வேந்தனின் அளத்தியிவள் 2

4.8
(5)
வேந்தனின் அளத்தியிவள் 2
அத்தியாயம் 2
மகிழ மரமே தன் மலர்களை இறைவனைச் சுற்றியும் மலர் படுக்கையை விரித்திருக்க, அதனருகிலேயே சேர்ந்தாற் போல பவளமல்லி மரமும் தன் மலர்களை உதிர்த்து நறுமணத்தையும், அழகுக்கு அழகையும் வாரி வழங்கியது அவ்விடத்திற்கே. 
இரண்டு கையையும் சேர்த்து பிடித்தால் அதற்குள் அடங்கிப் போகும் அளவுக்கு ஒரு சிவலிங்கம் மகிழமரத்துக்கு அடியில் கம்பீரமாய் வீற்றிருந்தது. மூர்த்தி சிறியதாயினும் அதன் கீர்த்தியும் வல்லமையும் பெரியதாயிற்றே.
அனைத்திற்கும் மூலமான ஆதிசிவனின் ரூபத்தின் எதிரே மெய்யிருகி அமர்ந்திருந்த இனியாளின் மடியில், வீணையை ஏந்தி இடது கையால் தாங்கிப் பிடித்தவளின், வலது கை இனிமையாய் அதன் கம்பிகளை வருடிக் கொடுத்தது. 
தேனினும் இனிய குரலும் அதற்கு ஸ்வரம் சேர்க்கும் வீனையின் நாதமும் ஒன்று கலக்க, தேனும் பாலும் ஒன்றுடன் ஒன்று கலந்து தரும் சுவை போலவே கேட்கும் உள்ளங்களையும் இனிமையாய் கொள்ளை கொண்டது.
அடர் கரிய நிற கருவிழிகளை உள்வாங்கிய நயனங்களில் பக்தி மிகுதியில் கண்ணீர் அரும்பியிருந்தது.
தேன் சொட்டும் குரலில் திருவாசகம் பாடிக்கொண்டிருந்தாள் நளிர்மலர். தன்னை மறந்த நிலையில் வீணையை இசைக்க, செவ்விதழ்கள் பாடலை பாடியது. 
 
அவள் அருகே ராஜன் பக்தி சிரத்தையுடன் அமர்ந்து கண்களை மூடி பாடலைக் கேட்டிருந்தார்.
ராஜன் மலர்விழியின் மகள்தான் நளிர்மலர். நளிர் என்றால் குளிர்ச்சி என்று பொருளாகும். குளிர்ச்சி நிரம்பிய மலரே என்பதுதான் அவள் பெயருக்கு அர்த்தமாகும்.
பொதுவாய் ஒரு கதையோ அல்லது திரைப்படமோ இல்லை கட்டுரையோ எழுதும் பொழுது அதன் கருவை மையப்படுத்திதான் அதன் தலைப்பை வைப்பார்கள்.
இரண்டும் பெண்ணாக பிறந்திருக்க, நான்காவதாய் பிறக்கும் குழந்தையாவது ஆணாய் இருக்க வேண்டுமே என்று இறைவனை வேண்டிக்கொண்டார் ராஜன். ஆனால் இறைவன் கருணையால் நான்காவதும் பெண்ணாகவே பிறந்திட, கொஞ்சம் வருத்தத்தோடுதான் குழந்தையைக் கையில் வாங்கினார். 
ஆனால் அவ்வருத்தம் ஓரிரு நொடிகள்தான் நிலைத்தது. பன்னீர் ரோஜா நிறத்துடன் கைகளில் தவழ்ந்த மகளைப் பார்த்த ராஜனுக்கு ஒரே பூரிப்பு. இத்தனை அழகான பெண் குழந்தையைப் பார்க்கையில் ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் காணாமல் போனது. அவளுக்கு நளிர் மலர் எனவும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
பெயரைப் போலவே நளிர்மலர் யாரையும் இதுவரை புண்படுத்தி பேசியதே இல்லை. யாராவது கடுஞ்சொல் பேசினால் கூட, அமைதியாய் விலகி வருவாள் தவிர எதுக்கு இப்படிப் பேசறீங்கன்னு அவங்ககிட்ட கேட்க மாட்டாள்.
ஆனால் ஆண்குழந்தை ஆசையில் நான்காவதாய் பிறந்ததும் பெண்ணாகவே பிறந்திட. ஏற்கனவே ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் நளிர் மற்றும் ஆர்த்தியை பெற்றுவிட, சிசேரியன் செய்து குழந்தையை பெற்றவர் மலர்விழி அதனால் இதுக்கு மேல் என் உடம்பு தாங்காது என கையெடுத்து கும்பிட்டுவிட்டார் கணவனை. அதனால் ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை மண்ணோடு மண்ணாகிப் போனது.
ராஜனின் நெருங்கிய நண்பனுக்கு குழந்தையில்லாமல் போகவும், நண்பனுக்கு மூத்த பெண்ணை தத்துக் கொடுத்தார்கள். அதனால் மலர்விழி ராஜன் தம்பதிகளுக்கு கணக்குப்படி மூன்று மகள்கள் மட்டுமே. சைத்ரா, நளிர்மலர், ஆர்த்தி. 
நளிர்மலர் முகத்தைப் பார்த்தே கணித்துவிடும் சைத்ராவும் ஆர்த்தியும்தான் அவர்களிடம் சண்டைக்கு நிற்பார்கள். ஆர்த்தி சைத்ராவுக்கு கொஞ்சம் ரோசம் அதிகம் தன் வீட்டை யாரும் எதுவும் சொல்லிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருப்பாள். நளிரா கூடப்பிறந்தவர்கள்தான் சைத்ரா, ஆர்த்தி. நளிர்மலருக்கு அக்கா சைத்ரா, தங்கை ஆர்த்தி. 
நளிர்மலர் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் இரவு 7 to 9 என மூன்று மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறாள்.
அதாவது அன்றைய கணக்கு வழக்குகளை சரிபார்த்து கணினியில் பதிவு செய்து தரும் வேலை. அதுவும் அந்த ஸ்டோர் ஓனர் சிவதானு அண்ணா அவகிட்ட கெஞ்சிக் கேட்டதால் மட்டுமே.
ராஜன்கூட, “எனக்கு நெருங்கிய நண்பன் சிவதானு, அதனால அவர் சொல்லும் வேலைகளை சும்மா செஞ்சு கொடு, செய்யும் வேலைக்கு சம்பளம் வாங்காதேம்மா. எனக்கு சங்கடமா இருக்கு” என்று சொல்ல.
“அப்பா எந்தக் காலத்துல இருக்கீங்க நீங்க. மூணு மணிநேரம் அவ மண்டையை போட்டு உடைக்காத குறையா சிஸ்டம் முன்னாடி உட்காரனும். அவளோட உழைப்புக்கு ஊதியம் கிடைக்கணும்ப்பா. ஒருநாள் ரெண்டு நாள் அப்படின்னா ஓகே. தினமும் அவளால வேலை பண்ணித் தரமுடியுமா?” சைத்ராதான் அப்பாகிட்டே அடம்பண்ணி, சிவதானுகிட்ட இதைப் பற்றி தானே நேரில் சென்று பேசி, நளிராவுக்கு மாசம் 15000 சம்பளம் வாங்கித் தந்துவிட்டே ஓய்ந்தாள். 
இன்னொரு தங்கை ஆர்த்தி அவள் பெயர்.
ஆர்த்தி செல்லப் பெண். கடைக்குட்டி வேறு. சைத்ரா நளிராவின் செல்ல சண்டைக்காரி. 
ஆக மொத்தம் ராஜன் மலர்விழி தம்பதிகளுக்கு மூன்று மகள்கள்.
நளிர்மலர் குரல்வளம் மிகுந்தவள் அதனால் இப்போதைக்கு பாட்டுகிளாஸ் சென்று கொண்டிருக்கிறாள். சிங்கர் ஆகவேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை அவளுக்கு. பாட்டு கத்துக்கணும் அவ்வளவே. தேவாரம் திருவாசகம் பண்ணிரு திருமுறைகள் என அடியார்கள் பாடிய அனைத்துப் பாடல்களையும் கரைத்து குடித்துவிட்டாள் நளிர்மலர். கணிதவியல் முதுகலை பட்டம் வாங்கிட்டு விருப்பம் போல் பாட்டுகிளாஸ் அட்டென்ட் பண்ணுகிறாள். 
அது என்னவோ சினிமா பாடல்களை பாடுவதை காட்டிலும் இதுபோல பாடல்களை பாடுவதில் ஆர்வம் அதிகம் அவளுக்கு. 
கோவில்களில் பாடக்கேட்டு கேள்வி ஞானத்தில் பாட ஆரம்பித்தவளை சிவதானுதான் பாட்டுடீச்சரிடம் அழைத்துச் சென்றுவிட்டார். 
சைத்ரா பள்ளியில் ஆசிரியை பணிக்குச் செல்கிறாள். அவளைத்தான் பெண் பார்க்க வருகிறார்கள் இன்று.
ஆர்த்தி தமிழ் இலக்கியம் மூன்றாம் வருடம் படிக்கிறாள். 
ராஜன் மகளின் பாட்டில் தன்னை மறந்து அமர்ந்துவிட, மொபைல் இசைத்து அவரைக் கலைத்தது. மகளை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து மெதுவாக எழுந்து வெளியே வந்தார்.
“என்னம்மா இத்தனை தடவை கூப்பிட்டிருக்க? அதுவும் வீட்டுக்குள்ள இருந்தே. இதுக்கு இங்கயே வந்திருக்கலாமே நீ” நெற்றியை நீவியவாறே கேட்டார் ராஜன். 
“சரியாப் போச்சு போங்க. வீணையை இன்னைக்கு தொடவே கூடாதுன்னு அவகிட்ட சொன்னேன். சொன்ன சொல்லு கேக்கலை அவ. இப்ப பாருங்க நம்ம வேலையும் சேர்த்துக் கெடுது” மலர்விழி நளிராவைக் கடிய ஆரம்பிக்கவும்.
“இப்ப எதுக்கு அவளை பேசிட்டு இருக்க?. நீ சொன்ன வேலையை மறந்தது எந்தப்புதான் மலர், அதுக்குப் போய் பிள்ளையை திட்டிகிட்டு இருக்க, அவ காதில கேட்டுட்டா அப்படியே வாடிப் போயிருவா. நான் வரேன் போனை வை” சொன்னவர். மகளை ஒரு முறை கனிவுடன் பார்த்துவிட்டு மனைவியை தேடி வீட்டுக்குள் போனார்.
ராஜன் மலர்விழி தம்பதிகள் மென்மையானவர்கள். அதிர்ந்து யாரிடமும் பேசியது இல்லை. அதிலும் ராஜனுக்கு மகள்கள் முகம் வாடவே கூடாது எப்பவும். அத்தனை பாசம் அவர்கள் மீது. 
“மலரப்பா மாப்பிள்ளை வீட்டுலே இருந்து நாளைக்கு வருவாங்க. கொஞ்சம் சீக்கிரம் சொன்னதெல்லாம் வாங்கிட்டு வந்துருங்க” மலர்விழி ராஜனிடம் லிஸ்ட்டை தந்தார்.
“நீ எதுக்கும்மா சிரமப்படுற. கடையில வாங்கிக்கலாம் இதெல்லாம்” ராஜன் மனைவிக்காக அக்கறைப்பட்டார்.
“நான் ஒருத்தியுமா இதெல்லாம் செய்யப் போறேன். உதவிக்கு நீங்களும் வரணும் மலரப்பா. பேசிட்டே இருக்காம கிளம்புங்க போங்க” அவரை அனுப்பி வைத்தார் மலர்விழி.
“கண்ணாடியை எங்க வச்சேன் மலர் பார்த்தியா?” ராஜன் தேட.
“அப்பா இங்க இருக்கு” கண்ணாடியோடு வந்த ஆர்த்தி கையில் பையோடு வந்தாள்.
“போலாமாப்பா?” என்றவாறு. 
“வா போகலாம். உங்கம்மா வேற வீட்டுலயே எல்லாம் செய்தாகணும்னு பிடிவாதம் பிடிக்கறா. அப்படியென்ன பிடிவாதம் அவளுக்கு” மகளுடன் பேசியவாறே ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணினார்.
“அப்பா குண்டுமல்லி உதிரிப்பூவா வாங்கிக்கோங்க. கட்டினது வேண்டாம். நானே தொடுத்துக்கறேன்” சைத்ரா குரல் பின்னே ஒலித்தது.
“சரிக்கா வாங்கிட்டு வரோம்” ஆர்த்தி அவளுக்கு பதில் தந்தாள்.
“சைத்ரா இங்க வாம்மா. இந்த ரவிக்கையை போட்டு பாரு அளவு சரியா இருக்கான்னு. இந்த புடவையை அன்னைக்கு உடுத்தும் போது அம்சமா இருந்த. நாளைக்கும் இதையே கட்டு” மலர்விழி மகள் கையில் ரவிக்கையை தந்தார்.
“அன்னைக்கே சரியாத்தாம்மா இருந்துச்சு. ஒருமாசத்துக்குள்ள இப்ப என்ன வெயிட் கூடிருக்கும்?” சைத்ரா கையை மட்டும் உள்ளே விட்டுப் பார்த்தாள்.
“வேணாம்னா சொல்லிடுக்கா. எனக்கும் அந்தப் புடவை மேல ஒரு கண் உண்டு. நானே வச்சுக்கறேன்” உதட்டை சுளித்தவாறே குரும்பாக சிரித்தபடி நளிர்மலர் அங்கே வந்தாள்.
“உன்னை முதுகிலேயே அடிவைக்கணும்னு கோபமா இருக்கேன் நளிரா. அப்பாகிட்ட முக்கியமான வேலையை கொடுத்தேன். நீ பாட்டுக்கு அவரை பாட்டு பாடி அசையாம பண்ணிட்டே. என்னோட வேலையும் கெடுது உன்னால” மகளை செல்லமாக கடிந்தார்.
“இந்த டைம் நான் பூஜை செய்வேன்னு தெரியும்தானேம்மா உங்களுக்கு. வீட்டுக்குள்ள வசதி பத்தலைன்னுதான் நானும் சிவாவும் தோட்டத்துல மரத்துக்கடியில் தஞ்சம் அடையறோம். ஆனா அங்கயும் ஆக்ரமிக்கறீங்க மூணு பேரும்” செல்லமாய் தாயின் தோளைக் கட்டிக்கொண்ட நளிர்மலர் அவர் கன்னத்தில் முத்தம் வைத்து செல்லம் கொஞ்சினாள்.
“என் செல்லக்குட்டி. உனக்கு பாவாடை தாவணி எடுத்து வச்சிருக்கேன் அதைக் கட்டு கண்ணம்மா. புடவை கட்டாத. அப்புறம் அடிதான் விழும் நிஜமாவே” மலர்விழி அவளை மிரட்ட முயல.
“எனக்குப் போட்டியா வந்துருவேன்னு அம்மாக்கு பயம் நளிரா. எங்கே மாப்பிள்ளைக்கு உன்னை பிடிச்சுப் போயிருமோன்னு புடவை கட்டாதேன்னு சொல்லுறாங்க அம்மா” சைத்ரா கேலி செய்ய. 
“சின்னப்பிள்ளை மனசைக் கெடுக்காத சைத்ரா. அவளுக்கு இன்னும் நாள் இருக்குது. தப்பா பேசாத” மகளை அடக்கினார் நளிரா காதில் விழாமல். 
“சரிடி நீ வா மருதாணி போட்டுவிடு எனக்கு” சைத்ரா நளிராவை துணைக்கு அழைத்துக்கொண்டாள்.
“நீங்க ரெண்டு பேரும் உங்க வேலையைப் பாருங்க. நானும் ஆர்த்தியும் அப்பாவும் கிட்சன் பக்கம் பாத்துக்கறோம்” மலர்விழி வேலைகளை பிரித்துக்கொண்டு சென்றார்.
“தாங்க் காட் அக்கா என்னை காப்பாத்திட்ட சமையல் கட்டுல இருந்து” தெற்றுப்பல் தெரிய சலங்கையாய் சப்தம் எழ சிரித்தவளின் சிரிப்போசை பக்கத்து வீட்டில் இருந்த வாணியை ஈர்த்தது.
“மூணு பிள்ளையை பெத்துட்டான் சிரிப்பு சிரிப்பு சத்தம் வெளிய கேக்காம வளர்த்த முடியலை. பிள்ளையை பெத்துட்டா கவனம் வேண்டாமோ” வாணி அலுத்துக்கொண்டார்.
“சின்னதுங்க ரெண்டும் தங்கச்சிலையாட்டம் இருக்குங்க. மூத்தவளுக்குத்தான் நிறம், அழகு மட்டுன்னு தட்டிப்போகுது. முதல்ல அவளை ஒரு நல்லவன் கையில ஒப்படைச்சுட்டா மலருக்கும் நிம்மதியா போகும்” வாணி கணவரிடம் புலம்பியவாறே மலர் வீட்டுக்குப் போனார்.
“அக்கா வர்றவனை உனக்கு பிடிச்சிடுச்சுன்னா கல்யாணத்தன்னைக்கு அவர் இன்ஷியலை போட்டுடலாம் என்ன?” நளிரா அக்காவுக்கு கையில் டிசைனை போட்டுவிட்டவாறே கேட்டாள்.
“ஒருவேளை வர்றவன் அதிர்ஷ்டசாலியா இருந்தா கண்டிப்பா ஜமாய்ச்சுடலாம். நான் கிடைக்க அவனுக்கு கொடுத்து வைக்கணுமே” சைத்ரா சொல்லிவிட்டு சிரிக்க.
எப்போதும் போல தமக்கையின் தன்னம்பிக்கையை கண்டவள், “லவ்யுக்கா” அவள் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சினாள்.
இந்தக் குடும்பத்தைப் பார்த்து என் கண்ணே பட்டுடும் போல இருக்கே.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!