மிகுந்த அதிர்ச்சி ஏற்படும் போது மூளை தன்னுடைய சிந்திக்கும் செயல் திறனை இழக்கும் அல்லவா அப்படித்தான் யாஷ்வினுக்கும் இருந்தது.
அவனால் தெளிவாக எதையுமே சிந்திக்க முடியவில்லை.
யாருமற்ற வீட்டில் மனைவியுடன் இன்னொருவன் இருக்கின்றான் என்பதை அறிந்தபோது கூட சந்தேகப்படாமல் அவன் திருடனாக இருக்கக் கூடுமோ என எண்ணி தன்னையும் தன் குடும்பத்தையும் தற்காத்துக் கொள்ள முயன்றவனுக்கு அங்கே படுக்கையறைக்குள் சிதறிக் கிடந்த உள்ளாடைகள் அவனை சிதைத்திருந்தன.
இப்போது அவன் என்னவென்று சிந்திப்பது..?
இதற்கெல்லாம் என்ன விளக்கம் இருக்கக்கூடும்..?
மனைவியைத் தவறாக நினைப்பதா இல்லை வேறு என்னதான் சமாதானத்தை தன் மனதிற்கு கூறுவது..?
அவனுடைய மனமோ சுக்கல் சுக்கலாக உடைந்து நொறுங்க எதையுமே சிந்திக்க முடியாத அதிர்ச்சியுடன் குழந்தையுடன் நிற்கும் தன்னவளை வலி நிறைந்த கேள்விப் பார்வையுடன் பார்த்தான் அவன்.
தலையைக் குனிந்து நின்றவளின் விழிகளில் இருந்தோ பொல பொலவென கண்ணீர் கொட்டத் தொடங்கியது.
சாஹித்யாவும் கூட அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள்.
சில நாட்களாக தன்னுடைய சகோதரியின் செயற்பாடு சரியில்லை என எண்ணியிருந்தவளுக்கு அது இந்தளவு தூரம் சென்றிருக்கும் என்பதை நம்பத்தான் முடியவில்லை.
மனம் வலித்தது.
அந்த மர அலுமாரிக்குள் ஒருவன் மறைந்திருப்பது அங்கே நின்ற அனைவருக்கும் தெரிந்துதான் இருந்தது.
கையும் களவுமாக பிடிப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்து கொண்ட வான்மதியோ அக்கணம் தப்பிக்கும் பொருட்டு,
“ஐ… ஐயோ இது யாருன்னே எனக்குத் தெரியாதுங்க.. தி.. திருடன்..” எனக் கத்தி விட உள்ளே மறைந்திருந்த விக்ரமுக்கோ அதீத பயம் அப்பிக் கொண்டது.
உண்மை தெரிந்துவிட்டது ஏதாவது பிரச்சனை வந்தால் வான்மதி பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் அலுமாரிக்குள் அமர்ந்திருந்தவன் அவள் தன்னை திருடன் என்றதும் பாய்ந்து வெளியே வந்தான்.
இடுப்பில் சுற்றிய போர்வையுடன் வெளியே வந்தவன்,
“ஐயோ நா.. நான் திருடன் இல்ல… இவ பொ… பொய் சொல்றா.. நீ தானே சாஹித்யாவும் இல்ல புருஷனும் இல்லைன்னு என்ன வீட்டுக்கு வரச் சொன்ன..? இப்போ உண்மை தெரிஞ்சதும் என்ன மட்டும் மாட்டி விடலாம்னு பார்க்கிறியா..?” என அனைவரின் முன்பும் அவன் உண்மையைப் போட்டு உடைத்து விட,
“விக்ரம் அண்ணா நீங்களா..?” என கிட்டத்தட்ட அலறிய சாஹித்யாவுக்கோ அருவருத்துப் போனது.
அங்கே நின்ற விக்ரமின் கோலத்தைப் பார்க்க முடியாது தலையைக் குனிந்து கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டவளுக்கு மனம் திக் திக்கென அடித்துக் கொண்டது.
அவளால் அந்த சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவமானம் ஒரு பக்கம் அக்கா இப்படித் தவறிப் போய் விட்டாளே என்ற வேதனை ஒரு பக்கம் மாமா இடிந்து போய் நிற்பதைக் காண முடியாத துயர் ஒரு பக்கம் என அவளைத் தாக்க அந்த சூழ்நிலையை அவளால் எதிர்கொள்ளவே முடியவில்லை.
யாஷ்வினோ எதுவுமே பேசவில்லை.
அவர்கள் இருவரையும்தான் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்தான்.
அவனுடைய விழிகள் கண்ணீரை சொரிந்து கொண்டே இருந்தன.
என்னதான் பேசுவது..?
அவனுடைய வலியை வார்த்தைகளால் கூறிவிட முடியுமா என்ன..?
அந்த அளவுக்கு வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறதா..?
உணர்வுகளை அப்படியே கொட்டி விட முடியாது கோபம் ஒரு பக்கம், ஏமாற்றம் ஒரு பக்கம், மனம் உடைந்து நொறுங்கிய வலி ஒரு பக்கம் என தனக்குள்ளேயே அவன் திண்டாடிக் கொண்டிருந்தான்.
“என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னுதான என் கூட படுத்த… இப்போ உன் புருஷன் வந்ததும் என்னத் திருடன்னு சொல்றியா..? நீ என்கிட்ட பேசுன கால் ரெக்கார்டிங் எல்லாமே என்கிட்ட இருக்கு.. அதெல்லாம் போட்டுக் காட்டவா..?” என பயமே இன்றி விக்ரம் அவளுடைய அந்தரங்கங்களை போட்டு உடைக்க,
“ஏய்ய்ய்…. ஒரு வார்த்தை.. இன்னும் ஒரு வார்த்தை கூட நீ அவளைப் பத்தி பேசக்கூடாது.. இப்பவே இந்த இடத்தை விட்டு வெளியே போ.. இல்லன்னா அடிச்சே கொன்னுடுவேன்…” என்றவன் கையை முறுக்கி விக்ரமை நெருங்க, விக்ரமோ வேகமாக தன்னுடைய பேண்டை எடுத்து அணிந்து கொண்டவன் யாஷ்வினின் முகத்தைக் கூடப் பார்க்கத் தைரியம் இன்றி அப்படியே வெளியே ஓடிவிட,
கதறி அழத் தொடங்கி விட்டாள் வான்மதி.
பிரச்சனை எல்லை மீறி சென்று விட்டது என்பது அவளுக்குப் புரிந்தது.
இடிந்து போய் நின்ற யாஷ்வினோ தன்னுடைய குழந்தையை வாங்கித் தன் மார்போடு சாய்த்துக் கொண்டான்.
அவனுடல் நடுங்கியது.
நடந்தேறிய விடயங்களை அவனால் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதே கணம் எந்த முடிவையும் அவனுடைய மனைவியிடம் கேட்காமல் எடுக்க அவன் அப்போது கூட பிரியப்படவில்லை.
“அ…அம்மாடி…” என வலியோடு அவளுடைய முகத்தைப் பார்த்து அவன் அழைக்க,
தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள் வான்மதி.
குழந்தை விழித்து பயந்து அழத் தொடங்கியது.
குழந்தையின் முதுகில் தட்டி தன் மீது வாகாக சாய்த்துக் கொண்டவன்,
“அம்மாடி… இதெல்லாம் பொய்ன்னு சொல்லிருடி… நெஞ்சு வெடிக்கிற மாதிரி இருக்கு மதி… இதெல்லாம் பொய் தானே..? அவனுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதானே..?
ஹேய்.. இங்க பாரு… நான் ஒன்னும் அவசரப் புத்திக்காரன் இல்லடி.. கண்ணால பார்க்கிறதையும் காதால கேட்கிறதையும் மட்டும் நம்புறவன் கிடையாது… நீ சொல்லு மதி… நீ சொல்றத மட்டும்தான் நம்புவேன்… நான் உன்னை மட்டும் தான் நம்புவேன்..
நீ எனக்கு துரோகம் பண்ணுவியா..? இல்லைல…? இதுக்கு சரியான காரணம் சொல்லு… இவன் உன்னோட ஃப்ரண்ட்டுன்னு எனக்குத் தெரியும்.. இவனுக்கு நம்ம பெட்ரூம்ல என்ன வேலை மதி..?
நான் நம்புற மாதிரி ஏதாவது காரணம் சொல்லேன்டி…” என்றவன் உடைந்து போய் கதறத் தொடங்கி விட,
என்ன காரணத்தைத்தான் அவளால் சொல்ல முடியும்..?
இதன் பின்புமா என்னை நம்புகின்றான்..?
அவசரப்பட்டு விட்டோமோ..?
ஐயோ..
ஐந்து நிமிட சுகத்திற்காக அருமையான கணவனை இழந்து விட்டோமோ..?
அடுத்த நொடியே சட்டென அவனுடைய காலில் விழுந்தவள் “த… தப்பு பண்ணிட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க..” என அவள் அவனுடைய கால்களைப் பிடித்து கெஞ்ச பதறி விலகி நின்றவன் அக்கணம் உயிரோடு மரித்துப் போனான்.
மன்னிப்புக் கேட்டு துரோகம்தான் செய்து விட்டேன் என்பதை உறுதிப் படுத்திவிட்டாளே.
அவளுக்கு என்ன குறை வைத்தேன்..?
உயிருக்குயிராக என் உயிரை விடவும் மேலாக அல்லவா அவளை நேசித்தேன்.
எனக்கு துரோகம் செய்ய எப்படி மனம் வந்தது..?
என்னிடத்தை வேறு ஒருவனுக்குக் கொடுக்க இவளுக்கு எப்படித்தான் மனம் விளைந்தது..?
உடல் தேவை அனைத்தையும் மிஞ்சி விடுமோ..?
என் காதலை காமம் வென்று விட்டதோ..?
தலை சுற்றுவதைப் போல இருந்தது.
அவனுக்கோ காதுகள் அடைத்துக் கொண்டன.
நிற்க முடியாமல் தள்ளாடினான் யாஷ்வின்.
பின்னந் தலையில் யாரோ சம்மட்டியால் அடித்ததைப் போன்ற சுரீர் என்ற வலி.
தாங்க முடியாது தவித்தான் அந்த ஆண்மகன்.
நிமிடத்திற்கு நிமிடம் அந்த வலி கூடிக் கொண்டே போக தள்ளாடி அறையில் இருந்து வெளியே வந்தவன் சோஃபாவில் அமர்ந்திருந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த சாஹித்யாவைப் பார்த்தான்.
“சா.. சாஹிம்மா…” உடைந்து வெளிவந்தன அவனுடைய வார்த்தைகள்.
“பா.. பாப்பாவ கொஞ்ச நேரம் பாத்துக்கம்மா.. நான் தி.. திரும்ப வருவேன்.. அதுவரைக்கும் பா.. பாத்துக்கோ…” என உடைந்து போன குரலில் கூறியவன்,
அவளிடம் தன் குழந்தையை கொடுத்துவிட்டு பைத்தியம் பிடித்தவன் போல அந்த வீட்டை விட்டு எதையோ முணுமுணுத்துக் கொண்டு வெளியேற சாஹித்யாவுக்கோ மனம் கதறியது.
நீண்ட தூரம் பயணித்து மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்தவர் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் தொலைத்து விட்டு அழுது கொண்டே இடிந்து போன தோற்றத்துடன் வீட்டை விட்டு வெளியேறுவதைக் காணச் சகியாது விழிகளை மூடிக் கொண்டாள்.
தன் மாமாவின் இடத்தில் வேறு யாராக இருந்திருந்தாலும் இப்படி அமைதியாக இருந்திருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
எத்தனையோ கொலைகள் இப்படித்தானே நடக்கின்றன.
அவ்வளவு வலியையும் அடக்கிக் கொண்டு ஒரு வார்த்தை கூட தன் அக்காவைத் திட்டாது வெளியே சென்றவரின் குண இயல்பை எண்ணி அவளுக்கு மனம் சோர்ந்தது.
மாமா கேள்வி கேட்கா விட்டால்தான் என்ன..?
என்னால் கேட்க முடியும் அல்லவா என எண்ணியவள் தன் சகோதரியின் முன்பு கோபமாக வந்து நின்றாள்.
“என்னக்கா இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணிட்டியே.. உனக்கு கொஞ்சம் கூட மனசு உறுத்தவே இல்லையா..?
எ.. எப்படி எப்படிக்கா உன்னால மாமாக்கு போய் துரோகம் பண்ண முடிஞ்சது..? ஏன் அக்கா இப்படி பண்ண..? உன்ன பாக்கவே அருவருப்பா இருக்குக்கா..”
“தயவு செஞ்சு என்கிட்ட எதுவுமே கேட்காத… என்ன கொஞ்சம் தனியா விடு..” எனக் கத்தினாள் வான்மதி.
“மாமாக்கு கால் பண்ணி வீட்டுக்கு வர சொல்லுக்கா.. அவர் கிட்ட மன்னிப்பு கேளு.. அவரைப் பேசி சமாதானப் படுத்து. அவர் உடைஞ்சு போய் போறத பாத்தா எனக்கு பயமா இருக்கு…”
“உனக்கு நான் சொல்றது புரியலையா..? என்ன கொஞ்ச நேரம் தனியாக விடு..” என அந்த வீடே அதிரும் வகையில் கத்திய வான்மதியோ அழுதவாறே அந்த அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள,
சாஹித்யாவுக்கு அழுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
மகிழ்ச்சியாக இருந்த அந்தக் குடும்பம் சிறிய சபலத்தால் அக்கணம் சிதைந்து போனது.
அழுது கொண்டிருந்த குழந்தையை தன் மார்போடு சாய்த்துக் கொண்டாள் அந்தச் சிறு பெண்.
Pavam Yash. Pachai dhrogathai kaanava than payanam thavirthu oodi vandhan? Sahi than ini iruvarukkum aarudhala? Waiting for next ud eagerly.👌👌👌👌👌👏👏👏👏👏👏😍😍😍😍🥰🥰🥰🥰🤩🤩🤩🤩❤️❤️❤️❤️
Saahi kulandhai yash rendu perayum partthukkadi
Pavam Yash. Pachai dhrogathai kaanava than payanam thavirthu oodi vandhan? Sahi than ini iruvarukkum aarudhala? Waiting for next ud eagerly.👌👌👌👌👌👏👏👏👏👏👏😍😍😍😍🥰🥰🥰🥰🤩🤩🤩🤩❤️❤️❤️❤️
Vaanmathi seththuruvaala🤔