வேந்தன் 14

5
(1)

வேந்தன் 14

 

“ஆர்த்தி சிவா வருவான். அவனுக்கும் சேர்த்து டீ போடு” ராஜன் ஓய்வாக அமர்ந்தார் இருக்கையில். 

 

மலர் சிறிது நேரம் அமரக்கூட இல்லாமல் அப்போதே குளித்து இரவு உடையை அணிந்து வந்தார். அவரால் இன்னும் கொஞ்ச நேரம் கூட இப்படியே இறுக்கமாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு வெய்யில் வாட்டி வதைத்துவிட்டது அவரை. 

 

“அம்மா நன்னாரி சர்பத் குடிங்க” நளிரா அவருக்கு குடிக்க ஜில்லுன்னு ஜூஸ் எடுத்து வர. 

 

ஒரே மடக்கில் குடித்து முடித்தவர் “இப்பதாண்டி உசுரே வந்திருக்கு. வெய்யில் சமாளிக்க முடியலை. அதான் நைட்டியை உடுத்திக்கிட்டேன்” மலர் ஏசி காற்றுக்கு அடியில் அமர்ந்துவிட்டார். 

 

“கொஞ்ச நேரம் படும்மா. அக்கா சாப்பாடு செஞ்சு வச்சிட்டா. உங்களுக்கு எந்த வேலையும் இல்ல” தாயின் கால்களைப் பிடித்துவிட்டவாறே நளிரா சொல்ல. 

 

மகளின் புன்னகை முகத்தைப் பார்த்தவருக்கு துயரம் மறைய, அவர் முகத்திலும் உயிர்ப்பு வந்தது. யாரோ என்னமோ சொல்லிட்டுப் போகட்டுமே, என் மகள்தான் எனக்கு முக்கியம். மத்தவங்க பேச்சைக் கேட்டுட்டு என் பிள்ளையை நான் வருந்தச் செய்யவே மாட்டேன். அப்படி யாராவது என் மகளை பேசினால் அவங்களை சும்மாவே விடமாட்டேன் நான். மலரின் மனதில் ஒரு உறுதியும் பிறக்க, இப்போதுதான் அவர் முகத்தில் உயிர்ப்பும் வந்தது. 

 

“நளிரா அப்பா உன்ன வரச்சொன்னாருடி” சைத்ரா வந்து அழைத்தாள். 

 

“அடடா சிவாண்ணா வரேன்னு போன் பண்ணினார், மறந்தே போயிட்டேன் நானும். சரிடி வா, நாமளும் ஹாலுக்குப் போலாம்” மலரும் எழுந்துகொள்ள. 

 

“நீ கொஞ்ச நேரம் படும்மா, என்னைத்தான வரச் சொன்னார். நானே போய்ப் பார்க்கறேன்” நளிரா தாயை ஓய்வெடுக்கச் சொன்னாள். 

 

“எனக்கும் தூக்கம் வரலைடி, அதுவுமில்லாம சிவா அண்ணா காரணமில்லாம வரவும் மாட்டாரே” மலரும் அவர்களோடு அங்கே வந்தார். 

 

“வாங்க அண்ணா” வரவேற்றவர் தானும் அங்கே உள்ள இருக்கையில் அமந்தார். 

 

“கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுதும்மா?” சிவதானு விசாரித்தார். 

 

“ஏதோ போகுது அண்ணா” மலர்விழி சோர்வாக சிரித்தார்.

 

“ஆர்த்திப் பொண்ணுகிட்ட ரொம்ப வேலை வாங்குறீங்க போல. டீ எல்லாம் வச்சுத் தரா” கிண்டலாக சொன்னவர்.

 

“அங்கிள்!” என்று ஆர்த்தியின் முறைப்பை பார்த்துவிட்டு, 

 

அடடா வந்தவேலையை விட்டுட்டு வம்புக்கு போறமோ என்று அலர்ட் ஆனவர், “டீ நல்லாருக்கு ஆர்த்திம்மா” பாராட்டவும் செய்தார். 

 

“நளிரா உன்கிட்டதான் உதவி கேட்க வந்திருக்கேன்” சிவதானு நளிராவைப் பார்த்ததும் ஆரம்பித்துவிட்டார். 

 

“என்னாச்சு அங்கிள்?” நளிரா அவர் கேட்ட விதத்தில் சிரித்துவிட்டாள். 

 

“உங்கத்தைக்கு உடம்பு முடியலைம்மா. அவளையும் பாத்துக்கணும். அதனால இனிமேல் கடைக்கு என்னால வரமுடியாது” என்று அவர் சொல்ல. 

 

“அதுக்கு?” சைத்ரா இடையில் புகுந்து புருவம் உயர்த்தி விசாரித்தாள். 

 

“அக்கா நீ சும்மாயிரு. அவரே பாவம். அத்தைக்கும் உடம்பு முடியலைன்னு சொல்லுறார்” நளிரா அக்காவை அடக்கிவிட்டாள். 

 

“முன்பெல்லாம் சாயந்திரம் மட்டும்தான கடைக்கு வருவ நீ. ஆனால் இப்ப முழுநேரமும் கடையில் இருக்கற மாதிரி இருக்கும்மா. மதியம் வீட்டுக்கு வந்துக்கோ, அப்போ வேணா நான் உதவிக்கு வரேன்” என்று சொன்னார். 

 

நளிராவுக்கும் ஏதாவது வேலை கிடைத்தால் பரவாயில்லை என்றுதான் தோன்றியது. அக்கா வேலைக்கு செல்வதால் அவள் வருமானமும் அப்பாவின் சேமிப்பில் இருந்து கிடைத்த வட்டியும் வீட்டு செலவுக்கு சரியாகப் போனது. 

 

இரண்டு பெண்களுக்கு திருமணம் என்பதால் இருக்கும் சேமிப்பு அத்தனையையும் எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது இப்போது. அதனால் முன்பு போல அப்பாவின் சேமிப்பில் இருந்து தொகை வராது. எனவே நளிராதான் வேலைக்குச் சென்றாக வேண்டும். 

 

இதுவுமே அவளுக்கு தோன்றியிருக்க வாய்ப்பில்லைதான். ரெண்டு நாள் முன்பு ராஜனும் மலரும் இதைப் பற்றிய பேச்சை பேசிக்கொண்டு இருந்தனர். ராஜன் தான் ஏதாவது வேலை தேடுகிறேன் என்றும் சொன்னார். இதைக் கேட்ட நளிரா அன்றே வேலை தேடவாரம்பிக்கும் பணியில் ஈடுபட்டாள். 

 

இப்பொழுது சிவதானுவே அவளிடம் வேலை தருகிறேன் என்று சொல்லவும், கடவுளாக அனுப்பியது போல உணர்ந்தாள். 

 

“அப்போ சம்பளம் எவ்வளவு தருவீங்க” சைத்ரா மீண்டும் கேட்க. 

 

“என்னம்மா நீ? அவர்கிட்டப் போய் இதெல்லாம் பேசிட்டு?” ராஜன் சங்கடமாக நண்பனைப் பார்த்தார். 

 

“அவ கேட்கறதில் தப்பென்ன இருக்கு ராஜா. இருபது தரேன் மா. இதுக்கும் மேல கஷ்டம்தான்” தன் பக்கத்தை சைத்ராவிடம் சொல்லிவிட்டார் சிவதானு.

 

அக்கா வாய் திறந்து எதையாவது பேசுவதற்குள் “நான் வரேன் அங்கிள்” முந்திக்கொண்டாள் நளிரா. 

 

அக்காவின் முறைப்பை தவிர்க்கவே வேறு பக்கம் திரும்பி நின்றாள். கிடைக்கும் வேலையை ஏதாவது சொல்லிக் கெடுத்துவிட்டால் என்ன செய்வது? என்ற கவலை அவளுக்கு. 

 

ஒருவழியாய் நளிரா நாளையில் இருந்து வேலைக்கு செல்வது என்று உறுதியானது. 

 

. . . . . 

 

“அறிவிருக்காடா உனக்கு? அவன்கிட்டே போய் சொல்லி வச்சிருக்க? அப்படியென்ன உனக்கு? ச்ச்சை” நண்பனிடம் சீற்றமாய்க் கேட்டான் ஆத்மா. 

 

அந்தப் பெண் மீது தப்பு இருக்கோ இல்லையோ அதுவேறு விஷயம். ஆனால் முடிந்த கதையை எதற்குத் தேவையில்லாமல் இழுப்பானேன்.  

அந்தப் பெண்ணை நினைக்கவே பாவமாக இருந்தது ஆத்மாவுக்கு. 

 

“அதுவும் வீடியோவையும் சேர்த்து கொடுத்திருக்க. அவன் அடிவாங்குறப்ப வீடியோ எடுத்ததே தப்பு, இதுல அதை இவன்கிட்ட வேற தந்திருக்க. அவனைப் பத்தி தெரிஞ்சும்…” ஆத்மாவுக்கு ரவியைப் பார்க்கவே பற்றிக்கொண்டு வந்தது. 

 

“டேய் அவன் கேட்டதும் தெரியாதுன்னு எப்படி பொய் சொல்லட்டும்?” ரவிக் சிபினின் விசுவாசியாக பேசினான். 

 

“அப்பா சாமி உன்கிட்ட நான் ஒண்ணுமே கேட்கலை. இந்தப் பேச்சை இதோட விடு” ஆத்மா அவனை விட்டு விலகிப் போனான். 

 

“டேய் நில்லுடா” என்று ரவிக் தானும் ஆத்மா பின்னே செல்ல, இருவரும் நாடிப்போனது என்னவோ சிபினைத்தான். 

 

“நீதான் பார்த்துக்கணும், பார்த்தே ஆகணும்” சிபின் குரல் அதிகாரமாய் ஒலிக்க. 

 

அதில் ஆறடி தேகமும் உதறிப் போட்டாலும் “அண்ணா பிளீஸ். எனக்கு முடியாது, எனக்கு டைம் வேணும்” துருவ் மறுத்துவிட்டான். 

 

“துருவ்!” சிபினுக்கு அவன் மறுப்பில் கோபம் கண் மூடித்தனமாக வரவும், அடிக்கவும் கை ஓங்கிவிட்டான். 

 

துருவ் அதிர்வாய் அண்ணனை பார்த்தபடி நின்றுவிட. 

 

ஓங்கிய கையை இறக்கியவன், “என்னமோ பண்ணு” என்றுவிட்டான் வெறுத்த குரலில். 

 

அதில் துருவ்க்கு சங்கடமாக இருக்க, சிபினின் முன் உச்சியில் அலைபாய்ந்த கேசத்தை லேசாகக் கலைத்துவிட்டவன் “சரி, நீ வர வரைக்கும் பார்த்துக்கறேன். அதுவும் அம்மாவும் கூட வரட்டும்” துருவ் தாயையும் துணைக்கு அழைக்க. 

 

“சரிடா. நான் தூத்துக்குடி போறேன்” துருவ் முகத்தில் பார்வையை பதித்து சொன்னான். 

 

அதில் தானாய் துருவின் கை விரல்கள் கன்னத்தை வருடிக் கொடுத்தது. 

 

“ஹாய் சிபின்” ரவிக் அவனுக்கு ஹாய் சொல்ல. 

 

இரட்டையர்கள் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

 

ஒரு நடிகன் இரட்டை வேசத்தில் ஒருவன் சாக்லேட் பாயாகவும் ஒருவன் முரட்டு ஆணாகவும் நடித்தால் எப்படி இருக்கும்? 

 

அப்படித்தான் தோற்றமளித்தார்கள் துருவ் சிபின் இருவரும். 

 

ஓரிடத்தில் கால்கள் அடங்காமல், குறும்புத்தனம் கூத்தாட கைகால்களை அசைத்தபடியே நிற்கும் துருவ், 

 

கைப்பிடியில் சாய்ந்து, ஒற்றைக்காலை மட்டுமே தரையில் அழுத்தமாய் ஊன்றி, பார்வையாலே அதிகாரமாய் மிரட்டுப்பவனை பார்த்தாலே தெரியும், இவன் அழுத்தமானவன் என்று. 

 

“தூத்துக்குடி வரப்போறது நீங்களும்தான்” சிபின் ஆத்மா ரவிக் இருவரையும் வரணும் என்பது போல ஒரு லுக் விட. 

 

“எதே!” அவர்களுக்கு மயக்கமே வந்தாச்சு சிபினின் அழைப்பில். 

 

“என்னாச்சு. உங்க டாட்கிட்ட பேசிட்டேன் ஏற்கனவே. வரலைன்னா அவங்ககிட்ட இன்பார்ம் பண்ணிடுங்க” சிபின் வீட்டினுள் சென்றான். 

 

“இது நல்லதுக்கில்லடா” ரவிக் மிரண்டு முழிக்க. 

 

“எல்லாம் உன்னாலதாண்டா. நாயே வாய வைச்சுட்டு சும்மாருக்க மாட்ட? இப்ப பாரு அவனோட சேர்ந்து போகணும்” ஆத்மா ரவியை விரட்டி விரட்டி அடித்தான். 

 

துருவ்வோ இவன் எதுக்கு அங்க போறான்? 

 

இதுங்க எதுக்கு இப்படி அடிச்சுக்குதுங்க? 

 

தலையை தடவிகிட்டே சற்று யோசித்தவன், “ப்ச் போங்கடா” என்று அங்கிருந்து அவனும் சென்றுவிட்டான். 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!