ஒரு மனிதன் எத்தனை துயரத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடியும்..?
அப்படியே தரையில் விழுந்தவனுக்கு நெஞ்சு துடித்தது.
எப்படி வினையாற்றுவது எனத் தெரியாது அசைவற்ற மரக்கட்டை போல சில நொடிகள் அப்படியே தரையில் விழுந்து கிடந்தான் அவன்.
சாஹித்யாவோ பயந்து அலறத் தொடங்கி விட்டாள்.
அவளுடைய அலறலில் சுயமடைந்தவன் வேகமாக எழுந்து அந்தக் கதவை உடைப்பது போல இடிக்கத் தொடங்க அவளுக்கோ மேலும் பயம் அதிகரித்தது.
அப்படியே அந்த சுவற்றில் ஒன்றிக் கொண்டவள் நெஞ்சில் கரத்தை வைத்தவாறு விம்மி வெடித்து அழ,
மூன்றாவது இடியில் வேகமாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவனின் உடல் மொத்தமும் கிடு கிடுவென நடுங்கத் தொடங்கியது.
“மதி என்னடி இது..? ஐயோ…” எனக் கதறியவன் ஓடிச்சென்று அவளுடைய கால்களைப் பற்றி அவளை மேலே தூக்கி கயிற்றில் இருந்து அவளுடைய கழுத்தை விடுவிக்க முயற்சி செய்ய,
அவற்றையெல்லாம் பார்க்கும் சக்தி இன்றி அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து கதறிக் கொண்டிருந்தாள் சாஹித்யா.
வீடு களேபரமாகிப் போனது.
அந்தக் கலவரத்தில் குழந்தை விழித்து வீறிட்டு அழத் தொடங்க பாவம் அந்தப் பிஞ்சுக் குழந்தையை சமாதானப்படுத்தும் நிலையில் அங்கே யாருமே இருக்கவில்லை.
கயிற்றை அவிழ்க்க முயன்று முடியாது அதை பாதியில் அறுத்து தன்னவளை மடியில் கிடத்தியவன் கழுத்தை இறுக்கிய முடிச்சை அவிழ்க்கப் போராடினான்.
“சாஹித்யாஆஆஆஆ..” என அவளை அழைத்தான் அவன்.
அவன் குரல் நடுங்கியே வெளி வந்தது.
கதறிக் கொண்டிருந்தவளின் செவிகளில் அவனுடைய அலறல் சத்தம் கேட்டது.
மெல்ல எழுந்து அச்சத்தோடு உள்ளே வந்து பார்த்தவளுக்கு எங்கே மயக்கம் வந்து விடுமோ எனத் தோன்ற,
“அந்த கத்தியை சீக்கிரமா எடுத்துட்டு வா…” என அதட்டலாகக் கத்தினான் அவன்.
நிலைமையின் தீவிரம் உணர்ந்து ஓடிச் சென்று தடுமாறி கத்தியை எடுத்து வந்து அவனுடைய கரத்தில் கொடுத்தவளுக்கு உடல் முழுவதும் வியர்த்து விட்டது.
வான்மதியின் கழுத்தைச் சுற்றி இருந்த கயிற்றை அறுத்து எடுத்தவன் அப்போதுதான் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்.
நேரம் கடந்துவிட்டது என்பது அப்போதுதான் அவனுடைய புத்திக்கு உறைத்தது.
கழுத்து இறுகி நாக்கு வெளியே தள்ளி கண்கள் சொருகி இருந்த தன்னுடைய காதல் மனைவியைக் காண முடியாது விக்கித்துப் போய் விட்டான் அவன்.
சாஹித்யாவின் நிலையோ இன்னும் மோசமாக இருந்தது.
சிறு பெண் தானே அவளும்.
தற்கொலை என்றாலே பயந்து விடுபவள் தன்னுடன் கூடப்பிறந்த சகோதரியே தூக்கில் தொங்கி இறந்து போனதை நேரில் கண்டபோது எப்படித் தாங்க இயலும்..?
வெறும் 21 வயதே நிரம்பியவளுக்கு அந்த சூழ்நிலையை சமாளிக்கத் தெரியவில்லை.
தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.
யாஷ்வினோ கரங்கள் நடுங்க அவளுடைய மூச்சை பரிசோதித்தவன் மூச்சு நின்று விட்டதை உணர்ந்ததும் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழ,
அழக்கூட முடியாது அந்த அறையின் ஒரு மூலையில் ஒடுங்கிக் கொண்டாள் வான்மதியின் தங்கை.
அவளுக்கு பயமாக இருந்தது.
கண்களைத் திறந்து எதையும் பார்க்க அவளிடம் துணிவில்லை.
யாஷ்வினின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் என்னவோ ஏதோ என்று உள்ளே ஓடி வர அங்கிருந்த சூழ்நிலையைக் கண்டு வந்தவர்களும் திகைத்துத்தான் போயினர்.
வான்மதியின் இழப்பு அந்த வீட்டாரை மிகவும் பாதித்திருக்கும் என்பதை உணர்ந்த அயலவர்களோ போலீசுக்கு மற்றும் அம்ப்யூலன்ஸுக்கு முறையாக அனைத்தையும் தெரிவித்து விட அடுத்தடுத்த காரியங்கள் அங்கு வேகமாக நடக்கத் தொடங்கின.
எவ்வளவு நேரம் கதறிக் கொண்டிருந்தானோ அவனுடைய கதறலுக்கு இணையாக குழந்தையின் அழுகை அவனது நெஞ்சைத் தொட அப்போதுதான் தன் பிள்ளையின் நினைவே அவனுக்கு வந்தது.
ஓடிச்சென்று அறையில் தனியாக அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கித் தன் மார்போடு அணைத்தவன் விம்மி விட்டான்.
“பட்டுமா அழாதடா கண்ணம்மா.. அப்பா வந்துட்டேன்.. அப்பா இனி உன்னை தனியா விடவே மாட்டேன்..” என குழந்தையை அணைத்து சமாதானப்படுத்தியவனுக்கு கடமை அழைத்தது.
இப்போது அவனுடைந்து அழ வேண்டிய நேரம் இல்லை.
அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும்.
ஆறாத வடுதான்..!
அழியாத ரணம்தான்.!
அவன் அசையாமல் நின்றால் இந்த உலகமும் அசையாமல் நின்று விடுமா என்ன..?
இதோ கூட்டமே கூடிவிட்டது.
இனி அவன் தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
உள்ளே கதறித் துடிதுடித்த மனதை அடக்க வழி தெரியாது குழந்தையைத் தூக்கிக் கொண்டு மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தவன் மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்த சாஹித்யாவின் தலையில் கை வைத்தான்.
திகைத்து நிமிர்ந்து பார்த்தவள் தன் முன்னே குழந்தையோடு நின்ற மாமாவை கண்டதும் தேம்ப,
அவனுக்கு அவளுமே ஒரு குழந்தை போலத்தான் தெரிந்தாள்.
“எழுந்திரும்மா.. பா… பாப்பாவ பாத்துக்கோ..” என கரகரப்பான குரலில் கூறியவன் அவளை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து வந்து வெளியே இருந்த திண்ணையில் குழந்தையோடு அமர வைத்தான்.
“நீ இங்கேயே இரும்மா..” என்றவனுக்கு உடல் தடுமாறித் தள்ளாடியது.
மூச்சடைப்பது போல இருந்தது.
இதயப் பக்கத்தில் சுள் சுள் என்ற வலி எழ, பல்லைக் கடித்து தன் வலியைப் பொறுத்துக் கொண்டவன் காவல்துறையிடம் மனைவியின் தவறை மறைத்து ஏனைய விடயங்களை கூறினான்.
கதவு பூட்டி இருந்ததா இல்லையா கதவை யார் உடைத்தது இறப்பதற்கு முன் வான்மதி ஏதாவது கூறினாரா என பல கேள்விகள் அவனிடம் எழுப்பப்பட்டன.
பதில் சொல்லும் நிலையிலா அவன் இருந்தான்..?
அவன் தான் நொறுங்கிப் போயிருந்தானே.
அவனுடைய நிலையைக் கண்ட மேலதிகாரியோ, “மீதிய அப்புறமா பார்த்துக்கலாம்.. நீங்க போய் மத்த வேலையை பாருங்க..” என அவனை அனுப்பி விட்டு அந்த வீடு முழுவதும் பரிசோதிக்கத் தொடங்க சாஹித்யாவிடம் மீண்டும் திரும்பி வந்தவன் மனைவி இழைத்த தவறைப பற்றி என்ன நடந்தாலும் யாரிடமும் கூற வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொண்டான்.
“எ…என்னோட அக்கா பத்தி நானே எப்படி மாமா தப்பா பேசுவேன்..? சத்தியமா நான் எதுவுமே சொல்ல மாட்டேன்..” எனத் தேம்பி அழுதவாறு கூறினாள் அவள்.
“அப்பா அம்மாக்கு இதை எப்படி மாமா நான் சொல்லுவேன்..? அக்கா இப்படி பண்ணிட்டான்னு தெரிஞ்சா அவங்க தாங்கிக்கவே மாட்டாங்களே..”
“உங்க வீட்டுக்கு கால் பண்ணினேன்.. ஆனா என்னோட காலை யாருமே எடுக்கல.. என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியல.. என்னால எதையுமே யோசிக்க முடியல.. மூச்சு முட்டுது…” என்றான்.
அடுத்த சில மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து மீண்டும் வான்மதியின் உடல் அவர்களுடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இனி இறுதி சடங்குகள் செய்வதுதான் பாக்கி என்ற நிலையில் வான்மதியின் பெற்றோர்கள் அங்கே வந்துவிட தன் பெற்றோர்களைக் கண்ட சாஹித்யாவோ கதலோடு ஓடிச் சென்று அவர்களை அணைக்க,
அவர்களோ அவளை சிறிதும் கண்டு கொள்ளாது தன் பெண்ணின் சடலத்தைக் கண்டு கதறிவிட்டனர்.
கண்ணீரோடு அவர்களை நெருங்கிய யாஷ்வினையும் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
அந்த வேதனையில் அதைப் பற்றி எல்லாம் சிறிதும் சிந்திக்காமல் அவளுக்கான இறுதி சடங்குகளை எல்லாம் முடித்துவிட்டு அந்த வீட்டின் ஹாலிலேயே வெற்றுத் தரையில் படுத்து விட்டான் யாஷ்வின்.
அவனுடைய மார்பில் குழந்தையும் படுத்திருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் என அனைவரும் வந்து சென்றதன் பின்னர் கூட வான்மதியின் பெற்றோர்கள் தங்களுடைய மாப்பிள்ளையுடன் பேசாமலேயே இருக்க அவளுக்கு மனம் உறுத்தியது.
வான்மதியின் குழந்தையை மட்டும் வாங்கி வைத்தவர்கள் அடுத்த நாள் காலையில் அங்கிருந்து கிளம்பி விட சாஹித்யாவோ உடைந்து போனாள்.
அவள் பேசினாலே முகத்தை திருப்பிக் கொள்ளும் பெற்றோர்களின் கோபத்திற்கான காரணம் என்னவென்று அவளுக்கு புரியவே இல்லை.
அவர்கள் இங்கிருந்து கிளம்பப் போகிறார்கள் என்பதை உணர்ந்து கண்ணீரோடு அவர்களிடம் அவள் பேசச் செல்ல அவ்வளவுதான் வான்மதியின் அன்னையோ வாயிலில் கிடந்த செருப்பை எடுத்து வந்து சாஹித்யாவை அடிக்கத் தொடங்கிவிட பதறி விட்டான் யாஷ்வின்.
“அடிப்பாவி உன்னை நம்பி இந்த வீட்ல படிக்க அனுப்பினா நீ என்ன வேலை பார்த்து வச்சிருக்க..? சனியனே… கூடப் பிறந்த அக்காக்கே துரோகம் பண்ணி இருக்கியே… நீ எல்லாம் உருப்படுவியா..? நல்லா இருப்பியா..? தயவு செஞ்சு இனி என்ன அம்மான்னு சொல்லிடாத.. உன்ன என்னோட வயித்துல பெத்ததை நினைச்சாலே எனக்கு வாந்தி வருது.. உனக்கும் எங்களுக்கும் இருந்த உறவு இன்னையோட அறுந்து போச்சுடி..” என ஆக்ரோஷமாகக் கத்தியவர் கையில் இருந்த செருப்பால் மகளை அடித்தே விட,
தன்னுடைய அன்னை எதற்காக தன்னை இப்படி எல்லாம் திட்டி அடிக்கிறார் என்பது கூடப் புரியாது சிறு குழந்தை போல மலங்க மலங்க விழித்துக் கொண்டு அத்தனை அடிகளையும் கதறலோடு வாங்கிக் கொண்டிருந்தாள் சாஹித்யா.
அன்னை பேசிய வார்த்தைகளை கிரகிக்கும் சக்தி அக்கணம் அவளிடம் இல்லாததுதான் போனது.
“அத்த நிறுத்துங்க போதும்… எதுக்காக அவள அடிக்கிறீங்க..? அவ குழந்தை.. அவளப் போய் செருப்பால… ஐயோ விடுங்க..” என சாஹித்தியாவை இழுத்து தன் முதுகின் பின்னே நிறுத்தியவன்,
“அவள எதுக்கு அடிக்கிறீங்க..?” என சற்று கோபமாகக் கேட்டான்.
அவனுடைய முகத்தைப் பார்த்து எச்சிலை உமிழ்ந்தவர்,
“ச்சீ பொறுக்கி.. நீயெல்லாம் ஒரு மனுஷன்னு பேசாத.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் மகள கொன்னுட்டீங்களே.. அவளுக்கு துரோகம் பண்ண எப்படி உங்களுக்கு மனசு வந்துச்சு..? நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டா..” என அவர் உச்சகட்ட கோபத்தில் கத்த யாஷ்வினுக்கோ உடல் விறைத்தது.
Paavam oridam, pazhi ooridam. Ini un kuzhandhaiyai mattumalla sahithyavaiyum than nee parthu kolla vendum. Waiting for next ud eagerly.👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🤩🤩🤩🤩🤩😍😍😍😍🥰🥰🥰🥰
Adapavingala thappey pannadhavangala ippidi pesureenga
Ippity Yaar kathai kattiruppanga
Paavam oridam, pazhi ooridam. Ini un kuzhandhaiyai mattumalla sahithyavaiyum than nee parthu kolla vendum. Waiting for next ud eagerly.👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🤩🤩🤩🤩🤩😍😍😍😍🥰🥰🥰🥰
Super sis 💕