அரண் 42
தாக்குதலின் வேகம் அவ்வாறு இருந்தது. அவனுக்கு வந்த கோபத்தில் அங்கிருந்த அனைவரையும் அடித்து துவைத்து தொம்சம் செய்தான். எதிரில் காண்பவர்களது எலும்புகளை முறித்தான்.
அருகில் கிடந்த பெரிய கட்டையால் எடுத்து ஒவ்வொருவரது தலையையும் அடித்து உடைத்தான். அங்கிருந்த 12 பேரையும் 10 நிமிடங்களில் எழும்ப முடியாமல் தனது தாக்குதலினால் சாய்த்து வீழ்த்தினான்.
அவனுக்கு வந்த கோபத்தில் காட்டில் சிங்கம் பசியால் எதிரில் வரும் மிருகங்களை கடித்து வேட்டையாடுவது போல எதிரில் காண்பவர்கள் எல்லோரையும் கொஞ்சம் கூட இரக்கம் பார்க்காமல் தூக்கிப்போட்டு மிதித்து பந்தாடி அடித்தான்.
அவனது வேகத்தையும், கோபத்தையும், தாக்குதலையும் பார்த்த ருத்ர பிரசாத் மிரண்டு தான் போனான். உடனே வள்ளி தனது தடியால் அடித்து வீழ்த்திய தனது கன்னைத் தேடத் தொடங்கினான்.
உயிரைக் காப்பாற்றுவதற்காக அதனைத் தேடிக் கொண்டிருக்க துருவன் அனைவரையும் வீழ்த்திவிட்டு ருத்ரபிரசாத்தின் முன் புயலைப் போல வந்து நின்றான்.
துருவன் வேகமாக விடும் மூச்சுக்காற்று பிரசாத்தின் வதனத்தில் மோதி மீண்டும் வந்தது. அவ்வளவோ அருகில் நின்றான் துருவன். அவனது வேகமான மூச்சுக்காற்றைப் பார்த்து உடல் உதர நின்றவன் மெது மெதுவாக பின்னகர்ந்து ஓட்டம் எடுத்தான்.
அவன் ஓட பாயும் புலியாக பாய்ந்து அவனது சட்டை காலரைப் பிடித்து அவனது வயிற்றில் படபடவென குத்தத் தொடங்க அவனும் துருவனது தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அப்படியே பின்னோக்கி நகர்ந்து செல்ல அவனது முகத்தில் எகிறி குத்து விட்டான். அவன் அடித்த அடியில் அப்படியே துவண்டு போய் நிலத்தில் விழுந்தான் ருத்ர பிரசாத்.
தனது கண்முன்னே தனது மனைவியை இவ்வளவு கேவலமாக நடத்தி துன்புறுத்தி அவளை படாத படுத்தியது அவனால் கொஞ்சமும் தாங்க முடியவில்லை.
“எப்படி எனக்கு சொந்தமானவள் மீது அத்திமீறி கை வைப்பர்..? அவளை எப்படி துன்புறுத்துவது என்னவளை ஏன் எப்படி ஒரு பெண்ணுடைய மானத்தை விளையாடுவது எவ்வளவு தவறு..” என்று கேட்டு கேட்டு அடித்தான்.
“உனக்கு ஒரு தங்கை இருக்கின்றாள் தானே அவளோட யாரும் இப்படி நடந்து கொண்டால் நீ சும்மா இருப்பியா..” என்று கேட்டுக் கேட்டு அடித்தான். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு கேள்விகள் தாக்கியதோ இல்லையோ அவனது வேகமான அடி அவனை மோசமாகத் தாக்கியது.
வள்ளி அவனது தாக்குதலைப் பார்த்து முதலில் சந்தோசப்பட்டாலும் பின்பு அவனது குரோதத்தையும், கோபத்தையும் பார்த்து பயந்து ஒரு ஓரமாக போய் ஒதுங்கி நின்றாள்.
முதல் முறையாக துருவனின் கோபத்தை கண்டவளது மனம் உள்ளுக்குள் உதரத் தொடங்கியது.
“என் மேல இவருக்கு இவ்வளவு அன்பா..?” என்று மறுபக்கம் மனம் குதூகலிக்க அவனது கோபம் கண்டு ஈரடி பின்னெடுத்து வைத்தாள் வள்ளி.
கொடியவர்களை வேட்டையாடும் நரசிம்மனைப் போல ருத்திரபிரசாத்தின் மீது ஏறி இருந்து அவனை கொலை வெறியுடன் தாக்கினான்.
ருத்திரபிரசாத் துருவனின் அடி தாங்காமல் துவண்டு மயங்கிய பின்பும் அவன் மீது ஏறி அவனது முகத்தில் வேகமாக படபட எனக் குத்தினான்.
அவனது தொய்ந்து போன முகத்தைப் பார்த்து மீண்டும் கறுவிக்கொண்டு வேகமாகக் குத்த உடனே வள்ளி ஓடிச்சென்று துருவனது கையைப் பிடித்து,
“விடுங்க… விடுங்க… அவனை விடுங்க…” என்று கூறிக்கொண்டே பிடித்து இழுக்க வள்ளியை தள்ளிவிட்டு மீண்டும் அவனது முகத்தில் வேகமாக குத்திக் கொண்டே இருந்தான்.
“என்னங்க..” என்று பெரும் சத்தத்துடன் கத்தியபடி அவனது கையைப் பிடித்து அவளது மொத்த பலத்தையும் திரட்டி இழுக்க அப்பொழுதுதான் நிமிர்ந்து வள்ளியின் முகத்தைப் பார்த்தான்.
அவளது முகத்தில் எதைக் கண்டானோ தெரியவில்லை. உடனே குத்துவதை நிறுத்திவிட்டு எழுந்து நின்றான். அவனது மனதை சமப்படுத்த பெரும்பாடு பட்டு தவித்துக் கொண்டிருக்க, வள்ளி அவனது வதனத்தை இரு கைகளாலும் ஏந்தி பிடித்து அவளோடு கண்களூடே அவன் கண்களை நோக்க, அவனது முகத்தில் பல நூறு உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன.
கண்களை இறுக மூடித் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சித்தவன் மெதுவாக மூச்சை இழுத்து வாயினால் ஊதிக் கொண்டு மெதுவாக கண்களைத் திறந்து வள்ளியை நோக்கினான்.
அவளது அப்பழுக்கற்ற வதனத்தில் இருந்த பதற்றமும், பயமும் கண்ணாடி போல அப்பட்டமாக துருவனுக்கு விளங்க தன்னவள் கலக்கம் கொள்வதை தாங்கி கொள்ளாதவன் அவளை அருகில் கையணைவில் வைத்துக் கொண்டு,
“என்ன அற்புதம் ரொம்ப பயந்துட்டியா நான் இருக்கேன்ல்ல என்னோட செல்ல குட்டி என் முன்னுக்கு இப்படி அழுகாச்சியா இருக்கக் கூடாது வா முதல் இந்த இடத்தை விட்டு கிளம்புவோம்..” என்று அவளை அணைத்துக் கொண்டு வேகமாக நடக்க,
வள்ளி எதனையோ தவறவிட்டு மறந்து செல்வது போல மனதினுள் எதுவோ உந்த சிந்தனை வயப்பட்டுக் கொண்டே வேகமாக துருவனுடன் சென்றாள்.
வள்ளி ஏதோ தடுமாற்றத்துடன் வருவதை பார்த்த துருவன் நடந்து கொண்டே,
“என்ன வள்ளி..? என்ன யோசிக்கிறா..? அதுதான் உனக்கும் எனக்கும் ஒன்றும் ஆகலையே அத நினைச்சு திரும்பத் திரும்ப குழம்பிக்காத எல்லாத்தையும் கெட்ட கனவா நினைத்து மறந்திடு என்று நான் சொல்ல மாட்டேன் ஏன்னா இதெல்லாம் உன்னோட மனச எவ்வளவு பாதிச்சிருக்குமென்று எனக்கு நல்லாவே புரியுது இருந்தாலும் நாம நம்மளோட வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு இதை மறந்து பயணிக்கத் தான் வேணும் ஓகேவா..?” என்று அழகாக தலையாட்டி கேட்டான்.
வள்ளிக்கு துருவனை நினைக்கவே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சற்று முன் அந்த தடியர்களை இவ்வாறு ஒரு மிருகம் போல போட்டு அடித்து புரட்டி எடுத்தார் ஆனால் இப்போ என் முன்னுக்கு சிறு குழந்தை போல கதை பேசுவதை பார்த்து அவளுள் புன்னகை முகிழ்த்தது.
நடையை நிறுத்திவிட்டு புன் சிரிப்புடன் துருவனை திரும்பிப் பார்த்து தலையாட்ட அந்தத் தருணத்தில் இருவரின் முகத்திலும் புன்னகை அழகாக மலர்ந்தது.
அப்போதுதான் வள்ளிக்கு வசுந்தரா அத்தையின் ஞாபகம் துளிர்த்தது.
‘உடனே அவரை கண்டுபிடித்து அவரையும் இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும்..’ என்று மனதுக்குள் எண்ணியவள் துருவனிடம் அதைக் கூற முனைந்த வேளையில் அந்த விபரீதமான சம்பவம் நடந்தேறியது.
ஆம் துருவனை பார்த்து முகம் மலர்ந்த வள்ளி பின்னிருந்து ருத்திரபிரசாத் துருவனை கன் மூலம் குறி வைப்பது அப்போதுதான் அவளது விழிகளுக்கு புலப்பட்டது.
நொடியில் துருவனை பிடித்து இழுக்க துருவன் மறுபக்கம் சரிந்து விழ அந்தத் தோட்டா சரியாக வள்ளியின் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு சென்றது.
“ஆஹ்…” என்ற பெரிய அலறலுடன் வள்ளி துருவன் மீது வேரற்ற பூங்கொடி போல் சரிந்து விழுந்தாள்.
துருவனின் கண்முன்னே நடப்பவை அனைத்தும் கனவா நினைவா என்றே புரியவில்லை. அப்படியே அதே இடத்தில் ஸ்தம்பித்து போய் இருக்க வள்ளியின் நெஞ்சில் இருந்து பாய்ந்து வெளியேறிய உதிரம் துருவனின் அழகான சேர்ட்டை நனைத்தது.
அந்த உதிரத்தை தொட்டுப்பார்த்தவனது கைகள் முதன்முறை நடுங்கியது. அவனை அறியாமலேயே கண்களில் நீர் குளம் கட்டி ஆறாக கண்ணீர் வழியத் தொடங்கியது.
வள்ளியை தூக்கி மடியில் வைத்து,
“அற்புதம்….. அற்புதம் … ப்ளீஸ் கண்ணத் திறந்து என்ன பாருமா…” என்று கன்னத்தை தட்டிக் கொண்டிருக்க, அடுத்த தோட்டா துருவனின் தலைக்கு மேலாக மயிரிழையில் சென்றது.
உடனே வள்ளியை கீழே கிடத்திவிட்டு அருகில் இருந்த கட்டையால் ருத்ர பிரசாத்தை நோக்கி எறிந்தான். அந்த கட்டை கச்சிதமாக ஆனது கையில் இருந்த கன்னை அடித்து வீழ்த்தியது.
உடனே வேகமாக ஓடிச் சென்று ருத்ர பிரசாத்தினை காலால் எட்டி உதைக்க அவன் நிலத்தில் தொப்பென்று விழுந்தான்.
விழுந்த கையுடன் அருகில் இருந்த கன்னை எடுத்து அவனை நோக்கி லோட் செய்து,
“நீ இடம் தெரியாம கை வச்சுட்ட ருத்ர பிரசாத் உனக்கு மன்னிப்பே கிடையாது குட் பாய்…” என்று துருவன் அந்த பாழடைந்த தொழிற்சாலை அதிரும் வண்ணம் கத்தி கூச்சலிட்டான்.
அப்போது அங்கு திடீரென துருவனையும், ருத்ரபிரசாத்தையும் சுற்றி வளைத்து போலீசார் சூழ்ந்து கொண்டனர்.
எப்படி எவ்வாறு போலீஸ் அங்கு வந்தனர் என்று புரியாமல் திரும்பிப் பார்க்க வசுந்தரா துருவனின் அருகில் வந்து நின்றாள்.
“ஆன்ட்டி நீங்க..?”
“எல்லாம் அப்புறம் சொல்றேன் முதல் வள்ளி எங்கே..?” என்றதும் வள்ளி விழுந்து கிடக்கும் இடத்திற்கு ஓடிச் சென்றான் துருவன்.
துருவன் செல்ல அதன் பின்னே வசுந்தராவும் ஓடி வந்து பார்த்தால் இரத்த வெள்ளத்தில் வள்ளி கிடப்பதை வசுந்தராவால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
“ஐயோ வள்ளிக்கு என்ன ஆச்சு..? தூங்குங்க…. ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க ப்ளீஸ்..” என்று கத்த உடனே போலீசார் ஆம்புலன்ஸை அழைக்க நொடிப்பொழுதில் ஆம்புலன்ஸ் அங்கு கூவிக்கொண்டு வந்தது.
வசுந்தரா ஆம்புலன்ஸில் வள்ளியை ஏற்றிவிட்டு திரும்பிப் பார்க்க துருவன் அதே இடத்தில் ஆணி அடித்தார் போல் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தான்.
அவனால் வள்ளி இப்படி கசங்கிய பூ போல தரையில் இரத்தம் தோய்ந்து விழுந்து கிடந்ததை நம்பவே முடியவில்லை.
ஏன் அதை மனமும் ஏற்கவில்லை. சற்று முன் என் கை வளைவுக்குள் தலையாட்டி சிரித்தவளா இப்படி தரையில் விழுந்து கிடக்கின்றாள்.
இப்படி ஒரு நிலையில் அவளை காணவா அவள் இங்கு என்னை கடல் கடந்து தேடி வந்தாள் ஏன் என்னை கல்யாணம் கட்டியதைத் தவிர அவள் வேறு என்ன தவறு செய்தாள் இப்படி ஒரு பெரும் புயலில் அகப்பட்ட பூ போல கசங்கி கிடக்கின்றாளே நான் இப்போ என்ன செய்வது..?” என்று துருவனது மனம் மறுகியது.
வசுந்தரா ஆம்புலன்ஸில் ஏறிவிட்டு துருவன் சீக்கிரம் வா ஆம்புலன்ஸ் கிளம்ப போது என்று கூற உடனே ஆம்புலன்ஸில் ஏறி அவனும் வைத்தியசாலைக்கு சென்றான்.
அங்கு வள்ளியை வைத்தியசாலையில் அவசர பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவசர பிரிவில் சேர்த்து மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் வைத்தியர் இதுவரைக்கும் அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
வசுந்தராவிற்கும் துருவனுக்கும் இதயம் தாளம் தப்பி துடிக்க தொடங்கியது.
இருவரும் கடவுளை மன்றாடியபடி வைத்தியருக்காக காத்திருந்தனர்.
அப்போது அந்த வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.
அவர் கூறப்போகும் செய்தியை கேட்பதற்காக ஆவலுடன் இருவரும் இருக்க அவர்கள் அருகில் வந்து நின்ற வைத்தியர் இருவரின் முகத்தையும் திரும்பித் திரும்பி பார்த்தார்.