லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 53
தமிழ்வாணனின் அருகில் அமர்ந்திருந்த மதியழகி “அப்பா.. ப்ளீஸ்பா.. மலரை எதுவும் சொல்லாதீங்க.. என்னால தான் எல்லாமே தப்பா ஆயிடுச்சு.. நான் தான் அவளை தப்பா புரிஞ்சுகிட்டேன்.. நான் தீரன் கிட்ட மலரை பத்தி அப்படி சொன்னப்போ நீங்க எவ்ளோ மனசு உடைஞ்சு போயிருப்பீங்கன்னு எனக்கு தெரியும்.. ஆனா அது எல்லாமே என்னோட தப்பு தான் பா.. மலர் மேல எந்த தப்பும் இல்லை.. என்னோட அழகியா தான் பா அவ இருக்கா..” முகத்தில் வருத்தத்தின் சாயலோடு பேசிக் கொண்டிருந்தாள் அவள்..
“என்னம்மா சொல்ற? இவ்ளோ நடந்த அப்புறமும் அந்த கேடு கெட்டவளுக்கு சப்போர்ட் பண்ற.. அவ உன்னையும் மாப்பிள்ளையும் பிரிச்சு..” என்று ஏதோ ஆரம்பித்தவர் வாயில் கை வைத்து தலையை இடவலமாய் ஆட்டி மறுத்த மதி “இல்லப்பா.. அவ எங்களை பிரிக்கணும்ன்னு நினைக்கல.. புருஷன் பொண்டாட்டியா நடிச்சிட்டு இருந்த எங்களை நிஜமான புருஷன் பொண்டாட்டியா மாத்தணும்னு தான் முயற்சி செஞ்சிருக்கா..”
“ஆனா அந்த சேகரோட அவ பேசுனதை கேட்டேன்னு நீ சில விஷயங்களை சொன்னியேம்மா.. அவன் கிட்ட உன்னையும் மாப்பிள்ளையும் பிரிக்கிறது பத்தி தானே சொல்லிட்டு இருந்தானு சொன்னே..” அவருக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்த பாடாய் இல்லை..
“இல்லப்பா.. அந்த சேகர் எங்களுக்குள்ள நடந்த எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட வந்து சாட்சியோட சொல்லுவேன்னு இந்தரை பயமுறுத்தி இருக்கான்.. அவனோட அந்த பிளானை தவிடு பொடி ஆக்கணும்னு தான் மலர் அப்படி பேசி அவன் என்ன ப்ளான்ல இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு இருக்கா.. அது தெரியாம அவ பேசுனது கேட்டு நான்தான் பா அவளை ரொம்ப தப்பா நினைச்சுட்டேன்.. இதுக்கு மேல அவ மேல எதுவும் தப்பு சொல்லாதீங்கப்பா.. அவளை மாதிரி ஒரு தங்கமான பொண்ணு எங்க தேடினாலும் கிடைக்க மாட்டா.. நம்ம ரெண்டு பேரும் வளர்த்த பொண்ணு பா அவ.. அவ மேல நாமளே நம்பிக்கை வெக்காம பேசுனது ரொம்ப கொடுமை பா.. தெரிஞ்சோ தெரியாமயோ அந்த கொடுமையை நம்ப அவளுக்கு செஞ்சிருக்கோம் பா..”
மதி சொன்னதை கேட்டவர் “அய்யோ கடவுளே.. அந்த பொண்ணை என்னென்னவோ பேசிட்டனேம்மா.. அவ எவ்வளவு நொறுங்கிப் போயிருப்பா.. என் மூஞ்சிலேயே முழிக்காதன்னு சொல்லிட்டனே மா.. சேகரை பத்தி ஒரு வார்த்தை என்கிட்ட உண்மையை சொல்லி இருந்தா அதுக்கான வழியை நானே சொல்லி இருப்பேனே..”
“உங்ககிட்ட உண்மையை சொல்ற தைரியம் அவளுக்கு வந்து இருக்காது பா.. ஏன் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி படிக்கிற வயசுல சினிமால ஸ்டன்ட் மாஸ்டரா இருக்கற தீரன் பின்னாடி காலேஜ் கட் அடிச்சிட்டு லவ்வுனு சொல்லிட்டு அவ சுத்தினான்னு எப்படி பா அவ உங்ககிட்ட நேரடியா சொல்லுவா.. அவ வயசு வேகத்துல அப்ப ஏதோ பண்ணிட்டா.. ஆனா தீரன் என்னோட புருஷனா ஆனப்புறம் அவ அவரை என்னோட புருஷனா மட்டும்தான் பா பார்த்திருக்கா.. அவ பழைய நினைப்பை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு இருக்காப்பா.. நான் தான் அவளை சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு பழைய நினைப்பை எனக்குள்ள உயிரோட வச்சிருந்து இருக்கேன்..”
“அம்மாடி மதி.. அப்படி சொல்லாதடா.. உன் மேல எந்த தப்பும் இல்லடா.. தீரன் மாப்பிள்ளையை அவ உன் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணாங்கறதனால கல்யாணத்துக்கு அப்புறம் அவரோட அவ இந்த மாதிரி நெருக்கமா பேசும் போது நீ நினைக்கிற மாதிரி தான் யாராயிருந்தாலும் நினைச்சிருப்பாங்க.. அதுல எதுவும் பெரிய தப்பு இருக்கிறதா எனக்கு தெரியல.. ஆனா தீரா மாப்பிள்ளையும் நீயும்.. ஏன் நான் கூட ஒரே மாதிரி தப்பை தான் பண்ணி இருக்கோம்.. தீரா மாப்பிள்ளையும் இந்தர் தம்பியை இன்னிக்கு அந்த ஜன்னல் கிட்ட பார்த்தப்போ அவர்கிட்ட அதை பத்தி எந்த விபரமும் கேட்காமலேயே அவர் தப்புதான் பண்ணிட்டாருன்னு முடிவு பண்ணிட்டாரு.. அதே மாதிரி நீயும் நானும் சேகரோட மலர் பேசுனதை பத்தி கேட்டவுடனே அவ கிட்ட என்ன ஏதுன்னு கேட்ருந்தோம்னா இந்த பிரச்சனை அப்படியே முடிஞ்சிருக்கும்.. அதை விட்டுட்டு நம்ம எல்லாருமே மனசுக்குள்ள அவங்கள பத்தி தப்பா நெனச்சிட்டோம்.. சிறுதுளி பெரு வெள்ளம்ன்கிற மாதிரி சின்ன சின்னதா உனக்கும் தீரா மாப்பிள்ளைக்கும் ஏற்பட்ட சந்தேகங்கள் பெரிய வெள்ளமா வந்து நம்ம எல்லாரோட சந்தோஷத்தையும் அழிச்சிட்டு போயிருக்குமா..”
“இப்ப புரியுது பா.. ஆனா இப்ப மலர் ரொம்ப கோவமா இருக்கா.. அது மட்டும் இல்லாம..”
“என்னம்மா..?”
“இந்தர் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டான் பா.. இதே ஹாஸ்பிடல்ல தான் பக்கத்து ரூம்ல தான்பா இருக்கான்..”
மலர் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனார் தமிழ்வாணன்..
“என்னமா சொல்ற? அய்யோ.. அந்த புள்ள தீரா மாப்பிள்ளை அடிச்சப்பவே அப்படியே உயிரே போன மாதிரி இறுக்கமா நின்னுட்டு இருந்தான்மா.. நான் கூட ஒரு நாலு நாளைக்கு அந்த தம்பி வாழ்க்கையையே வெறுத்து வருத்தமா இருப்பார்னு நினைச்சேன்.. இப்படி ஒரு விபரீத முடிவு எடுப்பார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. ரொம்ப சந்தோஷமா எந்த கவலையும் இல்லாம சுத்திக்கிட்டு இருந்த புள்ள.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமாம்மா? எங்க ஆஃபீஸ் வாசல்ல ஒரு நாலஞ்சு பொறுக்கி பசங்க பொண்ணுங்கள வம்பிழுப்பாங்கன்னு நான் சொல்லி இருந்தேன் இல்ல? அந்த பசங்களை இந்தர் தம்பி போட்டு அடிச்சு அவங்க கிட்ட இருந்து ஒரு பொண்ணை காப்பாத்துனாருமா.. அப்படிப்பட்டவர் ஒரு பொண்ணோட பாத்ரூம்ல அவ குளிக்கும் போது.. எப்படிமா.. என்னாலயே நம்ப முடியல.. தீரா மாப்பிள்ளை எப்படி நம்புனாருன்னு எனக்கு தெரியல.. அவர் எதுவுமே கேட்காம இந்தர் தம்பியை அடிச்சப்போ எனக்கே ரொம்ப கஷ்டமா தான்மா இருந்தது.. வாம்மா.. போய் இந்தர் தம்பியை பார்க்கலாம்..”
அவர் சொல்லிக் கொண்டே தன் படுக்கையிலிருந்து எழ முயல “அப்பா உங்களுக்கே உடம்பு சரியில்ல.. நீங்க அலைய வேண்டாம் பா.. இந்தரை எப்படி இருந்தாலும் இப்ப பார்க்க முடியாது.. ரெண்டு மணி நேரம் கழிச்சு அவன் எழுந்த அப்புறம் சொல்றோம்ன்னு சொல்லி இருக்காங்க.. அப்புறம் தான் பா நம்ப அவனை பார்க்க முடியும்.. நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க
. அவனை நாங்க பார்த்துக்கிறோம்..”
“அம்மாடி தெரியாம மலரை என்னென்னவோ பேசிட்டேன்.. அவளை கொஞ்சம் உள்ள அனுப்புறியாடா?”
அவர் ஆதங்கத்தோடு கேட்க “அனுப்புறேன் பா..” அறையை விட்டு வெளியே வந்த மதி மலரழகியிடம் “அழகி..” என்று அழைக்க அந்த அழைப்பில் நெகிழ்ந்து போனாள் மலரழகி..
“அக்கா என்னை அழகின்னாக்கா கூப்பிட்டே..? ப்ளீஸ் கா.. இன்னொரு வாட்டி கூப்பிடேன்..”
“நீ என்னோட பழைய அழகி தான்டி.. நீ மாறல.. கொஞ்ச நாள் எதோ தெரியாம வழி தவறி போக பார்த்த.. ஆனா என் அழகி என்னோட பழைய அழகியா திரும்ப கிடைச்சிட்டா.. இனிமே அவ அழகியா மட்டும்தான் இருப்பான்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு..”
மதியை இறுக்கமாய் கட்டி அணைத்துக் கொண்டாள் மலரழகி..
“தேங்க்ஸ் கா.. எங்க நீ என்னை கடைசி வரைக்கும் அழகின்னு கூப்பிடவே மாட்டியோன்னு பயந்துகிட்டு இருந்தேன்..” உணர்ச்சிவயப்பட்டு பேசினாள் அவள்..
“எனக்கு மட்டும் இல்ல.. அப்பாவுக்கும் நீ இனிமே எப்பவும் மாற மாட்டேன்னு நம்பிக்கை வந்துடுச்சு.. உன்னை தப்பா நினைச்சதுக்காக அவரும் ஃபீல் பண்ணிட்டு இருக்காரு டி.. அவர்கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன்.. அவரு உன்னை அப்படி பேசினதுக்காக ரொம்ப வருத்தப்படறாருடி.. போய் அவரை பார்த்து கொஞ்சம் சமாதானமா பேசிட்டு வா..”
“இல்லக்கா வேண்டாம்.. இனிமே அவரை நான் என் படிப்பை முடிச்சுட்டு ஒரு டாக்டரா தான் பார்ப்பேன்..”
மதியழகியோ அவள் சொல்வது ஒன்றுமே புரியாமல் “என்ன சொல்ற மலரு..? ஒரே வீட்ல இருந்துகிட்டு அவரை எப்படி நீ பாக்காம இருக்க முடியும்?”
“கரெக்டு தான்.. ஒரே வீட்டில இருந்தா அவரை.. உன்னை.. எல்லாரையும் பார்க்காம இருக்க முடியாது.. ஆனா அந்த வீட்ல இல்லனா வெளியில எங்கேயாவது இருந்தேன்னா பார்க்காம இருக்கலாம் இல்ல..?”
அவள் சொன்ன விஷயத்தின் அர்த்தம் மூளையில் உரைத்த நேரம் முகம் சுருக்கி அவளை கவலையோடு பார்த்தவள் தீரன் பக்கம் திரும்பி “என்ன தீரா சொல்றா இவ? வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொல்றா.. இவளுக்கு யாரை தெரியும்.. எங்க போய் இருப்பா? என்ன மலர் பேசுற நீ? அப்பா ஏதோ கோபத்தில் சொல்லிட்டதுக்காக உனக்கு எதுக்கு இவ்வளவு வீராப்பு? நம்ம அப்பாதானே.. அவருக்கு நம்மளை திட்டறதுக்கு உரிமை இல்லையா?”
“இருக்குக்கா.. அவருக்கு நம்மளை திட்டறத்துக்கு கண்டிக்கிறதுக்கு எல்லாத்துக்கும் உரிமை இருக்கு.. ஆனா தப்பு பண்ணி திட்டு வாங்குறதுக்கும் தப்பே செய்யாம திட்டு வாங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லக்கா..? அதுவும் அவர் சாதாரணமா ஒன்னும் திட்டலையே.. என் மூஞ்சிலேயே முழிக்காதே செத்துப்போன்னு சொன்னாரேக்கா.. அவர் சொன்னதை கேட்டு இந்தர் மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டு நான் செத்துப் போயிருந்தா அதுக்கப்புறம் இப்படி உன்னால என்கிட்ட வந்து அப்பாவை பாருன்னு சொல்ல முடியுமா? கண்ணாடி பாத்திரத்தை கீழே போட்டு உடைக்கிற மாதிரி வார்த்தையால என்னை ரொம்ப உடைச்சுட்டாருக்கா.. என்னை அவர் பொண்ணுன்னு பெருமையா அவர் நினைக்கிற மாதிரி அவர் கண்ணு முன்னாடி வந்து நிப்பேன்கா.. தன் பொண்ணு வாழ்க்கையில எந்த குறிக்கோளும் இல்லாம தறி கெட்டவளா சுத்தறவ கிடையாது.. அவ தான் படிப்பையே நோக்கமா எடுத்துக்கிட்டு அதுல ஜெயிச்சும் காட்டுவான்னு அவருக்கு ப்ரூவா பண்ண போறேன் கா… இத்தனை நாள் என் படிப்பு செலவு என் கனவு இது எல்லாத்தையும் நீ தான் பாத்துக்கிட்ட.. எனக்கு அம்மா இல்லாத குறை தெரியாம பார்த்து பார்த்து வளர்த்த.. இப்போ என்னோட டர்ன்க்கா.. உன் பெருமையை காப்பாத்தற மாதிரி டாக்டர் ஆகி உன் முன்னாடி வந்து நிற்பேன்.. மலர் என்னோட தங்கைன்னு நீ பெருமையா சொல்ற மாதிரி நான் வளர்ந்து காட்டுவேன்..”
“சரிடி.. நாங்களும் அதைதான் ஆசைப்படுறோம்.. ஆனா அதுக்கு எதுக்கு நீ வீட்டை விட்டு வெளியில போகணும்? நம்ம வீட்டிலேயே இருந்து இதெல்லாம் பண்ணலாமே..”
“இல்லக்கா.. அது முடியாது.. சந்தேகம்ன்ற ஒரு விதை ஏற்கனவே உங்க மனசுல எல்லாம் விழுந்துடுச்சு.. ஒவ்வொரு நேரமும் நான் என் மனசுல என்ன நினைக்கிறேன்.. ஒழுங்கா படிக்காமல தரிக்கட்டு போயிடுவேனோங்கற கவலை உங்க மனசுல ஏதோ ஒரு மூலையில உறுத்திக்கிட்டே இருக்கும்.. எனக்கும் நீங்க என்னை சாதாரணமா பார்க்கும்போது கூட சந்தேக பார்வையோட பார்க்கிறீங்களோன்னு தோணும்.. வேணாம்க்கா .. நிறைய பசங்க பார்ட் டைம் வேலை பாத்துக்கிட்டே படிக்கிறாங்கக்கா.. எனக்கு 18 வயசு ஆயிடுச்சு.. இனிமே நான் நிச்சயமா என் படிப்பு செலவுகளையும் சாப்பாட்டு செலவையும் பார்த்துக்குற அளவுக்கு ஒரு வேலை தேடிக்க முடியும்.. நீ எனக்கு நல்ல எஜுகேஷன் கொடுத்திருக்க.. அதை வச்சு என்னால லைஃப்ல இன்னும் நல்லா முன்னேற முடியும் அக்கா..”
“அழகி வேணாண்டி.. அப்பா ரொம்ப உடைஞ்சு போய்டுவார்.. சொன்னா கேளு..”
மலர் வீட்டை விட்டு போயே தீருவேன் என்று அடம்பிடிக்க அவளை அப்படி போகவிடாமல் தடுக்கும் வழி தெரியாமல் திண்டாடினாள் மதி..
தொடரும்..