எதிரே கண்ணுக்கு எட்டிய வரை நீலக் கடலின் ஆதிக்கம் கம்பீரமாய் வீற்றிருந்தது. தங்கமாய் ஜொலித்த மணல் மீது திமிராய் நின்றிருந்தது சிபினின் வாகனம்.
சூரியன் அஸ்தமனம். ஆகும் நேரம் அது, இளவெய்யில், கடற்கரை காற்றும் சுகமாய் மேனியை தழுவிப் போக, ஆங்காங்கே மக்களின் நடமாட்டம் இருந்தது.
ஆரம்பத்தில் தம்பியை அடித்துவிட்டாளே என்ற கோபம்தான் அவனுக்கு. செல்லமாய் ஒரு துரும்பு கூடப் படாமல் வளர்ந்தவனை இப்படி கன்னத்தில் தடம் வரும் அளவிற்கு அடித்துவிட்டாளே என்ற ஆவேசத்தில்தான் அவளைத் தேடிக்கண்டறிந்து ஒரு மிரட்டு மிரட்டி வைக்கலாமே என்று வந்தது.
ஆனால் அவனே அவளது அழகாய் மிரண்டு நிற்பானென்று சொப்பனத்திலும் கண்டிருக்க மாட்டான்.
திமிரை அடக்கி தட்டி வைக்கலாமே என்று வந்தவன் அவளுடைய அழகில் அப்படியே அவள் வசம் விழுந்துவிட்டான்.
“என்னாச்சு? “ என்ற கேள்வியோடு எழுந்து வந்தவள் அவர்களைக் கேள்வியாய் பார்த்திட,
தணல் போலே தகித்து நின்ற ஆணவனின் கழுகு பார்வை அவளது நயனங்களில் அப்படியே குளிர்ந்து போனது.
ஆத்மா மிளகாயை சாப்பிட்டான் என்று தெரிந்ததும், பளிச்சென கற்கண்டாய் ஒரு சிரிப்பை செவ்விதழ்கள் சிந்திட, அதை அப்படியே நெஞ்சுக்குள் பொத்தி வைத்தான்.
சிரிப்பே சுவையாய் இருக்கையில், செவ்விதழ்கள்? ம்ஹூம் ரோஜா வர்ணத்தில் இருக்கும் பட்டு இதழ்களை செவ்விதழ்கள் என்று சொல்வதும் சரியோ!
காரியத்தில் கண்ணாய் இருப்பவனின் மனது பாவையின் நினைப்பில் வந்த வேலையை அப்படியே மறந்து போனது.
நளிர்பெண்ணையே சுற்றி வர ஆவல் கொண்டது.
புடவையில் செழுமையாய் தங்கத்தாமரையாய் நிற்கும் பெண்ணைப் பார்த்தவனின் அழுத்தமான உதடுகள் செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என்ற பாடல் வரிகளை முனுமுனுத்தது.
என்ன உயரம் கம்மி, கழுத்து வரைக்கும் மட்டும்தான் வருவாள் போல இருக்கே, நெடியவனுக்கு அது ஒரு குறையாகப் படவே, “வாய மூடிட்டு இருடா அயோக்கிய ராஸ்கல். நானே இப்பதான் சைட் அடிக்கற மூடுக்கே வந்திருக்கேன். அது உனக்குப் பொறுக்கலையா?” புத்தியின் மண்டையில் ஓங்கி ஒரு அடிவைச்சு அடக்கி வைத்தான்.
ஆத்மா ரவி இருவரும் தன்னை வில்லனைப் போலவே பார்க்கக் கண்டவன், முதல் வேலையாக அவர்களை அனுப்பி வைத்தான். இரும்பு பட்டறையில் ஈக்கு என்ன வேலையாம்.
காதலிக்கும் ஆணுக்கு நண்பர்களும் இடையுறாகிப் போனார்களோ. ஆம் சிபினுக்கு ஆத்மாவும் ரவியும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கவும், தொந்தரவாகித்தான் போனது.
அடர் கரிய நிறக் காரில் ஏகாந்த மனநிலையில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான் சிபின். கால்களை தூக்கி வீலில் வைத்திருக்க, நளிர் பெண்ணின் உருவத்தையே மூடிய கண்களுக்குள் கொண்டு வந்து அனுஅனுவாய் ரசித்தான்.
நளிராவின் இளம் ரோஜா வர்ண மேனியை விழிகளுக்குள் கொணர்ந்தவன், காரின் நிறத்தையும் பேபி பிங்க் கலரில் மாற்றிடலாமோ என்று சிந்தித்தான்.
டார்க் ப்ளாக் கலரில்தான் வாகனம் இருக்க வேண்டும் என்பது சிபினின் வரலாற்றில் எழுதப்படாத விதி. இவனைத் தவிர வீட்டில் யாருக்கும் இந்தக் கலர் பிடிக்காது என்பதால் தொடவே மாட்டார்கள் இவனது காரை.
யாரோ ஊர் பேர் தெரியாத ஒருவனின் கழுகு விழிகளுக்குள் தான் விழுந்துவிட்டோம் என்பதை ஒரு சிறிதும் அறிந்திடாத அப்பாவியாய் சகோதரிகளுடன் சிரித்துப் பேசியபடி மணலில் கால்கள் புதைய நடந்து வந்தாள் நளிரா.
“அக்கா பூ வாங்கலாமா?” மணி அப்போதுதான் ஐந்து என்பதால் குண்டு மல்லி இன்னும் மலராது மொட்டு மொட்டாய் பார்க்கவே கண்களைப் பறித்தது. ஆறு மணியாக மொட்டுகள் மெதுமெதுவாய் மலர்ந்தட, குப்பென மல்லிகையின் நறுமணம் நாசியில் ஏறுமே. அதன் வாசனைக்கு ஈடு இணை ஏது?
நளிராவுக்கு குண்டு மல்லி என்றால் கொள்ளைப் பிரியம். தலையில் ஒன்றிரண்டு பூவாவது சூடினால்தான் மனசுக்கு நிம்மதியாக இருக்கும்.
“ஏற்கனவே தலையில பூ வச்சிருக்கியேடி” சைத்ரா நளிராவின் கூந்தலைப் பார்க்க.
“இது முகூர்த்த சீசன் வேற. விலை கூடுதலா இருக்கும். வீட்டுல ஜாதிமல்லி இருக்கு. பேசாம வாக்கா” ஆர்த்தியும் சேர்ந்து மறுக்க.
நளிராவின் முகம் பூவாய் வாடிப்போனது. அவளது விழிகளோ, கூடை நிறைய சரங்களாய் தொடுத்து வைத்திருந்த மல்லிகையின் மீது ஏக்கமாய்ப் படிந்தது.
ஆர்த்தி நளி என்று அழைப்பதை கவனிந்துவிட்ட சைத்ரா அடுத்து என்ன நடக்குமென்பதை நொடியில் புரிந்துகொண்டு, “அடடா ரெண்டு பேருக்கும் சண்டையே ஓயாதாடி?” இருவரையும் அடக்கிவிட்டாள் எச்சரிக்கையாக.
அவர்களின் பின்னே நடந்தவனின் கைகளுக்குள் குண்டு மல்லி சரம் தன்னவளுக்காகப் பொத்தி வைக்கப்பட்டிருக்க, அவனது மனதோ நளிர் பெண்ணின் சுளித்த மாதுளை இதழ்களுக்கிடையில் சிக்கி, அங்கேயே அடைக்கலமானது.
“அதைப்பத்தி மட்டும் என்கிட்டே பேசாதக்கா. அப்புறம் நல்லாருக்காது சொல்லிட்டேன்” சினமேறியது அவள் முகத்தில்.
“அடடா அப்படி என்ன நல்லாருக்காது?” ஆர்த்தியும் குறும்பு சிரிப்புடன் கூட்டு சேர.
“பின்ன என்னடி கொல்லி பிசாசே. உன்னால நான்தான் எல்லார் வாயிலும் விழுந்து அரைபடறேன். என்னமோ நான்தான் குற்றம் செய்யறாப்புல பாத்து வைக்கறாங்க. இதுல அட்வைஸ் வேற” கொடுமை என்றவள் தலையில் அடித்துக்கொள்ள.
ஒருவழியாய் அவளது பூவாசையை மறக்க வைத்த சந்தோசத்தில் “மாப்பிள்ளையை பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லுடி” என்றவர்கள் அவரவர் போன் இசைக்கவும், மலர்ந்த சிரிப்புடன் போனை காதில் வைத்துப் பேசலானார்கள்.
“ஆரம்பிச்சுட்டாங்களா?” ஒரு சிரிப்புடன் அவர்களை முன்னே நடக்கவிட்டு மெதுவாக நடந்தாள் நளிரா. இது தினமும் நடப்பதுதான். வருங்கால கணவருடன் பேசவென்றே இங்கே வருவார்கள் ஆர்த்தியும் சைத்ராவும்.
உல்லாசமாய் ஏகாந்த சிரிப்புடன் நடந்தவனின் முகமோ பெண்கள் மூவரின் பேச்சில் இறுகிப் போனது.
மாப்பிள்ளை என்ற சொல்லில் அவனது முகமே கணலாய் ஜொலிக்க, அவளை நோக்கி வேகமாய் நடந்தான்.