கப்பலில் ஏதோ பிரச்சினை என்றதும் என்னவோ ஏதோ எனப் பதறிப் போனவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த அழைப்பைத் துண்டித்து விட்டு வேகமாக கேப்டன் இருக்கும் இடத்தை நோக்கி கமலுடன் செல்லத் தொடங்கினான்.
அப்போதுதான் கப்பல் ஒரே இடத்தில் அசையாமல் நிற்பதே அவனுக்குப் புரிந்தது.
‘இந்த டைம்ல கப்பல்ல ஸ்டாப் பண்ண மாட்டாங்களே.. எதுக்கு நிறுத்தி வச்சிருக்காங்கன்னு தெரியலையே.. உனக்கு ஏதாவது தெரியுமாடா..?” என அவன் கமலிடம் கேட்க,
அவனைப் பார்த்த கமல் தன்னுடைய கைகளை விரித்து உதட்டைப் பிதுக்கினான்
“கப்பல்ல ஏதோ பிரச்சனைன்னு மட்டும் பேசிக்கிட்டாங்க.. மேல் ஃபிளோர்ல இருந்தவங்களுக்கு எதுவுமே தெரியாதுடா.. கீழே போய் பார்த்தாதான் என்னன்னு தெரியும்.. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல கேப்டனே சொல்லிடுவாரு…” என்றான் அவன்.
இவர்கள் பேசிக்கொண்டு செல்லும் போதே திடீரென கப்பல் ஆடுவது போல அசைந்து ஒரு பக்கமாக சரிய இருவருக்கும் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
கிட்டத்தட்ட தரையில் விழுந்து எழுந்தவர்கள் கப்பல் மீண்டும் நேராகியதும்தான் பிரச்சனையின் தீவிரம் மிகப்பெரியது என்பதை உணர்ந்து கொண்டனர்.
அடுத்த நொடி யாஷ்வின் வேகமாக கேப்டனை நோக்கி ஓடத் தொடங்கினான்.
அங்கே அவனைப் போல வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடி நிற்க, சிலரோ மது போதையில் கூட விழிகள் சிவக்க அச்சத்துடன் நின்றிருப்பதைக் கண்டதும் இவனுக்கு உள்ளம் பதறியது.
“எல்லாரும் வந்தாச்சா..?” எனக் கேட்டான் அந்தக் கப்பலின் கேப்டன் ரகுவீர்.
அனைவரும் ஒவ்வொரு பதில்களை கோரசாக கூற,
“லிசின்.. நாம ஒரு பிரச்சினைல மாட்டிக்கிட்டோம்.. அது பெரிய பிரச்சனையா போறதும் சின்ன பிரச்சனையா முடியுறதும் உங்க எல்லாரோட கைலயும்தான் இருக்கு..” என கேப்டன் கூறியதுமே அங்கிருந்தவர்களுக்கு தொண்டைத் தண்ணீர் வற்றியது.
கப்பல் ஒரு முறை குலுங்கியதிலேயே அத்தனை பேரும் அச்சத்தின் வசத்தில் சிக்குண்டு போயினர்.
“கப்பலோட அடித்தளத்துல நெருப்பு பிடிச்சிருச்சு.. கப்பலோட நிறைய பார்ட்ஸ் சேதமாயிடுச்சு.. கொஞ்சம் கொஞ்சமா தண்ணி உள்ள வர்ற மாதிரி இருக்கு.. நம்மளோட ஸ்டாஃப்ஸ் அவங்களால முடிஞ்ச அளவுக்கு தீயணைக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.. எப்படியும் இதுல இருந்து வெளியே வர ரொம்ப நேரம் ஆகும்..” என கேப்டன் கூற,
அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பகீர் என்றானது.
அடுத்து என்ன செய்வது என அனைவரும் பதற, கேப்டனின் அருகே சென்ற யாஷ்வினோ “பாதுகாப்புக்கு நம்ம மத்த கப்பலை வர சொல்லிட்டீங்களா சார்..?” என கேப்டனிடம் கேட்டான்.
“யாஷ் உன்னத்தான் ரொம்ப நேரமா தேடிட்டு இருந்தேன்… ஆமா நம்மளோட மத்த கப்பலுக்கு இன்பார்ம் பண்ணிட்டேன்.. இன்னும் ரெண்டு நாள்ல அவங்க நம்மகிட்ட வந்துருவாங்க.. அதுக்கு முன்னாடி இந்த கப்பலோட தீய முழுசா அணைச்சு தண்ணி உள்ள வர்றதை நிறுத்தணும்..”
“ம்ம்… தண்ணி உள்ள வர்றத ஸ்டாப் பண்ணிட்டா கப்பல நம்மளால செலுத்த முடியுமா..? கப்பல்ல டேமேஜ் அதிகமா இருக்கா..?” எனக் கேட்டான் யாஷ்வின்.
“நோ இப்போதைக்கு கப்பல சரி பண்றது நடக்காத காரியம்.. ரொம்ப நேரம் எடுக்கும்னு தோணுது..”
“ஓகே சார்.. அப்போ கப்பல எப்படியாவது பக்கத்துல இருக்க தீவுல கொண்டு போய் நிறுத்திடுவோம்… நம்ம கப்பல் வரும் வரைக்கும் அங்க இருந்து வெயிட் பண்ணலாம்..” என்றான் யாஷ்வின்.
“பட் பக்கத்துல ஏதாவது தீவு இருக்கணுமே..?” என்ற கேப்டனின் குரலில் கவலை மிகுந்தது.
“தீவு இருக்கு.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் என் வைஃப்கிட்ட பேசும் போது பைனாகுலர் மூலமா பார்த்தேன்.. இந்த நிலாவோட வெளிச்சத்துல மரங்களோட அசைவு ரொம்ப நல்லாவே தெரிஞ்சது.. பெரிய தீவு இல்லை.. பட் நாம எல்லாரும் பாதுகாப்பா நம்ம கப்பல் வரும் வரைக்கும் அங்க தாராளமா இருக்கலாம்… இந்தக் கப்பல்லையே இருக்கிறது நமக்கு பாதுகாப்பு இல்லை..”
“தேங்க் காட்.. நீ பார்த்த தீவு எந்த திசை பக்கம்னு சொல்லு.. நான் இப்பவே அங்க போறதுக்கான ஏற்பாட்டை பண்றேன்.. நம்ம கப்பல நேரா அந்த தீவுக்கே வரச் சொல்லிடலாம்.. கப்பல் வந்ததும் இதுல இருக்க திங்ஸ் எல்லாத்தையும் அதுக்கு மாத்தணும்..” என்றார் கேப்டன்.
இவ்வளவு நேரமும் பதற்றமாக ஒலித்த அவருடைய குரலில் இப்போது இந்தப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான வழி கண்டு கொண்டதனால் சற்றே நிதானம் தென்பட்டது.
“ஓகே யாஷ்.. நான் மத்தவங்களுக்கும் இன்பார்ம் பண்ணனும்.. கப்பல் முழுசா கட்டுப்பாட்ட இழக்குறதுக்குள்ள என்னால முடிஞ்சத பண்ண பார்க்கிறேன்.. அதுவரைக்கும் நீ இவங்க கூட இருந்து உன்னால முடிஞ்ச அளவுக்கு தண்ணி உள்ள வர்றத கண்ட்ரோல் பண்ணப் பாரு..” என யாஷ்வினிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கேப்டன் ரகுவீர் உள்ளே சென்றுவிட,
அடுத்த நொடி பொறுப்பைத் தன் கையில் எடுத்துக் கொண்டவன் அங்கே நின்றவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு அதி தீவிரத்துடன் தன்னால் முயன்ற முயற்சியை செய்யத் தொடங்கினான்.
கிட்டத்தட்ட அந்த இரவு நேரத்தில் 5 மணி நேர போராட்டத்தின் பின்னர் கப்பலின் தீயை அணைத்து ஓரளவுக்கு நீர் உள்ளே வருவதை கட்டுப்படுத்த அனைவரும் பெரும் பாடுபட்டுப் போயினர்.
யாஷ்வினுக்கு புகைக்குள் வெகு நேரமாக நின்றதால் மூச்சு எடுக்கவே சிரமமாக இருந்தது.
ஒருவாறாக அருகே இருந்த தீவில் கப்பலை நிறுத்தியவர்கள் அவர்களுடைய மற்றைய கப்பல் வருவதற்காக காத்திருக்கத் தொடங்கினர்.
கேப்டனோ எப்படியும் வேலை முடிய 10 நாட்களுக்கு மேலாகும் என்பதை உணர்ந்து அந்தத் தீவுக்கு அருகே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் விரும்பினால் இதனை 10 நாட்கள் விடுமுறையாக எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறிவிட யாஷ்வினுக்கு சட்டென விழிகள் பளபளத்தன.
இலங்கை ஒன்றும் அந்தத் தீவுக்கு அருகே இல்லைதான். ஆனால் இந்தத் தீவில் இருந்து அருகே உள்ள நாட்டுக்கு சென்றால் அங்கிருந்து விமானத்தில் ஏறி ஒரு நாள் முழுவதும் பயணித்தாலே நாளை அவன் இலங்கைக்கு சென்று விட முடியுமே அவனுடைய மனைவியை கண்டுவிட முடியுமே.
அடுத்த நொடியே கேப்டனைச் சந்தித்து தன்னுடைய நிலையைக் கூறி விளக்கியவன் பத்தே நாட்களில் திரும்பி வந்து விடுவேன் எனக் கூறி அனுமதி கேட்க,
அவனுடைய நிலையை புரிந்து கொண்ட கேப்டனும் சிரிப்போடு சம்மதிக்க அவ்வளவுதான் அவனுக்கோ இவ்வளவு நேரமும் இருந்த அழுத்தங்கள் யாவும் மறைந்தே போயின.
வேக வேகமாக தன்னுடைய பொருட்களை எடுத்து பெட்டியில் அடுக்கி வைத்தவன் நாளையே இலங்கைக்கு செல்லும் முடிவை எடுத்துக் கொண்டான்.
மனைவிக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியை இப்போதே கூறி விடலாம் எனத் தன் அலைபேசியை எடுத்தவன் வேண்டாம் அவள் எதிர்பார்க்காத போது வீட்டிற்க்கே சென்று அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என எண்ணிக்கொண்டவனுக்கு உள்ளம் குதூகலித்தது.
*****
காலேஜிலிருந்து மிகுந்த சோர்வோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் வான்மதியின் தங்கை சாஹித்யா.
அக்காவின் குழந்தையை பார்த்தாலே அவளுடைய முகம் மலர்ந்து விடும்
வேகமாக வீட்டிற்குள் நுழைந்து தன்னுடைய பையை வைத்தவள் “ஹாய் அக்கா.. பாப்பா தூங்குறாளா..?” எனக் கேட்டவாறு தொட்டிலில் இருந்த குழந்தையை எட்டிப் பார்க்க,
“ஏய் கைகால அலம்பிட்டு குழந்தையை தூக்கணும்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..?” எனத் தங்கையைத் திட்டினாள் வான்மதி.
“ஐயோ அக்கா நான் பாப்பாவ தூக்கவே இல்லை.. ஜஸ்ட் எட்டிதான் பார்த்தேன்.. கை கால் அலம்பிட்டு வந்துதான் அவளைத் தூக்குவேன்..” என்றவள் குழந்தையின் முகத்தைப் பார்த்துச் சிரித்து விட்டுத் திரும்ப,
கட்டிலின் அருகில் கீழே விழுந்து கிடந்த ஆடவன் அணியும் பனியன் ஒன்றைக் கண்டு அவளுடைய விழிகள் விரிந்தன.
“இது யாரோடது..? இது எப்படி இங்க வந்துச்சு..?” எனக் கேட்டவாறு புருவம் சுருக்கியவள்
மீண்டும் சத்தமாக “அக்கா இந்த பனியன் யாரோடது..?” என தன் சகோதரியிடமே கேட்க தூக்கி வாரிப் போட்டது வான்மதிக்கு.
வேகமாக படபடப்போடு எழுந்து வந்து கீழே கிடந்த பனியனை எடுத்து தன் கையில் சுருட்டி வைத்துக் கொண்டவள் திணறிப் போக அவளுடைய பதற்றத்தைக் கண்டு குழம்பிப் போனாள் சாஹித்யா.
“என்னாச்சு அக்கா..? ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற..?”
“நானா..? நா… நான் ஏன் டென்ஷன் ஆகணும்..? நான் டென்ஷனாகவே இல்லையே.. இது அவரோட பனியன்னு நினைக்கிறேன்..” என்றாள் வான்மதி.
“ஆனா.… மாமா இந்த டைப் பனியன் போடவே மாட்டாங்களே.. ஆர்ம்கட்தானே யூஸ் பண்ணுவாங்க… நம்ம வீட்ல கூட அவர் தங்கும் போது அப்பா இப்படி தானே வாங்கிக் கொடுத்து மாமா போட மாட்டேன்னு சொல்லி கடைக்கெல்லாம் போய் மாத்திட்டு வந்தாங்களே..” என அவள் குழப்பமாக கேட்க,
“ஏய் அவரப் பத்தி உனக்கு என்னடி தெரியும்..? அவர் என்னோட புருஷனா உன்னோட புருஷனா..? என் புருஷன் என்ன போடுவார்னு எனக்குத் தெரியாதா..? நீ உன்னோட வேலையை மட்டும் பாரு..” என சாஹித்யாவை திட்டிவிட்டு அந்த பனியனை சுருட்டி எடுத்துக்கொண்டு வான்மதி வெளியே சென்றுவிட சகோதரி பேசிய பேச்சில் விக்கித்துப் போனாள் சாஹித்யா.
இரண்டு நாட்களுக்குப் பிறகு.
கொழும்பிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து மணி நேரப் பயணம் செய்து அவனுடைய ஊரான திருகோணமலைக்கு வந்து சேர்ந்தவனுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி மனமெங்கும் வியாபித்திருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் மனைவியையும் குழந்தையும் எப்போது பார்ப்போமோ என ஏங்கித் தவித்திருந்தான்.
இதோ இன்னும் சில நிமிடங்களில் அவனுடைய ஏக்கம் தீர்ந்து விடப் போகின்றது.
தன் குடும்பத்தைப் பார்க்கப் போகிறோம் என நினைத்துப் பூரித்துப் போனவன் தன் வீட்டை பார்த்து மகிழ்ந்து போய் நின்றான்.
காடு மேடெல்லாம் சுற்றிவிட்டு வீடு வந்து சேர்ந்ததும் ஒரு விதமான மகிழ்ச்சி அவனை அக்கணம் வாரி அணைத்துக் கொண்டது.
காலிங் பெல்லை அழுத்தியவன் மனைவி வந்து கதவைத் திறப்பதற்காக கரங்களில் ரோஜா மலர் கொத்துடன் காத்திருக்க சில நொடிகள் தாண்டியும் அவனுடைய வீட்டுக் கதவு திறக்கவே இல்லை.
Ayyayyo padapadappa irukku sis
Wow interesting