லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 57

4.8
(9)

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 57

 

மருத்துவமனையில் இருந்து வீடு வந்து ஐந்து நாட்கள் ஓடியிருந்தன.. மாமி ஊருக்கு போய் இரண்டு நாட்கள் ஆகி இருந்தது.. முதல் மூன்று நாட்கள் மாமியின் சமையலை உண்டு கொண்டிருந்தவள் அவர் சென்றவுடன் யூடியூப் ஐ பார்த்து ஏனோ தானோ வென்று சமைத்து அதை சாப்பிட அந்த சாப்பாடு தொண்டை குழிக்கு மேல் இறங்கவில்லை மலருக்கு..

 

இந்தர் சொல்லி ஒரு டியூஷன் சென்டரில் மாலைகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் வேலையில் சேர்ந்திருந்தாள் மலர்.. காலையில் அவள் சமைத்த உணவை அவளாலேயே சாப்பிட முடியாமல் கல்லூரிக்குச் செல்பவள் வேறு வழி இல்லாமல் அங்கே கேண்டினிலே உணவு வாங்கி சாப்பிட்டாள்..

 

இரண்டு நாட்கள் இப்படியே வெளி உணவு சாப்பிட மூன்றாம் நாள் அது தன் கைவரிசையை காட்டியிருந்தது.. மூன்றாம் நாள் இரவு மிகுதியான வயிற்று வலியில் அவஸ்தை பட்டவன் ஏதோ மாத்திரையை வாயில் போட்டு அப்போதைக்கு உறங்கி இருந்தாள்.. 

 

அதற்கு மேல் வெளி உணவை சாப்பிட்டால் உடல் தாங்காது என்று உணர்ந்தவள் மறுபடியும் யூட்யூப் காணொளியை பார்த்து சமைக்க தொடங்கினாள்.. 

 

அதன்படியே சமைத்துக் கொண்டிருந்தவள் அதில் தேவையான அளவு உப்பை போடவும் என்று சொல்ல அது என்ன அளவு என்று புரியாமல் திருதிருவென யோசனையோடு விழித்துக் கொண்டிருக்க அதற்குள் கொதித்து இருந்த குழம்பு பொங்கி வழிய தொடங்கியது..  சட்டென அந்த பாத்திரத்தை கையால் பிடித்து அடுப்பில் இருந்து இறக்கப் போனாள் மலர்..

 

அந்த பாத்திரத்தின் சூடு அவள் கையை பதம் பார்த்து விட அந்த வலி தாங்க முடியாமல் அந்த பாத்திரத்தை கீழே தவற விட்டாள்.. அது கீழே விழுந்து அவள் பாதம் எல்லாம் குழம்பு சிதறி தெறித்திருந்தது.. 

 

சூடான குழம்பு காலில் பட்டதில் வலியில் துடித்து போனவள் “அம்மா..” என்று அலற பாத்திரம் விழுந்த சத்தமும் அவள் கத்திய சத்தமும் கேட்டு அவர்களுடைய இரண்டு வீடுகளுக்கும் நடுவில் இருந்த கதவை திறந்து அவள் வீட்டுக்கு வர முயன்றான் இந்தர்..

 

அது மலர் வீட்டு பக்கம் பூட்டி இருக்கவே வேகமாய் வாசல் பக்கம் வந்து சுற்றிக்கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைந்தான்..

 

அங்கே சமையலறையில் ஒரு ஓரமாய் குழம்பும் பாத்திரமும்  விழுந்து சிதறி கிடக்க குழம்பு தெறித்த காலில் கொப்புளங்கள் உண்டாகியிருக்க காலை பிடித்துக் கொண்டு கையை உதறிய படி “அம்மா.. வலிக்குதே.. ஸ்ஸ்.. ஆ..” என்று வலி பொறுக்க முடியாமல் அவள் கத்திக் கொண்டிருந்தாள்.. அதை பார்த்தவன் அதிர்ந்து போனான்..

 

“ஏய் மலரு.. என்னடி பண்ணிட்டு இருக்க?”

 

“ம்ம்.. கால்ல சூடா குழம்பு ஊத்துனா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தது.. அதான் கால்ல கொஞ்சம் ஊத்தி பார்த்தேன்.. வந்துட்டான்.. கேள்வி கேட்டுக்கிட்டு.. பார்த்தா தெரியலையா டா? ரெண்டு நாளா ஹோட்டல்ல சாப்பிட்டு நேத்தெல்லாம் வயிறு வலி.. சரி இன்னைக்கு நம்மளே சமைச்சு சாப்பிடுவோம்னு சமைச்சா ஒண்ணுமே ஒழுங்கா வரல.. கால்ல குழம்பை கொட்டி கொப்பளம் வந்தது தான் மிச்சம்..”

 

இந்தரோ அதற்கு மேல் அங்கு நிற்காமல் வேகமாய் இரண்டு வீட்டுக்கும் நடுவில் இருந்த கதவின் தாழ் நீக்கி தன் வீட்டிற்கு போய் தீக்காயத்துக்கான மருந்தை எடுத்து வந்து மெதுவாக அவள் காலில் தடவி விட்டான்.. அவன் பொறுமையாய் அவள் காலில் கொப்பளித்த ஒவ்வொரு இடத்திலும் வாயால் ஊதி ஊதி தடவி விட்டதை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் சேவையில் ஒரு நொடி மயங்கி தான் போனாள்.. 

 

“எவ்ளோ அக்கறையா பொறுமையா செய்யறான்.. ம்ஹூம்.. எவளுக்கு கொடுத்து வச்சிருக்கோ..” என்று நினைத்தவள் தன் நினைப்பு போகும் விதத்தை எண்ணி ஒரு நொடி எச்சில் விழுங்கிக் கொண்டாள்.. தன் தலையிலேயே தட்டிக் கொண்டவள் “மலரு ரொம்ப தப்பா யோசிக்கிற டி..”  தனக்கு தானே எச்சரித்துக் கொண்டாள்..

 

“ஆமா உனக்கு சமைக்க தெரியாதுன்னா என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல? நான் எனக்கு சமைக்கிறதை எடுத்துட்டு வந்து கொடுத்திருப்பேன்ல.? இந்த மாதிரி கையில கால்ல கொட்டிகிட்டு எதுக்கு நீ புதுசு புதுசா எக்ஸ்பிரிமெண்ட் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே..?”

 

“என்ன.. எல்லாரும் இப்படியே கேக்குறீங்க? ஏன் நான் சமையல் கத்துக்கணும்னு நினைக்க கூடாதா? அதுக்கு தான் யூடியூப் வீடியோ பார்த்து சமைக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா அதுல உப்பு தேவையான அளவுன்னு அவங்க ஏதோ ஒரு அளவு போட்டாங்க.. அதுவும் கல்லுப்பு.. அவங்க கைல எவ்வளவு வச்சிருக்காங்கன்னு அந்த வீடியோல தெரியல.. அது எப்படி போடறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேனா? அதுக்குள்ள குழம்பு பொங்கி வழிஞ்சுடுச்சு..”

 

“அதை நீங்க எடுத்து கையாலே கீழே வெச்சீங்களாக்கும்.. அடுப்புல கொதிக்கிற குழம்பு பாத்திரத்தை எடுத்தா கை சுடும்னு உனக்கு தெரியாதா? நல்லா சமைச்ச நீ.. இரு.. உனக்கு என்ன..? இப்ப நீயே சமைக்கணும் அதானே.. நான் உனக்கு சமையல் செய்ய சொல்லி தரேன்.. அங்கிருந்து சமையல் செஞ்சு உனக்கு எடுத்துட்டு வந்து குடுக்கல.. இங்க உனக்கு சமையல் செய்ய சொல்லி கொடுத்துகிட்டே எனக்கும் சேர்த்து செஞ்சு நான் எடுத்துட்டு போகட்டுமா தாயே.. இல்ல அதுலயும் ஏதாவது ப்ராப்ளமா உனக்கு?”

 

“ஆமா.. உனக்கு சமைக்க தெரியுமா? நெஜமாவா டா..?”

 

“எல்லாம் தெரியும்.. வீக்கென்ட்ஸ்ல நானும் அண்ணாவும் தான் சேர்ந்து சமைப்போம்.. அண்ணா எனக்கு எல்லா சமையலும் கத்துக் கொடுத்திருக்கிறார்..”

 

“அப்படின்னா ஓகே.. நீ எப்படி எப்படி சமையல் பண்ணனும்னு சொல்லு.. நான் அப்படியே செய்றேன்.. நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து நான் சமைச்சப்புறம் நம்ம ரெண்டு பேரும் எடுத்துட்டு போகலாம்.. ஆனா நீ உன் வீட்ல சமைச்சதை நான் எடுத்துட்டு போக மாட்டேன்..”

 

அவள் சொன்னதை கேட்டு தலையில் அடித்துக் கொண்டவன் “சரி வந்து தொலை.. சொல்லி கொடுக்கிறேன்..” என்று கடுகடுவென சொல்லிவிட்டு காய்கறிகளை எடுத்து முதலில் எப்படி நறுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து பிறகு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தான்..

 

அவளோ அவன் வேலை செய்யும் நேர்த்தியையும் அழகையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

 

“ஏய் இந்தரு.. என்னடா இப்படி சமைக்கிற..? உன்கிட்ட சமையல் கத்துட்டா நான் பெரிய எக்ஸ்போர்ட் ஆயிடுவேன் போல இருக்கே.. தீரா மாமா பரவால்லடா.. உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.. எங்க அக்கா தான் என்னை செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து எதுவுமே செய்ய விடாம இப்ப பாரு.. கால்ல குழம்பை கொட்டிக்கிட்டு நிக்கிறேன்.. உனக்கு தெரியுமா.. நான் எங்கேயாவது சமையல் ரூமுக்கு போயிட போறேன்னு அக்கா சமையல் அறையை பூட்டிட்டு தான் போவா வேலைக்கு..”

 

உதட்டைப் பிதுக்கி கோவமாய் இருக்கும் குழந்தை போல சொல்லியவளை ரசித்து தான் பார்த்திருந்தான் இந்தர்..

 

“சரி விடு.. அதான் அந்த பிராப்ளம் சால்வ் ஆயிடுச்சு இல்ல.. அண்ணி உன்னை அவங்க தங்கையா பாக்கல.. குழந்தையா பார்த்து இருக்காங்க.. எங்க அம்மா இருந்த வரைக்கும் நான் சமையலறை பக்கமே போனது கிடையாது.. அம்மா இறந்த அப்புறம் தான் எனக்கே மனசு கேட்காம அண்ணாக்கு ஹெல்ப் பண்ணலாம்னு சமையல் அறைக்கு போனேன்.. எல்லா அம்மாவும் அப்படித்தான்.. அண்ணியும் உனக்கு அம்மாவா இருந்திருக்காங்க.. அதான் அப்படி.. அதனால இப்படி பொலம்புறதை விட்டுட்டு இப்ப நான் சொல்லிக் கொடுக்கிறதை ஒழுங்கா கவனிச்சு கத்துக்கோ..”

 

அவன் சொன்னதைக் கேட்டவள் “ஓகே ஓகே.. சரி சரி..” என்று ஏதோ பணிவான மாணவி போல அவன் முன்னே கையை கட்டி நின்று கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவனோ அவள் முகபாவனையை பார்த்து சட்டென்று சத்தமாக சிரித்து விட்டான்..

 

“சரியான கிராக்கு டி நீ..” அவள் தலையை இடவலமாய் ஆட்டி சொன்னவன் அன்றைய சமையலை முடித்து இருவருக்கும் எடுத்து வைக்க “அப்பாடா.. அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே.. கிளம்பலாமா..?” என்று கேட்டாள் அவள்..

 

“ஹலோ மேடம்.. என்ன முடிஞ்சுச்சு..? இனிமேதான் வேலையே இருக்கு.. இந்த சமையல் ரூம்ல இவ்வளவு கலவரம் பண்ணி வச்சிருக்கோமே.. இதையெல்லாம் யாரு கிளீன் பண்றது.. சாய்ந்தரம் வீட்டுக்குள்ள வரும்போது டயர்டா இருக்கும்.. அப்ப வந்து இதெல்லாம் கிளீன் பண்ணனும்னா ரொம்ப கஷ்டமா இருக்கும்.. இதெல்லாம் இப்பவே கிளீன் பண்ணிட்டு அப்புறம் கிளம்புங்க..”

 

“ஆமால.. ஐயோ.. நான் வேற குழம்பு வேற கொட்டி வச்சிருக்கேன்.. அதை வேற கிளீன் பண்ணனுமே..”

 

“அதெல்லாம் ஒன்னும் பிராப்ளம் இல்ல.. நீ மேல அடுப்பு.. சமையல் மேடை எல்லாம் கிளீன் பண்ணு.. நான் தரையில ஊத்திருக்கிற குழம்பு எல்லாம் கிளீன் பண்ணி சமையலறையை கூட்டி மாப் போட்டு தொடச்சி விட்டுடறேன்..”

 

இந்தர் அந்த வேலைகளை எல்லாம் முகம் சுணங்காமல் செய்தான்.. தீரன் இந்த வேலைகளை செய்வதை ஏற்கனவே அவள் அந்த வீட்டில் பார்த்திருக்கிறாள்.. இப்போது இந்தரும் அதே போல் செய்வதை பார்த்து பிரமித்து போனாள் அவள்..  

 

“அண்ணனும் தம்பியும் ஸ்பெஷல் மேக் தான் போல.. ம்ம்..”

 

கொஞ்சம் கொஞ்சமாய் இந்தரை அவளையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்து இருந்தாள் மலர்..

 

அவள் வேலைக்கு செல்லும் டியூஷன் சென்டரில் இருந்து முன் பணமாக வாங்கி வந்த பணத்தில் அப்போதைய செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.. பேருந்தில் கல்லூரிக்கு செல்வதும் அதன் பிறகு அங்கிருந்து டியூஷன் சென்டருக்கு சென்று மறுபடியும் வீட்டிற்கு வருவதும் அவளுக்கு ரொம்பவும் சிரமமாய் தான் இருந்தது.. ஆனால் தான் அடைய வேண்டிய குறிக்கோளை நினைப்பவள் அதை பற்றி எல்லாம் பெரிதாய் யோசிப்பதில்லை.

 

ஆனால் இந்தருக்கு அவள் அப்படி சிரமப்படுவது கஷ்டமாக இருந்தது.. எங்கிருந்தோ ஒரு ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டு வந்தவன் அதை அவளிடம் கொடுத்து “மலரு இது என் ஃப்ரெண்டோட வண்டி.. செகண்ட் ஹேண்ட் தான்.. ரொம்ப பழைய வண்டி.. இது வாங்கியே 15 வருஷம் ஆகுது.. கொஞ்சம் ஒவர் ஹாலிங் பண்ணி அவன் கொடுத்தான்.. இப்போதைக்கு இதை ஓட்டிட்டு போ.. இது ஏழாயிரம் ரூபாய்க்கு கொடுத்தான்.. மாசம் ஐநூறு ரூபா கொடுத்து அடைச்சிடலாம்னு சொன்னான்.. இந்த மாச தவளையை நான் கொடுத்துட்டேன்.. அடுத்த மாசத்துல இருந்து நீ அதை கொடுத்துடு.. கொடுக்க முடியும் இல்ல..?”

 

அவன் கேட்டதும் அவளோ “தேங்க்ஸ்டா.. எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ற.. இதுக்கெல்லாம் நான் என்ன செய்ய போறேன்னே தெரியல.. ஆமா.. நீ எப்படி காலேஜ் போற?” 

 

“நான் என் ஃப்ரெண்டு வீடு வரைக்கும் பஸ்ல போயிட்டு அங்க இருந்து அவனோட வண்டியில் போறேன்..”

 

“இனிமே அப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டாம்.. என் ஸ்கூட்டிலேயே நம்ம ரெண்டு பேரும் காலேஜ் போலாம்.. வரும்போது இதுலயே வந்துடலாம்.. ஆனா நம்ம ரெண்டு பேரும் வண்டியில போகும்போது நான் தான் வண்டியை ஓட்டுவேன்.. இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கிறதா இருந்தா என்னோட வா..”

 

அவள் சொன்னதை கேட்டவன் “கரும்பு தின்ன கசக்கிறதா என்ன?” என்று எண்ணியபடி “ஓகே தான்” என்றான்..

 

அதன் பிறகு இருவரும் அந்த வண்டியில் கல்லூரிக்கு போவது வாடிக்கையாயிற்று..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!