“அம்மா என்னோட போன் எங்க?” ஆரவ் குரல் உச்சத் தொனியில் ஒலிக்க,
அவனது சத்தம் பக்கத்து வீட்டிற்கே கேட்டிருக்கும் ஆனால் மனோகரி அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் எப்போதும் செய்யும் பணிகளை இயல்பாகச் செய்து கொண்டிருந்தார். வேலைக்கு ஆள் வைத்தால் மூவருக்கும் பிடிக்காது. எதுக்குத் தேவையில்லாம மத்தவங்க நம்ம வீட்டுக்குள்ள வந்து குறுக்க மறுக்க உலாவனும்? என மூவரும் முகம் சுளித்துப் பேச.
தன்னைப் பற்றிய பேச்சு காதில் விழவும், வேலைக்கு வந்த பெண்மணி வேலையே வேண்டாம் என ஓடிப்போனாள்.
அதனால் அவரே முடிந்தவரையில் வீட்டு வேலைகளை மெல்ல மெல்லச் செய்து கொள்வார். அதுதான் அவருக்குப் பிடித்தமும் கூட. எல்லாமே தன் கைக்குள் இருந்தாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. குடும்பம் சார்ந்த முடிவுகள் எடுப்பதில் பிடிவாதமாக இருப்பார்.
கணவருக்கும் இரு மகன்களுக்கும், காலையில் சாப்பிட தோசைகளை சுட்டு ஹாட்பாக்ஸில் வைத்தவர், அதற்கான குழம்பு சட்னி இரண்டையும் அவர்கள் சாப்பிட எடுத்து வைப்பதும், மதியத்துக்கு சமைத்து அதையும் பேக் பண்ணி மூவருக்கும் தனித்தனியாக எடுத்து வைப்பதும் என இயந்திரம் போலச் செய்தார்.
கைகள் அதன் வேலையை செய்ய, அவரது மனமோ வேறு சிந்தனையில் இருந்தது.
சைத்ராவை பெண் பார்த்துவிட்டு வந்த மனோகரிக்கு இளைய மகள் நளிராவை மிகவும் பிடித்துப் போனது.
நளிராவின் சாந்தமான குணமும், அதே நேரம் அவளது குறும்பு சிரிப்பும் துறுதுறு கண்களும் பார்க்கவே அத்தனை அழகு.
ஆரவ்க்கு பொருத்தமாக இருப்பாள் என அவரது மனம் கணக்குப் போட்டது.
இந்தப் பெண்ணை இளைய மகன் ஆரவ்க்கு கேட்டுப் பார்க்கலாமே என்ற யோசனை வந்தது. தங்கள் கடமையும் முடிந்து அக்கடான்னு ஓய்வெடுக்கலாம். தவிர சகோதரிகளே மருமகளாய் வீட்டுக்கு வந்தால் ஒற்றுமையாய் இருப்பார்கள், குடும்பமும் பிரியாது என நினைத்தார்.
“அம்மா என்னோட வாட்ச் எங்க வச்சேன். பார்த்தீங்களா?” மூத்த மகன் குரலும் செவியை அடையவில்லை.
“மனோ எனக்கு காபி எடுத்துட்டு வாம்மா” ராகவனும் அழைத்துப் பார்த்துவிட்டார். ஆண்கள் மூவரும் தவளை போலக் கத்தியதுதான் மிச்சம்.
“அம்மா எங்க, எந்த உலகத்துல இருக்கீங்க நீங்க?” நிஷாந்த் தன் பங்குக்கு அவரது கவனத்தைக் கலைக்க முயன்று தோற்றவனாய் அவரை உலுக்கி அழைத்தான்.
போதாத நேரத்துக்கு போனை சைலன்ட்ல வேறு போட்டுட்டான், ஆபீஸ் போற நேரத்துல, போனும் காணோம் அம்மாவும் ஐஸ் மாதிரி ப்ரீஸ்ல நின்று கொண்டிருந்தால் அவனும்தான் என்ன செய்வான்.
“ஒன்னுமில்லப்பா?” என்றவர் மகன்களுக்கு என்ன தேவையெனக் கேட்டறிந்து செய்து கொடுத்தார்.
வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, கணவரின் அருகில் வந்தமர்ந்தவர் அவர் கேட்ட காபியை மேஜையின் மீது வைத்தார்.
“எப்போ கேட்டேன். இப்பதான் நியாபகம் வந்துச்சா?” கேட்டவர் அதைக் குடிக்க ஆரம்பிக்க.
“உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்” என்றவர் தன் ஆசையைச் சொல்லவும். ஒருவருக்கொருவர்
தங்களுக்குள் கலந்தாலோசித்தார்கள் அதுபற்றி.
நெடுநேரம் சிந்தனைக்குப் பிறகு, “மூத்த பொண்ணை பெண் பார்க்க வந்துட்டு இளையவளை கேட்கறாங்களேன்னு ஏதாவது நினைக்கப் போறாங்கடி. நிஷாந்துக்கு முதல்ல ஆகட்டும். பிறகு பார்க்கலாம்” ராகவன் வேண்டாமென மறுத்தார்.
ராகவனுக்கோ ஆரவ் இன்னும் விளையாட்டுப் பையனாகவே இருக்கவும், இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் என்று யோசிக்க, மனோகரி அவரது யோசனையை ஆரம்பத்திலேயே நிப்பாட்டினார்.
“அவனுக்கும் கல்யாண வயசுதானே. வேலைக்கும் போறான். இதுக்கும் மேல என்ன தகுதி வேணும் அவனுக்கு. பேசாம இருங்க நான் கேட்டுக்கறேன் அவன்கிட்டே” என்றுவிட்டு மகனை அழைத்தார் அப்போதே.
கல்லூரிப் ப்பருவத்தின் குறும்புகள் இன்னும் மிச்சம் இருக்க, இப்போதுதான் பணியில் சேர்ந்ததால் அதை ஏற்றுக்கொள்ள கால அவகாசம் தேவைப்படுவது அவன் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.
இத்தனை நாள் விளையாட்டும் உறக்கமுமாக காலம் செல்ல, தற்பொழுது வேலையின் நிமித்தம் ஓரிடத்தில் அடங்கி உட்கார சற்று எரிச்சல் மேலிட, தாயிடம் கொட்டி விடுவான் அவ்வப்போது. அதை உணர்ந்த மனோகரியும் அத்தனைக்கு அவனிடம் எதிர்பார்ப்பதும் இல்லை.
“சொல்லுங்கம்மா” தாயின் முன் வந்து நின்றான் அலட்சியமாக. இருவரும் பேசுவதை இந்நேரம் வரை காதில் வாங்கியவாறுதான் இருந்தான், அதனால் ராகவன் நேரடியாகவே கேட்டுவிட்டார்.
“பின்ன எப்படி சொல்லிட்டு போகணும். எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்கச் சொல்லறீங்களா?” மனோகரி இப்போது கணவரிடம் சண்டைக்கே வர. ராகவன் வாயைப் பசை போட்டு மூடிக்கொண்டார். நடப்பது நடக்கட்டும், எப்படியும் தன் பேச்சு இங்கே செல்லாது அதனால் தேவையில்லாமல் பேசி தன் நலனையும் கெடுத்துக்கொள்ள வேண்டாமே என நினைத்துக் கொண்டார்.
ஒன்றே செய் நன்றே செய் அதுவும் இன்றே செய் என்ற பழமொழியை நினைவில் கொண்டவராய் பெண் வீட்டுக்கு கிளம்பிவிட்டார்கள் ராகவனும் மனோகரியும்.
இங்கே நளிராவின் வீட்டிலோ சைத்ராவிற்கு செய்ய வேண்டிய நகைகள் பற்றியும், அதற்கு ஆகும் செலவுகளையும் கணக்குப் போட்டனர் மலர்விழியும் நாதனும்.
“என்னோட நகைங்களும் இருக்குங்க. அதையும் மாத்தி புது டிசைன்ல செய்துடலாம். நளிராவுக்கு இப்பதானே நாலு பவுன்ல ஒரு நெக்லஸ் எடுத்தோம் அதையும் சைத்ராவுக்கு தந்துடலாம்” மலர்விழி சொல்ல.
“அதெல்லாம் சரிதான் மலர். இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டுலே இருந்து வரேன்னு சொன்னாங்களே. அதான் யோசனையா இருக்கு, எதுக்கு வராங்க?” நாதன் குழப்பமாக இருந்தார்.
ஏனெனில் மனோகரி போனில் சொன்ன தகவல் அப்படி “நாங்க உங்களைப் பார்க்க வரோம் சம்பந்தி. பொண்ணுங்க வீட்டுலதான இருக்காங்க?” மனோகரி விசாரிக்க.
“என்னாச்சு சம்மந்தி?” கேட்டவருக்கு, பொண்ணுங்களை எதுக்கு கேட்கறார் என்றிருந்தது. சைத்ராவைப் பற்றி மட்டும் கேட்டிருந்தால் இப்படிக் குழம்பியிருக்க மாட்டார். பெண்களைப் பற்றிச் சொல்லவும் அவருக்கு யோசனையாக இருந்தது.
ஆம் நளிராவுக்கு சுட்டுப் போட்டாலும் சமையல் வரவே வராது. அவளுக்கு கைப்பக்குவம் வருதோ இல்லையோ சமைக்கும் அளவிற்கு அவளுக்கு பக்குவம் பத்தறது இல்லை. ஆர்வமும் இல்லை.
“இதெல்லாம் ஒரு பருவம் வாணி. நம்ம பிள்ளைங்க ஒரு காலத்துல இப்படித்தான் இருந்தாங்க. இப்ப வளர்ந்த பிறகு ஆளாளுக்கு ஒருபக்கம் வேலைன்னு போயாச்சு. வீடே அமைதியா இருக்கு. நாமதான் ஒண்ணுக்கொன்னு பேசிக்கணும் இனி” வாணியின் கணவர் ஏக்கமாக சொன்னார்.
“அதுவும் சரிதான். இந்தப் பொண்ணுங்க குரல் காதில் கேட்டால்தான் மனசுக்குள் நிம்மதியா இருக்கு. தனிமை உணர்வே நமக்கு வரது இல்ல” வாணிக்கு சன்னமான புன்னகை உதட்டினில் தவழ்ந்தது.
இதுதானே நிதர்சனமும்.
இங்கே நளிரா உதவி செய்ய சைத்ராவும் ஆர்த்தியும் திரும்ப செய்தார்கள் பிரட்ரோலை. ஒற்றுமையாய் அவர்கள் சிரிப்பும் பேச்சுக்குரலும் காதில் விழ, சற்று முன் இவர்கள் ஒரு சின்ன பிரட் தூண்டுக்காக அடிச்சுக்கிட்டாங்கன்னு சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.