நடக்கும் தூரம்தான் என்பதால் குறுக்கு வழியில் புகுந்து வீட்டிற்கு சென்றுவிட்டாள் நளிரா.
தன் பின்னேயே வந்திருந்தாலும் சுபியின் வீடு வரைக்கும்தான் பின்தொடர்ந்து வந்திருக்கிறான். அதனால் தன் வீடு அவனுக்குத் தெரியாததால் எப்படியும் அவன் இங்கே வீட்டுக்கு வரமாட்டான் என்பதில் நிச்சயம் அவளுக்கு.
இன்னைக்கு சம்பந்தி வீட்டிலிருந்து வருவதாகத் தகவல் வந்திருப்பதால், விரைவில் அப்பா அம்மா வீட்டிற்கு வருவார்கள் என்று கேட்டைப் பூட்டாமல் விட்டுவிட்டாள், ஆனாலும் அவள் வந்த வேகத்திற்கு, அதற்கெல்லாம் எங்கே நேரம்.
அறைக்குள் நுழைந்தவளுக்கு, இது இத்தோடு முடியும் விஷயம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாய் விளங்கிப் போனது. நேற்று அவன் பேசியது இன்னும் காதில் ஒலிக்க, தேகம் மொத்தமும் விதிர்த்துப் போனது. எப்படிப்பட்ட சிக்கலில் சிக்கியிருக்கிறோம் நாம?
கட்டிலில் பரவிக் கிடந்த தன்னுடைய உடைகளை வாரி எடுத்து, அருகில் கிடந்த இருக்கையில் தூக்கி வீசியவள், ஓய்ந்து போய் அமர்ந்தாள். நெற்றியை இருகரங்களாலும் தாங்கிப் பிடித்தாள். வேகமாய் நடந்ததில் மூச்சு வேறு வாங்கியது. ஒரு பாட்டில் தண்ணி, ஜில்லுன்னு குடிக்கலாம் போல அத்தனை தாகம் அவளுக்கு. நேற்றிலிருந்து ஜில் வாட்டர் அதிகமாகவே குடிப்பது தெரிய,
எப்படியும் இப்போதைக்கு இங்கே இருந்து எங்கேயும் தப்பித்துப் போகவே முடியாது. ஏனெனில் இரண்டு சகோதரிகளுக்கும் இதோ வரும் வாரம் கல்யாணம் நடக்கப் போகிறது.
ஏதோ கடவுள் அருளால் மாப்பிள்ளை வீட்டாரே எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டதால் நிம்மதியாக இருக்க முடிகிறது. இல்லாவிட்டால் இப்படி சிரித்துப் பேசக்கூட முடியாதே.
யோசிக்க யோசிக்க தலையே வெடிக்கும் போல இருந்தது. “ஐயோ ஐயோ ஐயோ. இந்தப் பாவி கண்ணுல சிக்கிட்டேனே” பைத்தியம் போல தலை தலையாக அடித்துக் கொண்டிருப்பவளை யார் பார்த்தாலும் பாவம் பைத்தியம் போல என்றுதான் நினைப்பார்கள்.
கதவை திறந்து அறைக்குள் வந்த கள்வனை அவள் கவனிக்கத்தான் இல்லை. அவ்வளோ குழப்பம். எப்படித் தப்பிப்பது, யார் இந்த இக்கட்டிலிருந்து தன்னை விடுவிப்பார்கள் என்று.
மற்ற நேரமாக இருந்தால் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லி நிவாரணம் தேடியிருக்கலாம். ஆனால் கல்யாண நேரத்தில் அப்படி எதையும் செய்யவே முடியாது. ஒண்ணுன்னா ஒன்பதாக பரப்புவார்கள் விஷயத்தை.
சிந்தனையில் இருந்தவள் முன் நிழல் ஆட, நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் ஜன்னியே வரும்போல ஆனது. “இங்க என்ன.. ன்.. ன்” பேச முடியாமல் நாக்கும் உதறியது.
வலது கை தானாய் பின் கழுத்திற்கு சென்றதை, அவனது பல் பதிந்த தடத்தை சோதனை செய்வதற்காக.
அதை கவனித்தவனின் இதழ்களில் குறும் புன்னகை உதயமாக, மீண்டும் சுவைத்திட ஆவல் கொண்டான். பெண்ணவளின் ரதி உருவத்தில் பார்வையை உலாவ விட, இவ்வளவு தூரத்தில் இருக்காளே என்று கடும் சீற்றமும் மிஞ்சியது.
ஊடுருவும் பார்வை உறுத்தி, விழிகளை உயர்த்தி அவனை பார்த்தவளுக்கு பெரும் பதற்றமும் அச்சமும் வர, அவன் கைக்கு சிக்காமல் ஓடிப்போடலாமா என்று வாசலைப் பார்த்தாள்.
சுவற்றில் சாய்ந்து நின்றவன், அவள் தன்னைக் கவனிப்பதைக் கண்டு நேராக நின்றான், விழிகள் ஒருமுறை அவள் இருந்த அறையை சுற்றிப் பார்க்கவும், பார்த்த விஷயங்களில் முகம் சுளித்தான். பெண்கள் அறையில் இருக்க வேண்டியது இருக்கவும், தன்னை இந்த இடத்திற்கு வரவைத்த பெண்ணை தீயாய் சுட்டான் பார்வையால்.
அதுவரை அவனையே விழிகள் விரித்துப் பார்த்தவள், அவன் பார்த்ததை தானும் பார்த்திட, அத்தனையும் தன்னுடைய ஆடைகள்தான்.
காலையில் ஆர்த்தி காய்ந்த துணிகளை எடுத்து வந்து மடிக்கச் சொல்லிக் கொடுத்ததும் அதை அலட்சியமாய் எப்போதும் போல சேர் மீது குவியலாய் போட்டுவிட்டு கிளம்பியதும் நினைவில் வந்து போகவும், நெற்றியில் ஓங்கி அடித்துக்கொண்டாள். ஆர்த்தியும் சைத்ராவும் அத்தனை நேர்த்தி வேலைகளில். இவள்தான் சோம்பேறியின் திலகமாக இருப்பாள்.
“இதெல்லாம் என்னோடதுதான். சாரி சாரி” அடித்துப் பிடித்து எழுந்தவள், பெட்சீட் எடுத்து அதையெல்லாம் மூடி வைத்தாள்.
தன் கண்ணில் பட்டவைகள் அத்தனையும் தனக்கு உரிமைப்பட்டது என்பதால் சற்றே நிம்மதி அவனிடம். ஆனாலும் தேகமெங்கும் மத்தப்பூவாய் உணர்வுகள் கிளர்ந்தெழுவதை உணர்ந்தான்.
அவளுக்கோ அவன் ஆராயும் பார்வையில் அங்கமெல்லாம் குங்குமமாய் சிவந்து போக, “இது பொண்ணுங்க இருக்கற வீடு. முதல்ல வெளிய போங்க” அவனை அனுப்பி வைக்க முயன்றாள்.
பெண்கள் இருக்கும் வீடு என்றதும், மீண்டும் அறைக்குள் பார்வையை அலைய விட்டு “எதுக்கு ஓடி வந்த?” கேட்டவனுக்கும் இந்த அறைக்குள் மூச்சடைத்தது. சுத்தம் சுகாதாரம் அப்படி இப்படின்னு பார்ப்பவனுக்கு கந்தரகோலமாக இருக்கும் இந்த ரூம், பார்க்கவே எரிச்சலைத் தந்தது.
அவனது எரிச்சல் கலந்த பார்வை புரிந்தாலும், “நானொன்னும் ஓடி வரலை. எங்க வீட்டுக்கு வந்தேன்” உண்மை சுடவே பதில் தந்தாள்.
“எது உங்க வீடா?” கேட்டவனுக்கு உரிமைக் கோபம் பிறந்தது அவனுக்கு.
அவளது வீடு இதுவல்லவே. தனக்கு உரிமையான இடம்தானே இவளுக்கும். அப்படியிருக்கையில் எப்படி இந்த வீட்டை எங்க வீடென்று சொல்லுவா? சீற்றமாய்க் கேட்டான்.
அவனுக்கு பதில் சொல்ல வாய் திறந்தவளுக்கு, இப்போ இதுதான் அவசியமா. அவன் நிற்பது தன் வீட்டில், தங்கள் அறையில். இவனோட கார் வெளியே நிற்பது கண்டிப்பா எதிர் வீட்டு கொல்லிக் கண் ஆண்டி கண்ணுல பட்டிருக்கும்.
“மைகாட்” இதைப் பற்றி நினைக்க நினைக்க அவளுக்கு ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிற, எதிரே நின்றவனை அச்சத்துடன் பார்த்தாள்.
“பிளீஸ் இங்க இருந்து போங்க. உங்க கால்ல விழறேன்” கையெடுத்துக் கும்பிட்டாள்.
“எனக்கும் இங்க இருக்க பிடிக்கவே இல்லதான்” அவன் முகம் போன விதத்தில் இவளுக்கே கடுப்பாக வந்தது. ‘அப்போ என்ன டேஸ்க்கு இங்கே வந்தீங்க?’ மனசு நினைப்பதைக் கேட்டிட நா துடித்தாலும் கேட்கும் நிலையில் இவள் இல்லை.
இவனை இங்கிருந்து அப்புறப்படுத்தினால் போதுமே என்றானது.
“என்கூட வந்து கார்ல ஏறு. உன்கிட்ட பேசணும்” அவன் வந்த விஷயத்தை சொல்லிட.
“ஒரு பொண்ணை அவளோட வீட்டுக்கே வந்து போர்ஸ் பண்ணுறீங்க இல்ல. அவ்ளோ ஈஸியா போயிட்டேனா? என்னால வர முடியாது. முடியவே முடியாது” பட்டென மறுத்தாள்.
“அப்போ ஓகே” அறைக்குள் இருந்து வெளியே வந்தவன் அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர.
போவதை தவிர வேறு வழியே இல்லையா யோசித்தவள் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க. எதிர் வீட்டு ஆண்டி வாசலில் நின்று தங்கள் வீட்டை பார்ப்பது தெரிந்தது. “மைகாட்” அதிர்ச்சியில் மயக்கமே வரும் போலானது.