லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 59

5
(7)

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 59

 

தீரன் கேட்ட கேள்விக்கு மதி எந்த பதிலையும் வார்த்தைகளால் கூறவில்லை.. ஆனால் அவளின் வாய்மொழி அவன் இதழோடு அவள் மனதில் இருந்த அவனுக்கான பதிலை அழுத்தமாய் சொல்லி அவன் உடலுக்குள் அந்த பதிலுக்கான இன்பமான அதிர்வை பாய்ச்சிக்கொண்டிருந்தது..

 

சிறிது நேரம் அவள் இதழ் அவனுடன் சண்டை போட்டு இருக்க தன் பங்குக்கு அவனும் எதிர் சண்டை போட்டான் அவள் இதழோடு..

 

சிறிது நேரத்தில் மூச்சு எடுக்க ஒருவரை விட்டு மற்றொருவர் விலக அதற்கு மேல் ஒரு நொடியும் அவனிடமிருந்து தள்ளி இருக்க விரும்பாதவள் போல் அவன் மார்பில் முகம் புதைத்து இறுக்கமாய் கட்டிக் கொண்டாள் மதி..

 

அவன் மார்பில் அழுத்தமாய் தன் அதரத்தை பதித்தவள் “ஐ லவ் யூ தீரா ஐ லவ் யூ டு த கோர்.. நீங்க எப்படி இருக்கீங்களோ அப்படித்தான் எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.. எனக்கு உங்க கிட்ட பிடிக்காத ஒரே விஷயம் முதல்ல பேசுவீங்களே அந்த சென்னை பாஷை தான்.. ஏன்னு தெரியல.. எனக்கும் அதுக்கும் ஒத்து போகல..”

 

அவள் சிணுங்கியபடி சொல்ல “அது தான் இப்ப எல்லாம் நான் பேசுறதுல அந்த வாசனையே வரதில்லையே மேடம்.. இதெல்லாமே உங்களுக்காக தானே..?”

 

“ஆமா இல்ல..? உங்க தம்பிக்காக கூட மாறாதவர் எனக்காக தான் உங்க பாஷையை மாத்திக்கிட்டீங்க.. இப்ப யோசிச்சு பார்த்தா நீங்க செஞ்ச ஒவ்வொரு விஷயமும் என் மேல எவ்வளவு காதலோட செஞ்சி இருக்கீங்க புரியுது.. ஆனா அப்ப இந்த மரமண்டைக்கு எதுவுமே உரைக்கல..”

 

மறுபடியும் சிணுங்கிய படி சொன்னவளின் நாடி பிடித்து முகம் நிமிர்த்தி “அதான் இப்ப தெரிஞ்சிருச்சு இல்ல.. சரி வா..  வீட்டுக்கு போலாம்.. இனிமே உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட நான் பிரிஞ்சு இருக்கிறதா இல்லை.. முதல்ல உங்க வீட்டுக்கு போய் மாமாவை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு.. இல்ல இல்ல நம்ம வீட்டுக்கு போகலாம்..”

 

அவளோ இடவலமாய் தான் அப்போதும் தலையாட்டினாள்.. 

 

“என்ன மதி..? இன்னும் என்ன பிரச்சினை வீட்டுக்கு வர்றதுக்கு?” 

 

அவளை இறுக்கி அணைத்தபடி  அவன் கேட்க அவன் சட்டை பொத்தானை திருகியபடி “தீரா.. இந்தர் அந்த வீட்டுக்கு திரும்பி வராம நான் வரமாட்டேன்.. இந்தர் என்னிக்கு அந்த வீட்ல வந்து நம்மளோட நம்ம மகனா இருக்கானோ.. அப்பத்தான் நானும் அந்த வீட்டுக்கு வருவேன்.. இல்லனா உங்க அம்மா என் கனவில வந்து என் புள்ளையை வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டு நீ வந்து இங்க ஜாலியா இருக்கியான்னு என்னை கேட்டு கேட்டு மிரட்டுவாங்க..”

 

“சோ.. இப்ப அதுக்கு என்ன பண்ணலாம் மேடம்.? அப்ப இனிமேலும் இந்தர் வர வரைக்கும் தனித்தனியா இருக்கணுமா? சத்தியமா என்னால முடியாதுடி. செத்துருவேன்..”

 

அவன் சொன்னதைக் கேட்டு அவன் வாயை சட்டென மூடியவள் அவன் கன்னத்தில் செல்லமாய் ஒரு அடியும் போட்டாள்.. 

 

“இனிமே செத்துருவேன் அது இதுன்னு பேசினீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன்.. என்னாலயும் உங்களை விட்டு இருக்க முடியாது தான்.. ஆனா அதுக்காக இந்தர் வராம நான் அந்த வீட்டுக்கும் வர மாட்டேன்.. இப்ப என்ன பண்றது?”

 

அப்போது பாண்டி மெதுவாக கதவை லேசாக திறந்து உள்ளிருந்த நிலைமை என்னவென்று தெரிந்துகொள்ள எட்டிப் பார்த்தான்..

 

இருவரும் கட்டியணைத்துக் கொண்டு நிற்பதை பார்த்தவனுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது..

 

“அப்பாடா.. எங்க இன்னும் ரெண்டு பேரும் ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருப்பீங்களோன்னு நெனைச்சேன்.. பரவால்ல செட் ஆயிட்டீங்களா.?” என்றவனை தீவிரமாய் முறைத்த மதி “பாண்டிணா உங்களை என்னால அடிக்க முடியாது.. இருங்க இருங்க பார்கவி கிட்ட சொல்லி நல்லா ரெண்டு போட சொல்றேன்..”

 

“ம்க்கும்.. கிழிஞ்சிது.. இந்த ஐடியாவை கொடுத்ததே அவதான்.. அவ என்னை போடுவாளா?” பாண்டி படாரென உண்மையை உடைத்து விட தீரனோ “ஏன்டா பாவம் அந்த பொண்ணை கோத்து விட்ட, இப்ப மதிப்போய் அவளை ஒரு வழி ஆக்கப்போறா..”

 

“கூட்டு சதியா மூணு பேரும் சேர்ந்து.. அவ வரட்டும்.. நான் எப்படி துடிச்சேன்னு அவ பார்த்த அப்புறம் கூட என்கிட்ட சொல்லல.. இன்னைக்கு இருக்கு அவளுக்கு..” என்று இடுப்பில் சேலை முந்தானையை சொருகியவளை பார்த்து “பார்கவி எங்கேயாவது வேற ஊருக்கு ஓடிப்போய்டலாமா ரெண்டு பேரும்..” என்று மானசிகமாய் பேசிக் கொண்டிருந்தான் பாண்டி பார்கவியிடம்..

 

“சரி ரெண்டு பேரும் எப்ப வீட்டுக்கு கிளம்புறீங்க?” என்று கேட்க “இல்லடா.. அவ வீட்டுக்கு வர மாட்டாளாம். இந்தர் வராம மறுபடியும் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கா.. என் தலையில தனியா தான் இருக்கணும்னு எழுதி இருந்தா யாரு என்ன பண்ண முடியும்?” புலம்பினான் தீரன்..

 

“ஏய் தீரா.. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்.. அவ்வளவுதானே.. அதற்கு உங்க வீட்டுக்கு தான் போகணும்னு அவசியம் இல்லையே.. நீ மதி வீட்டுக்கு போலாம் இல்ல?”

 

அதைக் கேட்டு இருவரின் முகமும் மலர்ந்தது.. “ஆமா இல்ல.. இது ஏன் தோணவே இல்ல.. தேங்க்ஸ்டா பாண்டி.. வாழ்க்கையில் உருப்படியா நீ செஞ்ச ரெண்டே வேலை பார்கவியை கல்யாணம் பண்ணிக்கிட்டது.. இன்னொன்னு இப்ப நீ கொடுத்த ஐடியா..”

 

தீரன் சொல்ல “இன்னொரு விஷயம் கூட அண்ணா சூப்பரா செஞ்சாரு..” என்றாள் மதி..

 

“என்ன?” என்று தீரன் கேள்வியாய் பார்க்க “அவரோட படத்துல உங்களை ஹீரோவாக்குனது..”

 

“ரெண்டு பேருக்கும் இப்பதான் அது ஞாபகம் வருதா? ஏன்மா.. நீ உன் பாட்டுக்கு இனிமே தீரனோட இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டே.. ரெண்டு பேரும் என்கிட்ட ஒன்னு கமிட் பண்ணுனிங்க.. ஞாபகம் இருக்கா..? என் படம் ஷூட்டிங் ஆரம்பிச்ச உடனே ஒவ்வொரு சூட்டிங்க்கும் நீயும் வருவேன்னு சொன்னியே.. சுத்தமா மறந்து போச்சு இல்ல உனக்கு..?”

 

“நீ வராம போயிருந்தா தீரன் நடிச்ச மாதிரி தான்..”

 

“அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் வந்திருக்காது பாண்டி… நான் மதி முகத்தை கற்பனை பண்ணி அந்த ஹீரோயினோட பட்டையை கிளப்பியிருப்பேன்..” தீரன் சொல்ல மறுபடியும் முகம் மாறினாள் மதி..

 

“அப்ப சாருக்கு நான் வேண்டாம்.. ஹீரோயினோட நீங்களாவே ரொமான்ஸ் பண்ணிடுவீங்க.. அப்படித்தானே?”

 

“அது அது.. உன் முகத்தை கற்பனை பண்ணி தானே ரொமான்ஸ் பண்றேன்னு சொன்னேன்..” 

 

தீரன் மெதுவாய் இழுக்க “தீரா அன்னைக்கு நான் உங்ககிட்ட சொன்னது தான் இப்பவும்.. கட் சொன்ன மறு நிமிஷம் என் முகமும் கட்டாயிடணும்.. ஆனா எனக்கு நம்பிக்கையே இல்லை.. ஆஞ்சநேயர் பக்தனுல இருந்து ராமனா மாறி இப்போ என்னை காதலிக்க ஆரம்பிச்ச அப்புறம் கிருஷ்ணனா மாறிட்டீங்கனா நான் என்ன பண்றது?”

 

அவள் அழுது விடுவாள் போல இருந்தது..

 

பாண்டி இடைப்புகுந்து “தீரனே நெனச்சாலும் அவனால அப்படி ஒன்னை செய்ய முடியாது.. அவன் உயிர்ல துடிப்பா ஓடிட்டு இருக்கே நீ.. உன்னை விட்டுட்டு அவன் இன்னொரு பெண்ணை பார்த்தான்னா அவன் துடிப்பு நின்னுடும்.. எந்த பொண்ணாலயும் உன் இடத்துக்கு வர முடியாது.. அதனால கவலைப்படாத.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை.. அப்படியே இருந்தாலும் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்.. அப்படி விட்டுவிடுவோமா தீரனை.. அந்த ஸ்டன்ட் மேன்களை வச்சு அடிவெளுத்துட மாட்டோம்..?”

 

“அது சரி.. இப்ப அண்ணனும் தங்கச்சியும் ஒன்னா சேர்ந்துட்டீங்களா? என் சைடு கொஞ்சம் வீக் தான்.. சரி வா மதி உங்க வீட்டுக்கு போலாம்..”

 

“ஆனா அப்பாகிட்ட சொல்லணுமே..” அவள் முகத்தில் வெட்க சாயல்..

 

“அதெல்லாம் என் மாமா கிட்ட நான் பேசிக்கிறேன்.. நீ அமைதியா வா.” என்று சொல்லி அவள் தோளில் அணைத்தார் போல் கை வைத்து அவளை அழைத்துக்கொண்டு முகம் முழுக்க புன்னகையோடு அந்த மருத்துவமனையை விட்டு வெளி வந்தான் தீரன்..

 

ஏழு வருடங்களுக்குப் பிறகு..

 

தீரனும் மதியும் அவள் வீட்டில் ஒன்றாக இருந்தார்களே தவிர அவர்கள் வாழ்க்கையை.. தாம்பத்தியத்தை.. இதுவரை தொடங்கவில்லை..

 

முதலில் பேசியது போலவே இந்தரும் மலரழகியும் தங்களோடு தங்கள் வீட்டில் வந்து சேர்ந்த பிறகு தான் தங்கள் வாழ்வை தொடங்குவது என்று முடிவே செய்திருந்தனர்..

 

ஆனால் இருவர் முகத்திலும் எள்ளளவும் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை.. தாம்பத்தியம் நடக்கவில்லையே தவிர இளம் காதலர்கள் போல் அவ்வப்போது முத்தமிட்டு கொள்வது அணைத்துக் கொள்வது என்று இடை இடையே இருவருக்குள்ளும் நடக்கும் காதல் சீண்டல்களுக்கு எல்லையே இருக்கவில்லை.. அவர்கள் மனம் முழுதாய் நிறைவடைந்திருந்தது..

 

என்னருகில் எப்போதும் நீ இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தார்கள் இருவரும்..

 

இந்தர் ஒரு கார் ஷோரூமில் சேல்ஸ் எக்சிகியூட்டிவாய் வேலை செய்து கொண்டே தன் படிப்பை முடித்து அதன் பிறகு ஒரு பெரிய கார் கம்பெனியில் மேலாளராய் ஆகி இருந்தான்..

 

மலரழகி எம்பிபிஎஸ் முடித்து எம் எஸ் படித்துக்கொண்டு இருந்தாள்.. மாலை வேளையில் ஒரு சிறிய க்ளினிக்கில் பொதுநல மருத்துவராய் பணியேற்று இருந்தாள்..

 

இன்னும் ஆறு மாதத்தில் எம் எஸ் முடித்து அவள் தனக்கென ஒரு கிளினிக் தொடங்கி விடுவாள்.. இன்றும் இந்தரும் அவளும் அதே வீட்டில் இருந்து தான் கல்லூரிக்கும் வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர்.. அதுவும் அதே ஸ்கூட்டியில் தான்..

 

கீழ் வீட்டில் மாமி மாமா இருக்கும்போது மாமியின் சமையலை சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் அவரிடம் சாப்பிடும் உணவுக்கான சமையல் குறிப்பு கேட்டு தானும் அதை தன் வீட்டில் முயற்சிக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தாள் மலர்..

 

மாமி மாமா இல்லாதபோது இந்தர் மலர்

இருவரும் அடித்து பிடித்துக் கொண்டு சமையல் செய்வது ஒருவரோடு ஒருவர் கத்தி கத்தி வம்பு இழுத்து சண்டை போட்டுக் கொள்வது என்று நித்தம் அவர்களுக்குள் நடந்த அழகான சிறு சிறு சண்டைகளும் சீண்டல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன..

 

ஆனால் இந்தர் தன் காதலை தன் மனதுக்குள் தான் வைத்திருந்தான்.. அவளிடம் தன் மனதை திறந்திருக்கவில்லை அவன்..

 

இன்றைக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்க தான் வேலையில் இருந்து வர சற்று தாமதமாகும் என்று இந்தர் சொல்லி இருக்க ஸ்கூட்டியில் தான் மட்டும் கிளம்பி வேலைக்கு சென்று இருந்தாள் மலர்.. அப்போது  அவள் போகும் வழியில் நான்கு பேர் நின்றிருக்க அவர்களை பார்க்க தறுதலைகளாய் திரிபவர்கள் போல் இருந்தார்கள்.. 

 

அவர்கள் அவளை வழிமறித்து வம்பு செய்ய அவள்தான் தைரியமான பெண்ணாயிற்றே.. வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி “என்னடா வம்பு பண்றீங்களா? போலீஸ்ல சொல்லி ஈவ் டீஸிங் கேஸ்ல உள்ள போட்டுருவேன்.. வழி விடுங்கடா மரியாதையா..” தைரியமாக பேசினாள் அவர்களிடம்..

 

“நீ பெரிய ஜான்சி ராணி.. ரொம்ப திமிர் தாண்டி உனக்கு.. அப்படியே பயந்து வண்டியில ஏறி ஓடிடுவேன்னு பார்த்தா எதிர்த்து நின்னு திமிரா பேசிகிட்டு இருக்க.. டேய் பாப்பா ரொம்ப தான் துள்ளுது.. நம்ம யாருன்னு கொஞ்சம் காட்டுவோமா?”

 

ஒருவன் பேசிக் கொண்டே அவள் மேலாடையில் கை வைக்க அவன் முகத்திலேயே ஓங்கி ஒரு குத்து விட்டாள் மலரழகி..

 

அதில் இரண்டு அடி பின்னால் போய் விழுந்தான் அவன்.. 

 

“அவளை புடிங்கடா. இன்னிக்கு அவளை சும்மா விடக்கூடாது..” என்று மற்றவர்களுக்கு அவன் குரல் கொடுக்க மூவரும் ஒன்றாக சேர்ந்து அவளை போய் பிடித்துக் கொள்ள அவர்களிடம் இருந்து திமிறியவள் ஒருவொருவராய் இடி போல அடித்து சாய்த்து இருந்தாள் கீழே..

 

நால்வரும் கீழே விழுந்திருக்க “பொண்ணுன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சாடா? கொன்னுடுவேன்..” அவர்களைப் பார்த்து சீறியவள் கையை தூசு தட்டுவது போல் தட்டி சொல்லியபடி திரும்பி தன் வண்டியை நோக்கி நடக்க அந்த நேரம் அங்கே கீழே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து அவள் பின் தலையில் ஓங்கி அடித்திருந்தான் அந்த நால்வரில் ஒருவன்..

 

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!