வேந்தன்…19
சிவதானு அங்கிள், ராஜி அத்தை மகள்தான் சுபி. சுபியும் நளிராவும் நெருங்கிய தோழிகள். சிறுவயது தோழி. நளிரா வேகமாய் மூச்சு விட்டால் கூட தோழியிடம் சொல்லிவிடுவாள் அவ்வளவு நெருக்கம் இருவரும்.
பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்தவளுக்கு யாரோ தன்னையே உற்றுப் பார்ப்பதைப் போலவே இருக்கவும், தேகம் நடுங்க, விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் கம்பியை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள.
அதற்கு தகுந்தார் போல சுபி பைக்கை லேசாய் உழட்டி பிறகு ஓட்ட.
“ஒழுங்கா போ சுபி” அயர்வாக சொன்னவளுக்கு அவன் தொட்ட இடங்கள் தீ போல எரிந்தது. நகக்கீரல்களும் கழுத்தில் பற்களின் தழும்பும் எரிச்சலைத் தந்தது.
“மிருகம்” அவள் உதடுகள் தானாய் முனுமுனுத்தது. அவள் சத்தமாகவே வாய்விட்டு சொல்லிவிட, தன்னைத்தான் சொல்லுகிறாளோ என்று நினைத்துவிட்டாள்.
“பூச்சி பறக்குதுடி அதான் சிலிப் ஆகுது” விளக்கம் சொன்ன சுபி வாகனங்களுக்கு நடுவில் தன் பைக்கையும் நுழைத்து ஓட்டினாள்.
அவள் வேறு ஏதும் பேசாமல் இருக்கக் கண்டு “நளிரா” சுபி அவளை அழைக்க.
“பேசாம போடி” பேச்சைக் கத்தரித்தாள். “சரி ஒழுங்கா உட்காருடி” சொன்னவள் பிளாக் கலர் கார் தங்களை ஒட்டியே வரவும், அது போகட்டுமென வழியை விட்டு நின்றாள்.
“என்னாச்சுடி?” பைக் நிற்கவும் நளிரா எட்டிப் பார்க்க.
“கார் போகட்டும்னு நிற்கறேன் நளி. ரொம்ப நேரமா கிராஸ் பண்ண ட்ரை பண்ணுது” சொன்னவள், கார் சற்று தயங்கி பின் வேகமெடுத்துப் போய்விடவும் வீட்டை நோக்கி ஓட்டினாள்.
சுபி வாசலில் பைக்கை நிறுத்த, இறங்கிய நளிரா காலிங்பெல்லை அழுத்தினாள்.
கதவை திறந்த சிவதானு “வாம்மா நளிரா, உள்ளே போ. அத்தை கோவிலுக்கு போயிருக்கா, வந்துருவா” என்று அனுப்பி வைத்தார். நளிராவின் கசங்கிய முகம் பார்த்து, நிற்க வைத்து வேறு எதையும் பேசவில்லை அவர்.
“சுபி, குடிக்க கொடு. வெய்யில் சேராம முகமெல்லாம் வாடி போயிருக்கு” மகளிடம் சொன்னவர்,
“எனக்கு வெளிய வேலையிருக்கு நளிரா. போயிட்டு வரேன்” என்று விடைபெறவும்,
“சரி அங்கிள்” நளிரா அவரிடம் சொல்லிவிட்டு சுபியின் அறைக்குள் சென்றாள்.
போனதும் முதல் வேலையாக குளியல் அறைக்குள் சென்றவள், தான் அணிந்திருந்த உடைகளை அவிழ்த்து வீசிவிட்டுக் குளிக்க ஆரம்பித்தாள். சகோதரிகள் முன் தன்னை அடக்கியவளுக்கு, இதற்கு மேலும் தாள முடியாது போகவே கண்ணீர் அருவியாக வழிந்தது.
“பொறுக்கி நாயே” அழுகையுடன் அவள் உதடுகள் உச்சரிக்க, “யாருடா நீ. என்னை எதுக்கு தொட்ட. ஐயோ கடவுளே!” ஆற்றாமை தாங்காது கதறிவிட்டாள்.
அவனை எதிர்க்கவும் தோணாமல் நின்ற தன்னுடைய நிலையை எண்ணி இன்னும் அவமானமாய் இருந்தது. ஒரு அடியாவது வச்சிருந்தா மனசு ஆறியிருக்குமே. நெற்றியில் அடித்துக்கொண்டாள்.
தலையில் இருந்த மல்லிகைப்பூவை எடுத்தவளுக்கு, அதைக் கூந்தலில் சூடிவிட்டு கழுத்தோரம் நறுக்கென கடித்த நினைவு வரவும், அங்கே சோப் போட்டு நன்கு தேய்த்துக் கழுவினாள்.
அவன் தொட்ட இடங்கள், உதடுகள் என அத்தனை இடங்களிலும் நன்கு தேய்த்துக் கழுவியும், இன்னும் அதன் தகிப்பு விலகவே இல்லை.
அவன் அணைப்புக்குள்ளேயே இன்னும் இருப்பதாக உணர்ந்தவளுக்கு, கொதிக்கும் நீரில் குளித்தால் இந்த தவிப்பு போகுமா என்றிருந்தது.
குளிர் நீர் நடுக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்ததும்தான், நிதர்சனம் உரைக்க, துண்டை எடுத்து மார்போடு கட்டிக்கிட்டு வெளியே வரவும், அவளுக்காக காத்திருந்த சுபி அதிர்ந்து போய், தன்னுடைய டிரெஸ் எடுத்து தந்தாள் அவள் அணிவதற்காக.
கண்ணெல்லாம் சிவந்து போய், இன்னுமே கண்ணீர் விழிகளில் வழிய, உடைமாற்றியவளைப் பார்த்த சுபிக்கு பயமாக இருந்தது. அவளுக்கு குடிக்க ஜில்லுன்னு எடுத்துட்டு வரலாமே என்று சமையல் அறைக்குப் போனவள், அம்மா ஏற்கனவே ஆரஞ்சு ஜூஸ் போட்டு வைத்திருக்கவும், அதை பெரிய டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டாள்.
அவள் வரும் பொழுது நளிரா சுபியின் உடையை தானே எடுத்து, உடுத்திவிட்டு, தலையை துவட்டியபடி அமர்ந்திருக்க, “இதைக் குடிடி” என்று அதட்டிக் குடிக்க வைத்தாள்.
குடித்து முடித்தும் உவர் நீர் வழியும் விழிகளால் வெறித்தபடி அவள் அமர்ந்திருக்க. விஷயம் பெருசு போலவே நினைத்த சுபிக்கு திக்கென்று இருந்தது.
அப்போதுதான் நளிராவின் கழுத்தில் இருந்த பல் தடம், இடுப்பில் நகக்கீரல், வீங்கிய உதடுகள் எனக் கண்களில் பட, “அய்யோ!” வாயில் கைவைத்து அதிர்ந்து போனாள்.
“ஹாட் பேக் வேணும்டி. எதுவானாலும் உன்கிட்டதான் சொல்லியாகணும். மொதல்ல நான் கேட்டதை எடுத்துட்டு வா” முகம் கன்றிப்போக, கழுத்துக்கும் கீழே வலது புறம் நெரிகட்டியது போல சுரீரென வலித்தது.
கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் வரிசை கட்டி நின்றாலும் தோழியின் நலனே இப்போதைக்கு முக்கியமாய்ப் பட்டது அவளுக்கு. திரும்பவும் சமையல் கட்டுக்குப் போனவள் அடுப்பை பற்றவைத்து தண்ணீரை கொதிக்க வைத்து, ஹாட் பேக் ரெடி பண்ணி எடுத்து வந்தாள்.
“நளி இந்தாடி” அவளிடம் நீட்டிட.
அதை வாங்கியவள் டாப்சை இடுப்புக்கு மேலே ஏற்றி வலித்த இடங்களில் வைக்கவும், “ஸ்ஸ்ஸ் ம்மாஆ. வலிக்குதுடி” கண்ணீரோடு முகம் சுளித்தாள்.
சுபியோ திகைத்து நின்றுவிட்டாள். உரிமையானவனைத் தவிர்த்து யாரும் தொடக்கூடாத பாகமல்லவா இதெல்லாம்? கட்டிலில் அவளருகில் அமர்ந்த சுபி, நளிராவின் உடைகளை விலக்கிப் பார்த்திட, அழுதேவிட்டாள்.
“ஏய் நளி என்னடி ஆச்சு?” அவள் கேட்டதும்தான் தாமதம்,
“சுபி… சுபி ஒருத்தன் என்கிட்ட தப்பா பிகேவ் பண்ணிட்டான் டி” அவள் மடியில் படுத்துத் தேம்பி அழுதாள்.
“அருவெறுப்பா இருக்குடி” என்றவளின் அழுகை நிற்காமல் தொடர.
“தப்பு நடந்துருச்சா நளி? நீ… நீ முழுசாதான இருக்க?” நடுங்கிய குரலில் கேட்டவளுக்கு ஏதேதோ எண்ணங்கள் கண்டபடி வந்து போக, இதயத் துடிப்பே நின்று போன மாதிரி இருந்தது.
“ச்சீசீ அதெல்லாம் இல்லடி. அவன் எங்கிட்ட என்னென்னமோ சொன்னான்டி. மிரட்டுறான். ரொம்ப பயமா இருக்குடி” தோழியின் மடியில் படுத்து ஏங்கி அழுதவளின் கண்களிரண்டும் சிவந்து போக, பேசக்கூட முடியாது தொண்டை விக்கியது.
தோழியை கட்டிக்கொண்ட சுபிக்கு அத்தனை கோபம் வந்தது. யாரு அவன்? அப்பாவிப் பொண்ணை இப்படி பண்ணுறதுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும் அவனுக்கு?
முகத்தை துடைத்தாலும் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது அவளுக்கு. “சாரிடி என்னால உனக்கும் கஷ்டம். உன்னையும் தொந்தரவு பண்ணிட்டேன்” நளிரா சொல்லவும் அவள் முதுகில் ஒரு அடியை வைத்துவிட்டாள் சுபி.
“உன்ன கொல்லப் போறேன் பாருடி. ரோட்டுல போறவகிட்ட சொல்லுவியா?” இவளுக்கும் அழுகை வரவும், தோழியைக் கட்டிக்கொண்டாள்.
வெகு நேரம் அழுது அரற்றியவாறு இருந்தவள் இன்னும் விசித்துகிட்டு இருக்க, கண்ணீர் கண்களில் கரைகட்டி இருந்தது.