“அக்கா அக்கா. பார்க் போகலாமா? வீட்டுக்குள்ளயே இருக்க போர் அடிக்குது எனக்கு. ப்ளீஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்க்கா” சைத்ராவின் கன்னம் கிள்ளி முத்தமிட்டுக் கொஞ்சினாள் ஆர்த்தி.
“இதுக்கு மட்டும் அக்கா லொக்கான்னு கொஞ்சிகிட்டு தாஜா பண்ணுவாக்கா. இவளை நம்பவே நம்பாதக்கா. ஏமாத்துக்காரி” நளிரா தன் மருதாணி ஓவியத்தில் அழகாய் வளையும் மெல்லிய கோட்டை வேணும்னே தடுக்காட்டிக் கோணலாக்கி விட்ட கோபத்தில் தங்கைகிட்டே சண்டைக்கு நின்றாள்.
நளிராவுக்கு கைகளில் மருதாணி வைப்பது என்பது அத்தனை பிடித்தமானது. இரு கை விரல்களிலும் செந்தாமரை மொக்குகளைப் போல செக்கச் சிவந்தும், உள்ளங்கையில் அக்காவின் கைவண்ணத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் பார்க்கையிலேயே அத்தனை உற்சாகம் உள்ளத்தில் எழும்.
மனம் சோர்வுறும் நேரங்களில் உள்ளங்கைகளை விரித்துப் பார்த்திட, அதிலுள்ள பூக்களும் முயல்களும் உயிர்பெற்று ஓடியாடி விளையாடுவதைப் போலவே அவள் கண்களுக்குத் தென்படும். முகத்தில் பதித்து, மூச்சை இழுத்து சுவாசிக்கும் பொழுது, அதிலிருந்து வரும் நறுமணத்திற்கு ஈடு இணையே இவ்வுலகில் இல்லையென எளிதாக சொல்லிடுவாள் நளிரா.
“எனக்குந்தான் அவங்க சத்தம் காதைப் பிளக்குது. ஆனா காதுல வாங்கிட்டேனா? சின்னப்பிள்ளைங்க அப்படித்தான், நம்ம வீட்டுல இருக்க வரைக்கும் சுதந்திரமா இருக்கட்டுமே” அவர் மகள்களுக்கு பரிந்து பேச.
“அம்மா இந்தக் குட்டிபிசாசை பாரும்மா” நளிராவின் கூச்சலில் மலர்விழியின் ரத்த அழுத்தம் எகிற.
“நளிராப்பொண்ணு வீட்டுக்கு வெளியதான் சமர்த்து. இவ போடுற ஆட்டத்தை வெளிய சொன்னா யாரும் நம்பவே மாட்டிங்குறாங்க” பெருமையாக சலித்தவர்.
“இப்ப நா வரட்டுமா? இல்ல நீங்களே இங்க வரீங்களாடி?” ஒரு நொடியில் கூச்சல் அடங்க, பெண்கள் மூவரும் தாயிடம் வந்தார்கள்.
“அம்மாகிட்ட போய் நீ பண்ணிவச்ச வேலையை சொல்லி வைக்கறேன் இருடி” ஆர்த்தியை நிப்பாட்டிட்டு நளிரா ஓடிவர, அவளுக்கு முன் ஆர்த்தி தாயைக் கட்டிக்கொண்டாள்.
செல்லச் சண்டைகளுக்கு நடுவே மூவரின் கைகளும் காய்ந்து போயிருக்க,
அவர்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும் பொருட்டு, “கையைக் கழுவிட்டு வாங்க. எப்படி சிவந்திருக்குன்னு பார்ப்போம்” மலர்விழி சொல்ல.
அதற்கும் நான் முதல் நீ முதல்ன்னு அடிபிடி போட்டுக்கிட்டும், கைகளை சுத்தம் பண்ணிக்கிட்டும் வந்தவர்கள் தாயிடம் கைகளை நீட்டிட.
“அடடே அழகுதான். மூணு பேருக்குமே நல்லா சிவந்திருச்சு” மலர் அவர்களுக்கு நெட்டிமுறித்தார் யார் கண்ணும் பெண்கள் மீது பட்டுவிடக் கூடாதேன்னு.
“அம்மா நாங்க பார்க்குக்கு போயிட்டு வரோம்மா. வாக்கிங் மாதிரி போனா கொஞ்சம் நல்லாருக்கும்னு தோணுது நீயும் அப்பாவும் வரதுன்னா வாங்க” நளிரா தாய் தந்தையை அழைக்க.
“இல்லம்மா. நீங்களே போங்க. அப்பாவுக்கும் எனக்கும் வேலை இருக்கு. செஞ்சதெல்லாம் பாங்கா எடுத்து வைக்கணும் டப்பாவுல. இல்லன்னா எறும்பு தின்னுடும். காஞ்சு வர வரன்னு திங்க முடியாம கெட்டியா போயிடும்” அவர்களை அனுப்பி வைத்தார் மலர்விழி.
பார்க் சென்ற பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்தனர், “அக்கா பார்த்தியா என் கைதான் சிவந்திருக்கு” நளிரா கைகளை விரித்துக் காட்ட, ஆர்த்தியும் பதிலுக்கு என கைதானே ன்னு கேட்டிட, சைத்ரா பஞ்சாயத்து ஆரம்பம் ஆனது.
இங்கே துருவ் ஆத்மா ரவிக் மூவரும் அதே பார்க்கில் சுற்றிக்கொண்டிருந்தனர்.
வேடிக்கை பார்த்துகிட்டே நடந்தவனை ரவிக் அடிக்கவும், தடுமாறிக் கீழே விழப்போனவன் சமாளித்து நேராக நின்றவனை பார்த்து, எதிரே சென்ற இளம் பெண்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்சுக்கிட்டே என்னாச்சுன்னு பார்க்க.
“ஹீஹீஹீ நத்திங் பியூட்டீஸ். சும்மா விழுந்து பார்த்தேன்” அவர்களை சமாளித்து அனுப்பி வைத்தவன், ரவிக் மீது பாய்ந்தான்.
“சரிடா விட்டுத் தொலை. பையன் பொழைச்சுப் போகட்டும்” துருவ் ஆத்மாவை இழுத்துப் பிடிக்க முடியாமல் பிடித்து வைக்க.
“நீ சொல்லுவடா நாயே. போட்டுக்க ஜட்டி கூட வைக்காம சேல்ஸ்ல போடப் போனவனுக்கு முழுசா பத்தாயிரம் அழுதது நாங்கதானே. வாய் கிழியப் பேசுவ தாராளமா” ஆத்மா ரவிக் இருவருமே சேர்ந்து துருவ் மீது பாய.
“பாய்டா மச்சான். நான் எஸ்கேப்” துருவ் அவர்கள் கைக்கு சிக்காமல் ஓடினான்.
காற்றில் அலைபாயும் கேசத்தை, இரு கைகளாலும் கோதி, பின் அதைக் கலைத்து விட்டவாறே வேகநடையில் சென்றவனின் விழிகளில் அலட்சியமும், குறும்புத்தனம் கூத்தாடும் கூர்விழிப் பார்வையும் “அச்சோ!” என அள்ளிக் கொள்ளும் இதயத்தை.
அம்மாடியோவ் எவ்ளோ அழகு? சொக்க வைக்கறான்டி பெண்கள் அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.
“மூடிட்டு போயிக்கடா. பசியில இருக்கேன். கடிச்சு வச்சிருவேன்” ரவிக் அச்சுறுத்தலில் ஆத்மாவின் மறுபக்கம் நகர்ந்துவிட்டான் துருவ். ரவிக் சொல்வதும் சரிதான். பசி வந்துவிட்டால் அவனுக்கு மூளை மங்கிவிடும். எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கும் கேட்டகிரி அவன்.
மூன்று பேரில் மற்ற இருவரும் தந்தையின் தொழிலில் சிறு சிறு பொறுப்புகளை ஏற்று செய்கின்றனர். அதனால் அவர்கள் முகத்தில் விளையாட்டுத்தனம் தாண்டி பொறுப்புணர்வு அதிகம் இருக்கும்.
ஆனால் துருவ்க்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. அவனை நெருங்கிட வேண்டுமெனில் அவனுடைய தாய்மாமனை முதலில் அணுகிட வேண்டும்.
அதனால் அந்த வயதிற்கே உரிய கலகலப்பும் துடுக்கும் மிதமிஞ்சியே இருந்தது. அகத்தின் புன்னகை முகத்தில் சுதந்திரமாய் ஒளிர்ந்தது.
“டேய் கட்டை நல்லாருக்குடா. நீ வேணா தொட்டுப் பாரேன். வாசனை கையிலேயே நிக்கும்” கையில் இருக்கும் சிறிய சந்தனக்கட்டையை துருவ் கையில் கொடுக்க முயன்றான் ஆத்மா.
“டேய் எனக்கு அந்த ஸ்மெல் பிடிக்காதுடா வேண்டாம்” துருவ் அவனை மறுத்து, மொபைலைப் பார்த்தவாறே நடந்தான்.
“டேய் அவனை விடுடா. அதான் பிடிக்கலைன்னு சொல்றான்ல” ரவிக் ஆத்மாவைத் தடுத்தான்.
அதற்குள் துருவ் கையில் கட்டை வந்துவிட, “நாயே நாட்டுக் கட்டை இல்லைடா இது. ஸ்மெல் வரவே இல்லை. இது கலப்படமா இருக்குமோ?” துருவ் கையில் இருந்ததை திருப்பித் திருப்பிப் பார்த்து ஆராய்ச்சி பண்ண.
யாருமே சற்றும் எதிர்பாராமல், அவன் கன்னத்தில் செருப்படி விழுந்தது பளாரென.
அதுவரை அவர்கள் உரையாடலைக் கவனித்தவாறே எதிரில் சகோதரிகளுடன் நடந்து வந்த நளிராவுக்கு அவன் மீது தப்பில்லை என்பது புரிய, “அக்கா என்ன பண்ணுற நீ?” என சைத்ரா கையில் இருந்த செருப்பைப் பிடுங்கியவாறே அக்காவை இழுத்தாள் வேறு பக்கம்.
துருவ் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்து பார்க்கையில் சரியாக நளிரா கையில் செருப்போடு நின்று கொண்டிருந்தாள்.
“நீ வா போலாம்” ஆர்த்தி சைத்ராவை இழுத்துக்கொண்டு போய்விட்டாள் வேறு பக்கம்.
துருவ் அவளையும் அவள் கையில் இருக்கும் செருப்பையும் ஆத்திரமாய்ப் பார்த்தான்.
அவன் பார்வையை உணர்ந்தவள் ‘அய்யய்யோ நானில்லைங்க’ எனப் மனசுக்குள் பதறி கையில் இருக்கும் செருப்பைக் கிழே போட்டாள் நெருப்பைத் தொட்டது போல.
செருப்போ மீண்டும் துருவ் பாதத்திலேயே, நச்சுன்னு ஹீல்ஸ் நறுக்குன்னு குத்திட விழுந்து வைக்க.
‘ஸ்ஸ்ஸ்ஸ்…யப்பா’ துருவ்க்கோ வலி உசுர் போக, கண்களை மூடித்திறந்து மறைத்தான் பிறர் அறியாமல்.