பக்க கண்ணாடியில் மோதுண்டு தரையில் விழுந்தவனுக்கு உடல் சிதைந்து போயிருந்தது.

அவனைக் கொன்று விடுவதற்காக துரத்திய லாரி ட்ரைவர் கூட திகைத்துப் போனான்.

இவனைக் கொன்றால் அல்லவா அவர்களுக்கு சேகர் பணத்தைக் கொடுப்பான்.

அந்த லாரியில் இருந்த மற்றையவனோ கீழே இறங்கி அவனுடைய மூச்சை சரி பார்த்து விட்டு ஆள் முடிந்தது என்பது போல தலையசைக்க உடனடியாக சேகருக்கு அழைப்பை எடுத்த அந்த லாரி ட்ரைவரோ,

“சேகர் அவனோட விதி முடிஞ்சிருச்சு போல.. நாங்க முடிக்கிறதுக்குள்ள அவனே ஆக்சிடெண்ட்ல இறந்து போயிட்டான்..” என்றான்.

“நல்லதா போச்சு.. உங்க மேல சந்தேகம் வராத மாதிரி பாத்துக்கோங்க.. அவன் இறந்துட்டான்தானே..? ஹாஸ்பிடல்ல கொண்டு போய் அட்மிட் பண்ற மாதிரி பண்ணிட்டு வந்துருங்க..” எனக் கூறி விட்டு சேகர் திருப்தியுடன் அழைப்பைத் துண்டித்து விட,

கௌதமனின் கையடக்கத் தொலைபேசி தரையில் விழுந்து உடைந்து தன்னுடைய செயற்பாட்டை நிறுத்தியிருந்தது.

மறுபக்கம் அவனை நினைத்து ஏங்கி ஏங்கி கதறி அழுத செந்தூரிக்கு எங்கே சென்று அவனைத் தேடுவதென்றே தெரியவில்லை.

அவனுக்கு என்னவாயிற்று எனப் பதறியவள் அப்படியே வெளியே ஓடிச் சென்று ஆட்டோ ஒன்றில் ஏறிக் கொண்டாள்.

அவன் செல்லும் வழியைக் கூறி பதறத்தோடு சென்றவளுக்கு தேகம் எல்லாம் நடுங்கியது.

அவனுக்கு விபத்து நிகழ்ந்துவிட்டது என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

ஆனால் அதை நம்ப மறுத்தது அவளுடைய இதயம்.

மத பேதமின்றி அனைத்து இறைவனையும் தனக்கு துணைக்கு அழைத்தவள் கௌதமுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற வேண்டுதலோடு அவனைத் தேடிச் சென்றாள்.

ஒரு இடத்தில் மக்களின் கூட்டம் குவிந்திருப்பதைக் கண்டு ஆட்டோவை நிறுத்தியவள் அந்த வீதி முழுவதும் உதிரம் நிறைந்திருக்க இவளுக்கோ தலை சுற்றிக்கொண்டு வந்தது.

“பாவம் சின்ன வயசிலேயே போய் சேர்ந்துட்டான்.. ஆள் ஸ்பாட் அவுட்..” என அங்கே நின்ற சிலர் பேசியதைக் கேட்டதும் இவளுக்கு தேகம் மரத்துப் போனது.

சடசடவென மழை பொழிய ஆரம்பிக்க தொப்பலாக நனைந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணராது போனாள் அவள்.

அவளை அழைத்து வந்த ஆட்டோக்காரரோ வெளியே வந்து நடந்ததைக் கேட்டு எந்த மருத்துவமனை என விசாரித்தவர் அவளை அழைத்துக்கொண்டு அந்த மருத்துவமனையை நோக்கிச் செல்லத் தொடங்கினார்.

அவளுக்கும் எதுவும் மூளையில் பதியவே இல்லை.

இழுத்த இழுப்பிற்குச் செல்லும் கயிறு கட்டிய குதிரை போலத்தான் அவளுடைய நிலை இருந்தது.

மருத்துவமனையை வந்தடைந்ததும் “அம்மாடி உன்னோட ஃப்ரண்ட்டை இங்கதான் அட்மிட் பண்ணி இருக்கிறதா சொன்னாங்க.. இதயத் துடிப்பு நின்னா கூட மறுபடியும் வர வச்சிடலாம்.. நம்பிக்கைய கை விடாம உள்ள போய் பாருமா..” என அவளைத் தேற்றியவர் அவளிடம் பணம் கூட வாங்காது சென்றுவிட,

இவளுக்கு முகம் இரத்தப் பசையற்று வெளுத்துப் போனது.

இருளுக்குள் நின்றவளுக்கு சிறிதாக ஒரு வெளிச்சம் தென்படுவதைப் போல இருக்க மெல்ல நம்பிக்கையை இறுக்கப்பற்றியவளாக மருத்துவமனைக்குள் நுழைந்தவள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு கௌதமைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினாள்.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்த ஆக்சிடென்ட் கேஸ் பத்தி கேக்குறீங்களா மேடம்..?” என அந்த வரவேற்பறையில் இருந்த பெண் கேட்க அவளுடைய தலையோ ஆமென அசைந்தது.

“அவரோட பாடியை கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துருவாங்க.. அவர் இறந்து 15 நிமிஷம் ஆகுதுன்னு டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க..” என அவள் கூற அவளுக்கோ காதுகள் அடைத்துப் போயின.

அப்படியே மயங்கி சரிந்து விட்டாள் செந்தூரி.

*****

கௌதமன் இந்த உலகை விட்டு நீங்கிச் சென்று முழுதாக ஒரு நாள் முடிந்திருந்தது.

கௌதமின் நண்பன் ஜீவா நடந்து முடிந்த அசம்பாவிதத்தை அறிந்து மருத்துவமனைக்கு வந்து தன்னால் முடிந்த சகலதையும் கவனித்துக் கொண்டவன் செந்தூரியையும் அவன்தான் பார்த்துக் கொண்டான்.

மயங்கிச் சரிந்தவள் மயக்கம் தெளிந்து எழவே ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

கௌதமனின் உடைந்த ஃபோனில் இருந்த சிம்கார்டைக் கழற்றி எடுத்து அவனுடைய பெரியம்மாவின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தவன் ஊரிலிருந்து அவரை உடனடியாக வரும்படி கூறினான்.

பாவம் அவருக்கும் கௌதமனைத் தவிர வேறு யாரும் உறவென்று இல்லையே.

கௌதமின் இறப்புச் செய்தி அவரைப் பலமாக உலுக்கி விட்டது.

சில மணி நேரங்களில் இரண்டு பேருந்தில் மாறி மாறிப் பயணம் செய்து மருத்துவமனையை வந்தடைந்தவர் மனதாலும் உடலாலும் சோர்ந்து போயிருந்தார்.

அங்கே கழுத்தில் தாலியுடன் அழுதழுது அமர்ந்திருந்த செந்தூரியை வெறுப்பாகப் பார்த்தார் அவர்.

அவனுடைய இறப்பு செய்தியுடன்தான் அவனுடைய திருமணச் செய்தியும் அவரது காதுகளை எட்டியிருந்தது.

‘எனக்கே தெரியாம கல்யாணம் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டியா கௌதம்..?’ மானசீகமாக தன் மகனிடம் கேள்வி கேட்டது அவருடைய உள்ளம்.

‘ராசி இல்லாதவ.. இவளைக் கல்யாணம் பண்ணதாலதான் என்னோட பையனுக்கு இந்த நிலைமை.. தாலி ஏறின அன்னைக்கே அவனோட வாழ்க்கை மொத்தமா போயிடுச்சு..’ என மனதிற்குள் எண்ணியவர் சிதைந்து போயிருந்த தன் மகனின் உடலைக் கண்டு விம்மி வெடித்து கதறினார்.

மேகலாவுக்கும் சிறிது நேரத்தில் விடயம் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தான்.

ஒற்றை மகள் தங்களிடம் கூடக் கூறாது கௌதமன் என்ற ஒருவனைத் திருமணம் செய்து இருக்கிறாள் என்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்..?

இவ்வளவு நாளும் சேகரைத்தான் திருமணம் செய்வதாக கூறி இருந்தவள் அதைப்பற்றி எதுவுமே கூறாது புதிதாக ஒருவனை திருமணம் செய்து கொண்டதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

திருமணம் முடித்த அன்றே அவளுடைய கணவன் இறந்து விட்டான் என்பது மிகப்பெரிய இடியைத் தூக்கி அவருடைய தலையில் போட்டதைப் போலத்தான் இருந்தது.

மலர முன்னரே தன்னுடைய மகளின் வாழ்க்கை கருகி விட்டதா என கலங்கிப் போனார் அவர்.

எப்படியாவது அவளை இந்த திருமண பந்தத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்ற முனைப்போடு மருத்துவமனைக்கு வந்தவர் ஒரு பக்கத்திலிருந்து அழுது கொண்டிருந்த தன் மகளையும் இன்னொரு புறம் கதறிக் கொண்டிருந்த கௌதமனின் பெரிய அன்னையையும் கண்டு கலங்கிப் போனார்.

கஷ்டமாகத்தான் இருந்தது.

ஆனால் அப்படியே விட முடியாதே.

தன்னுடைய மகளின் அருகே நெருங்கி “வாம்மா வீட்டுக்குப் போகலாம்..” என்றதும் நிமிர்ந்து பார்த்தவளுக்கு உடலில் உள்ள அனைத்து சக்தியும் வடிந்து போனது.

அப்படியே தன் அன்னையின் மீது சாய்ந்தவள்,

“என்னோட கௌதம் போய்ட்டான் மா.. என்ன விட்டுட்டுப் போயிட்டான்.. அவனுக்கு ஏன் இப்படி ஆகணும்..? ஏன்மா..? ஏன்..?” எனக் கதறியழ அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டார் மேகலா.

அவள் கதறி அழவும் கௌதமனின் பெரிய அன்னையோ கோபத்தில் கொதித்து எழுந்து விட்டார்.

“எல்லாம் உன் ராசிதான்.. உன்ன கல்யாணம் பண்ணித்தான் அவனுக்கு இந்த நிலைமை.. உன் கழுத்தில் இருக்க மஞ்சள் கயித்தோட ஈரம் காயறத்துக்கு முன்னாடியே என் பையன் இப்படி இந்த உலகத்தை விட்டே போயிட்டானே..” என அவர் குமுறிக் குமுறி அழ விக்கித்துப் போனாள் செந்தூரி.

அப்போதுதான் அவளுடைய கழுத்தில் இன்னும் தாலி இருப்பதே அவளுக்குப் புரிந்தது.

இதை ஏன் இன்னும் கழற்றவில்லை..?

பதறினாள் அவள்.

“பெரியவங்கன்னு அமைதியா இருக்கேன் பார்த்துப் பேசுங்க.. என்னோட மகள் ஒன்னும் ராசி இல்லாதவ கிடையாது.. உங்க பையனுக்குத்தான் வாழக் கொடுத்து வைக்கல..” பதில் கொடுத்தார் மேகலா.

“இவ்வளவு நாளும் அவன் நல்லா தானே வாழ்ந்தான்..” அழுதவாறே கூறினார் கௌதமனின் பெரியன்னை.

“அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே.. நீங்க உங்க வழிய பாருங்க.. நாங்க எங்களோட வழிய பாக்குறோம்.. நீ வாம்மா… நாம நம்ம வீட்டுக்குப் போகலாம்..” என மேகலா செந்தூரியை அழைக்க அவளோ திணறிப் போனாள்.

அனைவரும் தன்னை கௌதமனின் மனைவியாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிய அவளுக்கு நெஞ்சம் படபடத்தது.

உண்மையைக் கூறி விடலாம் என எண்ணியவள் வாயைத் திறக்க முயன்ற நேரம் ஜீவாவோ ஒரு ஸ்ட்ரக்சரில் கௌதமனின் பாடியை உருட்டிக்கொண்டு வர அங்கே மயான அமைதி நிலவியது.

“ஹாஸ்பிடல்லையே பாடிய கொடுத்துடுறீங்களா இல்ல வீட்டுக்கு எடுத்துட்டுப் போறீங்களான்னு கேக்குறாங்க..” என கௌதமின் பெரிய அன்னையிடம் வினவினான் ஜீவா.

“இங்கிருந்து ஊருக்கு கொண்டு போற அளவுக்கு எல்லாம் என்கிட்ட வசதி கிடையாதுப்பா.. இங்கேயே அடக்கம் பண்ணிடுங்க..” என்றவர் தன்னிடம் இருந்த சொற்ப பணத்தையும் அவனிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்காமல் மறுத்தவன் அடுத்தடுத்த காரியங்களை அவனே முன் நின்று செய்யத் தொடங்கி இருந்தான்.

அதன் பின்னர் யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.

கௌதமனின் இறுதிக் காரியங்களை முடித்துவிட்டு தனியாக வீட்டுக்கு வந்தவளுக்கு வாழ்வே வெறுத்துப் போனதைப் போல இருந்தது.

எனக்காக யோசிக்கும் ஒரே ஒரு நண்பன்.

ஆபத்தில் தோள் கொடுக்க ஓடிவரும் தோழன்.

இனி தன் வாழ்க்கையில் நிரந்தரமாக இல்லை என்ற நிதர்சனம் அவளை வெகுவாக தாக்கியது.

உற்ற தோழன் இல்லை என்ற துயரில் ஆழ்வதா இல்லை எனக்கு கல்யாணமே ஆகவில்லை என்ற உண்மையை எடுத்துக் கூறுவதா..?

இன்னும் சிறிது நேரத்தில் என்னுடன் பேச வேண்டும் என கௌதமனின் பெரியன்னை வீட்டுக்கு வருவதாகக் கூறினாரே.

மேலும் என்னை மனம் நோகும்படி திட்டி விடப் போகின்றாரோ..?

நிம்மதியற்றுத் துடித்தாள் அவள்.

அக்கணம் அவளுடைய வீட்டில் வாயிலில் கார் ஒன்று வேகமாக வந்து நிற்பதைக் கண்டதும் எழுந்து கொண்டவளுக்கு விநாயக் வீட்டிற்குள் நுழைவதைஅ கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

அடுத்த நொடியே ‘இவனக் கொன்னு உன்னோட தாலிய அறுத்து உன்னை என் பொண்டாட்டியா மாத்திக் காட்டுறேன்..’ எனக் கூறிய விநாயக்கின் வார்த்தைகள் மீண்டும் செவிகளில் மோத விதிர்விதித்துப் போனாள் அவள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 56

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “58. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!