வேந்தன்…22

5
(3)
வேந்தன்…22

 

“வீட்டுக்கு வந்தா சிரமப்படக் கூடாதுன்னு சொல்லித் தந்தா அதை ஒழுங்கா கத்துக்கணும். அத விட்டுட்டு இந்தப் பிள்ளைங்க ரெண்டும் நறுக்குன்னு பேசுதுங்க” ஓரக்கண்ணால் இரண்டு மகன்களையும் பார்த்தார்.
ஆரவ் லேப்டாப்பில் பார்வையை பதித்திருக்க, நிஷாந்த் தன்னுடைய பேக் செக் பண்ணிட்டு இருந்தான்.
நிஷாந்த் கூட அம்மாவின் புலம்பல் தாங்காமல் காது கொடுத்துக் கேட்பான்.
ஆனால் ஆரவ் பெரிதாக எதையும் கண்டுகொள்ள மாட்டான். என்கிட்டே எப்படியிருப்பியோ அப்படியிருப்பேன் நான். இதுதான் அவன் கொள்கை. மற்றபடி சண்டை போடுங்க சேர்ந்துக்குங்க, பஞ்சாயத்துக்கு என்னை எதிர்பார்க்காதீங்க என்பது போல சென்றுவிடுவான்.
“ஆரவ் அவளை என்னன்னு கேளுடா” மனோகரி சொல்லிச் சொல்லிப் பார்த்து சோர்ந்து போனார்.
ரத்தினமோ “நீ பண்ணுறது தப்பு மனோகரி. ரொம்ப டாமினேட் பண்ணிட்டு இருக்காதே. ரெண்டு மருமகள் அதுவும் அக்கா தங்கச்சி வேற. உன்னோட மரியாதையை நீதான் காப்பாத்திக்கணும்” என்றுவிட்டார்.
“இது என்னோட வீடுங்க” மனோகரி குரலில் பிடிவாதம் தொனித்தது. என்னோட வீடு, இங்கே நான் சொல்லுறதுதான் நடக்கணும் என்ற வெறி அவரின் கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
ரத்தினத்துக்கு ஆயாசமாய் வந்தது. தான் மனைவியை அனுசரிப்பது பழகிப் போன ஒன்றுதான். மகன்களும் தாய் என்பதற்காகவோ அல்லது தங்கள் தேவைகள் நிறைவேறுகிறது என்றோ தெரியவில்லை. இதுவரை அவர்களுக்குள் பெரிதாக பிரச்சனை எதுவும் வரவில்லை.
ஆனால் இதே குணம் நீடித்தால் மருமகள்கள் வந்தபிறகு வீட்டில் நிம்மதி நிலைக்குமா? அவருக்குப் பயமாக இருந்தது.
“இது உன்னோட வீடு மட்டுமில்ல மனோகரி. நம்ம பசங்களுக்கும் சொந்தமான வீடுதான். ஒருவிஷயத்தை புரிஞ்சுக்க மனோகரி இது ஒன்னும் நம்ம சுய சம்பாத்தியம் கிடையாது. என்னோட அப்பா சொத்து இது. ப்ளீஸ் கொஞ்சம் உன்னோட குணத்தை மாத்திக்க” ரத்தினம் சொல்லவும்.
விக்கித்துப் போய் கணவரை வெறித்தார் மனோகரி. அவருக்கு விழுந்த முதல் அடி இது. இதுவரைக்கும் ரத்தினம் இதுபோல பேசியதே இல்லை. எதுவாக இருந்தாலும் சரிவிடு பாத்துக்கலாம் என்று ஒதுங்கித்தான் செல்வார்.
மனைவியின் பார்வையைக் கண்ட ரத்தினத்துக்கும் பாவமாத்தான் இருந்தது. ஆனால் இப்போது பேசியே ஆக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது அவருக்கு. நிதர்சனத்தை தான் அறிவுறுத்தாது விட்டுவிட்டால் நாளைக்கு மகன்கள் புரியவைக்கும் பொழுது முழுதாக உடைந்து போக வாய்ப்புள்ளது.
“உன்னோட வீடுதான். உன்னோட மகன்கள்தான் மனோகரி. ஆனால் நாளைக்கு வரப்போற மருமகளுக்கும் அவங்க வீடுதான், நம்ம மகன்கள் அவங்கவங்க புருஷன்தான். வேறு வழியே இல்ல. விட்டுக் கொடுத்துதான் ஆகணும் மனோகரி. இல்லைன்னா உனக்குத்தான் ரொம்ப கஷ்டம் புரிஞ்சுக்க” ரத்தினம் எடுத்து சொல்ல.
அங்கிருந்து எழுந்து போன மனோகரிக்கு வீம்பு வந்தது.
மனைவியையே பார்த்த ரத்தினம் பெருமூச்சு விட.
“அப்பா டென்ஷன் ஆகாதீங்க. அம்மா புரிஞ்சுப்பாங்க” நடப்பதை கவனித்திருந்த ஆரவ் தந்தைக்கு ஆறுதல் சொல்ல.
“புரிஞ்சுக்கணும் ஆரவ். யாரும் யாருக்கும் இங்கே அடிமையில்லைன்னு புரிஞ்சுக்கிட்டே ஆகணும். இல்லைனா கஷ்டம்தான்” சொன்னவர் கிளம்பிய மகன்களுக்கு விடைகொடுத்தார்.
காலையில் கடைக்கு வந்த நளிராவுக்கு ஒண்ணுமே புரியலை. ராஜி சிவதானு சுபி முதற்கொண்டு அங்கே இருக்க, கடையில் வேலை செய்யும் ஆட்களும் இருந்தார்கள்.
கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தவளுக்கு மணி எட்டு என்று காட்டிட, இந்நேரத்துக்கு பணியாட்கள் வரமாட்டார்களே, 8:30 தானே இவர்களுக்கு வேலை நேரம்? குழப்பமாய் உள்ளே வந்தாள்.
“செயினைத் தொலைச்சுட்டு ஆடி அசைஞ்சு வரதைப் பாரு” ராஜி அவளைப் பார்த்ததும் ஆரம்பித்தார்.
“அம்மா அவளே அதுக்காக அழுதுட்டு இருக்கா. பாவம் செயினை காணம்னு வாடிப்போயிட்டா. ஏதும் பேசாதம்மா” சுபி தாயை பேசாமல் இருக்க வைக்க முயல.
“அதெல்லாம் நேத்தோட போச்சுடி. நேத்தே எனக்கு தெரிஞ்சிருந்தா ராத்திரியே தேடி எடுத்திருப்பேன். பாவி மவளே அஞ்சை பெத்தா அரசணும் ஆண்டியாவான்னு சொல்லுறது இவ விசயத்துல உண்மையா ஆகும் போல இருக்கே. மூணு லட்ச ரூபாய்க்கு விக்குது மூணு பவுனு. இன்னும் என்னென்ன தொலைச்சுட்டு இருந்தாளோ தெரியலையே” வாணி ராஜிக்கு துணையா ஆரம்பிச்சு வைக்க.
“நீ வாடி நாம போய் தேடுவோம்” சுபி நளிராவை அழைக்க.
“நீங்க தேடுங்கம்மா. நளிரா ஸ்டாக் லிஸ்ட் செக் பண்ணனும்” சிவதானு நளிராவை அவள் இருக்கையில் அமரவைத்து, தானும் அவள் முன் உள்ள இருக்கையில் அமர்ந்து, லிஸ்ட் சரிபார்க்க ஆரம்பித்தார்.
“அங்கிள் இதெல்லாம் திருப்பி அனுப்ப வேண்டியது. அப்புறம் இதில இருக்குற லிஸ்ட் இன்னும் தேவைப்படுது. தென் இது சுத்தமா தீர்ந்து போச்சு” நளிரா அவருக்கு தகவல் சொல்லியபடி இருக்க.
“செயின் கிடைச்சாச்சு” வாணி கத்தி சொல்ல.
நளிரா அதைப் பற்றி கண்டுக்கவே இல்லை.
உற்சாகமாய் நிமிர்ந்த சிவதானு “நளிரா கிடைச்சுடுச்சு” என்று சொல்ல.
“தெரியும் அங்கிள்” அலட்சியமாய் சொன்னவள், அவரின் கூர் பார்வையில் சமாளித்து, “நம்ம கடையில்தான் தொலைச்சேன் அங்கிள். அப்போ இங்கதான இருக்கும்” என்று சமாளித்தாள்.
“தங்கம்” ஆர்த்தி வில்லங்க புன்னகையோடு அங்கே வந்தாள். கூடவே நளிராவின் மொத்த குடும்பமும் வந்தாச்சு வாணி செயின் கிடைத்த தகவல் சொன்னதால்.
ராஜனைப் பார்த்த சிவதானு “வாப்பா ராஜா” என்று எழுந்து போயிட்டார்.
“நல்ல காலம்டி கிடைச்சாச்சு” வாணி மலரிடம் சொல்ல.
“ஆமாமக்கா. பிள்ளையை திட்டி மனசை காயப்படுத்த வேண்டாம்னு பேசாம இருந்தோம். ஆனால் எவ்வளவு கவலைப்பட்டோம் தெரியுமா. ஒவ்வொரு காசும் பார்த்து பார்த்து செலவு பண்ண வேண்டிய நேரத்துல இதென்ன கஷ்டம்னு இருந்துச்சு” மலர் மனதில் இருப்பதை சொல்ல.
“ஊரையே நம்ப வச்சாச்சு இல்ல?” ஆர்த்தி புருவத்தை உயர்த்தி விசாரிக்க.
நேற்றிலிருந்தே அவளது பார்வையும் சிரிப்பும் ஒரு மார்க்கமாவே இருக்கவும், “என்னடி எண்ண வேணும்?” கோபமாகக் கேட்டாள் நளிரா.
“இந்தக் கோபம். ம்ம்ம் இதுவும் ஒரு க்ளூ தங்கம்” ஆர்த்தி முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டிச் சிரித்திட.
“சகிக்கலைடி. வாய மூடிக்க” நளிராவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“சரி சொல்லு. நேத்து பீச் வரும் போது உன்னோட கழுத்துல செயின் பார்த்தேன். ஆனால் தொலைஞ்சதுன்னு சொல்றது இங்கே கடையில. பீச் போனவ சுபி வீட்டுக்குத்தான போன? அப்போ இது எப்படி? லாஜிக் மோசமா இடிக்குதே கோல்டு” ஆர்த்தி மிதப்பாய் அக்காவைப் பார்த்திட.
நளிரா திணறி முழிக்க, “கடையில எனக்கு ஒரு பொருள் தேவைப்பட்டுச்சு. அதான் இங்கே வந்து எடுத்துட்டு போனோம். அப்போ விழுந்திருக்கலாம்” சுபி அங்கே வந்து அமர்ந்தாள்.
“ம்ம்ம் லாஜிக் மேட்ச் ஆகுது. இட்ஸ் ஓகே இதைக்கூட விடுங்க. ஆனால் நேத்து அந்த மல்லிகைப்பூ இடம் மாறிய ரகசியம் என்னவோ?” ஆர்த்தி கேட்ட கேள்வியில் எதிரே இருந்த வாட்டர் பாட்டிலை ஓபன் பண்ணிக் குடிக்க, வேகமாய் குடித்ததில் நளிராவுக்கு புரையேறிவிட்டது.
கண்ணில் நீர் வருமளவு நளிரா இரும,
“என்னாச்சு?” எல்லோரும் அங்கே கூடிவிட்டார்கள்.
“ஆர்த்தி வம்புக்கு வராம்மா. நேத்து நான் மல்லிப்பூ வாங்கி வச்சுட்டேன். இவளுக்கும் தரலைன்னு சண்டைக்கு நிக்கறா” நளிரா இருமினாலும் அழகாய் சொல்லிட.
“அதான வாங்கினவ இவளுக்கும் தரலாம்ல” பேச்சின் திசை மாறிட.
நளிரா ஆர்த்தியை ஒரு கேலிப் புன்னகையோடு பார்க்க.
“பார்ப்போம், கத்தரிக்காய் சந்தைக்கு வரத்தான வேணும்” சொல்லிவிட்டு செல்ல,
சுபியோடு ஹைபைவ் அடித்த நளிராவின் விழிகள் அவனைப் பார்த்துவிட, விழிகள் விரிய, அப்படியே உறைந்து போனாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!