இரவு நேரத்தில் சுந்தரி பாட்டியோடு பாட்டியின் வீட்டில் தங்கி கொண்டிருந்தாள்.. ஆனால் இப்போது பாட்டி சுந்தர் வீட்டில் இருப்பதால் அவளுக்கு ரதியின் வீட்டிலேயே இருக்க வேண்டி இருக்கும்..
ஆனால் அவள் ரதியோடு இல்லாமல் பாட்டி வீட்டிற்கு செல்வதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.. அதை பற்றி நினைக்கும்போதே நடுநடுங்கி போனாள் அவள் …
அன்றைக்கு நடந்ததை எண்ணும் போதே அவளுக்கு நா உலர்ந்து தொண்டை வறண்டு முகமெல்லாம் வியர்த்து போனது..
ரதியின் கணவன் குடித்துவிட்டு வருவதும் ரதியோடு சண்டையிடுவதும் அவளை போட்டு அடிப்பதும் அதன் பிறகு சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை உணராமல் காதில் கேட்க முடியாத அருவருப்பான விரசமான வார்த்தைகளை சுற்றி இருப்பவர்கள் கேட்டு முகம் சுளிக்குமாறு சத்தமாக பேசி அவளை கொஞ்சுவதும் அவளை அறைக்கு இழுத்துக் கொண்டு போய் கதவை சாத்திவிட்டு கூடல் நிகழ்த்துவதும் வாடிக்கையாகிப் போயிருந்தது..
அன்று ரதிக்கு உடம்பு முடியாமல் தூக்க மாத்திரை போட்டுகொண்டு நன்கு உறங்கிக் கொண்டிருக்கவும் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த பாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்ததும் ரதியை எழுப்பி எழுப்பி பார்க்கவும் அவளோ தூக்க மாத்திரையின் விளைவினால் அசைந்து கொடுக்கவும் இல்லை..
அவளை இனிமேல் எழுப்பி பலன் இல்லை என்று தெரிந்ததும் குழந்தையோடு இன்னொரு அறையில் படுத்து கொண்டிருந்த சுந்தரியை தேடி வந்தான் பாஸ்கர்..
“ஏ… சுந்தரி கண்ணு.. நீ இங்க தான் படுத்து இருக்கியா? உங்க அக்காக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க “மாமா.. ரதி உடம்பு சரியில்லாம படுத்திருக்கா.. உங்களுக்கு பசிக்குதா மாமா? நான் வேணா சாப்பாடு போடட்டுமா?” என்று கேட்டாள் அவனின் தப்பான எண்ணத்தை அறியாமல்..
“எனக்கு பசிக்குதுடி.. ஆனா அந்த பசியை போக்குறதுக்கு சோறு வேணாம்.. நீதான் வேணும்..” என்று சொன்னவன் அருகில் வர அவன் எண்ணத்தை உணர்ந்தவள் “என்ன பேசுறீங்க நீங்க..? என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?” பின்பக்கமாக அடி மேல் அடி வைத்து பயத்தில் உடல் நடுங்க நகர்ந்து கொண்டே கேட்டாள் சுந்தரி ..
“ஏண்டி இன்னைக்கு உங்க அக்காக்கு முடியல.. இப்ப என்ன? இந்த மாமனை ஒரு நாள் நீ சந்தோஷப்படுத்த கூடாதா? எப்படியும் நீ கருப்பா இருக்கறதுனால உன்னை எவனும் கட்டிக்க மாட்டேங்கிறான்.. பேசாம என்னையே ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கோ.. உன்னை ராணி மாதிரி வச்சுக்கிறேன்.. என்னதான் நீ கருப்பா இருந்தாலும் நீ சின்ன பொண்ணு இல்ல? உன்கிட்ட கிடைக்கிற சொகமே தனியா இருக்கும் டி..”
அவன் பேசிக் கொண்டே போகவும் அவளோ பத்ரகாளியாய் மாறினாள்..
கையில் கிடைத்த பொருள் எல்லாம் அவன் மீது விட்டெரிய ஆரம்பித்தாள்..
“சீ… இவ்வளவு கேவலமானவரா நீங்க..?இப்பிடியா பேசுவீங்க .. எங்க குடும்பத்துல ஆம்பள பையன் கிடையாது.. நீங்க தான் எங்க குடும்பத்துல எனக்கு ஒரு அண்ணன் என்ன செய்வாரோ அதெல்லாம் செய்வீங்கனு நெனச்சு அப்படி தான் இன்னைக்கு வரைக்கும் உங்களை மதிச்சுட்டு இருக்கேன்.. ஆனா நீங்க எவ்வளவு கேவலமான புத்தி இருக்கிறவரா இருக்கீங்க.. கிட்ட வந்தீங்க மரியாதை கெட்டுடும்.. சொல்லிட்டேன்..” என்றாள் சுந்தரி..
“என்ன மிரட்டுறியா..? உன்னை இப்போ நான் வந்து தொட்டா எவண்டி இருக்கான் உன்னை காப்பாத்தறதுக்கு.. அண்ணனாம் அண்ணன்.. போடீ.. பொழைக்கத் தெரியாதவளே.. கல்யாணமே ஆகாத உனக்கு நான் வாழ்க்கை தரேன்னு சொல்றேன்.. அதை புரிஞ்சுக்காம என்னையே திட்டிக்கிட்டு இருக்க..?”
போதையில் வாய் குழற சொன்னவன் சட்டென எட்டி தாவி அவள் கையைப் பிடிக்க கையில் தீப்பட்டாற்போல் அவன் கையை உதறிவிட்டு சுற்றி ஓட ஆரம்பித்தாள் சுந்தரி..
பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஓடியவள் வாசல் அருகே சென்று வாசக்கதவை திறந்து கொண்டு பக்கத்து வீட்டு பாட்டியின் வீட்டிற்கு போய் கதவை படபடவென தட்டினாள்..
ஆனால் அதற்குள்ளாக அவள் பின்னே பாஸ்கர் வந்திருக்க “எங்கடி போற..?” என்றவன் அவளை தொடர்ந்து வந்து அவள் தாவணியை பிடித்து இழுக்க அப்போது சரியாக கதவை திறந்த பாட்டி “அடே கிராதகா.. முதல்ல அவ மேலே இருந்து கையை எடுடா” என்றவள் அவன் கையைப் பிடித்து அவள் தாவணியிலிருந்து விலக்கிவிட்டு ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறையை அறைந்திருந்தாள்..
“ஏ.. கிழவி.. என்னையா அடிச்ச?”
மறுபடியும் பாட்டியை தாக்க சென்றவனை அப்படியே ஒரு பிடி பிடித்து தள்ளினாள் பாட்டி.. குடித்து இருந்ததால் அவனால் நிதானமாக எழுந்து நிற்க கூட முடியவில்லை.. அப்படியே கீழே விழுந்து கிடந்தான்..
“நீ வா சுந்தரி.. உள்ள போலாம்.. இவனை எல்லாம் அடிச்சே கொல்லணும்.. கொஞ்சமாவது மனசாட்சி இருக்குதா இவனுக்கு எல்லாம்..?”
பாட்டி அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்துப் போக “பாட்டி.. அங்க குழந்தை தனியா இருக்கு.. ரதிக்கு வேற உடம்பு சரியில்லை..” என்று அவள் சொல்லவும் “நீ கதவை தாழ் போட்டுட்டு உள்ளயே இரு.. நான் போய் குழந்தையை தூக்கிட்டு வரேன்” சொல்லிவிட்டு ரதியின் வீட்டுக்கு சென்ற பாட்டி குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தாள்..
“பாட்டி.. மாமா வெளியிலேயே இருக்காரே..”
சுந்தரி கேட்க “உனக்கு அறிவே கிடையாதா? போ.. அவனை தூக்கிட்டு போய் வீட்ல விடு.. உன் மானத்தை வாங்கிட்டு தான் மறு வேலை பார்ப்பான்.. எவனுக்கு பாவம் பார்க்கிறதுன்னு உனக்கு விவஸ்தையே இல்லையா? அந்த ராட்சசன் அப்படியே கிடக்கட்டும்.. காலையில பொண்டாட்டி வந்தா என்ன பதில் சொல்றான்னு நானும் பார்க்கிறேன்.. குடிகார பாவி” சரமாரியாக திட்டினாள் பாட்டி..
“வேணாம் பாட்டி.. இது அக்காக்கு தெரிய வேண்டாம்.. அவ ரொம்ப மனசு சங்கடப்படுவா.. ஏற்கனவே ரெண்டு பேர் இடையிலயும் எப்பவும் சண்டையில மண்டை உடைஞ்சுக்கிட்டு இருக்கு.. அவர் தன்னைத் தவிர வேற எந்த பொண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டாருன்ற ஒரே ஒரு நிம்மதி தான் ரதிக்கு இருக்கு.. இதுல இந்த விஷயம் தெரிஞ்சுதுன்னா ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவா பாட்டி அவ.. நான் வேற ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்..”
சுந்தரி சொல்லவும் பாட்டி தலையில் அடித்து கொண்டு “எப்படியோ போ.. நீதான் அவளை தலையில் தூக்கி வச்சிக்கிட்டு ஆடிட்டு இருக்க.. அவ என்னடான்னா உன்னை தினமும் கரிச்சி கொட்டிகிட்டே இருக்கா..” என்று சொல்லிவிட்டு போக அந்த இரவை பாட்டி வீட்டிலேயே கழித்தாள்..
அதன் பிறகு அன்றிலிருந்து இரவில் படுத்துக்கொள்ள குழந்தையையும் தூக்கிக் கொண்டு பாட்டி வீட்டுக்கு சென்று விடுவாள் சுந்தரி..
அந்த பாஸ்கர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதை எண்ணி பார்க்கும்போதே அவளுக்கு கை கால் எல்லாம் இப்போதும் நடுக்கம் எடுக்கும் பயத்தில்.. இப்போது மறுபடியும் அந்த மிருகம் இருக்கும் இடத்தில் தங்க நேரிடுமே என்று கவலை கொண்டாள் சுந்தரி..
எப்படியாவது பாட்டியை பார்த்துக் கொள்ள ரதியை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டாள்.. அப்படி செய்தால் அவள் இங்கேயே பாட்டி அருகிலேயே அவளுக்கு சேவை செய்து கொண்டு பாதுகாப்பாக இருந்து விடலாம் என்று எண்ணினாள்..
ரதி சுந்தர் வீட்டுக்கு வந்து சுந்தரியிடம் உடைகளை கொடுத்தாள்..
“சுந்தர் கிட்ட நான் சொன்னது பத்தி பேசுனியா?”
அவள் எப்படியும் பேசி இருக்க மாட்டாள் என்று தெரிந்தே கேட்டாள்..
“சொல்லி கிழிச்சே நீ.. நானே அவர் கிட்ட பேசிக்கிறேன்” என்று சொன்னவள் திரும்ப அப்போதுதான் சுந்தர் தன்னுடைய கார்மெண்ட்ஸ்க்கு கிளம்புவதை பார்த்தாள்..
“சார்.. குழந்தை எடுத்துட்டு வந்து இருக்கேன்.. திருப்பி பஸ் புடிச்சு எங்க வீட்டுக்கு போகணும்.. நீங்க உங்க கார்ல கொஞ்சம் எங்க வீடு வரைக்கும் கொண்டு விட்டுடறீங்களா?” சுந்தரை பார்த்து கேட்டாள் அவள்..
“ஓ.. இட்ஸ் ஓகே.. வாங்க கொண்டு போய் விடுறேன்..” என்றவன் சுந்தரியிடம் திரும்பி “கிளம்புறேன் சுந்தரி.. பாட்டியை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க.. ஏதாவது பிரச்சனை இல்லை ஏதாவது வேணும்னா எனக்கு ஆஃபீஸ்க்கு ஃபோன் பண்ணுங்க தயங்காம.. நான் உடனே கிளம்பி வரேன்..”
சுந்தரியிடம் சொல்லிவிட்டு காரை நோக்கி செல்ல ரதியும் சுந்தரியிடம் “போய் வருகிறேன்” என்பது போல் கண் ஜாடை காட்டி விட்டு நகர அவள் சுந்தரிடம் என்ன பேச போகிறாளோ.. எப்படி பேச போகிறாளோ.. என்று கலவரத்துடன் வாசலையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றாள் சுந்தரி..
காரில் ஏறிய ரதி சிறிது தூரம் சென்றவுடன் “சார்.. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“சொல்லுங்க..” என்றான் சுந்தர்..
“சார் உங்களுக்கு சமையல் வேலை பார்க்கிறதுக்கு சுந்தரி வருவா.. அதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனா பாட்டியை பாத்துக்கறதுக்கு சுந்தரி வந்துட்டா பகல்ல அவ கார்மெண்ட்ஸ் போய் சம்பாதிக்கிற பணம் குடும்பத்துக்கு கிடைக்காது சார்.. ரொம்ப கடன்ல இருக்கோம் சார்.. என்னால என் குழந்தைக்கு ஒரு அஞ்சு வயசு ஆகுற வரைக்கும் வேலைக்கு போக முடியாது சார்.. அவ சம்பளத்தை நம்பி தான் எங்க வீடு இருக்கு.. அதனால பாட்டியை பாத்துக்கறதுக்கு நீங்க வேற ஆளு ஏற்பாடு பண்ணிக்கோங்க.. சுந்தரி வேற வேலை தேடிக்கட்டும் சார்..” மெதுவாக இழுத்த படி சொன்னாள் ரதி..
அவள் சொன்னதை கேட்டு அமைதியாக யோசித்துக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தவனை “என்ன சார்.. எதுவுமே பதில் சொல்ல மாட்டேங்கறீங்க?” என்று கேட்டாள் ரதி..
“உங்களுக்கு என்ன சுந்தரியோட சம்பளம் வீட்டுக்கு வரணும்.. அவ்வளவுதானே? அவள் சமையல் செய்ற சம்பளம் தவிர கார்மெண்ட்ஸ்ல வேலை செஞ்சா அவளுக்கு எவ்வளவு சம்பளம் வருமோ அந்த பணம் நிச்சயமா உங்களுக்கு கிடைக்கும்.. உங்களுக்கு அது போதுமா? இல்ல அது கிடைக்கும்னாலும் வேற ஏதாவது ரீஸன்காக பாட்டியை சுந்தரி பாத்துக்க கூடாதுனு நீங்க நினைக்கிறீங்களா?” நிதானமாக கேட்டான் சுந்தர்..
“சுந்தரி பாட்டிக்கு செய்யறதுல எனக்கும் சந்தோஷம்தான் சார்.. அவங்க எங்க பக்கத்து வீட்ல இருக்கிற வரைக்கும் சுந்தரியை பத்திரமா கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டாங்க.. அதனால சுந்தரி அவங்களுக்கு செய்யறது எனக்கு சந்தோஷம் தான்.. ஆனா எங்க குடும்ப கஷ்டத்துனால தான் நான் இப்படி கேட்டேன் சார்..” என்றால் ரதி..
“ஸோ.. அந்த பணம்தான் உங்க பிராப்ளம்.. இல்லையா..? உங்களுக்கு அந்த பணம் வந்துடுச்சுன்னானா சுந்தரி இங்க பாட்டியை பாத்துக்குறதுல உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே..?” திரும்பவும் கேட்டான் சுந்தர்..
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை சார்.. ஆனா பாட்டியை பாத்துக்குறதுக்கு சுந்தரி பணம் வாங்க மாட்டா.. அப்புறம் எப்படி சார் நீங்க அவகிட்ட கொடுக்க முடியும்? பேசாம அவளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நீங்க என்கிட்ட வேணா கொடுத்துடுங்க..”
சுந்தரிக்கு தெரியாமல் பணத்தை வாங்குவதற்கு எண்ணமிட்டுக் கொண்டு கேட்டாள் ரதி..
“சுந்தரி அந்த பணத்தை வாங்கிட்டு உங்க வீட்டுக்கு வர்றது என்னோட பொறுப்பு.. நிச்சயமா சுந்தரி செஞ்ச வேலைக்கான சம்பளத்தை அவங்க கையில தான் கொடுப்பேன்.. அதனால இப்ப நீங்க கவலை இல்லாம வீட்டுக்கு போங்க..”
பேசிக்கொண்டே அவன் வண்டியை நிறுத்தவும் அப்போது தான் கவனித்தாள்.. அவர்களுடைய வீடு வந்திருந்தது..
“சரி சார்… ரொம்ப தேங்க்ஸ் சார்.. என்னை தப்பா நினைக்காதீங்க சார்.. இப்படி கேட்டுட்டனேன்னு..”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. நீங்க போயிட்டு வாங்க”
கார்மெண்ட்ஸ் செல்ல இருந்தவன் மறுபடியும் வீட்டிற்கு சென்றான்.. அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவை திறந்த சுந்தரியும் அங்கே சுந்தரை கண்டு திடுக்கிட்டு போனாள்..
“என்ன சார்.. கார்மெண்ட்ஸ் போகலையா?” என்று கேட்கவும் “இல்ல.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான் சுந்தர்..
“சொல்லுங்க சார்..”
உள்ளே சென்றவளின் பின்னே சென்றவன் தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு “நீங்க என்கிட்ட ஏதாவது சொல்லனும்னு நினைச்சீங்களா?” என்று கேட்க சுந்தரி “அது வந்து.. நீங்க எதை பத்தி சார் கேக்குறீங்க?” என்று இழுத்தாள்..
“சார் எனக்கு பாட்டியை விட்டுட்டு போக முடியாது சார்.. அதே சமயம் பாட்டியை பாத்துக்குறதுக்கு என்னால பணமும் வாங்க முடியாது.. என்ன பண்றதுன்னு தெரியாம தான் உங்ககிட்டயும் கேட்க முடியாம நான் இவ்வளவு நேரம் தவிச்சுக்கிட்டு இருந்தேன்..”
“ஆனா எனக்கு எந்த கன்ஃபியூஷனும் இல்லை சுந்தரி.. உங்க அக்கா கிட்ட உங்களுக்கு சமையல் வேலைக்கான சம்பளத்தோட சேர்த்து கார்மெண்ட்ஸ்ல கெடைக்கற சம்பளத்தையும் கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்..” என்றவனை முறைத்தாள் சுந்தரி..
அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் பாட்டியை பார்த்துக்கறதுக்கு பணம் கொடுக்கிறேன் என்று பிடிவாதம் பிடிப்பவரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று கூட அவளுக்கு தெரியவில்லை..
“ஏன் சார்.. நான் அவ்வளவு தூரம் பாட்டியை பாத்துக்கறத்துக்கு நான் பணம் வாங்கமாட்டேன்னு சொல்லியும் எனக்கு சம்பளம் கொடுப்பேன்னு சொன்னா என்ன சார் அர்த்தம்? என் உணர்வுகளுக்கு மதிப்பே கொடுக்க மாட்டீங்களா? உங்களுக்கு உங்க வேலை நடக்கணும்ங்குறது மட்டும் தான் முக்கியமா?”
கோபமாய் அவள் கேட்கவும் “நான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன்னு சொன்னேனே தவிர பாட்டியை பாத்துக்க பணம் கொடுக்கிறேன்னு சொல்லலையே சுந்தரி..” என்றான் அவன் ஒரு சிறிய புன்முறுவலோடு..
தொடர்ந்து வருவார்கள்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து