லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 47

4.9
(9)

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 47

 

மதியின் அலப்பறையையும் தீரன் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக அவளுக்கு அடங்கி போவதையும் பார்த்து ரசித்து சிரித்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்த பாண்டி “தீரா.. அப்படியே பக்கா ஹஸ்பண்ட் மெட்டீரியலா மாறிட்டியே தீரா.. நடிப்பு எல்லாம் சரிதான்.. ஆனா அந்த பொண்ணு கிட்டயும் மதி மதின்னு மதி பேர் சொல்லி தான் பேசிகிட்டு இருந்தே.. நீ நடிக்கப் போற எல்லா படத்திலயும் ஹீரோயின்க்கு மதின்னு பேர் வைக்க முடியாதே.. அதனால இனிமே நீ நடிக்கிற படத்தில எல்லாம் ஹீரோயின் உருவத்தில மதியை வச்சு கற்பனை பண்ற மாதிரி மதிக்கு ஹீரோயின் பேரை மாத்திட்டதாவும் கற்பனை பண்ணிக்க..”

 

சொல்லிவிட்டு அவன் சிரித்து விட மதியோ வெட்கப்பட்டு தலையை கவிழ்த்தாள்..

 

“என்னமா மதி.. தீரனுக்கு சர்வமும் மதி மயமா ஆக்கி வச்சிருக்க..?”

 

பாண்டி கேலி செய்ய மதிக்கோ வெட்கத்தில் முகம் சிவந்து போனது..

 

தீரன் கதாநாயகனுக்கான தேர்வில் தேறி விட்டான் என்றும் தான் எடுக்கபோகும் படத்தில் கதாநாயகன் அவன் தான் என்றும் பாண்டி முடிவு செய்து சொல்லி இருந்தான்.. ஒரு நிபந்தனையோடு தான் தன் முடிவை சொன்னான்.. ஒவ்வொரு படப்பிடிப்புக்கும் அவனோடு மதி வரவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை..

 

அவள் வருவதற்கு வசதியாக மாலை நேரங்களில் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.. தீரன் கையில் இருந்த காயம் முழுவதுமாக குணமான பிறகு படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என பாண்டி சொன்னான்..

 

அதைக் கேட்டு தீரன் ஆனந்தப்பட்டானோ இல்லையோ மதிக்கோ உள்ளுக்குள் சொல்லொணா இன்பம் நிறைந்து வழிந்தது.. 

 

அது அவள் கண்களிலும் தெரிய “சூப்பர் தீரா.. கூடிய சீக்கிரமே என் தீரன் பெரிய ஸ்டார் ஹீரோ ஆயிடுவாரு..” என்று சொல்லி துள்ளி குதிக்க அவனுக்கோ அவள் சொன்ன என் தீரன் என்ற வார்த்தைகள் அப்படியே உள்ளுக்குள் பதிந்து போயின..

 

படப்பிடிப்பு தளத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் இருவரும் ரொம்பவும் பேசிக்கொள்ளவில்லை.. அந்த காதல் காட்சியில் தீரன் தன்னிடம் பேசிய வார்த்தைகளையே அசைப்போட்டு கொண்டு இருந்தாள் மதி.. உள்ளுக்குள் அவன் பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஓடவிட்டவளுக்கு அதன் தாக்கத்தில் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கி நிறைந்து வழிந்தது..

 

தீரனோ அந்த படத்தில் தன்னை எப்படியாவது கதாநாயகனாக ஆக்கிவிட வேண்டும் என்ற உந்துதலில் மதி அவனை ஒவ்வொரு நொடியும் ஊக்கப்படுத்திய விதம்.. அவனோடு பேச்சு கொடுத்து அவனை நடிக்க வைத்த  முறை.. இதையெல்லாம் எண்ணிக் கொண்டு வந்தவன் அவள் சொன்ன என் தீரன் என்ற வார்த்தையில் அப்படியே உறைந்து உருகி வழிந்து கொண்டு இருந்தான்..

 

இருவருமே அடுத்து வரும் இரண்டு நாட்களுக்குள் தங்கள் காதலை மற்றவரிடம் சொல்லி விட வேண்டும் என்று முடிவுக்கு வந்திருந்தனர்..

 

இருவருக்குமே ஏதோ ஒரு சிறிய தடை மற்றவரை அவர்களின் காதலை சொல்ல விடாமல் தடுக்கிறது என்று புரிந்து போனது.. அதனால் தங்கள் காதலை சொல்லி அவர்கள் மனதில் இருக்கும் காதலை வெளிக்கொணர வேண்டும் என்று இருவருமே முடிவு செய்து கொண்டனர்.. அதற்கான சரியான நேரத்துக்காக இருவரும் காத்துக் கொண்டிருந்தனர்..

 

இங்கே மாலை கல்லூரியிலிருந்து திரும்பி வருகையில் தமிழ்வாணனை அழைத்துக் கொண்டு வர அவர் அலுவலக வாசலில் சென்று வண்டியை நிறுத்தினான் இந்தர்.. 

 

அவர் வெளியில் வராது போகவே வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு அந்த நிறுவனத்திற்குள் நுழைய முற்படும் நேரம் எதிரில் நான்கு இளைஞர்கள் ஒரு இளம் யுவதியை கேலி செய்து பேசி சீண்டிக் கொண்டிருப்பதை பார்த்தான்..

 

பேசிக் கொண்டே இருக்கும் போது அவர்களில் ஒருவன் அந்த பெண்ணின் துப்பட்டாவை இழுக்க அவளோ துப்பட்டாவின் மறுமுனையை இறுக பிடித்தபடி “டேய்.. துப்பட்டாவை குடுடா.. செருப்பு பிஞ்சிடும்..” என்க அவனோ மேலும் முன்னேறி அவள் கையை பிடித்து சட்டென இழுத்தான்..

 

அவனிடம் சிக்கிவிடாமல் இருக்க அவனிடமிருந்து அந்த பெண் விலகி ஓட பார்க்க அந்தப் கை பகுதியில் இருந்த ஆடையை கிழித்திருந்தான் அவன்..

 

அதைப் பார்த்த இந்தர் அங்கிருந்து ஓடி சென்று அந்த இளைஞனின் மார்பிலேயே காலால் எட்டி ஒரு உதை விடவும் அந்த இளைஞன் அப்படியே நான்கடி பின்னால் போய் விழுந்தான்..

 

அவன் கையில் இருந்த துப்பட்டாவை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்து “நீ போம்மா.. நான் பாத்துக்குறேன்” என்றான் இந்தர்..

 

அதன் பிறகு அவர்கள் எல்லோரும் அவனோடு வரிசையாக சண்டையிட வர அவர்களை சரமாரியாக அடித்து துவைத்து இருந்தான் இந்தர்..

 

நிறுவனத்தை விட்டு வெளியே வந்த தமிழ்வாணன் அவன் அந்த இளைஞர்களை வெளுத்துக் கொண்டிருப்பதை பார்த்து முதலில் அதிர்ந்தவர் அதன் பின் ஒரு நிம்மதி பெருமூச்சு தான் விட்டார்..

 

பல நாட்களாக அந்த பக்கம் போகும் பெண்களையும் சிறுமிகளையும் சீண்டிக்கொண்டும் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டும் இருந்த அந்த இளைஞர்களை கேள்வி கேட்க எவரும் துணியவில்லை..

 

தமிழ்வாணன் ஒரு நாள் துணிந்து அவர்களை கேள்வி கேட்க “ஏ கெழவா.. உன் வேலை என்னவோ அதை பார்த்துக்கிட்டு போ.. எங்களை கேள்வி கேட்டா நடக்குறதுக்கு கால் இருக்காது உனக்கு..” என்று மிரட்டி இருந்தனர் அந்த வருங்கால இந்தியாவின் தூண்கள்..

 

வயதான காலத்தில் தன் பெண்களுக்கு பாரமாக ஆகிவிடக்கூடாது என்ற நினைப்பில் அவரும் வாயை மூடி அமைதியாக இருந்து கொண்டார்..

 

இந்தர் அவர்களை ஒரு கை பார்த்திருக்கவும் அவருக்கு மனதிற்குள் பெருத்த ஆனந்தம் உண்டாயிற்று..

 

அவனருகில் வந்து முதுகில் தட்டிக் கொடுத்தவர் “இந்த ஏரியால இருக்குற பொண்ணுங்களுக்கு எல்லாம் உன்னால ஒரு விடிவு காலம் கெடச்சிடுச்சு பா.. நீ இந்த பசங்களை அடிச்சு போட்டது தெரிஞ்சா உன்னை தலையில வச்சு கொண்டாடுவாங்க அவங்க.. அவ்ளோ அக்கிரமம் பண்ணிட்டு இருந்தாங்க இந்த பசங்க..”

 

அவர் சொன்னதைக் கேட்டவன் “இவனுங்க எல்லாம் அடிச்சா தான் திருந்துவானுங்க அங்கிள்.. வாயால சொல்லி எல்லாம் திருந்துறவனுங்க கிடையாது.. சரி.. வாங்க போலாம்..” என்று அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வண்டியை விட்டான்..

 

வரும் வழியில் திடீரென தமிழ்வாணனுக்கு லேசாக நெஞ்சு வலிப்பது போல் இருக்க இந்தர் முதுகில் தட்டி “அப்பா இந்தர்.. எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு.. கொஞ்சம் வண்டியை நிறுத்துறியா?” என்று கேட்க அவர் சொன்னதை கேட்டு பதறி போனவன் வண்டியை நிறுத்தி ஸ்டாண்டை போட்டு மெல்ல அவரை கை தாங்கலாக பிடித்து இறக்கிவிட்டான்.. 

 

அங்கே ஓரமாய் இருந்த கல் மேடையில் அவரை அமர வைத்தவன் “ரொம்ப வலிக்குதா அங்கிள்.. ஒரு நிமிஷம் இருங்க..” என்றவன் அங்கே பக்கத்தில் இருந்த ஒரு வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டு வாங்கி வந்தான்..

 

அவருக்கு தண்ணீரை பருக கொடுத்தவன் “அங்கிள் இங்கே பக்கத்துல ஒரு ஹாஸ்பிடல் இருக்கு.. வாங்க போய் பார்த்துட்டு போயிடலாம்..”

 

அவன் கவலையாய் சொல்ல அவரோ “அதெல்லாம் வேணாம் பா இந்தரு.. இந்த மாதிரி அப்பப்போ லேசா வலிக்கும்.. அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தன்னால சரியாயிடும்.. வீட்டுக்கே போயிடலாம் பா..” என்றார்..

 

ஆனால் அவர் முகத்தில் வலியின் ரேகைகள் இன்னும் தெரிய “இல்ல அங்கிள்.. அப்படி எல்லாம் விட முடியாது‌. நெஞ்சு வலி எல்லாம் அப்படி சாதாரணமா எடுத்துக்க கூடாது.. வாங்க.. டாக்டரை பார்த்துட்டு போயிடலாம்..”

 

சொன்னவன் அதோடு நிற்காமல் அவரை எழுப்பி வண்டியில் ஏற்றிக்கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு சென்றான்..

 

அங்கே தமிழ்வாணனை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் இன்னும் சில பரிசோதனைகள் செய்து அதன் பின்னரே சிகிச்சையை தொடங்க முடியும் என்றும் கூறி அப்போதைக்கு ரத்த அழுத்தத்திற்கு மருந்து கொடுப்பதாகவும் சொல்லி சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்..

 

வெளியே வந்து அந்த மருந்துகளை மருந்தகத்திலிருந்து வாங்கிக் கொண்டவன் அவரை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான்..

 

வீட்டுக்கு வந்தவன் தமிழ்வாணனிடம் மறக்காமல் இரவு அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டு நேராக தன் அறைக்கு சென்று விட தன் அறைக்குள் நுழைந்த தமிழ்வாணன் அங்கே மலர் நின்று கொண்டிருக்கவும் அவளிடம் அன்று நிகழ்ந்தது அனைத்தையும் கூறினார்..  அவளும் அவர் நெஞ்சு வலியை பற்றி சொன்னதும் படபடத்து போனாள்..

 

அவர் அவளை சமாதானப்படுத்தி “ஒன்னும் இல்லடா.. இந்தர் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிட்டான்.. அந்த பையன் அங்கேயே எனக்கு வேண்டிய மருந்து மாத்திரையும் வாங்கி கொடுத்துட்டான்.. நைட்டு அதை போட்டுக்கிட்டு படுத்தா ஒன்னும் ஆகாது.. நெஞ்சு வலி இருக்கிற இடமே தெரியாம போய்டும்.. நாளைக்கு போய் அந்த டாக்டரை பார்த்து மறுபடியும் மருந்து வாங்கிக்கலாம்..”

 

அவர் சொன்னதை கேட்டவள் ஓரளவுக்கு சமாதானம் ஆகி இருந்தாள்..

 

“அப்புறம் மலரு.. உங்க அக்காக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்.. தேவையில்லாம ரொம்ப கவலைப்படுவா.. ஏற்கனவே மாப்பிள்ளைக்கு கையில அடிபட்டு இருக்கிறதுனால அவ ரொம்ப கவலையில இருக்கா.. மேல மேல இந்த சின்ன விஷயத்தை சொல்லி அவளை இன்னும் கவலை படுத்த வேண்டாம்.. எனக்கு ஒன்னும் இல்ல.. சொல்றது புரியுதா?”

 

அவர் கேட்கவும் அவளும் மதியிடம் எதையும் சொல்ல மாட்டேன் என்று உறுதியாக சொன்னாள்..

 

அவள் மனதில் இப்போது இந்தருக்கான மதிப்பு ஒரு படி கூடி போனது..

 

“என் கூட எப்பவும் வாயடிச்சு ரொம்ப சண்டை போடுறான்.. என்கிட்ட திமிர் தனமா தான் நடந்துக்கிறான்.. ஆனா ரொம்ப நல்லவன் தான் போல.. அப்பாவை பொறுப்பா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கான்.. அப்பா எவ்வளவு நாளா சொல்லிக்கிட்டு இருந்தாரு.. அந்த பசங்க பொண்ணுங்க கிட்ட எல்லாம் ரொம்ப வம்பு பண்றாங்கன்னு.. நான் கூட வந்து ஒரு நாள் கேட்கிறேன்னு சொல்லி இருந்தேன்.. ம்ம்ப்.. இந்தர் அவங்களையெல்லாம் காலி பண்ணி எனக்கு வேலை இல்லாம பண்ணிட்டான்.. ம்ம்ம்.. அவன் தீரன் மாமா கிட்ட வளர்ந்தவன் ஆச்சே.. வேற எப்படி இருப்பான்? எனக்கு என்னவோ உன்னை கொஞ்சம் கொஞ்சம் பிடிக்குது டா மங்குனி..” தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் மலர்..

 

இங்கு மதி தீரன் அறையிலோ இருவருமே மற்றவரிடம் ஏதோ சொல்ல வந்துவிட்டு சொல்ல முடியாமல் பின் வாங்கிக் கொண்டிருந்தார்கள்..

 

தீரா என்று அழைப்பவள் அவன் என்ன என்று கேட்கவும் அடுத்த நொடி சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாமல் ஏதேதோ உளறி கொட்டி விட்டு அவசரமாக அங்கிருந்து எழுந்து சென்று இல்லாத வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்..

 

தீரனோ தொண்டையை செறுமிய படி அவள் அருகில் செல்பவன் அவள் நிமிர்ந்து பார்க்கவும் “ஒன்னும் இல்லை.. உன் பின்னாடி இருக்கிற ஜக்குல தண்ணி இருக்குல்ல.. எடுத்து குடிக்கலாம்னு வந்தேன்..” என்று சொல்லிவிட்டு மடக் மடக்கென ஒரு குவளை தண்ணீரை குடித்துவிட்டு மறுபடியும் விலகிச் சென்று இருந்தான்..

 

இப்ப

டியே இரவு வரை இருவரும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர் அன்று முழுவதும்..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!