லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 42

4.9
(7)

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 42

 

வீட்டில் எல்லோரும் கிளம்பிவிட தீரனின் அத்தையும் ஊரிலிருந்து அவரை அழைத்து போக வந்த அவர் மகனுடன் கிளம்பி சென்றிருந்தார்..

 

மதியழகி தீரனை பார்த்து பார்த்து கவனித்து கொண்டாள்.. அவனை வேளைக்கு உண்ண வைத்து மாத்திரை மருந்துகளை சரியாக கொடுத்து அவன் கையில் அவ்வப்போது வலி இருக்கிறதா என்று கேட்டு வருடி கொடுத்து என அவனின் முழு நேர சேவகியாகவே மாறி இருந்தாள்..

 

அவன் மெல்லியதாய் முகம் சுருக்கினாலும் “என்ன தீரா? ரொம்ப வலிக்குதா?” என்று பதட்டத்தோடு கேட்பவளை ஒரு பெருமூச்சு விட்டு பார்த்தான் அவன்..

 

“மதி.. உனக்கு எத்தனை முறை சொவ்றது? எனக்கு இந்த மாதிரி நிறைய அடி பட்டு இருக்கு.. ஷூட்டிங்ல இந்த மாதிரி அடி படறதெல்லாம் சகஜம்.. பெரிய பெரிய ஹீரோக்கெல்லாம் அடி படும்.. இதுல நான் ஸ்டன்ட் மாஸ்டர்.. எனக்கு அடி படாம இருக்குமா?”

 

அவன் அவளுக்கு புரிய வைத்து விடும் நோக்கில் பேசி கொண்டு இருக்க “பெரிய ஹீரோவோ ஸ்டன்ட் மாஸ்டரோ.. யாரா இருந்தா என்ன..? ரெண்டு பேரும் மனுஷங்க தானே? அடிப்பட்டா வலிக்கும் தானே..?” 

 

அவள் வலியில் அவன் முகம் சுருங்குவதை கூட தாளாமல் அவனோடு வாக்குவாதம் செய்ய “எனக்கு அவ்ளோ ஒன்னும் வலிக்கல மதி.. நீ இவ்ளோ டென்ஷன் ஆகாத..” அவன் அவளின் வாடிய முகத்தை பார்க்க முடியாது அவளை சமாதான படுத்தி கொண்டு இருந்தான்..

 

“ஆமா.. உனக்கு வலிக்கல.. ஆனா நீ வலியில லேசா முகம் சுருக்கினாலும் எனக்கு ரொம்ப வலிக்குதே டா..” மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் விஷயத்தை விழிகளாலேயே பேசி முடித்திருந்தாள் அவனிடம்..

 

ஓரளவு அவள் விழி பார்வையின் மொழிகளை புரிந்து கொண்டவன் அதற்கு மேல் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டான்..

 

அன்று முழுவதும் அவனை சுற்றி சுற்றி வந்தாளா அவள்.. தீரன் என் அன்னை இருந்தபோது கூட அவனை அப்படி கவனித்துக் கொண்டதில்லை.. அவனுடைய அன்பும் சரி அவன் அன்னையினுடைய கவனிப்பும் சரி இந்தருக்கே முழுதாய் சொந்தமாக இருந்தது எப்போதும்.. வீட்டின் செல்ல பிள்ளை அல்லவா அவன்.. ஆனால் இப்போது மனைவிக்கு மனைவியாகவும் அன்னைக்கு அன்னையாகவும் இருந்து தன்னை கவனித்துக் கொள்ளும் மதியின் தீவிர அன்பில் கொஞ்சம் நெகழ்ந்து தான் போனான் தீரன்..

 

மாலையில் பார்கவியிடமிருந்து மதியழகிக்கு அழைப்பு வர அதை ஏற்று பேசியவள் அவள் சொன்ன விஷயத்தை கேட்டு பெரிதாய் முகம் மலர்ந்து போனாள்.. ஆனால் அடுத்த நொடியே அவள் முகம் வெயிலில் வாடிப்போன ரோஜா மலராய் சுருங்கி போய் இருந்தது..

 

பார்கவி தன் படத்தில் தீரனை கதாநாயகனாக நடிக்க வைக்க பாண்டி சம்மதம் தெரிவித்து விட்டதாக சொல்லியபோது ஏற்பட்ட அந்த ஆனந்தமும் மகிழ்ச்சியும் அவனின் தற்போதைய நிலை நினைவில் வர அப்படியே வடிந்து போனது..

 

“இப்பதான் அவரு கையில அடிபட்டு இருக்கேடி.. அவர் எப்படி இப்ப நடிக்க முடியும்?” அவள் இழுக்க “அடியேய் அறிவு கெட்டவளே.. இது அவருக்கு தெரியாதா? அவர் கையில அடிபடும் போது பாண்டியும் அங்க தானடி இருந்தான்..? ஆனால் அண்ணன் கையில தானே அடிபட்டு இருக்கு.. டயலாக் பேசுறதுக்கு வாய் நல்லா இருந்தா போதாதா? அண்ணா டயலாக் பேசி மூஞ்சில எக்ஸ்பிரஷன் காட்டினா போதும்.. இப்ப சும்மா ஆடிஷன் தான்டி.. ஷூட்டிங் ஆரம்பிக்க எப்படியும் 15 20 நாள் ஆயிரும்.. அதுக்குள்ள அண்ணாக்கு கை சரியாயிடும்.. முதல்ல இந்த ஸ்க்ரீனிங்கை அண்ணா கிளியர் பண்ணட்டும்.. அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம்.. அண்ணாவை ஒழுங்கா நடிக்க சொல்லுடி.. இந்த ஆடிஷன்ல தான் அவரோட எதிர்கால வாழ்க்கையே இருக்கு..”

 

“அதெல்லாம் நீ கவலைப்படாதே.. நாளைக்கு அங்க வந்து எப்படி நடிக்க போறார் பாரு.. அவர் நடிப்புல நீங்க ரெண்டு பேரும் அப்படியே அசந்து போய்ட போறீங்க..”

 

பெருமையாக சொல்லிக் கொண்டவள் “சரிடி.. நான் அவர்கிட்ட விஷயத்தை சொல்லி அவரை நாளைக்கு நடக்கற ஆடிஷனுக்கு பிரிப்பேர் பண்றேன்..” சொல்லிவிட்டு கைபேசி இணைப்பை துண்டித்தாள் மதி..

 

தீரன் அருகில் வந்த அமர்ந்தவள் அவன் கேசத்தை மெல்ல வருடிவிட அவனம் மெதுவாய் கண்களை திறந்து தன்னவளின் மதிமுகத்தை பார்த்தான்.. 

 

உடனேவே அவன் இதழில் ஒரு அழகான புன்னகை மலர்ந்தது.. அவள் முகத்தை கண்ட நொடி மலர்ந்து போகிறான் அவன் ஒவ்வொரு முறையும்.. 

 

அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவளும் அவன் பார்வையில் இருந்து தன் பார்வையை தாழ்த்தியவள் “அது.. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..”

 

அவள் இழுத்த இழுப்பில் என்னவோ ஏதோ என்று தீரன் குழப்பத்தோடு அவளை பார்த்தான்..

 

“என்ன விஷயம் மதி..?”

 

“அது.. பார்கவி கிட்ட நீங்க பாண்டி அண்ணா படத்துல ஹீரோவா நடிக்கிறது பத்தி கேட்டிருந்தேன்.. அண்ணாவும் உங்களை நடிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டாராம்..”

 

“என்னது? ஹீரோவா நடிக்க வைக்க கேட்டுருந்தியா? நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல.. எனக்கு நடிப்பு எல்லாம் வராதுன்னு.. ஏன் மதி..? பாண்டி பாவம்.. அவனாவது உருப்படியா படம் எடுத்து வேலையை பார்ப்பான் இல்ல..? இப்ப அவன் டைம் உழைப்பு பணம் எல்லாமே என்னால வேஸ்ட் ஆகும்..”

 

அவன் அவள் பேசுவதை காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் புலம்பி தள்ள அவளோ “அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. கொஞ்ச நேரம் நீங்க வாயை மூடிட்டு சும்மா இருங்க.. நான் சொல்றதை கேளுங்க.. அன்னிக்கு பாண்டி அண்ணா வீட்ல நம்ம ரெண்டு பேரும் நடிச்சப்போ நான் அவ்வளவு சொதப்பினேன்.. ஆனா நீங்க எவ்ளோ அழகா நடிச்சீங்க தெரியுமா? அப்புறம் அந்த ரெஸ்டாரண்ட்ல.. சத்தியமா சொல்றேன்.. அங்க யாரு இருந்திருந்தாலும் நீங்க நிஜமாவே என்னை உயிருக்கு உயிரா லவ் பண்றீங்கன்னு தான் நினைச்சிருப்பாங்க.. அப்படி இருந்தது உங்க நடிப்பு..”

 

அவள் சொன்னதை கேட்ட அவனோ  “அடியேய்.. அது நடிப்பில்லடி.. நெஜம்டி.. சினிமால நடிக்கற ஹீரோயினை எல்லாம் பார்த்தா அப்படி எல்லாம் ரொமான்ஸ் வராதுடி.. ஐயோ.. புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாளே.. என்னை வச்சு செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டா.. இதுல பாண்டி வேற.. நாளைக்கு அவனை பார்ப்பேன் இல்லை? அப்ப வெச்சிக்கிறேன் அவனுக்கு..” இப்படி எல்லாம் மனதிற்குள் நினைத்தானே தவிர வெளியில் அவனால் சொல்ல முடியவில்லை..

 

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. உங்களால நல்லா நடிக்க முடியும்.. எனக்கு தெரியும்.. அதனால நாளைக்கு போறீங்க.. அங்க ஆடிஷன் அட்டென்ட் பண்றீங்க.. சூப்பரா நடிக்கிறீங்க.. பெரிய ஆக்டர் ஆகுறீங்க.. அவ்வளவுதான்.. இதுக்கு மேல வேற ஒரு பேச்சும் கிடையாது..”

 

அவள் அழுத்தமாய் ஏதோ ஆணையிடுவது போல் சொல்ல அவனும் ” மகராணி சொன்னப்பறம் நான் ஏதாவது மறுத்து பேச முடியுமா? தங்கள் சித்தம் என் பாக்கியம் தேவி..” என்றான் பணிவாய்..

 

அவளோ கையை அருளுவது போல் வைத்துக்கொண்டு “அப்படியே ஆகட்டும் பக்தா.. நீ வாழ்வில் உன்னத நிலையை பெறுவாய்..” என்று ஆசிர்வாதம் செய்வது போல் சொல்ல அவனோ அவளுடைய குறும்பில் அப்படியே அவளை ரசித்தபடி பார்த்திருக்க அவன் விழிகளில் இருந்து தன் விழிகளை வேறு புறம் திருப்பியவள் களுக் என வெட்கச்சிரிப்பு சிரித்துக் கொண்டு “சரி.. நான் போய் உங்களுக்கு சூப் செஞ்சு எடுத்துட்டு வரேன்..” சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாய் சமையலறைக்கு ஓடி இருந்தாள்..

 

மாலை காலையில் போனது போலவே தமிழ்வாணனும் இந்தரும் ஒன்றாக வண்டியில் வீட்டுக்குள் நுழைய அவர்கள் பின்னாலேயே தன் வண்டியில் உள்ளே நுழைந்தாள் மலர்..

 

மதியழகி உள்ளே மாலை சிற்றுண்டி ஏதோ செய்து கொண்டு இருக்க தீரன் அந்த வீட்டின் வெராண்டாவிலிருந்த ஒரு சிறிய திண்ணை போன்ற அமைப்பில் அமர்ந்திருந்தான்..

 

தமிழ்வாணன் இறங்கி உள்ளே வர அப்போது மலர் தன் வண்டியில் இருந்து இறங்கி தன் தலை கவசத்தை கழட்ட பார்க்கவும் அது வராமல் ஏடாகூடமாய் சிக்கிக் கொள்ள வெகு நேரம் போராடிக் கொண்டிருந்தாள் அதோடு..

 

அதை கவனித்த இந்தர் “ஹே மலர்.. என்னடி ஆச்சு.. ஹெல்மெட் லாக் மாட்டிக்கிச்சா?” என்க

 

“ஆமாடா.. ரொம்ப நேரமா கழட்ட ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. உள்ள ஏதோ ஏடாகூடமா சிக்கிக்கிச்சு போல.. கழட்டவே வரல..”

 

அவள் அருகே சென்று அவள் தலை கவசத்தை கழட்டும் முயற்சியில் இறங்கினான்.. தமிழ்வாணன் தீரனை அங்கு பார்த்து தலையசைத்து விட்டு உள்ளே சென்றிருந்தார்..

 

அப்போதும் வெரண்டாவில் அமர்ந்திருந்த தீரனின் பார்வை அங்கிருந்த ஜன்னல் வழியாக அவர்கள் இருவரின் மேல் தான் இருந்தது..

 

மலரின் தலைக்கவசத்தை கழற்ற முயன்று கொண்டிருந்த இந்தர் வெகு நேரமாய் முயற்சி செய்தும் அது வெளியே வராமல் போக “இந்த லாக் துரு பிடிச்சு இருக்கு போல.. இதெல்லாம் கவனிக்க மாட்டியா மலரு.. அதுல கொஞ்சம் எண்ணெய் போட்டு இருக்கலாம் இல்ல..?” என்று கேட்டான்..

 

“ஆமாண்டா.. இந்த ஹெல்மெட் வாங்கி ரொம்ப நாள் ஆகுது.. கிட்டத்தட்ட ஒரு நாலு அஞ்சு வருஷம் ஆகுது.. அதான் துரு பிடிச்சுருச்சு போல.. என்ன..? கழட்ட வரலையா? பேசாம உள்ள போய் ஸ்ட்ராப்பை கட் பண்ணிக்கிறேன்.. விடு..”

 

அவள் அவசரப்படவும் “இருடி.. ஸ்ட்ராப் கட் பண்ணா நாளைக்கு ஹெல்மெட் இல்லாம எப்படி வண்டி ஓட்டிட்டு போவ?” என்றவன் மெதுவாய் அதை இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்டி கழட்ட முயன்று கொண்டிருந்தான்.. 

 

அந்த தலை கவசத்தின் பூட்டு எப்படி மாட்டி இருக்கிறது என்று பார்க்க இன்னும் அவளது முகத்தின் அருகே சென்று அதை ஆழ்ந்து பார்த்த நேரம் அவள் முகம் அவன் முகத்தின் மிக அருகே இருக்க பளீர் என்று மினுக்கும் கண்ணாடியாய் அவள் கன்னம் அவன் பார்வையை பற்ற அந்த நேரம் பக்கவாட்டில் இருந்து அவள் முகத்தை ஒரு நொடி ரசித்திருந்தான்..

 

ஆனால் அவனின் பார்வை மாற்றம் தீரனின் கண்களில் சரியாக சிக்கியது..

 

“என்ன இந்தர்.. கழட்டிட்டியா?” சத்தமாக தீரன் கேட்க அவன் குரல் கேட்டு தன் நிலை உணர்ந்தவன் முயன்று வேகமாய் அதை பிடித்து இழுக்க அடுத்த கணமே அந்த தலை கவசத்தின் பூட்டு திறந்து கொண்டது..

 

மலரழகியோ “அப்பாடா..” எந்த ஒரு பெருமூச்சை உதிர்த்தவள் “எங்க இந்த ஹெல்மெட்டோடயே நாள் ஃபுல்லா சுத்த வேண்டியிருக்குமோன்னு நினைச்சேன்.. தேங்க்ஸ் டா இந்தர்..” சொல்லிவிட்டு உள்ளே வர தீரனோ இந்தரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..

 

மலர் “ஹாய் மாமா..” என்க “ஹாய் மலர்.. உங்க அக்கா ஏதோ டிஃபன் பண்ணி வச்சுக்கிட்டு இருக்கா.. போய் டிரஸ் மாத்திட்டு காபியும் டிபனும் சாப்பிடு.. போ..” என்றான்..

 

அவளை அனுப்பிவிட்டு இந்தருக்கு குரல் கொடுத்தான் தீரன்.. அவன் அழைத்ததும் “ஹாய் அண்ணா.. என்ன அண்ணா..?” என்று அவன் கேட்க “இந்தர்.. இப்படி வந்து உட்காரு.. உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்று அவன் அருகில் இருந்த இடத்தை தட்டி காண்பிக்க இந்தரும் தீரன் அருகில் அமர்ந்தான்..

 

இந்தரின் கண்களையே கூர்ந்து பார்த்தபடி தீரன் அமைதியாய் அமர்ந்திருக்க இந்தருக்கோ

அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று உள்ளம் வதக் வதக் என அடித்துக் கொண்டது..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!