வீட்டுக்குள் செல்லும்போதே “டாட், மாம்” இருகைகளையும் இறகைப் போல விரித்தவாறே தாய் தந்தையைத் தேடிச் சென்றான்.
“எப்பதான் மெச்சூர்டா நடந்துக்கப் போறான்?” சிபின் பதினைந்து வயது சிறுவன் போலவே கலாட்டா செய்யும் துருவ்வைப் பார்த்தான். அந்தப் பார்வையில் நிச்சயம் ஆதங்கம்தான் இருந்தது. தன்னோடு வந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளலாமே என அவன் அட்வைஸ் பண்ணாத நாளில்லை.
“மாம் டாட்” துருவ் குரல் எங்கெங்கும் எதிரொளிக்க அதற்கு பதில் தர யாரையும் காணோம்.
தான் வருகிறேன் என்று தெரிந்தால் அம்மா வாசலிலேயே காத்திருப்பார்களே, எங்கே போனாங்க, அவனுக்கு ஏமாற்றம் உண்டானது.
சின்னப் பிள்ளையைப் போல முகம் வாடியது அவனுக்கு, அம்மா என்னைத் தேடவே இல்லையா, பிடிவாதம் கலந்த கோபத்தில் கால்களை நிலத்தில் பதித்து நின்றவனுக்கு கோபம். அம்மா என்னை கண்டுக்கவே இல்லை என்பது போல, கண்டதையும் கற்பனை பண்ணினான்.
“அம்மா எங்க இருக்கீங்க?” அவன் இருக்குமிடம் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது.
“மாம் டாட்” துருவ் தேடும் குரல் கேட்டும் பதில் சொல்லாமல் இருந்தாள் அவன் தாய் மிரா.
மகனின் குரல் கேட்டும் பதில் சொல்லாமல் இருக்க காரணம் மிருதுளா அவள் வாயை பொத்தி இருந்ததுதான். “ம்ம்ம்” மகனுக்கு பதில் தர முடியாது மிரா தவித்து நின்றாள்.
சிபின் இப்பொழுது ஆர்யனின் பிஸ்னஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறான். அதனால் ஆர்யன் மொத்தமாக விலகாமல் கொஞ்சம் கொஞ்சமாய் விலகினான் மகனுக்கு சிரமம் தராமல். சிபினும் புத்தி கூர்மையுடன் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான்.
துருவ் விளையாட்டுப் பையனாகவே இன்னும் இருக்க, மிளிராவுக்கும் துருவ்வைக் கண்டிப்பதில் விருப்பமில்லாமல் போக, இப்போதைக்கு துருவ் வாழ்க்கையை அனுபவிக்கிறான்.
ஆரியன் வீட்டுக்குள் வருவது அவன் கார் ஹாரன் மூலம் தெரிந்தது. மனைவிக்கு நான் வந்துவிட்டேன் என்று சொல்வது போல ஸ்பெஷலாக ஹாரன் அழுத்துவான்.
அதுவரை தன்னிடம் பேசிக்கொண்டிருந்த தாயின் பேச்சு சுவிட்ச் போட்டாற் போல நின்றுவிடவும், துருவ் கண்டுகொண்டான். தந்தை வந்துவிட்டார் என்று.
“இப்பதான வந்த?” ஆர்யன் விசாரித்தாலும் எங்கே போகலாம் என்பது போல மகனைப் பார்த்தான்.
“இருந்தாலும் உங்ககூடவும் போகணும் டாட்” என்று சொன்னவன் “ஜில்லுன்னு மலைப்பிரதேசம் ஓகேவா டாட்”
“ஓகே தான்” ஆர்யன் மனைவியின் சம்மதத்தை அவள் விழிகள் பார்த்து சொல்ல.
அங்கே வந்த சிபின், துருவ்வை மடியில் படுக்க வைத்து, அவனது கேசத்தை வருடி விடும் தாயையும், பதங்களை மிருதுவாக பிடித்துவிடும் தந்தையையும் ஒரு பார்வை பார்த்தவன், ‘இவங்களோட’ தலையை உலுக்கி தன்னைக் கன்ட்ரோல் செய்தான்.
ஆர்யன் ஒரே ஒரு வார்த்தை துருவிடம் “கொஞ்சம் பொறுப்பா இருடா” என்று சொன்னால் அவனும் உடனே கேட்டுக் கொள்வான்.
ஏனெனில் தந்தையின் சொல்லில் அத்தனை மதிப்பு ஆனால் ஆரியன் அதைச் சொல்ல மாட்டான். எந்த வேலையாக இருந்தாலும் தானே விருப்பப்பட்டு அதை செய்தால்தான் முன்னேற முடியும் என்று நினைப்பவன் அவன்.
அத்தை மகன்கள் கபில் சரத் இருவரையும் அப்படித்தான் நடத்தினான். அதுவும் சரத் குறும்புக்காரன், துருவ்வும் அவனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருப்பர். இப்பொழுது அவர்களாகவே தந்தையின் தொழிலைக் கவனித்துக் கொள்கிறார்கள்.
துருவ்வும் அப்படித்தான் இப்போதைக்கு சந்தோசமாக இருக்க விடுங்கள் என்கிறான்.
“சிபின் சாப்பிடறியா?” மிளிரா மகனை அழைத்தாள்.
மொபைலில் கவனமாக இருந்தவன் நிமிர்ந்து அவர்களைப் பார்க்க, அவர்களின் அப்போதைய சந்தோசத்தைக் கெடுக்க விரும்பாமல், “ஒண்ணாவே சாப்பிடலாம்மா” என்றுவிட்டான்.
“மாம் எனக்கு ஊட்டி விடுங்க. நானே சாப்பிட்டு பசியே அடங்கலை” துருவ் உதட்டைப் பிதுக்கி சிறுபிள்ளை போலக் குற்றம் சாட்ட.
“அச்சோ என் தங்கம்” மிளிரா அவன் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினாள்.
“மாம்!” சிபினுக்கு பொறுக்கவே முடியவில்லை. அவனால் துருவ் போல ஒட்டி உறவாட முடியாது. ஆனால் தாய் தந்தையின் அன்பை முழுமையாக ஏற்றுக்கொள்வான். தாயின் கொஞ்சல்களை அனுபவிப்பான்.
தன்னால் முடியாததை இவன் செய்கிறானே என்பது போல, புகைச்சல் கிளம்பியது அவனுக்கு. “டேய் கிளம்பி ஆபீஸ் வாடா” சிபின் கடுப்புடன் முறைத்தான்.
“நோ வே ப்ரோ. இன்னும் பார்க்க வேண்டியது இருக்கே” பட்டென மறுத்துவிட்டான்.
“சிபின் இன்னைக்கு மீட்டிங்ல” என்று ஆர்யன் சிபினிடம் உரையாட ஆரம்பிக்க.
துருவ்வின் மூடிய விழிகளுக்குள் தான் வாங்கிய அடியின் மிச்சம் வந்து போனது. தங்கத் தட்டிலேயே செல்லமாக வளர்ந்தவனுக்கு இந்த அடி சாதாரணமான ஒன்று இல்லை. அடியே வாங்கியது இல்லை இதுவரை.
மூடிய இமைகளை மேலும் இறுக்க மூடியவன், தாடை இறுகியது. இருந்தாலும் பெண்ணாயிற்றே போனால் போகட்டுமென விட்டுவிடத் தயாராக இருந்தான் துருவ்.
தேவையில்லாமல் ஒரு பெண்ணை காயப்படுத்திட அவனுக்கு மனதில்லை.
சகோதரனையே பார்த்தவன், தந்தை அழைக்கவும் “டாட் சொல்லுங்க” நிமிர்ந்து அமர்ந்தான்.
“தூத்துக்குடியில் பிஸ்னஸ் ஆரம்பிக்கற ஐடியா உனக்கு இருக்கா? ஆத்மா அப்பா என்கிட்ட விசாரிச்சார்” ஆரியன் மகனிடம் கேட்டான். “என்ன டாட் பண்ணலாம்?” சிபின், இந்தப் பேச்சில் அதிர்ந்து பின் இயல்பான துருவ்வின் முகத்தை ஆராய்ந்தான்.
“போய் பாரு. பிடிச்சிருந்தா யோசிப்போம்”
“ஓகே டாட்” என்றவன் “மாம் நான் குளிச்சுட்டு டிரெஸ் மாத்திட்டு வரேன். சாப்பிடலாம்” சொல்லிவிட்டு தன் அறைக்கு செல்ல.