“அக்கா நேரா இரு, கண்மையை சரி பண்ணிக்கறேன்” ஆர்த்தி சைத்ராவின் கண்மையை சரி செய்தாள்.
“லிப்ஸ்டிக் போடலாம்னா அக்கா வேணாம்னு சொல்லுறா” நளிராவுக்கு அதிலே மனவருத்தம் வந்தது.
நிலைக்கன்னாடியில் தன் உருவம் பார்த்து, கலைந்த மடிப்புகளை சரிசெய்த சைத்ரா “அதெல்லாம் வேண்டாம்டி. இருக்கறது போதும்” என்று தங்கையிடம் மறுத்துவிட்டாள்.
“அக்கா அக்கா ப்ளீஸ்க்கா! லைட்டா டச் பண்ணி விடறேன்க்கா. இந்தப் பிசாசு அதோட உதடு முழுக்க அப்பி வச்சிருக்குதுன்னு பார்த்து, உனக்கும் அப்படி இருக்கும்னு பயப்படாத. நா ரொம்ப நல்ல பொண்ணுக்கா, டீசன்ட் பெல்லோவ்” நளிரா அடம்பிடித்து சைத்ராவின் உதட்டில் உதட்டுச்சாயம் பூசிவிட்டே ஓய்ந்தாள்.
அரைமனசாக கண்ணாடியில் முகம் பார்த்தவளுக்கும் திருப்தியே. புடவையின் ரோஜா நிற வர்ணத்திற்குத் தோதாக பட்டு இதழ் ஜொலித்திட,
“அப்படின்னா நான் மஸ்காரா போட்டு விடுவேன்” அதற்கான உபகரணங்களோடு வந்த ஆர்த்தியை பார்த்த சைத்ரா தலைக்கு மேல் இருக்கைகளையும் உயர்த்தி, கையெடுத்துக் கும்பிட்டு விட்டாள்.
“வேணும்னா ஒன்னு பண்ணு தெய்வமே. மேக்கப் கலைக்கும் போது நீயே எல்லாம் பண்ணிடு” தங்கையிடம் கெஞ்சவே ஆரம்பிக்க. ஆர்த்தி சிரித்துவிட்டாள் அதைக்கேட்டு.
“அக்கா மாமா மட்டும் இப்ப உன்னைப் பார்த்தாருன்னா மயங்கிடுவார்க்கா. அவ்ளோ அழகு நீ” நளிரா அக்காவை கட்டிக்கொள்ள, ஆர்த்தியும் தன் சகோதரிகளை கட்டிக்கொண்டாள். மூன்று பெண்களும் அடித்துக்கொண்டாலும், நான் நீன்னு எதிலும் போட்டி போட்டு கட்டிப்பிடித்து உருண்டாலும் எப்பவுமே ஒற்றுமையாகத்தான் இருப்பார்கள்.
சண்டை போட்டுக்கறாங்கன்னு மூணு பேரையும் தனித்தனியாக அமர வைத்தால், அந்தப் பக்கம் போயிட்டு திரும்ப அவர்கள் பக்கம் வரும்போது ஒன்றாகவேதான் இருப்பார்கள். “அதான் ஒத்துமையா இருக்க முடியலையே, தள்ளித்தான் இருங்களேடி” மலர் காட்டுக்கத்து கத்தினாலும் எடுபடாது அவர்களிடம்.
“மலரு சொன்னா கேளுப்பா நளிராவ எங்க வீட்டுக்கு அனுப்பி வை. மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துட்டு போற வரைக்கும். எங்கயும் இருக்க நடைமுறைதான இது” வாணி திரும்பவும் அங்கலாய்ப்போடு கேட்டார் மலர்விழியிடம்.
இன்றோடு எத்தனையாவது வரன் இது. ஒவ்வொரு தடவையும் நளிராவ பார்த்தால் வர்றவன் மனசு மாறிக்கறான். இந்த வரனாவது தகைஞ்சு வரட்டுமேன்னு கவலைப்பட்டார் வாணி.
“என்னக்கா நீங்க. எவனோ ஒருத்தனுக்காக நாங்க பெத்ததுங்களை கூடைய போட்டு மூடியா வைக்க முடியும். மனசாட்சி இருக்கறவன் சைத்ராவுக்கு மாப்பிள்ளையா வரட்டுமக்கா” மறுத்துவிட்டார் மலர்.
“என்னமோ போங்கடி. எனக்குத்தான் மனசே ஒப்புக்கலை” அவர்களுக்கு உதவியாக அங்கேயே இருந்தார் வாணி.
வாசலில் நளிரா அழகாய் பெரிய பூக் கோலம் போட, ஆர்த்தி அதற்கு வர்ணங்களை சேர்த்து இன்னும் அழகாக்கினாள்.
“ஆர்த்தி நடுவில அதிகம் கலர் சேர்க்காதடி மைல்டா இருக்கட்டும். அப்பத்தான் அவுட்லுக் எடுபடும்” பெண்கள் இருவரும் தங்கள் பங்குக்கு வீட்டை அழகுபடுத்தினார்கள்.
“ஐந்து பெண்கள் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்” என்றும் “ஒண்ணுக்கு மூணா பொண்ணுங்களை பெத்துவச்சிருக்கற ராஜன், இதுக்கே தலைகீழா நின்னு உழைக்கணும்” என்றும் எடுத்துச் சொல்லி,
ராஜனிடம் “அடுத்த குழந்தை வேண்டாம் இதோட நிறுத்திக்கோ” என மூன்றாவது பெண் ஆர்த்தி பிறந்த போது எச்சரித்தார்கள் நெருங்கியவர்கள்.
ராஜனுக்கும் இதற்கும் மேல் மனைவியை சிரமப்படுத்த மனதும் இல்லை, மலர்விழிக்கும் தெம்பில்லை. அதனால் ஆர்த்தியோடு நிறுத்திக் கொண்டார்கள் மலர்விழி ராஜன் தம்பதியினர்.
ஆனால் ராஜனுக்கும் மலர்விழிக்கும் இதுவரைக்கும் எந்த சிரமத்தையும் தந்தது இல்லை மூவரும். சமர்த்துப் பொண்ணுங்களாய் அவரவர் வேலையை பார்ப்பார்கள். வீட்டு வேலையயும் முடித்துக் கொடுப்பார்கள்.
அதிகம் செலவையும் இழுத்துவிடுவது இல்லை யாரும். அதனால் ராஜனுக்கும் மலர்விழிக்கும் இன்றுவரை பெண்களைப் பெற்றதில் எந்தக் கஷ்டமும் இருந்தது இல்லை.
“சரி பொண்ணுங்களா இங்க எல்லாம் சரியாத்தான் இருக்கு. போய் அக்காவை தயார் பண்ணுங்க. மாப்பிள்ளை வீடு இன்னும் ஒரு மணிநேரத்துல வந்துடுவாங்க. அப்பா போன் பண்ணி அவங்ககிட்ட விசாரிச்சுட்டார்” மலர்விழி அவர்களை அனுப்பிவைத்தார்.
சைத்ராவை தேடிப் போக அவள் சகோதரிகளின் கைவண்ணத்தில் ஏற்கனவே அழகாகத் தயாராகி இருந்தாள். தங்கைகளை பார்த்ததும், “அம்மா சொன்னது காதுல கேட்டுச்சுப்பா. எனக்கு இதான் பிடிச்சிருக்கு அதனால நீங்களும் வேற ட்ரெஸ் போட்டுட்டு ரெடி ஆகுங்க. இப்படியே இருக்காதீங்க” சைத்ரா அவர்களிடம் இருந்து மேலும் ஆராய்ச்சிக்கு ஆளாகாமல் தப்பித்துவிட்டாள்.
“இந்த மாப்பிள்ளை மட்டும் பிடிக்கலைன்னு சொல்லி பார்க்கட்டும். அவனுக்கு இருக்கு” ஆர்த்தி சொல்ல.
வந்த மாப்பிள்ளை நிஷாந்த்க்கு சைத்ராவைப் பிடித்துப் போக, சைத்ராவுக்கும் அவனைப் பிடித்துப் போக அப்பொழுதே முடிவும் செய்துவிட்டார்கள்.
பெண்கள் இங்கே ஒரே குதூகலமாய் இருக்க,
அங்கே துருவ்க்கு தினமும் நரகமாக கழிந்தது. அவனே மறக்க நினைத்தாலும் கூடவே இருக்கும் நண்பர்கள் இருவரும் அதற்கு விடுவதில்லை. அவன் வாங்கிய அடியின் தடம் கூட மறைந்து விட்டது. ஆனால் இவனுங்க பண்ணுற நக்கலில் இன்னும் வலிப்பதைப் போலவே இருந்தது அவனுக்கு.
பலி ஒருபக்கம் பாவம் ஒருபக்கம் என்பது போல நளிராவின் மீது அவனது அத்தனை கோபமும் படிந்தது.
தாங்கள் தங்கியிருந்த இடத்தின் மொட்டைமாடியில் அமர்ந்து மூவரும் மது அருந்திக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் போதை ஏறும் வரை துருவ்க்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் தலைக்கு ஏற அவனை கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
“பளார்ன்னு ஒரே ஒரே அரைடா மச்சி. அதுவும் செருப்பால” ரவிக் வாய்விட்டு சிரிக்க.
“பட் மச்சி! அது காஸ்ட்லி செருப்புடா. அந்த வகையில் இவன் கொடுத்து வச்சவன். அடி வாங்கினாலும் தரமான செருப்பால வாங்கிருக்கான்” ரவிக் அவனுக்கு ஜால்ரா போட்டான்.
அவர்கள் மீதும் தப்பு இல்லைதான் நடந்த விசயத்தில் சங்கடம்தான் என்றாலும் அதையே நினைச்சு வருந்த முடியாது இல்ல. அதனால் அதை வைச்சு பொழுதை ஓட்டினார்கள்.
நண்பர்கள் கேலிக்கு அவன் எந்த ரியாக்சனும் காட்டவே இல்லை. கண்களை மூடி அமர்ந்திருந்தவனை மட்டையாகிட்டான் என்றே கருதினார்கள்.