முள் – 07
திடீரென யாஷ்வின் அங்கே வந்து நின்றதும் சகோதரிகள் இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.
அக்கா பேசிய வார்த்தைகளை அவர் கேட்டிருப்பாரோ எனப் பதறிய சாஹித்யாவோ,
“என்னால முடியலக்கா.. நான் இப்பவே நம்ம வீட்டுக்கு நடந்த எல்லாத்தையும் சொல்லப் போறேன்.. அவங்க வந்து இதை பார்த்துக்கட்டும்..” எனக் கூற சாகித்யாவை கொல்லும் வெறியுடன் முறைத்துப் பார்த்தாள் வான்மதி.
“ஏய்.. என்னைப் பத்தி ஒரு வார்த்தை கூட தப்பா நீ நம்ம வீட்ல சொல்லக் கூடாது…” என அவளைப் பார்த்து சீறியவள் தன்னுடைய கணவனைப் பார்த்தாள்.
“சாஹிம்மா நீ உள்ள போ.. நான் பாத்துக்குறேன்..” என்றவன் சாஹித்யா அழுகையோடு குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவளுடைய அறைக்குள் நுழைந்ததும் அந்த வீட்டின் கதவை பூட்டிவிட்டு கலங்கிய விழிகளுடன் அவளைப் பார்த்தவன்,
“அம்மாடி உன் கூட கொஞ்சம் பேசணும்..” என சாதுவான குரலில் கூற,
சாஹித்யாவின் முன்னால் கோபத்தில் கத்தியவள் தன் கணவனின் முன்னால் குரலைக் கூட எழுப்ப முடியாது சரியென தலை அசைத்தாள்.
கோபப்பட்டு அவன் திட்டினாலோ சண்டை போட்டாலோ ஏதாவது எதிர்த்துப் பேசலாம்.
ஆனால் ஒரு வார்த்தை கூட திட்டாமல் அப்போதும் அன்புருக அழைக்கும் அவனுடைய அழைப்பை அவளால் எப்படி மறுக்க முடியும்..?
அவனை எதிர்த்துப் பேசவோ மறுக்கும் நிலையிலோ அவள் இல்லை என்பது அவளுக்குப் புரிந்துதான் இருந்தது.
இதற்கு அவன் தன்னை அடித்திருக்கலாம் என்றே அவளுக்குத் தோன்றியது.
ஏன் இப்படி இருக்கின்றான்?
யாராயிருந்தாலும் கோபம் வந்திருக்க வேண்டுமே..!
ஏன் இவ்வளவு காதலை என் மீது வைத்துத் தொலைத்தான்..?
அவளுக்கோ நெஞ்சம் அலை மோதியது.
“உள்ள வா..” என அவளை அழைத்தவன் இன்னும் அந்த அறைக்குள் சிதறிக்கிடந்த ஆடைகளைக் கண்டு முகத்தைத் திருப்பினான்.
இங்கே இருந்தால் அவனால் நிச்சயம் இயல்பாக பேச முடியாது.
அவர்களுடைய படுக்கை அறையே அவனுக்கு அந்நியமாகிப் போனது.
பேயைக் கண்டவன் போல மீண்டும் வெளியே வந்து அவன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து விட கண்களைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தவளுக்கு என்ன நேர்ந்தாலும் யாஷ்வின் தன்னை ஒருபோதும் விட்டு விலக மாட்டான் என்ற நம்பிக்கை அக்கணம் வந்தது.
இவ்வளவு நடந்த பின்பும் நிதானத்தை கடைப்பிடிக்கும் அவன் மீது இன்னும் பிரியம் கூடியது.
குளியல் அறைக்குள் சென்று முகத்தை நன்றாகக் கழுவியவள் முகத்தை துடைத்து விட்டு அவன் முன்னே வந்து தரையில் அமர்ந்து கொண்டாள்.
“ஏன் தரைல இருக்க..? மேல வா மதி..” என்றான் அவன்.
“இல்ல பரவால்லைங்க..” என்றவளுக்கு அவன் என்ன பேசப் போகின்றானோ என்ற பயம் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.
அவனுடைய காலடியில் அமர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“என்ன மன்னிச்சிடுங்க… அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டேன்.. சத்தியமா இனி இந்த தப்பை நான் பண்ணவே மாட்டேங்க..” என மீண்டும் கண் கலங்க அவனைப் பார்த்து அவள் கூற,
“அம்மாடி அழாத..” என்றவன் எழுந்து சென்று தான் கொண்டு வந்து வைத்திருந்த பையைத் திறந்தான்.
அந்தப் பைக்குள் இருந்து சில பொருட்களை அவன் வெளியே எடுக்க அதனுள் அவளுக்குப் பிடித்த நிறத்தில் பட்டுப்புடவை ஒன்று இருப்பதைக் கண்டவளுக்கு நெஞ்சம் பிசைந்தது.
தனக்காகத்தான் தனக்குப் பிடித்த நிறத்தில் புடவை வாங்கி வந்திருக்கிறான் என்பதை உணர்ந்து குற்ற உணர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் அவள்.
அவனோ அந்த பையில் இருந்து சில கட்டுப் பணத்தை எடுத்து வந்து அவள் அருகே இருந்த சிறிய கண்ணாடி மேஜையில் வைத்தவன்,
“ஏதோ ஒரு விதத்துல நான் உனக்கு குறை வச்சுட்டேன்னு புரிஞ்சுகிட்டேன்.. அது சரி படுத்த முடியாத அளவுக்கு நம்ம வாழ்க்கையை பாதிக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல.. நாம பிரிஞ்சிடலாம் அம்மாடி… குழந்தை என் கூட இருக்கட்டும்.. உனக்கு பிடிச்சவன் கூட உன்னோட வாழ்க்கையை ஆரம்பி..”
“யாஷ்ஷ்..????” அதிர்ந்து விட்டாள் அவள்.
“நான் பேசி முடிச்சிடுறேன்மா… இந்த வேலைல ஜாயின் பண்றதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பணம் வாங்கினேன்ல அந்த பணம்தான் இது.. இத வச்சு அடகு வச்ச உன்னோட நகை எல்லாத்தையும் திருப்பிக்கோ… நாம விவாகரத்து பண்ணிக்கலாம் மதி.. விவாகரத்துக்கு அப்புறமா நீ விரும்பினா உனக்கு ஜீவனாம்சம் நான் கொடுக்கிறேன்..” என அவன் கூறிக் கொண்டே போக உடைந்து விட்டாள் அவள்.
அவ்வளவுதானா..?
என் மீது உயிர்க் காதலை அல்லவா வைத்திருந்தான்…?
என்னைத் தூக்கி எறிந்து விட்டு விவாகரத்து வரை செல்ல முடிவெடுத்து விட்டானா..?
அவள் உள்ளம் பதறித் துடித்தது.
“எ.. என்னங்க… நா… நான் பண்ணது தப்புதான்.. அதுக்காக என்ன தண்டனை வேணாலும் கொடுங்க… தயவு செஞ்சு என்னை விட்டுட்டு மட்டும் போயிடாதீங்க.. என்னால உங்களையும் குழந்தையும் பிரிஞ்சு வாழவே முடியாது.. நான் பண்ண தப்ப திருத்திக்க எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்க ப்ளீஸ்..”
“மதிம்மா நான் இப்பவும் சொல்றேன் எனக்கு உன் மேல கோபமே இல்லை.. என்னோட மனைவி வேற ஒருத்தர்கிட்ட போய் இருக்கான்னா அதுக்கு காரணம் நான்தானே..? நான் உன் கூடவே இருந்திருக்கணும்.. உன்னோட தேவையை பார்த்துப் பார்த்து பண்ணி இருக்கணும்.. நான் அப்படி பண்ணவே இல்லையே.. குடும்பத்தை பினான்சியல் ரீதியா பாத்துக்கிட்ட நான் பிசிகல் ரீதியாவும் பக்கத்திலேயே இருந்து பார்த்திருந்திருக்கணும்..”
அந்த வார்த்தைகளைக் கூறும் போதே அவனுடைய விழிகள் மீண்டும் கலங்கி விட்டன.
“உன் மேல தப்பு சொல்ல நான் வரல.. என் மேலதான் தப்பு.. இன்னொரு தடவை இந்த வீட்லயோ இல்ல உன்னையோ பார்த்துட்டு என்னால வாழ முடியாதுடி.. சாகலாம்னு கூட நினைச்சேன்.. ஆனா என் பொண்ணுக்கு நான் வேணுமே.. அவளை அப்பா இல்லாத பொண்ணா வளர விட எனக்கு துளி கூட விருப்பமில்ல.. இன்னும் ரெண்டு நாள்ல டிவோர்ஸ் பத்திரத்தோட வரேன்.. முடிச்சுக்கலாம்மா.. என்னால முடியல.. முழுசா நொறுங்கிப் போயிட்டேன் அம்மாடி..”
அவளுக்கு இதயம் படுவேகமாக துடித்தது.
“அப்படி என்ன ஊர் உலகத்துல பண்ணாத தப்பையா நான் பண்ணிட்டேன்..? இதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கறீங்களே.. இந்த ஒரே ஒரு தடவை மட்டும் மன்னிக்கக் கூடாதா..? நான் உங்களை மட்டும் தான் காதலிக்கிறேன் யாஷ்..” அழுதாள் வான்மதி.
“மன்னிப்பா..? எந்த தப்ப வேணாலும் பண்ணிட்டு மன்னிப்புக் கேட்டா அது சரியாகிடுமா மதி..? நீ என்னோட பாதின்னு நினைச்சேன்.. எனக்கு மட்டும் சொந்தமானவன்னு நினைச்சேன்… என்னோட மொத்த பாசத்தையும் உன் மேல கொட்டி வெச்சு உன்னை அப்படி பார்த்துக்கிட்டேன்.. நான் என்ன குறை வச்சேன்னு இன்னொருத்தன் கிட்ட உன்னை நீ ஒப்படைச்ச..? உன்னோட சுண்டு விரல் கூட எனக்கு மட்டும்தானே சொந்தம் அம்மாடி..? என்னோட இடத்த எப்படி உன்னால இன்னொருத்தனுக்கு கொடுக்க முடிஞ்சது..?”
“ஐயோ என்னோட நிலைமைய ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க.. ஓகே உங்ககிட்ட வந்து ஒரு பொண்ணு உங்க கூட ஒன்னா இருக்கணும்னு கேட்டா என்ன பண்ணுவீங்க..? நான் இல்லாத நேரத்துல தனியா ஒரு பொண்ணு உங்களைக் கூப்பிட்டா மாட்டேன்னு சொல்லுவீங்களா..?” என அவள் கோபத்தில் கேட்க, கசப்பாக சிரித்தான் அவன்.
“ஒரு பொண்ணு இல்லடி ஓராயிரம் பொண்ணே வந்து கேட்டாலும் உன்னைத் தவிர யாராயிருந்தாலும் நான் நோதான் சொல்லுவேன்.. சொல்லியும் இருக்கேன்.. என் பொண்ணு மேல சத்தியமா சொல்றேன் உன்னத் தவிர எந்த பொண்ணையும் கழுத்துக்கு கீழே கூட நான் பார்த்தது கிடையாது.. தப்பா யாரையும் நினைச்சதும் கிடையாது..
என்னோட காதல் காமம் எல்லாமே நீ மட்டும்தான் அம்மாடி.. உனக்கு இது சின்ன விஷயமா இருக்கலாம்.. எனக்கு இது உயிரே போன மாதிரி இருக்கு.. செத்துட்டேன் டி.. இப்போ இருக்கிறது நம்ம பாப்பாவோட அப்பா மட்டும்தான்..” என்றவன் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அப்படியே கண் மூடி அந்த சோபாவில் சாய்ந்து விட,
அவன் கூறிய வார்த்தைகளில் ஆடிப் போனவள் அழுகையோடு மீண்டும் அந்த அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
அதன் பின்னர் தன்னை குனிந்து பார்த்தவனுக்கு தன் நிலையை எண்ணி வருத்தம் தோன்றியது.
படுக்கை அறைக்குள் நுழைந்து அங்கே இருந்த குளியல் அறையில் குளிக்கப் பிரியப்படாதவன் வெளியே சென்று கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்து ஆடையை வெளியே நின்று மாற்றிவிட்டு பர்ஸ் எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியே சென்றான்.
மனைவியும் குழந்தையும் சாஹித்யாவும் பசியுடன் இருப்பார்களே.
அப்போதும் அவனுடைய வெட்கம் கெட்ட மனது மனைவி பசி தாங்க மாட்டாளே என்றுதான் எண்ணியது.
நடந்தே சென்று பக்கத்துக் கடையில் இரவு உணவை அவர்களுக்கு மட்டும் வாங்கியவன் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தபோது வீடே மயான அமைதியில் இருந்தது.
பெருமூச்சோடு உள்ளே நுழைந்து சாஹித்யாவின் அறைக் கதவைத் தட்டியவன்,
“பாப்பா ஏதாவது சாப்பிட்டாளா..?” எனக் கேட்டான்.
“அப்பவே பால் காய்ச்சி கொடுத்துட்டேன் மாமா..”
“அப்படியாம்மா நீயும் அக்காவும் சாப்பிடுங்க டைம் ஆயிருச்சு..”
“மாமா நீங்க..?”
“எனக்கு பசிக்கலம்மா அவளுக்கும் கொடுத்து நீயும் சாப்பிடு..” என்றவன் வாங்கி வந்த உணவை சாஹித்யாவிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வெளியே இருந்த திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவன் எடுத்த முடிவு சரியா தவறா என்ற கேள்விதான் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அதே கணம் உள்ளே இருந்து சாஹித்யாவின் அலறல் பெரிதாக கேட்க பதறி எழுந்து உள்ளே ஓடினான் யாஷ்வின்.
“சாஹிம்மா என்னடா..? என்ன ஆச்சு..? எதுக்கு இப்படி கத்துற..?” எனக் கேட்டவாறு அலறியவளை அவன் திகைப்போடு பார்க்க,
நடுங்கியவாறே அவர்களுடைய படுக்கை அறையைக் காட்டினாள் அவள்.
என்னவோ ஏதோ எனப் பதறிப் போனவன் “அம்மாடி கதவைத் திற.. உள்ள என்ன பண்ற..? முதல்ல கதவைத் திற…” என அந்த அறைக் கதவை படபடவென தட்டினான்.
“மா… மாமா மா…மா அக்கா.. அக்காஆஆ..” என அவள் கூற முடியாது அழுகையோடு திணற,
“என்னம்மா தெளிவா சொல்லு என்ன ஆச்சு..?” எனத் துடித்தான் அவன்.
அவளோ வார்த்தைகளால் கூற முடியாது சாவித் துவாரத்தை சுட்டிக்காட்ட இவனுக்கோ தொண்டை அடைத்தது.
வெளியே வந்து விழுந்துவிடும் போல இருந்த இதயத்தை தன் ஒற்றைக் கரத்தால் அழுத்திப் பிடித்தவன் மெல்ல குனிந்து சாவித்வாரத்தில் தன் ஒற்றைக் கண்ணைப் பொருத்திப் பார்த்தவன் அங்கே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த தன்னுடைய மனைவியைக் கண்டதும் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதைப் போல அப்படியே தரையில் தொப்பென விழுந்தான்.
“அம்மாடிஇஇஇஇஇ…” அவனுடைய கதறலில் அந்த வீடு அதிர்ந்தது.
Nan sonna maathiri seththutaal. Wow success
ippo than manasu niranchu irukku