ரெண்டு வாரம் கடந்திருக்க, இரண்டு பெண்களுக்கும் திருமணமாகி மறுவீட்டு விருந்து முதல் எல்லா விசேஷங்களையும் நல்லபடியாக நடத்தி முடித்தாயிற்று.
பெண்கள் இருவரும் மாமியார் வீட்டில் நன்றாகப் பொருந்திப் போகவும், பெத்தங்களுக்கு நிம்மதியானது.
நளிராவை தங்கிட்டுப் போவதற்கு அவர்கள் கட்டாயப்படுத்தவும், வாணி வேண்டாமென மறுத்ததோடு, “அப்படியெல்லாம் தங்கக் கூடாதுடி. அந்தம்மா பத்திதான் நமக்கே தெரியுமே. உன்னையக் கண்டாவே ஆவாது அதுக்கு. ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லிட்டா காலம் முழுக்க மறக்காது பாத்துக்க. உன்னால வாழப் போன பொண்ணுங்களுக்கும் சங்கடம் வரும்” என்று நளிராவை தனியே அழைத்துப் பேசிவிட்டார்.
நளிராவும் “நான் வரலைக்கா. எனக்கும் ரெஸ்ட் தேவைப்படுதே” என்று குணமாக சொல்லிவிட்டாள்.
“சரிடி. தீபாவளிக்கு வறோம்” என்று கிளம்பிய பெண்களை வழியனுப்பி வைத்தனர்.
ஒவ்வொருவராய் கிளம்பிவிட, நளிராவும் மலர்விழியும் வீட்டை ஒழுங்குபடுத்தினர்.
ஆர்த்தியும் சைத்ராவும் இருந்தால் நளிராவுக்கு எந்த வேலையுமே இருக்காது. ஏதாவது ஹெல்ப் பண்ணுடி என்று சொல்வார்களே தவிர்த்து செய்தே ஆகணும்னு கட்டாயப்படுத்த மாட்டார்கள். அவர்களின் நினைவில் நளிராவுக்கு கண்கள் கலங்கியது. தன்னுடன் சண்டையிட, கொஞ்சிப் பேசி விளையாட அவர்கள் அருகில் இல்லையே. இன்னொருவர் வீட்டுப் பெண்ணாகி விட்டார்களே. நினைத்து நினைத்து கண்கலங்கினாள்.
மகளின் வாடிய முகத்தைப் பார்க்கவும், மலருக்கு அத்தனை வருத்தம். இவளும் புகுந்த வீட்டுக்குப் போயிட்டா இனி தங்களுக்கென இங்கே யார் இருப்பா, நினைக்கவே நெஞ்சைப் பிசைந்தது அவருக்கு. அதை மகளிடம் காட்டிக்கொள்ளாது தன் வேலையைப் பார்த்தார் மலர்.
மிரா அப்போதே மலர்விழியிடம் விளக்கமாக சொல்லிவிட்டாள், “எங்கள் பக்கம் மாப்பிள்ளை வீடுதான் பொண்ணுக்கு நகை போடுவோம். பொண்ணுக்கு புடவையெல்லாம் நாங்களே எடுத்துருவோம். அப்புறம் கல்யாண செலவு முழுக்க முழுக்க மாப்பிள்ளை வீட்டுலதான் பண்ணவோம். பொண்ணை மட்டும் கட்டிக்கொடுங்க போதும்” என்று சொல்லிவிட.
மலர்விழிக்கு நிம்மதியாகப் போனது.
இத்தனை பெரிய இடத்திலிருந்து பெண் கெட்டு வந்திருக்காங்க. அவங்க அளவுக்கு பண்ண முடியுமா என்ற வேதனை அப்போதே அவரை ஆட்கொள்ள. அதற்கெல்லாம் எந்த அவசியமும் இல்லை என்பது போல மிரா சொல்லிவிட்டாள்.
ஆனாலும் தங்கள் பக்கமும் ஏதாவது செய்ய வேண்டுமே. பொண்ணை அப்படியே அனுப்ப முடியாதல்லவா.
ஆண்கள் இருவரும் பேசுவதை கவனித்திருந்த மலர்விழி அவர்கள் இருக்குமிடம் சென்றார்.
“நளிரா கல்யாணத்துக்கு இன்னும் நாள் இருக்கு அண்ணா. இவர் தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்கறார்” என்று சொன்னார்.
“குழப்பமில்லாம எப்படி மலர். இருக்கற பணம் நகைன்னு ரெண்டு பொண்ணுங்களுக்கும் சரிக்கட்டிட்டோம். இப்ப இவளுக்குப் பண்ணணுமே. கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள நாள் போயிரும் மலர்” ராஜன் கவலையாய் கேட்டார்.
“அதுவும் சரிதான்” மலருக்கும் யோசனை.
“அப்பா என்னோட சேமிப்பு இருக்குப்பா. அடுத்த மாசம் நான் போட்டு வச்சிருந்த ஆர் டி சேமிப்புக்கு டைம் முடியப் போகுது. அந்தப் பணம் எப்படியும் மூணு லட்சம் வரும். அதை எடுத்துக்கலாம். அப்புறம் நான் இதுவரை அங்கிள் கடையில் வாங்கின சம்பளம் இருக்கு. இதை வச்சு சமாளிக்கலாம்” சொன்ன நளிராவுக்கும் கவலை, தன்னால் இவங்களுக்கும் கவலையாகிறதே என்று.
“இருக்கட்டும் நளிரா. இன்னும் நாள் இருக்கே அதுக்குள்ளே எதுக்கு புலம்பனும்?” சொன்னவர், “அப்ப நான் கிளம்பறேன். நளிரா நீ கடைக்கு போயிக்கப்பா” சொல்லிவிட்டு அவரும் கிளம்பிட.
இவர்கள் மூவரும் மீதமிருந்தனர்.
மனிதன் போடும் முடிச்சிற்கு அப்பால் இறைவனும் ஓரு முடிச்சைப் போடுவான் இல்லையா.
பீங்கான் ஜாடியிலிருக்கும் உப்பு கரைவது போல, நாட்களும் ஒவ்வொரு நாளாக சென்றுகொண்டிருக்க. நளிரா எதைப் பற்றியும் கண்டுகொள்ளாது வேலைக்கு சென்றுவிடுவாள்.
ஆனால் ராஜனும் மலர்விழியும் மகளின் முன் எதையும் காட்டிக்கொள்ளாது தங்களுக்குள் பேசிக்கொள்வர்.
மாப்பிள்ளை வீட்டார் மூணு மாசத்துல வரேன்னு சொல்லிட்டுப் போய் இன்னும் வரலையே. இதோ ஆறு மாசம் கடந்து போயாச்சு. பொண்ணை தரேன்னு வாக்கு கொடுத்துட்டு வேற இடத்திலும் பார்க்க முடியாது.
இனி இவளுக்கும் ஒரு நல்ல வரனாகப் பார்த்து கட்டிவச்சிட்டா நிம்மதியாகிடுமே என்று யோசித்தனர் இருவரும்.
“சம்மந்திக்கு அவங்களை நல்லா தெரியுமே. ஒரு தடவை கேட்டுடச் சொல்லிடலாமாங்க?” மலர்விழி கணவரின் வருத்தம் கண்டு சொல்ல.
“அப்படிங்கறியா?” யோசித்த ராஜனுக்கும் அதுவே சரியான முடிவாகத் தெரிந்தது.
அவர்கள் பேசுவதைக் காதில் கேட்டிருந்த நளிராவுக்கும் யோசனைதான். ஒருதினம் கூட நேரிலோ அலைபேசியிலோ தன்னை தொடர்பு கொள்ளவேயில்லையே அவன்?… இந்தக் கேள்வி மனதில் எழ, ஏனோ உறுத்தலாக இருந்தது அவளுக்கு.