தேவேந்திரன் மாநிறம் தான் ஆனாலும் அழகனே, ஆறடி உயரம், அலை அலையென அவனை போன்று அடங்காத கேசம், பரந்த நெற்றி, அடர்த்தியான புருவம், குத்தீட்டி போன்று கூர்மையான பார்வை, தடித்த இதழ்கள், கட்டுக்கோப்பான உடற்கட்டு என்று தன் முன் கம்பீரமான தோற்றத்துடன் ஆணழகனாக தன் முன் நின்று கொண்டு இருந்தவனை தியா இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்… அவளின் உதடுகளோ ‘தேவேந்திரன் அப்படின்னு கரெக்டா தான் பேர் வச்சு இருக்காங்க’ என்று முனுமுனுத்தது…
தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னையே பார்த்து கொண்டு இருப்பவளை பார்க்க தேவாவிற்கு எரிச்சலாக இருந்தது…
“ஏய் ஏய்” என்று தேவா அழைத்தாலும் தியா காதில் அது விழவில்லை அவள் அதே நிலையில் இருந்தாள்… அதனால் தேவா தான் பிடித்திருந்த அவளின் கையை அழுத்தி பிடித்தான்… அதில் தியாவிற்கு வலி உண்டாக ஸ்… ஆ.. என தெளிவு பெற்றவள், அதன் பின்பே உணர்ந்தால் தேவாவிடம் தான் மாட்டி கொண்டு நிற்பதை,
ஏய் யார் நீ? இங்க என்ன பண்ற? கோவமாக தேவா கேட்டான்…
ஏன் என் அறைக்குள் வந்தாய்? என்று தேவா கேட்ட கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. இவ்வளவு நேரம் வடிவேல், கவுண்டமணி டயலாக் என்று கவுண்டர் கொடுத்து கொண்டு இருந்த வாய் இப்போது தேவா முன்பு டைப் அடித்தது
“அது வந்து அது”,என்றபடி தலை குனிந்து நின்றாள்… ஏனெனில் தேவா மேல் சட்டை இல்லாமல் நின்று இருந்தான்…
என்ன? திக்கி திணறுற எதையாவது திருட வந்தியா? என்று தேவா கேட்க,
தன்னை பார்த்து திருட வந்தியா என்று கேட்டதும் சிறு கோபம் எழுந்தது தியாவிற்கு, “என்ன பார்த்தா திருடி மாதிரியா இருக்கு?
“நீ யாரா வேணாலும் இரு, இந்த அன்டைம்ல என் ரூம்ல உனக்கு என்ன வேலை? அதுக்கு மட்டும் பதில் சொல்லு” என கேட்டான்… வார்த்தை ஒவ்வொன்றும் அழுத்தமாக விழுந்தது…
அதிலே தெரிந்தது அவன் கோவமாக உள்ளான் என்று, என்ன பதில் கூறுவாள்,’உன் புகைப்படத்தை தேடி வந்தேன் என்றா சொல்ல முடியும்… வசமா மாட்டிக்கிட்டோமே இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது’ என தவித்தவள்
‘மம்மியவே சமாளிக்கிற நமக்கு இவரை சமாளிக்கிறதா கஷ்டம் எதையாவது சொல்லி வைப்போம் என்று மனதிற்குள் நினைத்தவள்’,
தியா கூறியதை கேட்ட தேவாவிற்கு ஏற்கெனவே மது போதையில் சிவந்து இருந்த கண்கள் கோவத்தில் இன்னுமே சிவந்தது… அவன் வீட்டிற்கு வரவில்லை என்றாலும் அவன் அறைக்கு யாரும் வர மாட்டார்கள்… அது அவனுக்கு சுத்தமாக பிடிக்காது… அப்படி இருக்கும் போது இவள் தன் அனுமதி இல்லாமல் வந்தது மட்டும் இல்லாமல் இப்படி ஒரு பதிலை கூறுவது அவனுக்கு கோவத்தை ஏற்படுத்தியது…
அதனால் “இங்க என்ன யாராவது அவித்து போட்டுட்டா ஆடுறாங்க நீ வந்து வேடிக்கை பார்க்க”, என்றான் கோவமாக
‘ஆளு பார்க்க தான் டீசன்ட் போல வாயை திறந்தா கூவம் கொப்பளிக்குது’ என்று மனதில் எண்ணிய தியா “சாரி” என்றாள்…
மண்ணாங்கட்டி சாரி இடியட், உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா படிச்சவ தானே, ஆள் இல்லாத டைம் அடுத்தவங்க ரூம்க்குள்ளே வந்திருக்க,துறந்த வீட்டுக்குள்ள தெரு நாய் நுழையற மாதிரி, அதுவும் இப்படி அர்த்த ராத்திரியில உனக்கு அறிவே கிடையாத, யூஸ்லெஸ், முட்டாள், என்றபடி திட்ட ஆரம்பித்தான்…
தியா எதுவும் பேசாது அவன் திட்டுவதை அமைதியாக கேட்டு கொண்டு நின்றாள்… அது அவள் மீது தவறு உள்ளது என்பதால் அல்ல, இதே தேவா இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அவள் மீது தவறு இருந்தாலுமே இப்படி அமைதியாக இருந்து இருக்க மாட்டாள்… ஏனோ தேவா இவ்வளவு திட்டியும் அவன் மீது கோவம் வரவில்லை… மாறாக அவனின் கோவத்தை ரசிக்கவே சொல்லியது… இறுதியாக திட்டி முடித்தவன் “கெட் அவுட்” என்ற கத்தியதில் தான் சுயநினைவு பெற்றாள்…
அவன் வெளிய போக சொல்லி திட்டியும் அவள் அப்படியே நின்றாள்… தேவா கடுப்பாகி “ஏய் உனக்கு ஃபேசிக் சென்ஸ் தான் இல்லைன்னு நினைச்சேன்… காதும் சரியா கேட்காத வெளியில் போ” என்று சத்தம் போட்டான்…
“டோர் லாக் பண்ணி வச்சிட்டு வெளிய போ, வெளிய போன்னு கத்துனா எப்படி போக முடியும்? என்று தியாவும் அவனை போல கத்தினாள்…
‘தப்பு பண்ணிட்டு எவ்ளோ வாய் இந்த பொண்ணுக்கு’ என தேவாவிற்கு தியா மீது எரிச்சல் தான் வந்தது.. தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த சாவியை எடுத்து அவள் மீது வீசிவிட்டு “கெட் லாஸ்ட்” என்றான்…
சாவியை கையில் பிடித்த தியா ம்க்கும் ரொம்பத்தான் உதட்டை சுளித்து விட்டு கதவை நோக்கி இரண்ஞு அடி வைத்தவள், மீண்டும் தேவாவின் புறம் திரும்பி,
“சாரி என்மேல் தான் மாமா தப்பு, நான் தப்பு பண்ணிட்டேன் நீங்க அதுக்கு என்னை திட்டிடிங்க… இரண்டுமே சரியா போயிருச்சு… நாமா இரண்டு பேரும் ஏன் இதை மறந்திட்டு ஃப்ரெண்ட்ஸ் ஆக கூடாது மாமா, ஹாய் ஐயம் திரவியா என்று தனது வலது கரத்தை நீட்ட,
அடுத்த நொடி தேவா அறை வாசலில் கீழே விழுந்தது கிடந்தாள்…
தேவா தள்ளிய வேகத்தில் தியா கையில் லேசாக அடி பட்டு இருந்தது… “ஆ”… என்ற படி தனது கையை உதறி கொண்டே எழுந்தவள்… ‘சரியான திமிர் பிடிச்சவன் போல, ரொம்ப தான் பண்றான்,எப்படி தள்ளி விட்டுட்டான் பாரு, என் காலேஜ்ல தியா ஃப்ரெண்ட்ஷிப்பாக அவன் அவன் என் பின்னாடி அலையுறான்… இந்த ஆளுக்கு என் வொர்த் என்னனு தெரியல, கொஞ்சம் அழகா இருக்கிறதால் ரொம்ப சீன் போடுறான், என்று திட்டி கொண்டே அங்கிருந்து சென்றாள்…
உள்ளே தேவாவோ “சரியான இரிடேட்டிங் இடியட்” என்று தியாவை திட்டியபடி மெத்தையில் விழுந்தான்….
மறுநாள் காலை அழகாக விடிந்தது… உறக்கம் கலைந்து எழுந்து மெத்தையில் அமர்ந்தாள் தியா… எழுந்ததும் தனது அறை போல் இல்லையே என சுற்றி முற்றி பார்த்தவள் ஒரு நொடி குழம்பி போனாள்… அப்புறம் தான் நேற்று இனியா திருமண நடந்தது.. அதன் பின்பு இங்கு வந்தது, தேவா அறைக்கு சென்று அவனிடம் மாட்டி திருதிருவென முழித்தது அதன் பின்பு அவன் வெளியே தள்ளி விட்டது அனைத்தும் நியாபகம் வந்தது…
மெதுவாக சிரித்து விட்டு மெத்தையில் கை ஊன்றி கீழே இறங்க பார்க்க கை வலித்தது… என்ன என்று பார்க்கும் போது தான் தெரிந்தது… நேற்று தேவா தள்ளி விட்டதில் கை முட்டியில் அடிபட்டு இருப்பது… அது தான் இப்போது வலித்தது… ‘சரியான திமிர்பிடிச்சவன்’ என்று தேவாவிற்கு பட்டம் சூட்டினாளும் இதழ்கள் புன்னகைக்க தான் செய்தது…
நேற்று இரவு அவன் தள்ளி விட்டதும் கோவம் வந்து அவனை திட்டினாலும் ‘நீ செய்தது தவறு அவன் இல்லாத நேரத்தில் அவன் அறைக்கு சென்றது தப்பு… அதனால் தான் அவன் அப்படி செய்தான்’ என்று அவளின் மனதே அவளுக்கு எதிராக போர் கொடி தூக்கி தேவாவிற்காக வக்காலத்து வாங்க அவன் மீது இருந்த கோவம் அறைக்கு வரும் முன்னே பறந்து போனது… இப்போது எழுந்து குளியலறை புகுந்து கொண்டாள்…
தியா குளித்து முடித்து அறையை விட்டு வெளியே வந்தாள்… அனிச்சையாக அவள் கண்கள் தேவா அறையை நோக்கியது… பின்பு தன் தலையில் தானே தட்டி விட்டு கீழே இறங்கி சென்றாள்… அங்கு ஹாலின் ஷோபாவில் வேதாசலம் அமர்ந்து இருக்க அவரை சுற்றி ஜெயேந்திரன், ராகவ், இந்துமதி கணவன் கார்த்திக் அமர்ந்து ஏதோ பேசி சிரித்து கொண்டு இருந்தனர்… இன்னோரு புறம் மஞ்சுளா, இந்துமதி இருவரும் பேசி கொண்டு இருந்தனர்… மீனாட்சி மட்டும் தனியாக அமர்ந்து மேலே தேவா அறையை பார்த்து கொண்டு இருந்தார்…
இனியா எங்கே என்று தேட அவள் சமையலறையில் இருப்பது தெரிய அங்கு சென்றாள்… அங்கு இனியா எதையோ கடாயில் கிண்டி கொண்டு இருந்தாள்… தியா மெதுவாக பூனை நடையிட்டு இனியா பின்பு சென்றவள், பின்னிருந்து அவள் இடையை சுற்றி கட்டி கொண்டாள்… அதில் இனியா பயந்து “ஆ”…வென கத்தி விட்டு “எருமை நீ தானா?”
“ஏன் மாமாவா எதிர்பார்த்தியா?” என்று தியா கேட்க,
“சீ போடி லூசு அது எல்லாம் இல்ல” என்று இனியா கூறி வெட்கப்பட்டாள்…
“நீ வெக்கப்படறத பார்த்தா அது தான் உண்மை போலயே, அப்புறம் இனி உன் முகம் குங்குமம் டப்பாவால முக்குன மாதிரி இப்படி சிவந்து இருக்கே, என்ன காரணம் ராகவ் மாமாவோட கை வண்ணமா” என்று தியா கேலி செய்ய,
“போடி லூசு அக்கா கிட்ட பேசுற மாதிரியா பேசுற?”
“ஏன் அக்காங்க கிட்ட எப்புடி பேசனும்னு ஏதாவது புதுசா புக் ரிலீஸ் பண்ணி இருக்காங்களா இனி, அப்படி ஏதாவது இருந்தா சொல்லு உடனே வாங்கி படிச்சு தெரிஞ்சுகிட்டு வந்து அப்புறம் உன்கிட்ட பேசுறேன்”…
“அய்யோ உன்கிட்ட எல்லாம் மனுஷங்க பேச முடியுமா? எனக்கு வேலை இருக்கு கொஞ்சம் நேரம் அமைதியா இரு” என்ற இனியா மறுபடியும் கடாயை கிண்ட ஆரம்பிக்க,
“என்ன பண்ற இனி?”
“கேசரி கிண்டிட்டு இருக்கேன் தியா குட்டி”…
“எதே! என அதிர்ந்தாள் “ஏண்டி நம்ம வீட்டுல கிச்சன் எந்த பக்கம்னு கேட்பா, யமுனா சமையல் கத்துக்கோன்னு சொல்லும் போது அது ரொம்ப போர்னு சொல்லிட்டு சுத்துவ, இங்க என்னனா வந்த முதல் நாளே கேசரி கிண்டறேன் சொல்ற, என்னடி இது எல்லா”ம் என்று தியா சிறு திகைப்புடன் கேட்க,
இனியா சிரித்து கொண்டே “அது எல்லாம் அப்படி தான்” என்றபடி அடுப்பை அணைக்கவும், வெளியே இந்துமதி “இனியா இங்க கொஞ்சம் வா” என்று அழைக்கவும் சரியா இருந்தது…
இனியா, தியா இருவரும் சமையல் அறையில் இருந்து வெளியே ஹாலுக்கு சென்றனர்… அங்கு ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் தேவா தந்தை வேதாசலம் அருகே அமர்ந்து இருந்தார்…
“வா இனியா இங்க வந்து ராகவ் பக்கத்தில் வந்து நில்லு, இவங்க என்னோட மாமனார்… நேத்து உங்க மேரேஜ் அட்டன் பண்ண முடியலை இவங்களால, ஓன் மந்த் பாரிங் போயி இருந்தாங்க… இன்னைக்கு மார்னிங் தான் கோயம்புத்தூர் வந்தாங்க… உடனே உங்களை பார்க்க வந்துட்டாங்க” என அறிமுகப்படுத்தினார் இந்துமதி…
“இவன் இந்த வீட்டு சம்பந்தி மட்டும் இல்லமா, என்னோட நெருங்கிய நண்பன், கோயம்புத்தூர் ஃபேமஸ் ஹாஸ்பிடல் xxxx அந்த ஹாஸ்பிடல் டீன் நியூமராலஜி ஸ்பெஷலிஸ்ட் மகேஸ்வரன்… அதுமட்டுமில்ல ரொம்ப நல்ல மனிதன்… எல்லார் மேலேயும் எப்பவும் அன்பு மட்டும் தான் செலுத்துவான்” என்று தனது நண்பனை அறிமுகம் செய்து வைத்தார்...
“என்ன இவருக்கு ஓவரா பில்டப் கொடுக்குறாங்க… பார்த்தா அப்படி எல்லாம் தெரியலையே, தெலுங்கு சினிமாவுல வர வில்லன் மாதிரில இருக்கார்” என்று மகேஸ்வரனை பார்த்த திரவியா இனியா காதில் முனுமுனுக்க, “ஷ்ஷ்… கொஞ்சம் நேரம் அமைதியா இருடி” என்று இனியா கூறினாள்…
மகேஸ்வரன் எழுந்து ராகவ் இனியா அருகே வந்து திருமண வாழ்த்து கூறி தான் கொண்டு வந்திருந்த பரிசு பொருளை இனியாவிடம் நீட்டும் பொழுது தான் அருகே நின்று இருந்த தியாவை பார்த்தார்… தியாவை பார்த்தவர்க்கு பயங்கர அதிர்ச்சி..
ராகவ் இனியா இருவரும் அவரின் பாதம் தொட்டு வணங்க அதை கூட கவனிக்காது அவரின் யோசனை தியா சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் சுழன்று கொண்டு இருக்க, டேய் மகேஸ் என்ற வேதாசலம் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவர்,
என்னடா என்ன யோசனை வேதாசலம் கேட்க ஒன்னும் இல்லை என சிரித்து சமாளித்தவர் காலில் விழுந்த இருவரையும் ஆசிர்வதித்தார்…
பின்பு சிறிது நேரம் அனைவரும் அமர்ந்து பேசி விட்டு மகேஸ்வரன் கிளம்புகிறேன் என்று சொல்லும் போது மொத்த குடும்பமும் அவரை சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று அனைவரும் சொல்ல , சாப்பிடுவதற்காக டைனிங் டேபிள் சென்று அமர்ந்தனர்…
தியா சாப்பிட அமரும் போது டொக் டொக் என்று மாடிப்படியில் யாரோ நடந்து வர சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள்…
அங்கு ப்ளாக் கலர் ஜுன்ஸ் பேண்ட், ரெட் கலர் டீசர்ட், கையில் ரோலக்ஸ் வாட்ச், அணிந்து டீசர்டில் கூலர்ஸை தொங்க விட்டு ஸ்டைலாக நடந்து வந்தான் தேவா…
தியா வாயை பிளந்து கொண்டு இரவு போல் இப்போதும் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்… சில நொடிகளில் ஏதோ சத்தம் கேட்க தெளிந்தவள் ‘அய்யோ பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்க்குற மாதிரி பார்க்குறோம் ச்சே நம்மளை பத்தி அவர் என்ன நினைப்பார்’ என்று மானசீகமாக தன் தலையில் கொட்டி கொண்டவள் திரும்ப,
அங்கு தேவா குடும்பத்தினரில் மீனாட்சி தவிர மற்றவர்கள் முகத்தில் அப்படியொரு அருவருப்பு தேவாவை பார்த்து,
‘ஏன் எல்லாரும் முகமும் இப்படி இருக்கு அவர் ஒன்னும் அவ்ளோ அசிங்கமா இல்லையே, இவங்க ஏன் முகத்தை இப்படி வச்சு இருக்காங்க என்று நினைத்து மறுபடியும் தேவாவை பார்க்க, அவனின் பார்வையோ அழுத்தமாக படிந்து இருந்தது அங்கு இருந்த மகேஸ்வரன் மீது, ஆனால் மகேஸ்வரனோ தலை குனிந்து இருந்தார்… இதை பார்த்த திரவியா தான் குழம்பி நின்றாள்…
அவர் எப்படி தேவாவை பார்ப்பார் தேவாவிற்கு செய்த துரோகம் குற்ற உணர்ச்சி நெஞ்சை குடைய அவனை எதிர் கொள்ளும் திராணியற்று தலை குனிந்து அமர்ந்து இருக்கிறார்… தேவாவிடம் உண்மையும் நேர்மையும் இருப்பதனால் திமிராக கொத்தாக அவரை பார்த்தான்… மகேஸ்வரன் மனமோ ஐந்து வருடங்களுக்கு முன் அன்பையும் மரியாதையையும் தேக்கி வைத்து தன்னை நோக்கும் விழிகள்… இப்போது வெறுப்பை மட்டுமே கக்குகின்றது… என்று கவலை கொண்டார்… இன்று அவன் வாழும் இந்த இழிவாழ்க்கையும் அவன் படும் வேதனைகளையும், அவனை அவன் குடும்பத்தினரே வெறுத்து ஒதுக்கும் இந்நிலையையும் பார்க்கும் போது அவருக்கு இன்னுமே குற்ற உணர்ச்சி அதிகரித்தது…
கீழே இறங்கி வந்த தேவா மகேஸ்வரனை பார்த்து கொண்டே தனது கையில் இருந்த பத்திரத்தை தூக்கி ஷோபா மீது எறிந்தான்… மகேஸ்வரனுக்கு தன் முகத்தின் மீது எறிவது போல் இருந்தது…
அதன்பின் மீனாட்சி புறம் திரும்பி நான் போறேன்மா எனும் விதமாக தலை அசைத்து விட்டு வெளியே சென்றான்..மீனாட்சி வேதனையுடன் தேவாவை நோக்கினார்… மற்றவர்கள் சாப்பிட துவங்கினர்…
தியா மனதில் தான் ‘அடப்பாவிங்களா ஒரு மனுஷனை ஒரு வார்த்தைக்காவது சாப்பிடுன்னு சொல்லமா இப்படி கொட்டிக்கிறீங்களே’ என்று நினைத்தாள்..
இந்துமதி ‘தியா உக்கார்ந்து சாப்பிடு என்று சொல்ல’ அவளுக்கு கோவமாக வந்தது… அவர்கள் வீட்டில் பாலகிருஷ்ணன், யமுனா இருவரும் சாப்பிடு நேரம் அவர்கள் தொழிற்சாலை வேலையாட்கள் வந்தாலும் அவர்களை கூட அமர்ந்து சாப்பிட வைப்பார்கள்… ஆனால் இங்கு இந்த வீட்டின் உறுப்பினர் ஒருவரை இப்படி செய்கிறார்களே அதுவும் அவளுக்கு பிடித்த ஒரு நபரை இப்படி நடத்துக்கிறார்களே என்று கோவமாக வந்தது… “ஒரு போன் பேசிட்டு வந்துடறேன்” என்று தியா வேகமாக ஓடி வெளியே வந்தாள்…
அங்கு தேவா தனது கார் அருகே சென்று கொண்டு இருந்தான்… “மாமா, மாமா கொஞ்சம் நில்லுங்க… ஏன் இப்படி சாப்பிடமா கிளம்புறீங்க? வாங்க வந்து சாப்பிட்டு போங்க” என்று உரிமையாக தேவாவை அழைத்தாள்…
ஏற்கெனவே மகேஸ்வரனை பார்த்ததில் அதீத கோவத்தில் இருந்த தேவாவிற்கு தியாவின் மாமா என்று அழைப்பு வேறு தேவையில்லாத நினைவுகளுக்கு இட்டு செல்ல தியா மீது பயங்கர கோவம் வந்தது…
“ஏய் யார் நீ? நீ எதுக்கு என்ன சாப்பிட கூப்பிடுற? நான் உன்கிட்ட சோறு வேணும்னு பிச்சை ஏதும் கேட்டனா? கோவமாக கத்த,
அதில் பயம் எழுந்தது.. இருந்தும் சமாளித்து கொண்டு “இல்ல மாமா சாப்பிடமா போறீங்களேன்னு தான்”
“இது எல்லாம் சொல்றதுக்கு நீ யாரு?” மறுபடியும் கத்தினான்.. அவனுக்கு தியாவின் அதிக பிரசங்கி தனமான பேச்சு அவளின்மிமா என்ற அழைப்பு எரிச்சலை தான் கொடுத்தது..
“இல்ல மாமா சாப்பிட தானே கூப்பிட்டேன்… அதுக்கு ஏன் இவ்வளோ கோவம்” என்று தியா ஏதோ கூற வர,
“வாயை மூடு நீ யார் எனக்கு? எதுக்கு என்ன மாமான்னு கூப்பிடுற?
“நான் உங்க தம்பியோட”…
அவனோட மச்சினிச்சி தானே எனக்கு இல்லையே… எனக்கு நீ யாரோ தான்? இன்னோரு தரம் மாமா கோமான்ன வாயை உடைச்சிடுவேன் என்றவன் வேகமாக தன்னோட காரை நோக்கி சொல்ல,
பாவா என்ற அழைப்பு அவன் காதில் விழுந்தது… கோவமாக திரும்பினான்…
தியாவிற்கு அவனின் இந்த திமிர் பேச்சு, கோவம், அலட்சிய பார்வை எல்லாம் பிடித்திருந்தது… அவளின் இயல்பான குறும்பு குணம் அவன் மாமா என்று அழைக்காதே என்றதும் இப்போது அவனை வம்பிழுக்க தூண்டியது…
அதனால் செல்பவனை பார்த்து பாவா என்று அழைத்தாள்… அவன் கோவமாக திரும்ப, “மாமான்னு கூப்பிட கூடாதுன்னு சொன்னீங்க தானே அதான், இது ஓகே வா பாவா” என தலை அசைத்து சிரிப்புடன் கேட்க,
“அடிங்க…உன்ன நைட்டே அடி வெளுத்து இருக்கனும் டி.. விட்டது தப்பு தான்” என்ற தேவா அவளை நெருங்கி வர அவனுக்கு நாக்கை நீட்டி பழிப்பு காட்டியவள் உள்ளே ஓடி சென்றாள்….