வேந்தன்…21

5
(3)

வேந்தன்…21

 

 

குடும்பத்தின் பாச மழையில் நனைந்து கொஞ்சம் தெளிந்துவிட்டாள் நளிரா. அதுபோக ராஜியின் அறிவுரை மழையில் சொட்ட சொட்ட நனைந்து “சுபி நாளைக்கு கடைக்கு வாடி செயின் தேடுவோம்” என்றுவிட்டு வீட்டுக்கு ஓடியே வந்துவிட்டாள்.

 

இரவு உணவை ராஜி வீட்டிலேயே உண்டுவிட்டதால், ஹாலில் பாயை விரித்துப் போட்டு படுக்கையை தயார் செய்தார்கள். சைத்ரா ராஜன் படுப்பதற்கு கட்டிலை போட்டு, பெட்சீட் விரித்துக் கொடுத்தாள்.

 

ஆர்த்தி குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்தாள்.

 

“ஒருவேலையாவது செய்யேண்டி. எப்பப்பாரு பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரியே இருக்க வேண்டியது” நளிரா சும்மாவே இருப்பதைப் பார்த்து ஆர்த்தி பொறுமினாள்.

 

“உன்னை யாருடி வேலை செய்யச் சொன்னது. இவளா ஓடி ஓடிப் பண்ணிட்டு எனக்கு அறிவுரை சொல்றா. சில்லி கேர்ள்” நளிரா கிண்டலாகச் சொன்னாள்.

 

“நளிரா அந்த மாதிரி வெடுக்குன்னு பேசாதம்மா. கல்யாணமாகப் போற பொண்ணு மனசு கஷ்டப்படுமில்ல” ராஜன் நளிராவுக்கு எடுத்துச் சொன்னார்.

 

சிறிது நேரத்தில் சைத்ரா ஆர்த்தி இருவரும் விதியேன்னு மொபைல் போனில் ஒலித்த குரலுக்கு காதை அடகு வைத்திருந்தார்கள்.

 

நளிரா, மலரின் மடியில் படுத்திருந்தாள். தாயின் மடியில் படுத்திருந்தவளுக்கு மனசு கொஞ்சம் தெளிவானது போல இருந்தது.

 

ராஜன் பெண்கள் மூவருக்கும் வேர்க்கடலையை உரித்துக் கொடுத்தார்.

 

“நாங்க டீக்கு கூட பனங்கற்கண்டுதான் யூஸ் பண்ணுவோம்” மனோகரியின் குரல் காதில் ங்கொய்ன்னு ஒலிக்க.

 

கண்களைத் திறந்து பார்த்த நளிராவுக்கு, தலையில் கைவைத்து அமர்ந்திருந்த சகோதரிகளைப் பார்க்கையில் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. போனில் ஹபியுடன் ரொமான்ஸ் பண்ணும் நேரத்தில் கரடி போல இருவருக்குமிடையில் புகுந்து சமையல் குறிப்பு சொல்லும் மாமியார்.

 

ஆர்த்தியின் பொறுமை காற்றில் விட்ட பட்டம் எப்போது வேண்டுமானாலும் பறக்கத் துடிப்பதை, அவளின் கடுகடுத்த முகத்தில் கண்டவளுக்கு சிரிக்காமல் இருக்கவே முடியவில்லை.

 

தன் கவலை மறந்து வாய்விட்டே சிரித்துவிட்டாள் நளிரா. “சத்தமா சிரிக்காதடி. சும்மாவே அந்தம்மாக்கு உன்னையக் கண்டா ஆகாது, எதுக்கு வாங்கிக் கட்டிக்கிற அதுகிட்ட” மலர் அவள் வாயைப் பொத்தினார்.

 

“பின்ன என்னம்மா. அங்க போனா தானா கத்துக்கப் போறாங்க. அதும் சாப்பிடுறதுக்கு சுவையா இருந்தா பத்தாதா?. எங்க பக்கம் பருப்பு தனியா காய் தனியா வேகப் போடுவோம். கடைசியில தாளிச்சு ஒண்ணா கலந்திடுவோம்” என்று மனோகரி போலவே சொல்லிக்காட்டிய நளிரா,

 

“பேசாம ஒன்னு பண்ணச் சொல்லித் தாங்கம்மா இவங்களுக்கு. அரிசி பருப்பு காய் எல்லாம் அப்படியே முழுங்க சொல்லிடுங்க. அதுவே உள்ள போய் வெந்துக்கும்” அடக்க மாட்டாத சிரிப்புக்கு இடையில் நளிரா சொல்லவும்.

 

அவளுக்கு நெட்டி முறித்தவர், “இந்தச் சிரிப்பை பார்க்க இவ்வளவு நேரமாடி. நீ அழுவுறதை கேட்டுட்டு எங்க உசுரே போய்டுச்சு போ” அவளை கொஞ்சினார் மலர்.

 

பேச்சு போகும் திசை அறிந்து சுதாரித்த நளிரா, ஆர்த்தியை அழைத்தாள்.

 

“ஆர்த்தி அவங்க பக்கம் உப்பு போடுவீங்களான்னு கேளுடி” நளிரா சிரியாது சொல்ல.

 

சமையலின் அரிச்சுவடியே தெரியாத நளிராவுக்கே உப்பின் அருமை தெரிய, ஓரளவு சமையலில் கற்று தேர்ந்திருந்த ஆர்த்தியோ அதை மறந்து அப்படியே மாமியாரிடம் கேட்டுவிட்டாள். “அத்தம்மா. உங்க பக்கம் சாப்பாட்டுல உப்பு போட்டு சாப்பிடுவீங்களா?” என்று.

 

அதைக் கேட்டு அங்கே மனோகரியின் கணவர் வாய்விட்டே சிரிக்கும் சப்தம் இங்கே கேட்டுவிட.

 

மனோகரி ஆச்சா போச்சாவென குதித்தவர் போனை கட் பண்ணிட்டார்.

 

“ஒன்னுல இருந்து மூணு வரைக்கும் எண்ணுங்க. இப்ப நிஷாந்த் மாமா கால் பண்ணுவார்” நளிரா எண்ண ஆரம்பித்தாள்.

 

“வாலு பேசாம இருக்க மாட்டியா?” மலர் மகளின் கன்னத்தில் செல்லமாகத் தட்டினார்.

 

அதெல்லாம் சரிதான், எப்படியோ எல்லோரையும் நம்ப வைத்தாயிற்று. ஆனால் கடைக்குட்டி படு சுட்டி எனும் பழமொழிக்கு ஏற்ப, ஆர்த்திக்கு புத்திகூர்மை அதிகம். அதனால் நளிராவும் சுபியும் கற்பூரம் அடிக்காத குறையாக சொல்லிச் சொல்லி நம்பவைத்த பொய்யை சிறிதும் நம்பவேயில்லை.

 

அதெப்படி மல்லிகைப்பூ இடம் மாறும். தங்கள் பின்னேதான வந்தாள், திரும்ப மணலில் கால்கள் புதைய நடந்து சென்று பூ வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை. அதும் அக்கா வேண்டாம்னு சொன்ன பிறகு அதைத் தட்டவே மாட்டார்கள் இருவருமே. அப்படியெனில் அந்தப் பூ வந்தது எப்படி. யோசிக்க ஆரம்பித்தாள் ஆர்த்தி.

 

பீச்க்கு வெகு அருகாமையில் இருந்தது அந்த கெஸ்ட் ஹவுஸ். ஆத்மாவின் மாமா கெஸ்ட் ஹவுஸ் அது. அங்கேதான் சிபின் தற்பொழுது தங்கியிருக்கிறான்.

 

“எதற்கு இதெல்லாம். ஹோட்டல்ல ஸ்டே பண்ணிக்கறேன்” சிபின் மறுத்துவிட.

 

“மாமா வருத்தப்படுவார் சிபின். உனக்காக மாமா அங்கே எல்லா வசதியும் பண்ணி வச்சிட்டார்” என்ற ஆத்மா சொல்லுக்காக இங்கேயே இருந்துவிட சம்மதித்தான்.

 

வசீகர அழகன் சிபின். உடற்பயிற்சியால் தேகத்தை இறுக்கி வைத்திருக்கிறான். பிஸ்னஸ் மேன் என்பதற்காய் கோட் சூட் என பார்மல் ட்ரெஸ் அணிவதில்லை.

 

ஸ்டைலாக பார்ப்பவர் மனதைக் கவரும்படி உடுத்துவான். அவனுக்கென்று தனிப்பட டிசைனர் இருக்கிறார். அவனுக்கான உள்ளாடை முதற்கொண்டு அவரின் வடிவமைப்பாகத்தான் இருக்கும்.

 

உடலை இறுக்கி பிடிக்காத கேசுவல் உடையை அணிந்திருந்தவன் அத்தனை வசீகரமாய் உள்ளத்தைக் கொள்ளையடித்தான்.

 

மேஜையில் அவனுக்கான இரவு உணவும், குடிப்பதற்காக பழரசமும் வைத்திருக்க, உடையவன் பசியார வராது, பரிதாபமாய்க் காட்சியளித்தது.

 

பசி தூக்கம் எல்லாவற்றையும் மறந்து இரவெல்லாம் உறங்காமல் நடைபயின்றான் சிபின். கன்னியின் வனப்பில் மூச்சடைத்துப் போனவன் அவளது போதை தரும் விழிகளில் மொத்தமாய் வீழ்ந்து போனான். இனி அவளைத் தனியே விடவே முடியாது என்ற நிலையில் ஓய்வெடுக்கவும் தோன்றவில்லை.

 

இறுகிய தேகமெங்கும் நெருப்பாய் மோக உணர்வுகள் தீயாய் பற்றி எரிந்திட, இதென்ன வேதனை? இப்போதே அவளைத் தூக்கிட்டு வரலாமா எனும் அளவிற்கு அவனது தேவைகள் கூக்குரலிட்டு அழைத்தது அவனை.

 

அவளது அத்தனை தகவல்களும் அவனுக்கு அத்துப்படி. அதனால் இப்போதே வீட்டுக்கு சென்று பேசிடலாமா. அப்போதே கிளம்பவும் தயார்தான் அவன்.

 

மணி பனிரெண்டு ஆகிவிட, இந்த இரவு எதற்காக வருகிறது? சலித்தப்படி வெறித்தான் இருளை. கடல்காற்று திறந்திருந்த ஜன்னல் வழியே உள்ளே வர, குளிர வேண்டிய தேகமோ மேலும்  எரிதனலைப் போலக் கொதித்தது. அதை அணைத்திட கன்னியவளின் துணையை நாடியது பித்துப்பிடித்த மனது.

 

நினைத்தது நினைத்த பொழுது கிடைத்திட, முரட்டுப் பிடிவாதமும், தப்பு சரியென யோசிக்கும் தன்மையும் இல்லாது இருந்தான். தேவையெனில் மட்டுமே வாய் திறந்து பேசுவான், சிரிப்பு சுத்தம்.

 

தாய் தந்தை சகோதரன் என்றால் மில்லிமீட்டர் அளவிற்கு புன்னகை எனும் முத்தை சிந்திடுவான்.

 

இப்பொழுது நளிர்ப் பெண்ணின் தேவையை பிடிவாதமாய் விரும்பினான் சிபின். எனில் இது முறையா.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!